Thursday, February 28, 2008

பல்பரிமாண எழுத்தாளர் சுஜாதா

மரணம் தொடர்பாக சுஜாதா ஆயத்தமாகவே இருந்தார் எனச்சொல்ல வேண்டும்। "இப்போதெல்லாம் ஹிந்துவில் முதலில் obtituary தான் பார்க்கிறேன்। இறந்தவர் என்னைவிட இளையவர் என்றால் பரவாயில்லை நாம் இன்னும் இருக்கிறோம் என்று சந்தோஷப்பட்டுகொள்கிறேன்। என்னை விட வயதானவர் என்றால் என் நாள் எந்நாள் என்று யோசனை வருகிறது" - இதை அவரின் 'கற்றதும் பெற்றதும்' என்ற நூலில் குறிப்பிட்டிருந்தார்। எனது வாசிப்பு பரிச்சயங்களில் அதிசயிக்க வைத்த எழுத்தாளர்।

தொடாத தலைப்பே இல்லை எனும் அளவிற்கு அனைத்து துறையிலும் தனது எழுத்தைக் கொண்டு சேர்த்தவர்। 'எந்த மரபையும் உடைக்கின்றபோது ஒரு புதுமையான இலக்கியம் தோன்றும்' என்ற வகையில் அதுவரை இருந்த எழுத்து நடைகளை மாற்றி தனக்கென்ற வகையில் வேகமான சுவாரசியமான நடைக்குள் தமிழ் மொழியைக்கொண்டு வந்தவர்। இவரது எழுத்து வரிகளில் கலந்திருக்கும் நகைச்சுவை அலாதியானனது: நாசூக்கானது। சொற்களின் அளவைக்குறைத்து கதையில் தன்னுடன் வாசகனையும் வரச்செய்து பெரும்பாலானவற்றை வாசகனே ஊகித்து உணரும் வகையிலான இரசாயனத்தை தனக்கும் வாசகனுக்குமிடையில் தனது மொழிநடை மூலம் ஏற்படுத்திக்கொண்டவர்। சூழ்நிலைகளையும் சம்பவங்களையும் கூர்ந்து அவதானித்து அவற்றை மிகச்சில சொற்களில் சொல்லி முடிக்கின்ற சாகசக்காரர்। தலைமுறை இடைவெளி இல்லாமல் இக்கால இளைஞர்களினதும் எண்ணஓட்டங்களையும் புரிந்து கொண்டு எழுத்திலும் இளமையைக் கொண்டு வந்தவர்। ஆரம்பகால இவரது சிறுகதை முயற்சிகள் இன்றும் பிரமிப்பூட்டுபவை। வேறுபட்ட கருக்கள், வேறுபட்ட அணுகுமுறைகள் எழுத்தில் வடிக்கமுடியாதவை। சிக்கலான மருத்துவ, விஞ்ஞான,தொழில்நுட்ப,கணணி விடயங்களையும் மிக எளிமையான எடுத்துக்காட்டுக்களோடு பாமரரும் விளங்கும் வகையில் தமிழில் தந்தவர்।


