Wednesday, August 13, 2008

முதுமை


முதுமை குறித்தான நூலொன்றை அண்மையில் பார்க்கும் வாய்ப்புக்கிடைத்தது. உலகில் பொதுவாக அதிகரித்துள்ள குடும்பநல வசதிகள் காரணமாகவும் விஞ்ஞான முன்னேற்றங்கள் காரணமாகவும் மனிதரின் எதிர்பார்க்கப்படும் ஆயுட்காலம் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக உலகில் முதியோரின் எண்ணிக்கையும் வேகமாக அதிகரித்து வருகின்றது.


எனவே முதியோர் குறித்தான ஆய்வுகளும் தற்போது மேற்கொள்ளப்படுகின்றன. இந்த வகையில் யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்த இந்தநூல் என்னை ஆச்சரியப்படவைத்தது. முதுமை என்பது சர்வதேச ரீதியில் அணுகப்படத்தக்க ஒரு எண்ணக்கருவாக இருப்பினும் யாழ்ப்பாணச்சூழலை மையமாகவைத்து இந்தப்புத்தகம் முதுமை குறித்து ஆராய்வது காலத்தின் தேவை கருதிய பணி.ஏனெனில் தொடர்ந்து வரும்போரால் இளம்சந்ததிகள் போரிட்டு மடிந்துபோகவும் எஞ்சியோர் புலம்பெயர்ந்து வெளிநாடுகளுக்குப்போகவும் யாழ்ப்பாணத்தில் எஞ்சியிருப்போர் முதியோர்களே.எனவே இவர்கள் குறித்தான உளவியல் உடலியல் ஆய்வுகள் பிரதானமானது. அத்துடன் இப்போது யாழ்ப்பாணத்திலுள்ள முதியோர்கள் யாழ்ப்பாணத்தின் பல்வேறு பட்டகாலங்களில் ஏற்பட்ட அரசியல் சமூகமாற்றங்களுக்கூடாக வந்தவர்கள். இவ்வாறான மாற்றங்களின் இன்றையநிலை இவர்களுக்கு சலிப்பும் விரக்தியுமான ஒன்றாகவேயிருக்கும்.பொதுவாக மனிதவாழ்வில் 40-45 வயதை தாண்டியவர்கள் தங்களை முதியவர்களாக எண்ணத்தலைப்படுகின்றார்கள். இதற்கு உடலில் ஏற்படும் மாற்றங்களும் (தலைநரைத்தல் உயர்குருதி அழுத்தம் போன்றன) உள்ளத்தில் ஏற்படும் மாற்றங்களும் (பிள்ளைகள் பெரியவர்களாக வளர்வது, தந்தை தாய் இறப்பு) காரணமாக அமைகின்றன.எனவே இந்த வயதெல்லையிலேயே மனிதர்கள் சட்டென்று ஒரு 'பிறேக்' போட்டு சிந்திக்க தலைப்படுகிறார்கள். (விவேக் ஒரு படத்தில் சொல்வது போல.. 'அடடா நமக்கு ஏஜாகிப்போச்சா..')இதன்காரணமாக இந்தவயதெல்லையில் பொதுவாக நடத்தைப்பிறழ்வுகள் ஏற்படுவதுண்டு. தாம் பின்பற்றி வந்த கொள்கைகள் வெற்றியளிக்காமை, 'எல்லாம் பின்னால் சரிவரும்' போன்ற சமாதானங்களுக்கான எல்லையாகவும் இந்தவயதெல்லை காணப்படுகின்றது.இதனாலேயே நல்லவராக இருந்த சிலர் கெட்டவராக மாறுவதும் கெட்டவராக இருந்த சிலர் நல்லவராக மாறுவதும் நிகழ்கிறது. அத்துடன் ஆன்மீக நாட்டமும் அதிகரிக்கிறது. மேலும் பணியிலிருந்து ஓய்வுபெறும் வயதெல்லையும் இவர்களை முதியவர்களாக சிந்திக்கவைக்கிறது.ஆயினும் பொதுவாக 60 வயதுக்கு மேற்பட்டவர்களே உண்மையில் முதியவர்களாக கணிக்கப்படுகிறார்கள். இந்த வயதுகளில் உடற்கலங்கள் படிப்படியாக சிதைவடைந்து போவதைப்போலவே உள்ளமும் இறப்பை நோக்கியதான ஒரு தயார்படுத்தலுக்கு உள்ளாகிறது.இளையவரும் ஒருநாள் முதியவர்களாவார் என்பதையுணர்ந்து முதியவர்களின் ஆரோக்கியமான முதுமைவாழ்விற்கு உதவிடவேண்டும்."முயற்சிக்காமல் கிடைப்பது முதுமை மட்டுமே.."

Tuesday, July 22, 2008

தென்கிழக்காசிய வேங்கை - தென்கொரியா - 02

தென்கொரியா பெளத்தமதம் சார்ந்த நாடாக இருந்தபோதும் 46 வீதத்திற்கும் கூடுதலானவர்கள் எந்தமதத்தையும் சாராதவர்களாகவே இருக்கிறார்கள். விண்ணப்பப்படிவங்களில் கூட 'எந்த மதத்தையும் சாராதவர்..' என்ற தெரிவும் தரப்பட்டிருக்கும்.30 வீதமானவர்கள் பெளத்தர்களாகவும் 15 வீதமானவர்கள் கிறிஸ்தவர்களாகவும் இருக்கிறார்கள். 50000 பேர்வரை முஸ்லிம்களாகவும் இருக்கிறார்கள்.
(படம் - கொரிய மயானம்)
மதநிகழ்வுகளில் மக்கள் பங்களிப்பு குறைவாக இருக்கும். வெசாக்குடன் வரும் ஊர்வலத்தில் இலங்கை பெரஹராவை ஒத்தஊர்வலங்கள் நடைபெறும்.

