Wednesday, June 4, 2008

முதலும் கடைசியுமான மரதன் ஓட்டம்..!

வீதியால் பயணிக்கும்வேளைகளில் பல மரதன் ஓட்டங்களை கடந்தகாலங்களில் பார்த்திருந்தாலும் அவ்வாறு ஒரு மரதனில் நானும் ஓடியது சுவாரசியமானது। அதை விட எனது நண்பர் பிரதீபனின் மரதன் ஓட்ட ஒத்திகை அதை விட சுவாரசியமானது। நாட்டின் யுத்தசூழ்நிலையால் எனது பாடசாலை வாழ்வில் இரண்டு மூன்று இல்ல விளையாட்டுப்போட்டிகளே நடைபெற்றிருந்தன। அவ்வருடம் இல்லவிளையாட்டப்போட்டியை முன்னிட்டு 05 கிலோமீற்றர் மரதன் ஓட்டம் இடம்பெறும் என்ற அறிவித்தலால் மரதன் ஓடும் வயதை எட்டியிருந்த பலரும் மகிழ்ச்சியும் திகிலும் அடைந்தனர்। பாடசாலைக்கு அண்மையிலிருந்தோர் போட்டிக்கு பலநாட்கள் முன்பே விடியற்காலையில் ஓடி பயிற்சி பெறத்தொடங்கியிருந்தனர். முதல் மூன்று இடங்களை பெறுபவர்களுக்கு பதக்கங்களும் 20 நிமிடங்களுக்குள் ஓடிமுடிப்பவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.


மாணவ தலைவர்களை தேர்ந்தெடுப்பதற்கான புள்ளியிடல் திட்டத்தில் விளையாட்டு தொடர்பான திறமைக்கும் புள்ளி இருந்ததால் நானும் நண்பர் பிரதீபனும் அதில் பங்குபற்றுவதாக தீர்மானித்திருந்தோம்। விடியற்காலையில் ஓடிப்பழகுபவர்களால் கவலையடைந்திருந்த பிரதீபன், போட்டியன்று மட்டும் ஓடினால் தசைபிடிப்பு ஏற்படும் எனவே ஊரிலாவது ஓடிப்பழகுவோம் என்று அபிப்பிராயப்பட்டார்.

பாடசாலையில் உடற்பயிற்சி பாடவேளைகளில் உதைபந்தாட்டம் என்ற பெயரில் பந்திற்குப்பின்னால் கண்டபடி ஓடுவதாலும் தினமும் சைக்கிளிலேயே பாடசாலை செல்வதாலும் ஓட்டப்பயிற்சியை நான் பெரிதுபடுத்தவில்லை. அதேவேளை அதிகாலையில் சந்தைக்கு பொருட்கள் கொண்டு போகும் சனங்கள் வாகனங்கள் மத்தியில் வேடிக்கை பொருளாக ஓடுவதும் எனக்கு கூச்சமான ஒன்றாயிருந்தது. என்றாலும் நண்பரின் வற்புறுத்தலுக்கிணங்க ஓடி ஒத்திகை பார்ப்பது என்று தீர்மானித்துக்கொண்டோம். 500 மீற்றர் தொலைவிலுள்ள தனது வீட்டிலிருந்து ஓடிவந்து பின்னர் என்னையும் கூட்டிக்கொண்டு பிரதான வீதியின் சந்திக்கு போவதாக ஏற்பாடு.


அடுத்தநாளும் வந்தது. அதிகாலை 05 மணிக்கு வருவதாக சொன்ன ஆள் 06 மணியாகியும் வரவில்லை. பிறகுதான் தெரிந்தது விஷயம். ஐந்து மணிக்கே எழும்பி ஓட வெளிக்கிட்ட நண்பரை சற்றும் வழமைக்கு ஒவ்வாத ஒரு நடவடிக்கையாக கருதிய அந்த தெருவிலுள்ள நாய்கள் அவரை கலைக்கத்தொடங்கியதில் மரதன் ஓட்டம் கண்மண் தெரியாத ஓட்டமாகிப்போய் முன்னால் சைக்கிளில் பால் கொண்டுவந்த பையனின்மேல் எக்கச்செக்கமாக மோதித்தான் நின்றது.

சைக்கிளுடன் பையனும் நண்பரும் விழுந்தவேகத்தில் பால் கொள்கலனின் மூடியும் வெடித்து திறந்ததால் அவ்வளவுபாலும் வீதியில்..!! பால்காரப்பையன் அழுதுகொண்டே நண்பரை பிலுபிலு வெனப்பிடித்துக்கொண்டானாம் - வீட்டில் கொன்றே போடுவார்கள் மரியாதையாகக் காசைத்தரச்சொல்லி. நண்பரும் மிகவும் உடல் + மனம் நொந்து போனார். விடியக்காலமை வேறு..!