இளமைக்காலத்தை பாட்டியுடன் சிறீரங்கத்தில் கழித்த பசுமையான நினைவுகளை சிறீரங்கத்து தேவதைகள் என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்। கவிஞர் வாலி சிறீரங்கத்தில் இவரது அயலவர்। திருச்சி சென்।ஜோசப் கல்லூரியில் பெளதிகவியலில் பட்டப்படிப்பை மேற்கொள்ளும்போது முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமுடன் சகபாடியாக இருந்திருக்கிறார்। இதன் பின்னர் சென்னை தொழில்நுட்ப நிறுவகத்தில் இலத்திரனியல் துறையில் பட்டம் பெற்றார்। இந்திய அரசுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை உருவாக்கும் குழுவிற்கு தலைமை தாங்கி செயற்பட்டவர்। இவரது விஞ்ஞானக்கதைகளும் அற்புதமானவை। என் இனிய இயந்திரா॥ மீண்டும் ஜீனோ போன்ற நூல்களில் தவறுகளில் இருந்து கற்றுக்கொள்ளும் ஒரு எந்திர நாய்பற்றி கற்பனை செய்துள்ளார்। அது தவறுகளில் இருந்து கற்றுக்கொண்டு ஒரு நிலையில் தவறே செய்யாத ஒரு நிலையை அடைகிறது। இந்த நாயைவைத்து பின்னப்பட்ட அருமையான விஞ்ஞானக்கதை। இவரது துப்பறியும் நாவல்கள் இவரிற்கு அதீத இரசிகர்களைத் தேடித்தந்தது। இவரது கற்பனையான பாத்திரங்கள் உண்மையிலேயே இருக்கிறார்கள் என்று பலரை நம்பவைத்தது இவரது எழுத்து। வெகுஜனப்பத்திரிகைகளிலும் சரி, சிறுபத்திரிகைகளிலும் சரி தனக்கென்று ஒரு முத்திரையை பதித்துக்கொண்டவர்। இவர் எழுதிய நாடகங்கள் கூடப்புகழ்பெற்றவை। பூரணம் விஸ்வநாதன் நடிப்பில் இவரது நாடகங்கள் சிலாகிக்கப்படட்டன। நாடகத்தையும் மேடை அமைப்பு பின்னணி முதலிய தொழில்நுட்ப அம்சங்களையும் உள்ளடக்கியதாக எழுதியது அவரது பரந்து பட்ட அறிவிற்கு சான்று।

'கனவுத்தொழிற்சாலை' என்ற நூல் சினிமா திரைஉலகின் ஜிகினா பக்கத்திற்கான மறுபக்கத்தைக்காட்டி சாதாரண மக்களுக்கும் திரைஉலகு குறித்த உண்மை நிலையை எடுத்துக்காட்டியது। இவரது தயாரிப்பில் உருவான பாரதி படம் அனைவரதும் பாராட்டைப்பெற்றது। அறிவியல் சார்ந்த ஒரு படமாக 'விக்ரம்' என்ற படத்திற்கான கதை திரைக்தையை எழுதினார்। தனது கதைகள் திரைப்படமாகும்போது நடக்கும் கதை சீர்குலைவுகளை விமர்சித்த இவர் ஒரு திரைப்படம் ஒன்று உருவாகுவதற்கான சவால்கள் சிரமங்கள் குறித்தும் அவ்வப்போது எழுதியுள்ளார்। சென்னை மீடியா ட்ரீம்சின் ஆலோசகராகவும் பணியாற்றியுள்ளார்।


சிறுகதை நாவல்களை விட இவர் ஜீனியர் விகடனில் எழுதிய ஏன் எதற்கு எப்படி?, கணையாளியில் எழுதிய 'கணையாளியின் கடைசிப்பக்கம்', ஆனந்த விகடனில் எழுதிய கற்றதும் பெற்றதும் என்பவை மிகப்பிரபலமாயின। மூளை மற்றும் ஓமோன்கள் குறித்து எழுதிய 'தலைமைச்செயலகம்' சிறந்த அறிவியல் நூலாகும்।

அவரது நுண்ணறிவும் ஆராயும்திறனும் மொழித்திறனும் சேர்ந்து எமக்கொரு நல்ல எழுத்தாளரைத்தந்தது.

பெண்கள் குறித்து சற்று அதிகமாகவே வர்ணிப்பவர் என்ற குற்றச்சாட்டுகள் இருந்தாலும் 'எப்போதும் பெண்' என்ற தன் நூலில் இவ்வாறு குறிப்பிடுகிறார்। 'இதை எப்படி வேண்டுமானாலும் அழைத்துக்கொள்ளுங்கள், படியுங்கள்। இதன் விஷயம் எனக்குப்பிடித்தமானது। பொய் இல்லாமல் பாவனைகள் இல்லாமல் எழுதியிருக்கிறேன்। பெண் என்கிற தீராத அதிசயத்தின்பால் அன்பும் ஆச்சரியமும் ஏன் பக்தியும்தான் என்னை இதை எழுதச்செலுத்தும் சக்திகள்'