அரசியல் குறித்தும் பெரும்பாலானவர்கள் அலட்டிக்கொள்வதில்லை. அதற்கு அவர்களுக்கு நேரமும் இருப்பதில்லை. தற்போதய ஜனாதிபதி திரு.லீ மியுன் பக் அவர்கள் வேட்பாளராக இருந்தபோது கொரியாவின் ஹீண்டாய் நிறுவன ஊழல் வழக்கொன்றில் சம்பந்தப்பட்டிருந்தார். ஆனால் அதையும் மீறி மக்களால் அவர் தெரிவுசெய்யப்பட்டார். அதன்பின்னர் நீதிமன்றம் அந்த வழக்குகளில் இருந்து அவரை விடுவித்தது.தேர்தல் பிரச்சாரங்கள் அமைதியாகவும் நாசூக்கான முறையிலும் செய்யப்படும்.
(படம்- வீதியோரத்தில் தேர்தல் பிரசாரம்)
பொதுவாக மேடையுடன் கூடிய வாகனம் ஒன்றில் வேட்பாளர் மக்கள்கூடும் சந்திகளில் உரையாற்றும்போது சீருடையணிந்த பெண்கள் அவருக்கு ஆதரவாக கோஷமிடுவார்கள். சுவரொட்டிகள் மற்றும் பதாதைகள் நகரசபையால் ஒதுக்கப்பட்ட இடங்களில் மட்டுமே காட்சிப்படுத்தப்படும்.கொரியர்களின் பாரம்பரிய உடை யப்பானியர்களின் கிமோனோ உடையை சிறிதளவு ஒத்தது. ஆயினும் இவ்வாறு பாரம்பரிய உடைகளை அணிபவர்களின் எண்ணிக்கை மிகக்குறைவு என்று சொல்லலாம். இளைய தலைமுறையினர் பெரும்பாலும் அமெரிக்கபாணியிலான நாகரிகங்களிலேயே ஆர்வம் காட்டுகிறார்கள்.
(படம் - கொரிய பாரம்பரிய உடை)
கொரியாவில் சாதாரணமாக விருந்துகளும் கதிரையில் இருக்காமல் நிலத்தில் தலையணை போன்ற திண்டின்மீது உட்கார்ந்தே விருந்து உண்பார்கள். விருந்தில் மதுவும் மாமிசமும் பிரதானமானது.
(படம் - கொரிய விருந்து)
போர் ஒரு முடிவுக்கு வந்தாலும் எல்லையில்காணப்படும் பதற்றத்தை காரணம்காட்டி அமெரிக்கத்துருப்பினர் 24000 வரையானவர்கள் தற்போதும் கொரியாவில் தங்கியிருந்து கொரியஇராணுவத்துக்கு உதவிவருகின்றனர். இதனால் கொரியா பல சங்கடங்களுக்கும் நிபந்தனைக்கும் ஆளாகிவருகிறது.

அமெரிக்க இராணுவத்தினருக்கென நெற்காணிகள் சுவீகரிக்கப்பட்டன. உள்ளுர் சந்தைவிலைகளைவிடவும் குறைவான விலையில் மாட்டிறைச்சியும் அரிசியும் அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றது.அரசின் இவ்வாறான நடவடிக்கைகளுக்கு எதிராக மக்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.
(படம் - 18ம் நூற்றாண்டு அரச அரண்மனை)
அண்மையில் அரசால் சுவீகரிக்கப்பட்ட தனது காணிக்கு நட்டஈடு கிடைக்காததால் வெகுண்ட வயோதிபர் ஒருவர் புராதன மேற்குவாயில் என்று அழைக்கப்டும் வரலாற்று மரக்கட்டடம் ஒன்றிற்கு தீவைத்து அக்கட்டடம் முழுமையாக எரிந்து நாசமானது.கோடை, மழை, குளிர், வசந்தம் என்ற நான்கு காலநிலைகள் காணப்படுகின்றன. குளிர்காலமே இதில் அதிகம். கடும்குளிர் காரணமாக பொலிதீன் கூடாரங்களுக்குள்ளேயே பயிர்ச்செய்கை நடைபெறுகிறது. கோடைகாலத்தில் நெல்விதைப்பு இடம்பெறும். ஒப்பீட்டளவில் விவசாயிகள் வருமானம் குறைந்தவர்களாகவே இருக்கிறார்கள்.
தலைநகரம் சோலில் (Seoul) பார்க்கவேண்டிய இடங்களாக பல நிறுவப்பட்டுள்ளன. கடல் மட்டத்திலிருந்து 365மீற்றர் உயரமான சோல் ரவரிலிருந்து சோலை நாலாபக்கமும் தொலைநோக்கிமூலமும் கண்டுகளிக்கலாம். மலைஒன்றில் அமைக்கப்பட்டுள்ள இந்த கோபுரத்தின் அடிப்பகுதிக்கு கேபிள் கார் மூலம் செல்லலாம்.இந்த கோபுரத்தின் அடிவாரத்தில் காதலர்களின் பெயர்கள் எழுதிய பூட்டுக்களை பூட்டி விட்டால் காதலர்கள் பிரியாமல் இணைந்திருப்பார்கள் என்று நம்புகிறார்கள்.

டிஸ்னிலாண்ட் ஐ ஒத்த Lotteworld. Seoul land, Dream land, Everland என்று பல கேளிக்கை பூங்காக்கள் உள்ளன.