வேறு வழியில்லாமல் பையனையும் கூட்டிக்கொண்டு வீட்டிற்குப்போன பிரதீபன் மொத்தப் பாலுக்கான காசையும் பையனின் மருந்துச்செலவுகளுக்குமான காசையும் சேர்த்துக்கொடுத்தனுப்பி வைத்தாராம். பின்னர் விடயத்தைக் கேட்டு நானும் நண்பரும் விழுந்து விழுந்து சிரித்தோம். ஆனாலும் நண்பருக்கும் சிராய்ப்பு காயங்கள் ஏற்பட்டதாலும் இதையொரு துர்ச்சகுனமாகக் கருதியதாலும் நண்பர் போட்டியில் கலந்து கொள்ளவில்லை. தான் மரதன் ஓட்ட நிகழ்வின்போது தனது செஞ்சிலுவை கழகத்தின் சார்பில் வீதியொழுங்கு கடமையில் ஈடுபடவிருப்பதாகவும் சொன்னார்.


எனவே நான் தனியாளாக போட்டியில் இறங்கவேண்டியிருந்தது. பதக்கங்கள் எல்லாம் எனக்கு அப்பாற்பட்டது என்று தெரிந்திருந்தாலும் 20 நிமிடத்திற்குள் ஓடி சான்றிதழாவது பெற்றுவிடவேண்டும் என்பதே எனது விருப்பமாக இருந்தது. குறித்த நாளும் வந்தது. சைக்கிளில் ஓடிப்போனால் களைத்து விடுவேன் என்று நண்பரே தனது சைக்கிளில் என்னையும் ஏற்றிக்கொண்டு பாடசாலை சென்றார். என்னை மைதானத்தில் விட்டுவிட்டு அவர் வீதி ஒழுங்கு கடமைக்கு சென்றுவிட்டார்.


மைதானம் போட்டியாளர்களால் ஜே ஜே என்றிருந்தது. பதினேழு மற்றும் பத்தொன்பது வயதுகளின் கீழான இரு போட்டிகளாக நடக்க இருந்தது. பெயர் பதிந்து இலக்கங்களை வாங்கி பனியனின் முன்னும் பின்னும் குற்றிக்கொண்டு தரப்பட்ட குளுக்கோஸை உண்டுவிட்டு திகிலோடு காத்திருந்தேன்.

சரியாக காலை ஆறுமணிக்கு போட்டி ஆரம்பமாகும் என்று அறிவித்தார்கள். 10 நிமிடமே இருந்தது. எல்லோரும் குளுமாடு மாதிரி துள்ளிக்கொண்டும் கைகால்களை உதறிக்கொண்டும் இருந்ததால் நானும் அவ்வாறே செய்தேன். சிலரிற்கு அப்படியெதுவும் செய்யாமலே கை கால்கள் தானாக உதறிக்கொண்டு இருந்தது.


எனது பிரிவில் ஓடுபவர்கள் நூறுபேராவது இருப்பார்கள் போலிருந்தது. மணி அடிக்கப்பட்டு எல்லைக்கோட்டில் நிற்கவைத்து (கொஞ்சம் கும்பலாகத்தான்) ஆயத்தமணி அடிக்கப்பட்டதும் கும்பலாக கிளம்பினோம். நெடிய ஓட்டம் என்பதால் யாரும் விர் என்று பாயவில்லை.

கொஞ்ச தூரம் ஓடியதுமே கும்பல் கலைந்து அவரவர் வேகத்திற்கு ஏற்றபடி குழுக்களாகவும் தனியன்களாகவும் ஓடிக்கொண்டிருந்தார்கள். ஆசிரியர்கள் ஏற்கனவே சொல்லியிருந்தார்கள். ஆட்களை முந்தவேண்டும் என்று வளைந்தும் நெளிந்தும் ஓடவேண்டாம். அப்படி ஓடினால் ஓட்டதூரம் கூடும் களைத்து போவீர்கள் இடைவெளி கிடைக்கும்வரை சீரான வேகத்தில் ஓடி பின்னர் முந்தவேண்டும் என்று நிரம்ப உபதேசங்கள் வழங்கியிருந்தார்கள்.