ஆயிரத்து தொளாயிரத்து முப்பத்தைந்தாம் ஆண்டு மே மாதம் மூன்றாம் நாள் பிறந்த சுஜாதா அவர்கள் தனது 73ம் வயதில் காலமாகியிருக்கிறார்கள்। சிறீரங்கநாதரில் ஆழ்ந்த பக்தியும் ஆழ்வார்களின் பிரபந்தங்களில் ஆழ்ந்த ஈடுபாடும் கொண்ட சுஜாதா அவர்களின் வாழ்வு நிறைவானது என்பதில் ஐயமில்லை। அன்னாரின் எழுத்துப்பணிக்கு சிரம்தாழ்த்திய அஞ்சலிகள்।

கவிதைகளிலும் ஹைக்கூக்களிலும் வெண்பாக்களிலும் நாட்டங்கொண்டவராகிய இவர் தனது எழுத்துக்களில் இளைய தலைமுறையினரை அறிமுகப்படுத்தவும் தவறுவதில்லை। விஞ்ஞானம் சம்பந்தமான ஹைக்கூக்கள் சைஃபிகூ எனப்படுகின்றன। இதில் சுஜாதாவின் முயற்சி இவ்வாறாக இருக்கிறது।

சந்திரனில் இறங்கினேன்

பூமியில் புறப்படும்போது
கதவைப்பூட்டினேனா?
அவரது எழுத்துக்கு என்றும் மரணமில்லை.

Thursday, February 21, 2008

இசையில் அசத்தும் சிறுவர்கள்..!

இந்திய தொலைக்காட்சிகளில் நடாத்தப்படும் இசை சம்பந்தமான போட்டிகளில் கலந்து கொள்ளும் சிறுவர்களின் இசைத்திறமை ஆச்சரியமளிக்கின்றது. போட்டிகளில் அவர்கள் காட்டும் ஈடுபாடு, தன்னம்பிக்கை, துணிவு, உழைப்பு என்பவற்றை இப்போட்டிகளினூடாகத் தெளிவாக அறிந்து கொள்ள முடிகிறது. பெரியவர்களே சிலவேளைகளில் தடுமாறும் பாட்டிற்கான பாவத்தை சிறுவர்கள் தமது குரலில் மிக இலகுவாகக்கையாள்கிறார்கள். பாடலில் இடையில் வரும் சங்கதிகள் அசைவுகள் முதலியவற்றை கிரகித்துப்பாடுவதில் இதற்கான அவர்களின் பயிற்சியும் உழைப்பும் தெளிவாகத்தெரிகின்றன.

நடுவர்களையே அசத்துபவையாகவும் உரியவர்களை தேர்ந்தெடுப்பதில் நெருக்கடியை ஏற்படுத்துபவையாகவும் இவர்களது பாடும்திறன் அசத்தலாகவுள்ளது. இந்தியாவில் தமிழில் மட்டுமல்லாது பிறமாநில மொழிகளிலும் இவ்வாறான போட்டிகள் நடத்தப்படுகின்றன. தமிழ் மொழி தெரியாத சிறுவர்கள்கூட உச்சரிப்பு பிழைகள் இருப்பினும் இசைக்கேற்ற பாவத்தில் பாடுவதில் சிலாகிக்கவைக்கிறார்கள்.

இதன்மூலம் சிறுவர்கள் சிறுவயதிலேயே அடையாளம் காணப்பட்டு வருங்காலத்தில் அவர்கள் மேலும் மெருகேற வாய்ப்புக்கள் பிரகாசமாக அமைகின்றன. ஆயினும் சிறுவயதிலேயே இவ்வாறு புகழ்பெறுவதாலும் ஊடகங்களில் வர்த்தக மற்றும் விளம்பர நோக்கம் கருதி பெறப்பட்ட வெற்றி மிகைப்படுத்தலாக காட்டப்படுவதாலும் சுயகர்வமும், அடைவில் சுயதிருப்தியும் ஏற்பட்டு எதிர்காலத்தில் மேலும் கற்றுக்கொள்ளும் தேடலிற்கான ஆர்வத்தையும் வாய்ப்புகளையும் இழந்துவிடும் சந்தர்ப்பத்தையும் ஏற்படுத்தக்கூடும் என்பதையும் மறுக்கமுடியாது. ஆயினும் பங்கு கொள்ளும் சிறுவர்கள் வெற்றியையும் தோல்வியையும் சமமாகக்கொண்டு எதிர்காலத்தில் மேலும் தகுதிகளை வளர்த்துக்கொள்ள பெற்றோரும் ஆசிரியர்களும் உதவவேண்டும். ஏனெனில் தொலைக்காட்சிகளில் பிரமாண்டமாக வெற்றிகள் காண்பிக்கப்படும்போது தோல்விகளும் அதற்கேற்ற பிரமாண்டத்தை இயற்கையாகவே பெறுகின்றன.
(மேலும் திறமையான சிறுவர்களைக்காண கீழே பெயருடனான இணைப்புக்களில் அழுத்துங்கள்)

Sunday, February 17, 2008

மரணம் பற்றி...