Coex Aquarium மற்றும் 63city என்பவற்றில் கடல்வாழ் உயிரினங்களை நேரடியாக இராட்சதநீர்த்தொட்டி குகைகளில் காணமுடியும். தலைநநகரின் மத்தியில்ஓடும் ஆறான Han river என்பதில் 'ஜொய்னாறு' எனுமிடத்தில் கேளிக்கை படகுசவாரி செய்வதனூடாக இரவில் சோலின் அழகை இரசிக்க முடிவது இனிமையான அனுபவம்.கோடைகாலத்தில் புகழ்பெற்ற கடற்கரையாக 'ஹியுந்தே' கடற்கரை விளங்குகிறது. இது பூசான் எனுமிடத்தில் தலைநகரிலிருந்து ஆறுமணிநேர பயணதொலைவில் உள்ளது. இவற்றை தவிர கொரிய கலைகலாசாரத்தை விளக்கும் நூதனசாலைகளும் தாவர மற்றும் மிருக காட்சிசாலைகளும் உல்லாசப்பயணிகளை கவருமிடங்களாக உள்ளன.

Yongsan, Technomart என்பவை பெரிய இலத்திரனியல் வர்த்தக நிலையங்களாகவும் Dongdamun, Namdamun என்பவை பிரத்தியேகமாக வெளிநாட்டினரை கவரும் பிரபல சந்தைகளாகவும் விளங்குகின்றன.


சோல் நகரசபையினர் பிரகடனப்படுத்திய 'Hi Seoul..! - Soul of Asia' என்ற மகுடவாக்கியம் இங்கு குறிப்பிடத்தக்கது.

Tuesday, July 8, 2008

தென்கிழக்காசிய வேங்கை - தென்கொரியா - 01

கொரியா வரும்போதே நான் பயந்துகொண்டே வந்தது கொரிய உணவுகளை எண்ணித்தான். நாய் இறைச்சியும் சாப்பிடுவார்கள் என்று இலங்கையில் பயமுறுத்தியிருந்தார்கள். இங்கு வந்ததும் அது உறுதியாகிவிட்டதுமல்லாமல் வந்த இரண்டு மாதத்திலேயே அதில் ஒரு துண்டும் தவறுதலாக வாய்க்குள் போய்விட்டது.

கொரியமொழியில் 'கோகி' (Kogi) என்பது இறைச்சியை குறிக்கும். தக்கோகி - கோழியிறைச்சி, தேஜிகோகி - பன்றி இறைச்சி, கேகோகி - நாய் இறைச்சி. இதில் நான் உண்பது தக்கோகி மட்டுமே. ஆரம்பத்தில் கொரியமொழியில் எதைச்சொன்னாலும் உச்சரிப்பை விளங்கிக்கொள்ளுவதில் சிக்கல் இருந்தது.

இலங்கையில் அலுவலக கோப்புகள் மற்றும் கடிதங்களில் என்னை சுருக்கமாக விளிப்பது Mr.K. என்று.. ஆனால் கொரிய மொழியில் 'கே' என்பது நாயைக்குறித்ததால் விதியின் கொடுமையையும் நொந்துகொள்ள வேண்டியிருந்தது.

எமது நாட்டில் கோழிகளை வீட்டில் வளர்ப்பது போல இவ்விடம் நாய்களை இறைச்சி மற்றும் வளர்ப்பு நோக்கங்களுடன் வளர்க்கிறார்கள். நாய்ப்பண்ணைகள் கூட இருக்கின்றன. வீதியோரங்களில் இருக்கும் நாய்ப்பண்ணைகளிலிருந்து இரவுநேரத்தில் நூற்றுக்கணக்கான நாய்கள் கோரசாக குரைப்பது திகிலாக இருக்கும்.


கொரிய உணவில் பிரதான இடம் வகிப்பது 'கிம்ஜி' என்ற உணவு. Secret of our energy என்று கொரியர்கள் சொல்லுமளவுக்கு எல்லோரும் எல்லா வேளைகளிலும் சாப்பிடும் ஒரு ஆகாரம் அது.

'பெச்சு' என்று சொல்லப்படும் முட்டைக்கோஸ் போன்ற அடுக்கான இலைகளுக்குள் உப்பு, சீனி, மிளகாய் தூள், மிளகுத்தூள், நசுக்கிய வெள்ளைப்பூண்டு மற்றும் பெயர்தெரியாத வஸ்துக்களெல்லாம் போட்டு மரப்பானைகளுக்குள் போட்டு வீட்டுக்கு வெளியில் வைப்பார்கள்.

பின்னர் சில மாதங்கள் கழித்து!! மரப்பானைக்குள் இருப்பதை துண்டுகளாக்கி சோறுடன் (பப்) உண்பார்கள். இப்போது கிம்ஜியின் நாற்றம் எப்பிடி இருக்கும் என்பதை நீங்களே கற்பனை செய்து கொள்ளலாம்.

ஆசிய நாடென்றபோதிலும் தெற்காசிய உணவுமுறைகளிலிருந்து கொரிய உணவுவகைகள் இவ்வளவு தூரம் வேறுபடுவது வேறு ஒரு கிரகத்துக்கு வந்த உணர்வையே தந்தது.


5000 ஆண்டு பழைமைவாய்ந்த கொரியா இரண்டாம் உலக யுத்தத்திற்கு முன்னர் யப்பானால் ஆக்கிரமிக்கப்ட்டு பலத்த அடக்கு முறைக்கு ஆளாகியது. ஒரு லட்சம் பேர் பலவந்தமாக யப்பானிய இராணுவத்துக்கு சேர்க்கப்பட்டார்கள்.

மேலும் கொரியர்களின் பெயர்கள் கூட யப்பானிய முறையிலேயே வைக்கவேண்டும் என்று கட்டளையிட்டதுடன் பெருமளவிலான பொருளாதார சுரண்டல்களும் (குறிப்பாக கடல்வளங்கள்) யப்பானால் மேற்கொள்ளப்பட்டது. அத்துடன் கொரியப்பெண்கள் மீதும் வன்முறைகள் மேற்கொள்ளப்பட்டன. இதனால் இன்றும்கூட கொரியர்கள் யப்பானை வெறுப்பவர்களாகவே காணப்படுவதுடன் யப்பானிய உற்பத்திப்பொருள்களையும் நிராகரிக்கின்றனர்.