ஒலிபெருக்கியில் அறிவித்தபடி ஒரு வாகனம் முன்னால் போக வழிநெடுகிலும் மக்கள் நிறைந்து பார்த்துக்கொண்டிருந்தார்கள். சென்ஜோன்ஸ் அம்புலன்ஸ் மற்றும் செஞ்சிலுவை சங்க அங்கத்தவர்கள் பாதை ஒழுங்கில் ஈடுபட்டிருந்தார்கள். மோட்டார் சைக்கிள்களில் கண்காணிப்பாளர்கள் ஊர்ந்து கொண்டிருந்தார்கள். வழமையாக மிகவும் சனசந்தடி மிக்க வீதிகளால் பெனியனுடன் ஓடியது வித்தியாசமான அனுபவம்.


ஒரு ஐநூறு அறுநூறு மீற்றர் ஓடியதும்தான் தெரிந்தது இது எவ்வளவு பெரிய வில்லங்கமான ஓட்டம் என்று. இதயம் துடிக்கிற ஓசை எனக்கே கேட்டது. நாக்கு வறண்டது ஓடி முடிப்பது சிம்மசொப்பனமாகப்பட்டது. சுற்றிவர எழுமாற்றாக வெளிச்சப்பொட்டுக்கள் தோன்றுவது போலிருந்தது. ஆனாலும் வழியின் இருமருங்கும் மற்றும் மதிலுக்கு மேலாலும் தெரிந்த தலைகளில் இளம் பெண்களும் இருந்ததால் ஹைப்போதொலமஸ் மற்றும் இன்னபிற ஓமோன்களின் ஆதரவுடன் தொடர்ந்து ஓடினேன்.

வழியில் பார்வையாளர்கள் வாளிகளில் தண்ணீர் வைத்திருந்து தலையிலும் உடம்பிலும் ஊற்றியது மிகுந்த பெருமையாகவும் தெம்பாகவும் இருந்தது. களைப்பை போக்க கத்திக்கொண்டு வேறு ஓடினார்கள். ஆட்களை முந்தி செல்லும்போது 'வ்வோவ்...' என்று கூச்சலிட்டுக்கொண்டே சென்றார்கள். எதிராளியை நிலைகுலைய வைப்பதற்கு இதுவும் ஒரு உத்தி. மகாபாரதத்தில் அர்ச்சுனனின் கொடியில் இருந்து கொண்டு அனுமர் தனது சத்தத்தாலேயே கனபேரை போட்டுத்தள்ளினார் என்று படித்திருக்கிறேன். என்னைக்கடந்து கன 'வ்வோவ்...' கள் சென்றது வயிற்றைக்கலக்கியது.


ஓட்டம் பிறவுண்வீதியால் கலட்டி சந்தியை அடைந்தபோது ஓடினவர்களில் பலர் நடக்கத்தொடங்கியிருந்தார்கள். சிலர் காலை நொண்டிக்கொண்டும் முகத்தை வெட்கத்தால் மறைத்தவாறும் அவ்வப்போது தோன்றி மறைந்த அம்புலன்ஸ்களினுள் ஏறிப்படுத்துக்கொண்டார்கள். எப்பிடியிருந்த நான் இப்பிடியாகிட்டேனே என்ற நிலையில் ஓடிக்கொண்டிருந்த நானும் அம்புலன்ஸ் நப்பாசைகளால் ஈர்க்கப்பட்டாலும் பின்னர் வகுப்பில் நடக்கப்போகும் நக்கல் நளினங்களை நினைத்து கால்களில் இலக்ரிக் அமிலம் சுரந்து இறுகிவிடக்கூடாதே என்று கவலைப்பட்டு ஓடிக்கொண்டிருந்தேன்.

நடக்கத்தொடங்கியிருந்தவர்கள் வீதியில் நின்ற பார்வையாளர்களின் கிண்டலுக்கு ஆளானதால் நான் வேகத்தை அதிகரிக்க முயற்சித்தேன். நாக்கு வெளியில் வந்தது. வெளிச்சுவாசத்தின் போது சத்தமும் சேர்ந்தே வந்தது !. ஆனாலும் வீதிக்கடமையிலிருந்த பிரதீபனைக்காணும் வரையாவது ஓடுவோம் என்ற சங்கற்பத்துடன் ஓடிக்கொண்டிருந்தேன்.


இருபது நிமிட எல்லை இருந்ததால் கையிலிருந்த நிறுத்தற்கடிகாரத்தை பார்த்தபோது, ஆரம்ப அவசரத்தில் என்னத்தை அமத்தினனோ தெரியாது அதில் எல்லாம் எட்டு எட்டாகத்தெரிந்தது. வெறுத்துப்போய் வீதியில் கடமையிலிருந்த செஞ்சிலுவை சீருடைகளில் பிரதீபனை தேடினேன்.
கே.கே.எஸ் வீதியை ஊடறுத்து பழக்கமில்லாத வீதியொன்றிற்குள் இறங்கியபோது பிரதீபனை கண்டேன்.