பிறந்த ஒவ்வொருவரும் இறப்பது நியதியேயாயினும் மரணம் சமமாக எல்லோருக்கும் வருவதில்லை. கருவில் இறப்போரும் உண்டு, தெருவில் இறப்போரும் உண்டு, முதிர்ந்து இறப்போரும் உண்டு. மரணம் என்பது நிச்சயமான பிறகு, மரணத்திற்குப்பின் என்னவாவோம் என்கிற கேள்வி எழுகிறது. பல சமயங்களும் பலவாறாக சொல்கின்றன. பாவ புண்ணியங்களை தவிர்த்த எளிமையான சிந்தனைக்கு மூன்று தேர்வுகள் (Choice) உள்ளன.
  1. மரணத்தின் பின் இல்லாது போதல்
  2. மரணத்தின் பின் இன்னொன்றாக மாறுதல்
  3. மரணத்தின் பின் பிறப்புக்கு முன் இருந்த நிலையை அடைதல் (வந்த இடத்திற்கே திரும்ப போதல்)

நமது ஐம்புலன்களின் சக்தியும் வரையறுக்கப்பட்டவை. அதாவது குறிப்பிட்ட தூரம் வரையே எம்மால் பார்க்க முடியும், குறிப்பிட்ட அளவு ஒலியையே கேட்கமுடியும். எனவே இந்த எல்லைகளுக்கு அப்பாற்பட்டவற்றை அறியக்கூடியதாகவும் அல்லது உணரக்கூடியதாகவுமான சக்திகள் இருக்கக்கூடும். அவ்வாறான சக்திகளை மரணத்தின் பின் பெறுகிறோமா?

பொதுவாகவே மரணத்திற்கு மனிதர்கள் பயப்பிடுகிறார்கள். மரணத்துக்கு முன்பு அது தொடர்பான வலி, அவஸ்தை இருக்கிறது. ஆகக்கூடியநேரம் வரை மூச்சை அடக்கும்போது இவ் அவஸ்தையின் சிறிதளவை உணரமுடியும். முன்னர் மரணம் என்பது பெரிய விடயமாக இருந்தது. பெரும்பாலும் மூப்படைந்து அல்லது நோய் வந்து மரணம் சம்பவித்தது. மரணம் நிகழ்ந்த வீட்டை அல்லது இடத்தை தவிர்த்து வேறுபாதைகளை பாவித்து பயணிப்பார்கள். யமன் வந்திட்டுது, சேடம் இழுக்கிறது போன்ற பிரயோகங்கள் மரணஅறிகுறிகளைக்கொண்டு பாவிக்கப்பட்டது. இப்போது யமன் வராமலே சேடம் இழுக்காமலே கணப்பொழுதில் மரணிக்கிறார்கள்.

மறைமலை அடிகள் 'மரணத்துக்கு பின் மனிதர் நிலை' (1911 ல் எழுதப்பட்டது) என்ற நூலில் ஸ்தூல உடம்பு, சூக்கும உடம்பு என இருவகையான நிலை குறித்து குறிப்பிடுகிறார். ஸ்தூலம் என்பது கண்ணுக்கு தெரிவது, சூக்குமம் என்பது கண்ணுக்குத் தெரியாதது. எனவே மரணம் என்பது ஸ்தூலத்திலிருந்து சூக்குமத்திற்கு மாறுவது என்று குறிப்பிடுகிறார். ஆயினும் சூக்கும உடம்பிலும் அவர்களது பாவபுண்ணியத்திற்கேற்ப வெள்ளையாகவும் கறுப்பாகவும் தோன்றுவதாக பலரின் கனவுகளை உதாரணம் காட்டி குறிப்பிடுகின்றார். கனவு என்பதும் ஆழ்மனப்பதிவு சார்ந்தது என்பதால் கனவை ஆதாரமாகக் கொள்ளல் இயலாது. எனினும் சடுதியான மாரடைப்பிலிருந்து மீண்டவர்கள் சிலர் தங்களது உடலை மேலிருந்து பார்க்கும் நிலையிலிருந்ததாக (Top elevation view) சொல்லியுள்ளார்கள். எனினும் இவையெதையும் நிரூபிக்கமுடியாது. ஏனெனில் மரணம் என்பது உயிர் ஒன்றுக்கு இவ்வுலகில் ஏற்படும் கடைசி நிகழ்வு. அதன் பின் இவ்வுலகின் செல்வாக்கு அவ்வுயிரில் இல்லாது போகிறது என்பதே உண்மை. இதனாலேயே சட்டமும் சமயமும் வலிந்து ஏற்படுத்தப்படும் மரணங்களை குற்றம் என்கிறது.