இரண்டாம் உலகமகாயுத்த முடிவில் யப்பான் அமெரிக்காவிடம் சரணடைந்ததால் கொரியாவின் ஒரு பகுதியை அமெரிக்காவும் இன்னொரு பகுதியை ரஷ்யாவும் ஆதிக்கம் செலுத்தின. இதனால் ரஷ்ய கொம்யூனிசம் சார்ந்த பகுதி வடகொரியா என்றும் அமெரிக்க முதலாளித்துவ கொள்கை கொண்ட பகுதி தென்கொரியா என்றும் 1950 - 1953 வரை நடந்த போரின்பின் எல்லைகள் வகுத்து பிரிக்கப்பட்டது.

போரின்போது வடகொரியாவுக்கு சோவியத் ஒன்றியமும் சீனாவும் ஆதரவளிக்க தென்கொரியாவுக்கு அமெரிக்கா ஆதரவளித்தது. இலட்சக்கணக்கானவர்கள் போரின்போது மாண்டார்கள். கடல்தாவரங்களை காயவைத்து உண்ணும் அளவுக்கு வறுமைதாண்டவமாடியது.

போர்பற்றி ஒரு கொரிய வயோதிபர் சொல்லும்போது 'அமெரிக்க இயந்திர துப்பாக்கிகளுக்கு முன்னால் கொத்து கொத்தாக சீன இராணுவத்தினர் மடிந்தபோதும் அவர்கள் வெறும் கட்டுத்துப்பாக்கி (shot gun) ஐ வைத்துக்கொண்டு அலை அலையாக வந்தார்கள் என்று சீன இராணுவத்தின் ஆட்தொகையும் அர்ப்பணிப்பும் பற்றி குறிப்பிடுகின்றார்.

போரின்கொடுமையால் இரண்டு கொரியாவுமே வறுமையடைந்தன. 1953 தொடக்கம் 1958 காலப்பகுதிகளில் தென்கொரியா அமெரிக்காவிடமிருந்து வருடாந்தம் 27 கோடி டொலர் பெறுமதியான உதவிகளை பெற்றுவந்தது. இது அக்காலப்பகுதி மொத்ததேசிய உற்பத்தியின் 15 வீதமாகும்.

(தென்கொரிய பாராளுமன்றம்)

1960 ஆம் ஆண்டு தென்கொரியாவின் மொத்ததேசிய வருமானம் சூடான் நாட்டு வருமானத்துக்கு சமமானதாக இருந்தது. அதன் பின்னர் இராணுவ தலைவர்களே ஆட்சி செய்தாலும் உலகயுத்தத்தின் பின்னர் ஏற்பட்ட உலகமயமாக்கலுக்கு ஏற்றவகையில் பொருளாதார கொள்கைகளை வளர்த்துக்கொண்டதன் காரணமாகவும் புவியியல் அரசியல் காரணங்களாலும் தென்கொரியாவுக்கு அமெரிக்க பிரித்தானிய உதவிகள் தாராளமாகக்கிடைக்க மாறிவந்த உலக ஒழுங்கில் தன்னை இணைத்துக்கொண்டு கொரியா வேகமாக முன்னேறியது.

இன்று உலகின் முதல்பத்து ஏற்றுமதி நாடுகளுக்குள் கொரியாவும் அடங்குகிறது. கொரிய நாணயமான 'வொன்' (won) உலகின் பன்னிரண்டாவது இடத்தைப்பிடித்துள்ளது.. மோட்டார்வாகன ஏற்றுமதியில் உலகின் ஐந்தாவது இடத்தை ஹீண்டாய் (Hyundai) மற்றும் கியா (Kia) நிறுவனங்கள் தக்கவைத்துள்ளன.

இது தவிர இலத்திரனியல், பொறியியல், கட்டடவியல், வேதியியல், உயிர்நுட்பவியல் போன்றவற்றிலும் இன்று முன்னணி பெற்று விளங்குகிறது. இலத்திரனியலில் லிதியம் கிறிஸ்ரல் டிஸ்பிளே (LCD) மற்றும் செல்லிடப்பேசி கணனி தொழிநுட்பத்தில் உலகின் முன்னணி நிபுணத்துவ நாடாகவும் மிளிர்கிறது.

(கொரியதலைநகரம் சோலின் [Seoul] ஒரு பகுதி )

யப்பானுடன் தென்கொரியா, தைவான், சிங்கப்பூர், ஹொங்ஹொங் ஆகியவை தென்கிழக்காசியாவின் நான்கு வேங்கைகள் என்று அழைக்கப்படுகின்றன. இந்நாடுகளின் பொருளாதார வளர்ச்சியை ஒரு 'அற்புதம்' (miracle) என்று வர்ணிக்கிறார்கள்.

தென்கிழக்காசியாவில் பசுபிக் சமுத்திரத்தில் கொரியாவிற்கு இருந்த புவியியல் அரசியல் பொருளியல் சந்தர்ப்பங்கள் யாவும் தெற்காசியாவில் இந்து சமுத்திரத்தில் இலங்கைக்கு இருந்தும் தொடர்ந்து வரும் இனமோதல்களால் இலங்கை அச்சந்தர்ப்பங்களை தவறவிட்டு வறுமையில் உழன்று கொண்டிருப்பது துரதிர்ஷ்டவசமானது.