கடமையில் இருந்ததால் முகத்தை 'உம்' மென்று வைத்திருந்தாலும் வியர்வையும் தண்ணீரும் தலையிலிருந்தும் முகத்திலிருந்தும் வழிய என்கோலத்தைக் கண்டு ஆளுக்கு சிரிப்பு வந்தது என்பது தெரிந்தது. பலர் முன்னுக்கு போய்விட்டார்கள் என்று சைகை காட்டினார். இது என்னை உசுப்பேத்திவிட.. நானும் 'வ்வோவ்..' என்ற சத்தத்துடன் ஆட்களை கடக்க ஆரம்பித்தேன். கால்கள் கெஞ்சின. சப்பாத்தின் டொக் டொக்குகளிற்குள் கால் அதிர்ந்தது.


மீண்டும் கே।கே।எஸ் வீதியிலேறி பாடசாலையின் மேற்குப்புற கட்டடங்களை தூரத்தில் கண்டதும் உற்சாகம் கரைபுரண்டது। அதே போல பின்னால் வந்தவர்களிற்கும் கரைபுரண்டிருக்கவேணும்॥ என்னைக்கடந்து ஓடினார்கள்। மைதானத்தை அடைந்து மைதானத்திற்குள் ஒரு சுற்றும் ஓடிய பின்பே முடியுமிடம் வரும்। கடைசிக்கட்டம் ஆனதால் நானும் தலைதெறிக்க ஓடினேன்। ஆனாலும் என்ன ஏமாற்றம்..! பாடசாலையின் பிரதான வாசலை அடைந்த நேரம் முடிவுமணி ஒலி நாராசமாய் காதில் விழுந்தது।


குறிக்கப்பட்ட நேரம் முடிந்துவிட்டதால் மைதானவாசலிலேயே தடுத்து நிறுத்தினார்கள்। நீண்ட ஓட்டம் முடிவுற்றபோது உடம்பு முழுவதும் வெம்மையாக உணர்ந்தேன். நாடித்துடிப்பு உடம்பின் சகல பாகங்களிலும் கேட்டது. உடனடியாகவே 19 வயதின் கீழான போட்டி மறுமுனையில் ஆரம்பிக்கப்பட்டது. எனக்கு பலர் உண்மையாகவோ அல்லது கிண்டலாகவோ கைகுலுக்கினார்கள். ஓடிய அனைவருக்கும் சுடச்சுட கோப்பி வழங்கப்பட்டது.

குறித்த நேரத்திற்குள் நானூறு அல்லது ஐநூறு மீட்டர் தூரத்தினால் நான் அந்த மரதனை கோட்டைவிட்டேன். எனினும் இரண்டே மீற்றர் தூரத்தினால் கோட்டை விட்டவர்களை நினைத்து என்னை திருப்திப்படுத்திக்கொண்டேன். வாழ்வில் பல விடயங்களை எமக்கும் கீழே இருப்பவர்களை நினைத்துத்தானே திருப்திப்பட்டுக்கொள்ளவேண்டியிருக்கிறது...!!

16 comments:

கானா பிரபா said...

சுவாரஸ்யமான எழுத்து நடை சரி சரி கோப்பித்தண்ணியவது கிடைச்சுதே ;)
னான் மரதன் ஓடி எல்லாம் ரிஸ்க் எடுக்கிறதில்லை, விளையாட்டுப் போட்டிகளில் எனது அனுபவம் முந்தி சொன்னனான் தானே.

ஆ.கோகுலன் said...

வாங்கோ கானா பிரபா!

//விளையாட்டுப் போட்டிகளில் எனது அனுபவம் முந்தி சொன்னனான் தானே.//

ஓமோம்.. என்னுடைய நிலையும் அதுதான். ஆனால் நான் தெரிவுப்போட்டிகளில் பங்குபற்றி கடைசியாய் வருவதுதான் அதிகம். :)

பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி.

Jayakumar said...

சுவையான பதிவு.

நன்றி

ஆ.கோகுலன் said...

வணக்கம் ஜே.கே.

கருத்துக்கு வந்தனங்கள்.

VIKNESHWARAN ADAKKALAM said...