ஆமாம் இதெல்லாம் இருக்கட்டும், இன்று உலகெங்கும் தங்களை வெடிக்க வைத்துக்கொள்ளும் தற்கொலை(டை)யாளிகள் வெடிக்க நினைக்கும் முதற்கணத்தில் வெடித்தபின்னான அடுத்த கணம் பற்றி என்ன நினைப்பார்கள்...??

MP3 பாடல்களை இலவசமாய் பதிவிறக்கிக்கொள்ள...

பெரும்பாலான எந்தக்காலத்து தமிழ் பாடல்கள் என்றாலும் http://www.cooltoad.com/ மூலமாக இலவசமாக இலகுவாக பதிவிறக்கிக்கொள்ள முடியும். முதலில் மேற்படி இணையதளத்தில் இலவசமாகப் பதிவு செய்து User name, Password என்பவற்றை பெற்றுக்கொள்ள வேண்டும். பின்னர் Music என்பதை தெரிவுசெய்து தேடலில் (Search) எமக்கு தேவையான பாடலின் முதல் வரி, அல்லது பாடல் இடம்பெற்ற படத்தின் பெயர், அல்லது இசையமைப்பாளர் பெயர் முதலியவற்றை கொடுப்பதன்மூலம் எமக்கு தேவையான பாடலை தேடிக்கொள்ளலாம். தமிழுக்கு ஆங்கிலத்தில் வேறு வேறான முறைகளில் எழுதமுடியுமாதலால் பாடல் கிடைக்கும் வரை வெவ்வேறு Spelling இல் முயற்சி செய்யலாம். உதாரணமாக தமிழா தமிழா.. எனத்தொடங்கும் பாடலிற்கு Thamila,Tamila, Thamizha என்றவாறாகத்தேடமுடியும். பராசக்தி முதல் தற்சமயம் வெளியாகும் பாடல்கள் வரை பெரும்பாலான பாடல்கள் கிடைக்கின்றன. இது தவிர ஹிந்தி, மலையாளம், தெலுங்கு ஆங்கிலம் முதலான மொழிப்பாடல்களும் கிடைக்கின்றன. கேட்கக்கிடைக்காத உங்களின் ஞாபகங்களில் நின்ற பாடல்கள் கிடைத்திட வாழ்த்துக்கள்!.

Friday, February 15, 2008

மதுரை தமிழ் இலக்கிய மின்தொகுப்புத்திட்டம்

பழந்தமிழ் இலக்கியங்களையும் தமிழ் சமயநூல்களையும் இணையத்தில் தொகுத்து வழங்கும் ஒரு முயற்சியே மதுரை தமிழ் இலக்கிய மின்தொகுப்புத்திட்டம். இதில் திருக்குறளில் இருந்து வைரமுத்துவின் 'தண்ணீர்தேசம்' வரையிலான நூல்கள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. நளவெண்பா, நாலடியார், ஆத்திசூடி, சீறாப்புராணம் மற்றும் பிரபந்தங்கள் தேவாரங்கள் பைபிளின் மொழிபெயர்ப்பு போன்ற நாம்மறந்து போன பழைய நூல்களை மின்னூலாகத்தொகுத்திருப்பது காலத்தின் தேவையை நிறைவேற்றும் பயன்மிக்க செயற்பாடாகும். புலம்பெயர் தமிழ் ஆர்வலர்கள் இவ்வாறான முயற்சிகளை முழுமையாகப்பயன்படுத்திக்கொள்ளவேண்டும்.கல்கியின் புகழ்பெற்ற வரலாற்று நாவல்களும் Portable Document Format (PDF) கோப்புக்களாக தரவிறக்கிக்கொள்ள முடிவது சிறப்பம்சம். கல்கியின் நாவல்களை ஒரு வரலாற்றுப்பதிவாகவும் கொள்ளமுடியும். சிவகாமியின் சபதம், பார்த்திபன் கனவு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, அலைஓசை என்ற ஒழுங்கில் கல்கியின் நூல்களை வாசிப்பது வரலாற்றின் தொடர்ச்சியையும் சமூக மாறுதல்களையும் புரிந்துகொள்ள உதவும்.