பதிவு நீண்டுவிட்டதால் கொரிய கலாசாரம் மற்றும் பல விடயங்களை அடுத்த பதிவில் தருகிறேன்.Friday, June 20, 2008

மனதை தொட்ட 'ஓம்காரா' - ओमकारा

வில்லியம் ஷேக்ஸபியரின் 'ஒத்தெல்லோ' நாடகத்தை தழுவி உருவாக்கப்பட்டதே 'ஓம்காரா' என்ற ஹிந்தித்திரைப்படம்.

விஷால் பரத்வாஜ் இயக்கி அவரே இசையமைத்த படம் என்பதும் குறிப்பிடத்தக்கது. மிகக்கவனமாகக் கையாளப்பட்ட திரைக்கதையில் விஷால் பரத்வாஜிடன்
ராபின் பட், அபிஷேக் சௌபே ஆகியோரும் பங்களித்திருக்கிறார்கள்.


இயக்குநரே இசையமைப்பாளராகவும் இருப்பதால் பாடல்கள் துள்ளிசை மற்றும் மெல்லிசையாக படத்திற்கு ஏற்றவகையில் சிறப்பாக அமைந்துள்ளன.

Namaksho.rm -

தஸாதக் ஹீசேனின் ஒளிப்பதிவும் மிகச்சிறப்பாக உள்ளது. பாடலில் இடம்பெறும் ஓ.. சாத்திரே... என்ற மென்மையான பாடலுக்கு மிக அருமையாக ஸ்லோமோஷனில் கமரா விளையாடியுள்ளது.Omkara - O Saathi Re -

ஓமியும் டோலியும் கீழ்மாடியிலிருந்து மேல்மாடிக்கு போய், பின் மற்றொரு வழியாக மேல்மாடியிலிருந்து கீழே வந்து வெளிவாசற்கதவால் வெளியேறிச்செல்வது வரை ஒரே காட்சியாக crane shot இல் படமாக்கியிருப்பது அற்புதம்.

ஓமி எனப்படும் ஓம்காரா பிரபல அரசியல் கட்சி ஒன்றின் தளபதி என்ற நிலையில் இருப்பவர். கட்சி சார்பான ரெளடீசங்களுக்கு இவரே பொறுப்பு என்பதால் கட்சியில் செல்வாக்கு மிக்கவராக விளங்குகிறார். இவருக்கு நம்பிக்கைக்குரிய நண்பர்களாக லங்க்டா மற்றும் கேசு என்பவர்கள் இருக்கிறார்கள்.


ஒரு பொது நிகழ்வொன்றில் தனக்கடுத்தபடியான தளபதியாக கேசுவை ஓமி அறிவிக்கின்றார். இதனால் பொறாமைப்படும் லங்க்டா ஓமி மணந்து கொள்ள இருப்பவரும் ஓமியின் காதலியுமான டோமிக்கும் கேசுவுக்கும் தவறான உறவு இருப்பதான ஒரு எண்ணத்தை ஓமியின் மனதில் மெது மெதுவாக ஆனால் உறுதியாக ஏற்படுத்துகிறார். இந்த சதிக்கு முக்கியமாக இருப்பது ஒரு ஒட்டியாணம்.


இறுதியில் முடிவு எப்படியாகிறது என்பதே கதை. ஒரு அனர்த்தத்தை நோக்கியதான திரைக்கதை நகர்வு மிகச்சிறப்பாக உள்ளது. அஜய் தேவ்கான் கரீனா கபூர், சைவ் அலிகான், விவேக் ஒபராய், பிபாசா பாசு உட்பட மற்றும் பலரை அருமையாக வேலை வாங்கியிருக்கிறார் இயக்குநர். குறிப்பாக சைவ் அலிகான் மிகச்சிறப்பாக தனது வில்லன் பாத்திரத்தை செய்துள்ளார்.


2006 இல் வெளியிட்டபோது இந்தியாவில் வசூலில் சாதனை படைக்காவிட்டாலும் வெளிநாடுகளில் பெரும் வரவேற்பை பெற்றது. லண்டனில் விரைவிலேயே முதல் பத்து படங்களுள் இடம்பிடித்தது. அமெரிக்கா ஒஸ்ரேலியா, தென்ஆபிரிக்க நாடுகளில் பெரும் வரவேற்பை பெற்றது.


2006 இல் கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டதுடன் படம் தொடர்பான விவரண புத்தகம் ஒன்றும் வெளியிடப்பட்டது. பிலிம்ஃபேர், பொலிவூட் மூவி விருதுகளை படத்தின் சகல துறைகளும் அள்ளிக்கொண்டதுடன் படம் வேறும் பல விருதுகளை பெற்றுக்கொண்டது.

விஷால் பரத்வாஜ் ஷேக்ஸ்பியரின் மெக்பத்தை அடிப்படையாகக்கொண்டு மெக்பல் எனும்படத்தை முன்னரே இயக்கியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

படத்தில் மிகச்சிறப்பாக நடித்திருக்கும் சைவ் அலிகான் பேசும் வசனத்தின் ஒரு மொழிபெயர்ப்பு...

'மடையனுக்கும் முட்டாளுக்கும் இருப்பது ஒரு சின்ன இடைவெளிதான். இந்த இடைவெளியை நீக்கிவிட்டால் இருவரையும் வேறுபிரிப்பது கஷ்டம்..'

Wednesday, June 4, 2008

முதலும் கடைசியுமான மரதன் ஓட்டம்..!

