Sunday, February 17, 2008

மரணம் பற்றி...

பிறந்த ஒவ்வொருவரும் இறப்பது நியதியேயாயினும் மரணம் சமமாக எல்லோருக்கும் வருவதில்லை. கருவில் இறப்போரும் உண்டு, தெருவில் இறப்போரும் உண்டு, முதிர்ந்து இறப்போரும் உண்டு. மரணம் என்பது நிச்சயமான பிறகு, மரணத்திற்குப்பின் என்னவாவோம் என்கிற கேள்வி எழுகிறது. பல சமயங்களும் பலவாறாக சொல்கின்றன. பாவ புண்ணியங்களை தவிர்த்த எளிமையான சிந்தனைக்கு மூன்று தேர்வுகள் (Choice) உள்ளன.
  1. மரணத்தின் பின் இல்லாது போதல்
  2. மரணத்தின் பின் இன்னொன்றாக மாறுதல்
  3. மரணத்தின் பின் பிறப்புக்கு முன் இருந்த நிலையை அடைதல் (வந்த இடத்திற்கே திரும்ப போதல்)

நமது ஐம்புலன்களின் சக்தியும் வரையறுக்கப்பட்டவை. அதாவது குறிப்பிட்ட தூரம் வரையே எம்மால் பார்க்க முடியும், குறிப்பிட்ட அளவு ஒலியையே கேட்கமுடியும். எனவே இந்த எல்லைகளுக்கு அப்பாற்பட்டவற்றை அறியக்கூடியதாகவும் அல்லது உணரக்கூடியதாகவுமான சக்திகள் இருக்கக்கூடும். அவ்வாறான சக்திகளை மரணத்தின் பின் பெறுகிறோமா?

பொதுவாகவே மரணத்திற்கு மனிதர்கள் பயப்பிடுகிறார்கள். மரணத்துக்கு முன்பு அது தொடர்பான வலி, அவஸ்தை இருக்கிறது. ஆகக்கூடியநேரம் வரை மூச்சை அடக்கும்போது இவ் அவஸ்தையின் சிறிதளவை உணரமுடியும். முன்னர் மரணம் என்பது பெரிய விடயமாக இருந்தது. பெரும்பாலும் மூப்படைந்து அல்லது நோய் வந்து மரணம் சம்பவித்தது. மரணம் நிகழ்ந்த வீட்டை அல்லது இடத்தை தவிர்த்து வேறுபாதைகளை பாவித்து பயணிப்பார்கள். யமன் வந்திட்டுது, சேடம் இழுக்கிறது போன்ற பிரயோகங்கள் மரணஅறிகுறிகளைக்கொண்டு பாவிக்கப்பட்டது. இப்போது யமன் வராமலே சேடம் இழுக்காமலே கணப்பொழுதில் மரணிக்கிறார்கள்.

மறைமலை அடிகள் 'மரணத்துக்கு பின் மனிதர் நிலை' (1911 ல் எழுதப்பட்டது) என்ற நூலில் ஸ்தூல உடம்பு, சூக்கும உடம்பு என இருவகையான நிலை குறித்து குறிப்பிடுகிறார். ஸ்தூலம் என்பது கண்ணுக்கு தெரிவது, சூக்குமம் என்பது கண்ணுக்குத் தெரியாதது. எனவே மரணம் என்பது ஸ்தூலத்திலிருந்து சூக்குமத்திற்கு மாறுவது என்று குறிப்பிடுகிறார். ஆயினும் சூக்கும உடம்பிலும் அவர்களது பாவபுண்ணியத்திற்கேற்ப வெள்ளையாகவும் கறுப்பாகவும் தோன்றுவதாக பலரின் கனவுகளை உதாரணம் காட்டி குறிப்பிடுகின்றார். கனவு என்பதும் ஆழ்மனப்பதிவு சார்ந்தது என்பதால் கனவை ஆதாரமாகக் கொள்ளல் இயலாது. எனினும் சடுதியான மாரடைப்பிலிருந்து மீண்டவர்கள் சிலர் தங்களது உடலை மேலிருந்து பார்க்கும் நிலையிலிருந்ததாக (Top elevation view) சொல்லியுள்ளார்கள். எனினும் இவையெதையும் நிரூபிக்கமுடியாது. ஏனெனில் மரணம் என்பது உயிர் ஒன்றுக்கு இவ்வுலகில் ஏற்படும் கடைசி நிகழ்வு. அதன் பின் இவ்வுலகின் செல்வாக்கு அவ்வுயிரில் இல்லாது போகிறது என்பதே உண்மை. இதனாலேயே சட்டமும் சமயமும் வலிந்து ஏற்படுத்தப்படும் மரணங்களை குற்றம் என்கிறது.

ஆமாம் இதெல்லாம் இருக்கட்டும், இன்று உலகெங்கும் தங்களை வெடிக்க வைத்துக்கொள்ளும் தற்கொலை(டை)யாளிகள் வெடிக்க நினைக்கும் முதற்கணத்தில் வெடித்தபின்னான அடுத்த கணம் பற்றி என்ன நினைப்பார்கள்...??

6 comments:

டொக்டர்.எம்.கே.முருகானந்தன் said...

மரணம் பற்றி பகுத்தறிவு கொண்டு சிந்திப்பது ஒரு சிலரே. உங்கள் சிந்தனைகள் மேலும் சிந்திக் வைக்கிறது.

'முன்னர் மரணம் என்பது பெரிய விடயமாக இருந்தது. ...இப்போது யமன் வராமலே சேடம் இழுக்காமலே கணப்பொழுதில் மரணிக்கிறார்கள்.'

மேற்படி எழுத்தை ரசித்தேன்.

அன்புடன் புகாரி said...

ஆ.கோகுலன், இந்த நல்ல பதிவுக்கு வாழ்த்துக்கள். மேலும் எதிர்பார்த்தேன். பிறகு எழுதும்போது சொல்லுங்கள், வந்து வாசிக்கிறேன்.

ஆ.கோகுலன் said...

வணக்கம் டொக்டர்.எம்.கே.முருகானந்தன் மற்றும் புகாரி,
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
-ஆ.கோகுலன்.

இறக்குவானை நிர்ஷன் said...

மரணம் பற்றி நிறைய யோசித்திருக்கிறீர்கள் போல... உண்மையில் இரசித்து வாசித்தேன். நீங்கள் கடைசியாக கேட்ட கேள்வி பற்றி நண்பர்களுடன் நிறைய தடவை பேசித்தீர்த்தது நினைவுக்கு வருகிறது கோகுலன்.
( இலங்கையிலிருந்தா பதிவிடுகிறீர்கள்?)

ஆ.கோகுலன் said...

வருக நிர்ஷன், மனிதரைப்பிரிந்தாலென்ன, நாட்டைப்பிரிந்தாலென்ன, மொழியைப்பிரிந்தாலென்ன எல்லாப்பிரிவிலுமே ஒருவிதமான தன்னிரக்கம்.. ஒரு மரணஞாபகம் இருக்கிறது. கருத்துக்கு மிகவும் நன்றி. நான் கொரியாவிலிருக்கிறேன்.

sasikaran said...

another niceone.

sasikaran
chunnakam