இதைப்போன்றே ஈழத்திலிருந்து வெளிவந்த நூல்களை இணையத்தில் ஏற்றும் திட்டமே நூலகத்திட்டமாகும். இதன் இணைய இணைப்பு இத்தளத்திலும் வழங்கப்பட்டிருக்கிறது. தன்னார்வலர்களால் திட்டமிடப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும் இத்திட்டத்திலும் ஈழத்திலிருந்து வெளியிடப்பட்ட பலநூல்களை பார்க்கமுடியும். 'முறிந்த பனை' என்ற ரஜனி திரணகமவின் நூலை PDF கோப்பாக தரவிறக்கமுடிவதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Thursday, February 14, 2008

வியக்க வைத்தது!

COMPANY - இது ஒரு ஹிந்தித்திரைப்படம். 2002 ல் வெளிவந்தது. இப்போது தான் பார்க்கக்கிடைத்தது. படம் இப்படித்தொடங்குகிறது. 'பருந்து... தன் இரையை குறிவைக்கிறது: கண்காணிக்கிறது: சிலமணித்தியாலங்கள்: சில நாட்கள்: சிலவாரங்கள்: ஏன் சில மாதங்கள் - உரிய வேளைக்காக உயரத்தில் வட்டமிடுகிறது. அந்த வேளை: மிகச்சரியான அந்த வேளை வந்ததும் - "லபக்.." '