வீதியால் பயணிக்கும்வேளைகளில் பல மரதன் ஓட்டங்களை கடந்தகாலங்களில் பார்த்திருந்தாலும் அவ்வாறு ஒரு மரதனில் நானும் ஓடியது சுவாரசியமானது। அதை விட எனது நண்பர் பிரதீபனின் மரதன் ஓட்ட ஒத்திகை அதை விட சுவாரசியமானது। நாட்டின் யுத்தசூழ்நிலையால் எனது பாடசாலை வாழ்வில் இரண்டு மூன்று இல்ல விளையாட்டுப்போட்டிகளே நடைபெற்றிருந்தன। அவ்வருடம் இல்லவிளையாட்டப்போட்டியை முன்னிட்டு 05 கிலோமீற்றர் மரதன் ஓட்டம் இடம்பெறும் என்ற அறிவித்தலால் மரதன் ஓடும் வயதை எட்டியிருந்த பலரும் மகிழ்ச்சியும் திகிலும் அடைந்தனர்। பாடசாலைக்கு அண்மையிலிருந்தோர் போட்டிக்கு பலநாட்கள் முன்பே விடியற்காலையில் ஓடி பயிற்சி பெறத்தொடங்கியிருந்தனர். முதல் மூன்று இடங்களை பெறுபவர்களுக்கு பதக்கங்களும் 20 நிமிடங்களுக்குள் ஓடிமுடிப்பவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.


மாணவ தலைவர்களை தேர்ந்தெடுப்பதற்கான புள்ளியிடல் திட்டத்தில் விளையாட்டு தொடர்பான திறமைக்கும் புள்ளி இருந்ததால் நானும் நண்பர் பிரதீபனும் அதில் பங்குபற்றுவதாக தீர்மானித்திருந்தோம்। விடியற்காலையில் ஓடிப்பழகுபவர்களால் கவலையடைந்திருந்த பிரதீபன், போட்டியன்று மட்டும் ஓடினால் தசைபிடிப்பு ஏற்படும் எனவே ஊரிலாவது ஓடிப்பழகுவோம் என்று அபிப்பிராயப்பட்டார்.

பாடசாலையில் உடற்பயிற்சி பாடவேளைகளில் உதைபந்தாட்டம் என்ற பெயரில் பந்திற்குப்பின்னால் கண்டபடி ஓடுவதாலும் தினமும் சைக்கிளிலேயே பாடசாலை செல்வதாலும் ஓட்டப்பயிற்சியை நான் பெரிதுபடுத்தவில்லை. அதேவேளை அதிகாலையில் சந்தைக்கு பொருட்கள் கொண்டு போகும் சனங்கள் வாகனங்கள் மத்தியில் வேடிக்கை பொருளாக ஓடுவதும் எனக்கு கூச்சமான ஒன்றாயிருந்தது. என்றாலும் நண்பரின் வற்புறுத்தலுக்கிணங்க ஓடி ஒத்திகை பார்ப்பது என்று தீர்மானித்துக்கொண்டோம். 500 மீற்றர் தொலைவிலுள்ள தனது வீட்டிலிருந்து ஓடிவந்து பின்னர் என்னையும் கூட்டிக்கொண்டு பிரதான வீதியின் சந்திக்கு போவதாக ஏற்பாடு.


அடுத்தநாளும் வந்தது. அதிகாலை 05 மணிக்கு வருவதாக சொன்ன ஆள் 06 மணியாகியும் வரவில்லை. பிறகுதான் தெரிந்தது விஷயம். ஐந்து மணிக்கே எழும்பி ஓட வெளிக்கிட்ட நண்பரை சற்றும் வழமைக்கு ஒவ்வாத ஒரு நடவடிக்கையாக கருதிய அந்த தெருவிலுள்ள நாய்கள் அவரை கலைக்கத்தொடங்கியதில் மரதன் ஓட்டம் கண்மண் தெரியாத ஓட்டமாகிப்போய் முன்னால் சைக்கிளில் பால் கொண்டுவந்த பையனின்மேல் எக்கச்செக்கமாக மோதித்தான் நின்றது.

சைக்கிளுடன் பையனும் நண்பரும் விழுந்தவேகத்தில் பால் கொள்கலனின் மூடியும் வெடித்து திறந்ததால் அவ்வளவுபாலும் வீதியில்..!! பால்காரப்பையன் அழுதுகொண்டே நண்பரை பிலுபிலு வெனப்பிடித்துக்கொண்டானாம் - வீட்டில் கொன்றே போடுவார்கள் மரியாதையாகக் காசைத்தரச்சொல்லி. நண்பரும் மிகவும் உடல் + மனம் நொந்து போனார். விடியக்காலமை வேறு..!


வேறு வழியில்லாமல் பையனையும் கூட்டிக்கொண்டு வீட்டிற்குப்போன பிரதீபன் மொத்தப் பாலுக்கான காசையும் பையனின் மருந்துச்செலவுகளுக்குமான காசையும் சேர்த்துக்கொடுத்தனுப்பி வைத்தாராம். பின்னர் விடயத்தைக் கேட்டு நானும் நண்பரும் விழுந்து விழுந்து சிரித்தோம். ஆனாலும் நண்பருக்கும் சிராய்ப்பு காயங்கள் ஏற்பட்டதாலும் இதையொரு துர்ச்சகுனமாகக் கருதியதாலும் நண்பர் போட்டியில் கலந்து கொள்ளவில்லை. தான் மரதன் ஓட்ட நிகழ்வின்போது தனது செஞ்சிலுவை கழகத்தின் சார்பில் வீதியொழுங்கு கடமையில் ஈடுபடவிருப்பதாகவும் சொன்னார்.


எனவே நான் தனியாளாக போட்டியில் இறங்கவேண்டியிருந்தது. பதக்கங்கள் எல்லாம் எனக்கு அப்பாற்பட்டது என்று தெரிந்திருந்தாலும் 20 நிமிடத்திற்குள் ஓடி சான்றிதழாவது பெற்றுவிடவேண்டும் என்பதே எனது விருப்பமாக இருந்தது. குறித்த நாளும் வந்தது. சைக்கிளில் ஓடிப்போனால் களைத்து விடுவேன் என்று நண்பரே தனது சைக்கிளில் என்னையும் ஏற்றிக்கொண்டு பாடசாலை சென்றார். என்னை மைதானத்தில் விட்டுவிட்டு அவர் வீதி ஒழுங்கு கடமைக்கு சென்றுவிட்டார்.