//தெருவிலுள்ள நாய்கள் அவரை கலைக்கத்தொடங்கியதில் மரதன் ஓட்டம் கண்மண் தெரியாத ஓட்டமாகிப்போய் முன்னால் சைக்கிளில் பால் கொண்டுவந்த பையனின்மேல் எக்கச்செக்கமாக மோதித்தான் நின்றது.//

ஹா ஹா ஹா பாவம் அவர். நல்ல பதிவு. சுவாரசியமாக உள்ளது. சற்று அதிக அளவில் பத்தி பிரித்து எழுதினால் பாடிக்க சுலபமாக இருக்கும். காரணம் பதிவு அதிக நீளமாக உள்ளது.

மீண்டும் மீண்டும் எனது வலை பக்கம் உங்கள் வருகையை எதிர் பார்க்கிறேன்...

Anonymous said...

வாழ்வில் பல விடயங்களை எமக்கும் கீழே இருப்பவர்களை நினைத்துத்தானே திருப்திப்பட்டுக்கொள்ளவேண்டியிருக்கிறது...!!.... So... well said..

ஆ.கோகுலன் said...

வணக்கம் விக்னேஸ்வரன் மற்றும் அனானி அன்பர்,

வருகைக்கும் கருத்துக்களை பகிர்ந்து கொண்டமைக்கும் மிகவும் நன்றி.

//காரணம் பதிவு அதிக நீளமாக உள்ளது.//

உண்மைதான் விக்னேஸ்வரன், தட்டச்சிடும்போதே எனக்கு அந்த கவலை இருந்தது எப்படி முடிப்பது என்று! :)

Anonymous said...

ஹாஹாஹா! உண்மையில் ஒரு சுவாரசியமா பதிவு! எனக்கு சிரித்து சிரித்து வயிறு தான் நோகுது! நான் சிரித்த சிரிப்பில் அம்மாவும் வந்து ஏன் இப்படி சிரிக்கிறாய்? என்று கேட்டதுக்கு, அவவுக்கும் வாசித்து காண்பித்து, இருவரும் உங்களையும் கற்பனை பண்ணி சேர்ந்தே சிரித்தோம். வாழ்க்கையில் மறக்க முடியாத அனுபவங்கள் இந்த விளையாட்டு போட்டிகள்!

வாழ்த்துக்கள்! தொடர்ந்து இப்படியான அனுபவங்களை பகிர்ந்து கொள்ளுங்கள்!


நான் சிரித்த காட்சிகள்:
"அந்த தெருவிலுள்ள நாய்கள் அவரை கலைக்கத்தொடங்கியதில் மரதன் ஓட்டம் கண்மண் தெரியாத ஓட்டமாகிப்போய் முன்னால் சைக்கிளில் பால் கொண்டுவந்த பையனின்மேல் எக்கச்செக்கமாக மோதித்தான் நின்றது"

"எல்லோரும் குளுமாடு மாதிரி துள்ளிக்கொண்டும் கைகால்களை உதறிக்கொண்டும் இருந்ததால் நானும் அவ்வாறே செய்தேன். சிலரிற்கு அப்படியெதுவும் செய்யாமலே கை கால்கள் தானாக உதறிக்கொண்டு இருந்தது."

ஆ.கோகுலன் said...

கருத்துக்களை பகிர்ந்து கொண்டமைக்கு மிகவும் நன்றி கஜந்தினி.

வாசித்த உங்களுக்கே இப்படி சிரிப்பு வந்ததென்றால் குறித்ததினம் காயங்களுடன் நண்பர் விபரிக்கும்போது நான் எப்படி சிரித்திருப்பேன் என்பதையும் கற்பனை பண்ணி மீண்டும் ஒருமுறை சிரியுங்கள்.. :)

Anonymous said...

பாடசாலை பழைய விளையாட்டுப்போட்டி ஞாபகங்கள் எனக்கும் வந்தது. ஆனால் இன்னம் வேகமான நடையில் சொல்லியிருக்கலாம்

ஆ.கோகுலன் said...

வணக்கம் அம்பிகை..!

ஓமோம்.. நீங்கள் ஓட்டத்தைப்பற்றி எழுதியிருப்பதால் எழுத்திலும் வேகத்தை எதிர்பார்க்கிறிங்களோ..? :)

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

Cna. Senthuran said...

Really interesting.. I could imagine the scene.. Pirathee from which division? Great blog..keep it up.

ஆ.கோகுலன் said...

Thank u for your comments Cna..

Pretheeban from D division..

ஆ.கோகுலன் said...

Thank u for your comments Cna..

Pretheeban from D division..

bandhu said...

எழுத்து நடையும் உங்கள் மராத்தான் ஓட்டம் போலவே இருந்தது.. (வேகமாக ஓடியது என்று சொன்னேன்!)

ஆ.கோகுலன் said...

நன்றி பாண்டு வருகைக்கும் கருத்துக்கும்..