ஆம்! பாதாளஉலகினர் இவ்வாறுதான் இயங்குகிறார்கள். கண்காணிப்பும் தொடர்பாடலும் அவர்களுக்கு இரு கண்கள் போன்றது. ஒரு பொலிஸ் உயர் அதிகாரி பாதாள உலகினர் பற்றிய தனது அனுபவத்தை பதிவு செய்வதாக இத்திரைப்படம் ராம்கோபால் வர்மாவினால் மிகச்சிறப்பாக இயக்கப்பட்டுள்ளது. மும்பை நகர்ப்புறச்சேரிகளில் சிறு இளைஞர் குழுக்களின் (Gangsters) உருவாக்கம், அவர்களுக்கிடையிலான தொடர்பாடல், பிரபல்யம், சேர்ந்தியங்குவதற்கான பேரம்பேசல்கள், சேர்ந்து இயங்குதல், தலைமை உருவாக்கம், போட்டியாளரை அழித்தல் என ஒரு பாதாளஉலகக்குழு எவ்வாறு வளர்கிறது: பலம் பெறுகிறது என்பதையும் அரசும் அரசியல்வாதிகளும், சமூகப்பிரமுகர்களும்!? அவர்களை எவ்வாறு உபயோகப்படுத்துகிறார்கள் என்பதையும் இத்திரைப்படம் நேர்த்தியாக விபரிக்கின்றது. சினிமா, சுங்கம், வர்த்தகம், பாதுகாப்பு, கல்வி முதலிய இன்னோரன்ன துறைகளில் ஊடுருவி இத்துறைகள் சார்ந்த தலைவிதிகளை இவர்கள் எவ்வாறு தீர்மானிக்கிறார்கள் அல்லது மாற்றுகிறார்கள் என்பதை நுணுக்கமாகக்காட்டுகிறது இத்திரைப்படம்.
மேலும் சர்வதேசரீதியிலான அவர்களது வலைப்பின்னல் ஸ்தாபகமும் அவர்களுக்கேயான தனித்துவ நீதியும் நியாயங்களும் காதலும் அன்பும் சுவாரசியமாக விளக்கப்படுகிறது. தவறான புரிந்துணர்வு ஒன்றால் பாதாள உயர்மட்ட தலைவர்களுக்குள் ஏற்படும் பிரிவும் அதன்விளைவாக அயல்நாடுகளிலும் மும்பையின் சந்துபொந்துகளில் நடக்கும் கொலைகளும் காவல்துறையினரின் கையாலாகாத்தனமும் மக்களின் குழப்பமும் தங்களின் குட்டுக்களும் வெளிப்படலாம் என்ற அரசியல்வாதிகளின் அச்சமும் அதிர்ச்சியும் பாதாள உலகத்தினரிற்கேயான பரபரப்புடனும் த்ரில் உடனும் சொல்லப்படுவது யாழ்ப்பாணத்திலும் இலங்கையிலும் நடக்கும் அன்றாடப்படுகொலைகளை ஞாபகப்படுத்துகிறது அல்லது புரியவைக்கிறது. இறுதியில் நேர்மையான பொலிஸ் அதிகாரி ஒருவரால் அவர்களில் ஒருவர் கென்ய நாட்டில் காயமுற்ற நிலையில் கைதுசெய்யப்படுவதையும் அதன்மூலம் அப்பாதாளக்குழு ஒடுக்கப்படுவதையும் ஆனாலும் சிறிய அளவிலாவது அதன்செயற்பாடுகள் மூன்றாம் மட்ட தலைவர்களால் முன்னெடுத்துச்செல்லப்படுவதையும் யதார்த்தமாகவும் உணர்ச்சிகரமாகவும் சொல்லியிருக்கிறார் இயக்குனர். கைதுசெய்யபட்ட பாதாள தலைவரை சந்தித்து தன்னைப்பற்றிய உண்மைகளை சொல்லிவிடாதே என இரகசியமாக வேண்டுகோள் விடும் உள்துறை அமைச்சரை அவரது மெய்பாதுகாவலரது துப்பாக்கியாலேயே சுட்டுக்கொல்வது அருமையான 'திடுக்'. பலரது தலைவிதியை நிர்ணயித்த ஒருவர் சாதாரண ஆயள்கைதியாகி குற்றமனப்பான்மையால் வெதும்புவது வாழ்க்கையின் சுழலை காட்டுகிறது. அஜேய் தேவ்கான், விவேக் ஒபராய், மோகன்லால் ஆகியோர் பிரமாதமாக நடித்துள்ளனர். இதைவிட படத்தின் தொழில்நுட்ப அம்சங்களும் கமெரா கோணங்களும் பின்னணி இசையும் ஒரு வித்தியாசமான நல்ல படத்தைப்பார்த்த உணர்வைத்தருகிறது. ஆங்கில உபதலைப்புள்ள டி.வி.டி யில் பார்ப்பது புரிதலை இலகுவாக்கும். படம் பார்த்தபின்பு யாழில் இன்று நடந்துகொண்டிருக்கும் படுகொலைகள் ஞாபகத்திற்கு வருவது தவிர்க்கமுடியாதது.