மைதானம் போட்டியாளர்களால் ஜே ஜே என்றிருந்தது. பதினேழு மற்றும் பத்தொன்பது வயதுகளின் கீழான இரு போட்டிகளாக நடக்க இருந்தது. பெயர் பதிந்து இலக்கங்களை வாங்கி பனியனின் முன்னும் பின்னும் குற்றிக்கொண்டு தரப்பட்ட குளுக்கோஸை உண்டுவிட்டு திகிலோடு காத்திருந்தேன்.

சரியாக காலை ஆறுமணிக்கு போட்டி ஆரம்பமாகும் என்று அறிவித்தார்கள். 10 நிமிடமே இருந்தது. எல்லோரும் குளுமாடு மாதிரி துள்ளிக்கொண்டும் கைகால்களை உதறிக்கொண்டும் இருந்ததால் நானும் அவ்வாறே செய்தேன். சிலரிற்கு அப்படியெதுவும் செய்யாமலே கை கால்கள் தானாக உதறிக்கொண்டு இருந்தது.


எனது பிரிவில் ஓடுபவர்கள் நூறுபேராவது இருப்பார்கள் போலிருந்தது. மணி அடிக்கப்பட்டு எல்லைக்கோட்டில் நிற்கவைத்து (கொஞ்சம் கும்பலாகத்தான்) ஆயத்தமணி அடிக்கப்பட்டதும் கும்பலாக கிளம்பினோம். நெடிய ஓட்டம் என்பதால் யாரும் விர் என்று பாயவில்லை.

கொஞ்ச தூரம் ஓடியதுமே கும்பல் கலைந்து அவரவர் வேகத்திற்கு ஏற்றபடி குழுக்களாகவும் தனியன்களாகவும் ஓடிக்கொண்டிருந்தார்கள். ஆசிரியர்கள் ஏற்கனவே சொல்லியிருந்தார்கள். ஆட்களை முந்தவேண்டும் என்று வளைந்தும் நெளிந்தும் ஓடவேண்டாம். அப்படி ஓடினால் ஓட்டதூரம் கூடும் களைத்து போவீர்கள் இடைவெளி கிடைக்கும்வரை சீரான வேகத்தில் ஓடி பின்னர் முந்தவேண்டும் என்று நிரம்ப உபதேசங்கள் வழங்கியிருந்தார்கள்.


ஒலிபெருக்கியில் அறிவித்தபடி ஒரு வாகனம் முன்னால் போக வழிநெடுகிலும் மக்கள் நிறைந்து பார்த்துக்கொண்டிருந்தார்கள். சென்ஜோன்ஸ் அம்புலன்ஸ் மற்றும் செஞ்சிலுவை சங்க அங்கத்தவர்கள் பாதை ஒழுங்கில் ஈடுபட்டிருந்தார்கள். மோட்டார் சைக்கிள்களில் கண்காணிப்பாளர்கள் ஊர்ந்து கொண்டிருந்தார்கள். வழமையாக மிகவும் சனசந்தடி மிக்க வீதிகளால் பெனியனுடன் ஓடியது வித்தியாசமான அனுபவம்.


ஒரு ஐநூறு அறுநூறு மீற்றர் ஓடியதும்தான் தெரிந்தது இது எவ்வளவு பெரிய வில்லங்கமான ஓட்டம் என்று. இதயம் துடிக்கிற ஓசை எனக்கே கேட்டது. நாக்கு வறண்டது ஓடி முடிப்பது சிம்மசொப்பனமாகப்பட்டது. சுற்றிவர எழுமாற்றாக வெளிச்சப்பொட்டுக்கள் தோன்றுவது போலிருந்தது. ஆனாலும் வழியின் இருமருங்கும் மற்றும் மதிலுக்கு மேலாலும் தெரிந்த தலைகளில் இளம் பெண்களும் இருந்ததால் ஹைப்போதொலமஸ் மற்றும் இன்னபிற ஓமோன்களின் ஆதரவுடன் தொடர்ந்து ஓடினேன்.

வழியில் பார்வையாளர்கள் வாளிகளில் தண்ணீர் வைத்திருந்து தலையிலும் உடம்பிலும் ஊற்றியது மிகுந்த பெருமையாகவும் தெம்பாகவும் இருந்தது. களைப்பை போக்க கத்திக்கொண்டு வேறு ஓடினார்கள். ஆட்களை முந்தி செல்லும்போது 'வ்வோவ்...' என்று கூச்சலிட்டுக்கொண்டே சென்றார்கள். எதிராளியை நிலைகுலைய வைப்பதற்கு இதுவும் ஒரு உத்தி. மகாபாரதத்தில் அர்ச்சுனனின் கொடியில் இருந்து கொண்டு அனுமர் தனது சத்தத்தாலேயே கனபேரை போட்டுத்தள்ளினார் என்று படித்திருக்கிறேன். என்னைக்கடந்து கன 'வ்வோவ்...' கள் சென்றது வயிற்றைக்கலக்கியது.


ஓட்டம் பிறவுண்வீதியால் கலட்டி சந்தியை அடைந்தபோது ஓடினவர்களில் பலர் நடக்கத்தொடங்கியிருந்தார்கள். சிலர் காலை நொண்டிக்கொண்டும் முகத்தை வெட்கத்தால் மறைத்தவாறும் அவ்வப்போது தோன்றி மறைந்த அம்புலன்ஸ்களினுள் ஏறிப்படுத்துக்கொண்டார்கள். எப்பிடியிருந்த நான் இப்பிடியாகிட்டேனே என்ற நிலையில் ஓடிக்கொண்டிருந்த நானும் அம்புலன்ஸ் நப்பாசைகளால் ஈர்க்கப்பட்டாலும் பின்னர் வகுப்பில் நடக்கப்போகும் நக்கல் நளினங்களை நினைத்து கால்களில் இலக்ரிக் அமிலம் சுரந்து இறுகிவிடக்கூடாதே என்று கவலைப்பட்டு ஓடிக்கொண்டிருந்தேன்.