Monday, February 11, 2008

புலம்பெயர் ஈழ இரண்டாம் தலைமுறை

புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் தங்கள் பிள்ளைகளின் தமிழறிவு தொடர்பில் தற்போது ஒரு விழிப்புநிலை கொண்டுள்ளவராகக் காணப்படுகின்றனர்। தமது பிள்ளைகள் தமிழ் கற்கவேண்டும் என்பதிலும் தமிழ்க்கலைகளை கற்கவேண்டும் என்பதிலும் ஆர்வம் காட்டுகின்றனர்। நேற்றைய தினம் ஜேர்மனி நாட்டில் வியர்சன் நகரில் நடைபெற்ற தமிழ்திறன் இறுதிப்போட்டி இதற்கு நல்ல சான்றாகும்।
ஜேர்மனியின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் சுமார் 4500மாணவர்கள் முன்னைய போட்டிகளில் பங்குபற்றியது குறிப்பிடத்தக்கதாகும்। இது வரவேற்கத்தக்கதே।
ஆயினும் இப்பிள்ளைகள் இதன்மூலம் இருகலாசாரத்தளங்களில் வாழ நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள்। பொதுவாக தத்தமது புலம்பெயர் நாடுகளின் பாடசாலை கல்விக்கு மேலதிகமாக வாரத்தில் சிலநாட்களில் மாலைவேளைகளிலும் விடுமுறை தினங்களிலும் இத்தமிழ்ப்பாடசாலைகள் இயங்குகின்றன। தாம்கற்கும் பாடசாலைகளில் எற்கத்தக்க சிலவிடயங்கள் தமிழ்கலாசார ரீதியில் ஏற்கமுடியாததாகும் சந்தர்ப்பங்களில் மாணவர்கள் குழப்பமடையக்கூடும்। மேலும் தாம்வாழும் சூழலைவிட பிறிதொரு கற்பனையான சூழல் குறித்தான அவர்களது கல்வி சிலவேளைகளில் அவர்கட்கு நம்பிக்கையீனத்தை தோற்றுவிக்கக்கூடும்। இந்நிலையில் தமிழ்பாடசாலை கல்விக்கு மேலதிகமாக பெற்றோரும் புரிந்துணர்வுடன் பிள்ளைகளின் உளச்சிக்கலை நீக்குமுகமான அனுசரணையாளர்களாகச் செயற்படவேண்டும்। முக்கியமாக இதற்கு பெற்றோர் பிள்ளைகளுடன் வீட்டில் இருக்கும் நேரத்தை அதிகரித்துக்கொள்ள வேண்டும்।
சுவிஸில் வெளியிடப்பட்ட குறுந்திரைப்படம் ஒன்றில் சித்தரிக்கப்பட்ட விடயம் ஞாபகம் வருகிறது। அதில் பெற்றோரது வேலைத்தளப்பளு விபரிக்கப்படுகிறது। அவர்களது பிள்ளை பாடசாலையால் வந்து வீட்டின் முன்னால் இருந்து கொண்டு அடுத்த வீட்டில் விளையாடிக்கொணடிருக்கும் வேற்றின சிறுவர்களின் விளையாட்டை ஏக்கத்துடன் பார்த்துக்கொண்டிருக்கிறது। நேரங்கழித்து பெற்றோர் திரும்புகிறார்கள்। தகப்பனார் குழந்தையின் ஏக்கம் நிறைந்த முகத்தால் கவலையடைந்து தாயிடம் சொல்கிறார்... 'குழந்தை பாவம்॥ நான் இங்க உழைக்கிறன்॥ நீ குழந்தையை ஊருக்கு கொண்டுபோய் படிப்பி॥' தாய் ஆக்ரோஷமாக... 'நான் இங்க நஷனாலிட்டி எடுத்து கொஞ்ச காசோட தான் ஊருக்குப்போறதெண்டால் போவன்...'
இதில் நியாயப்படுத்தல்கள் இருந்தாலும் இந்த 'கொஞ்ச காசு' என்பதன் வரையறை என்ன..? இலங்கையின் வளர்ந்து வரும் வாழ்க்கைச்செலவிலும், இலங்கையின் தமிழர் பிரதேசங்களின் நிலையான!? சொத்துக்களுக்கான (காணி, வீடு,கடைகண்ணி॥!) அதிகரித்த கேள்வியும் இந்த 'கொஞ்ச காசு' என்பதை முடிவிலி ஆகவே ஆக்கும்... இந்நிலையில் அக்குழந்தை.....??

Saturday, February 9, 2008

அறிமுகமாய் சிலவார்த்தைகள்....

இலவச இணையங்களினூடான தமிழ் தளங்கள் வியப்பும் பெருமையுமடைய வைக்கின்றன।
புலம்பெயர்வாலும் இடப்பெயர்வாலும் பிரிந்திருப்பவர்களையும், இதன் காரணமாக வெவ்வேறு தளங்களில் வெவ்வேறு அதிர்வெண்ணில் அதிர்ந்து கொண்டிருப்பவர்களையும், தமிழால் இவ் இணையதளங்கள் ஒன்றுசேர்க்கின்றன।
சிந்தனைகளையும் விமர்சனங்களையும் வெளிப்படுத்த இவ்வாறான தளங்கள் சுதந்திரமான வரப்பிரசாதங்களே!