நடக்கத்தொடங்கியிருந்தவர்கள் வீதியில் நின்ற பார்வையாளர்களின் கிண்டலுக்கு ஆளானதால் நான் வேகத்தை அதிகரிக்க முயற்சித்தேன். நாக்கு வெளியில் வந்தது. வெளிச்சுவாசத்தின் போது சத்தமும் சேர்ந்தே வந்தது !. ஆனாலும் வீதிக்கடமையிலிருந்த பிரதீபனைக்காணும் வரையாவது ஓடுவோம் என்ற சங்கற்பத்துடன் ஓடிக்கொண்டிருந்தேன்.


இருபது நிமிட எல்லை இருந்ததால் கையிலிருந்த நிறுத்தற்கடிகாரத்தை பார்த்தபோது, ஆரம்ப அவசரத்தில் என்னத்தை அமத்தினனோ தெரியாது அதில் எல்லாம் எட்டு எட்டாகத்தெரிந்தது. வெறுத்துப்போய் வீதியில் கடமையிலிருந்த செஞ்சிலுவை சீருடைகளில் பிரதீபனை தேடினேன்.
கே.கே.எஸ் வீதியை ஊடறுத்து பழக்கமில்லாத வீதியொன்றிற்குள் இறங்கியபோது பிரதீபனை கண்டேன்.

கடமையில் இருந்ததால் முகத்தை 'உம்' மென்று வைத்திருந்தாலும் வியர்வையும் தண்ணீரும் தலையிலிருந்தும் முகத்திலிருந்தும் வழிய என்கோலத்தைக் கண்டு ஆளுக்கு சிரிப்பு வந்தது என்பது தெரிந்தது. பலர் முன்னுக்கு போய்விட்டார்கள் என்று சைகை காட்டினார். இது என்னை உசுப்பேத்திவிட.. நானும் 'வ்வோவ்..' என்ற சத்தத்துடன் ஆட்களை கடக்க ஆரம்பித்தேன். கால்கள் கெஞ்சின. சப்பாத்தின் டொக் டொக்குகளிற்குள் கால் அதிர்ந்தது.


மீண்டும் கே।கே।எஸ் வீதியிலேறி பாடசாலையின் மேற்குப்புற கட்டடங்களை தூரத்தில் கண்டதும் உற்சாகம் கரைபுரண்டது। அதே போல பின்னால் வந்தவர்களிற்கும் கரைபுரண்டிருக்கவேணும்॥ என்னைக்கடந்து ஓடினார்கள்। மைதானத்தை அடைந்து மைதானத்திற்குள் ஒரு சுற்றும் ஓடிய பின்பே முடியுமிடம் வரும்। கடைசிக்கட்டம் ஆனதால் நானும் தலைதெறிக்க ஓடினேன்। ஆனாலும் என்ன ஏமாற்றம்..! பாடசாலையின் பிரதான வாசலை அடைந்த நேரம் முடிவுமணி ஒலி நாராசமாய் காதில் விழுந்தது।


குறிக்கப்பட்ட நேரம் முடிந்துவிட்டதால் மைதானவாசலிலேயே தடுத்து நிறுத்தினார்கள்। நீண்ட ஓட்டம் முடிவுற்றபோது உடம்பு முழுவதும் வெம்மையாக உணர்ந்தேன். நாடித்துடிப்பு உடம்பின் சகல பாகங்களிலும் கேட்டது. உடனடியாகவே 19 வயதின் கீழான போட்டி மறுமுனையில் ஆரம்பிக்கப்பட்டது. எனக்கு பலர் உண்மையாகவோ அல்லது கிண்டலாகவோ கைகுலுக்கினார்கள். ஓடிய அனைவருக்கும் சுடச்சுட கோப்பி வழங்கப்பட்டது.

குறித்த நேரத்திற்குள் நானூறு அல்லது ஐநூறு மீட்டர் தூரத்தினால் நான் அந்த மரதனை கோட்டைவிட்டேன். எனினும் இரண்டே மீற்றர் தூரத்தினால் கோட்டை விட்டவர்களை நினைத்து என்னை திருப்திப்படுத்திக்கொண்டேன். வாழ்வில் பல விடயங்களை எமக்கும் கீழே இருப்பவர்களை நினைத்துத்தானே திருப்திப்பட்டுக்கொள்ளவேண்டியிருக்கிறது...!!

Friday, May 30, 2008

உலகவலம் வரும் Charice Pempengco

Charice Pempengco - பிலிப்பீன்ஸ் நாட்டை சேர்ந்த இச்சிறுமி இன்றைய சர்வதேச இசை உலகில் கலக்கிக்கொண்டிருக்கிறார். பலரையும் வியப்பில் ஆழ்த்தியது இந்தச்சின்ன வயதில் இவரிடம் இருந்து வரும் மிக முதிர்ச்சியடைந்த குரல்(Matured voice) அத்துடன் மேடைகளில் உணர்ச்சிகரமாகப்பாடும் தன்மையும் (Passion) மேடைகளில் தோன்றும்போதுள்ள கம்பீரமும் ஸ்டைலும் இவருக்கு ரசிகர்கள் பலரை உருவாக்கித்தந்துள்ளது.


10.05.1993 இல் பிலிப்பீன்சில் பிறந்த இவரது தாயாரும் ஒரு பாடகியே. தாயாரிடம் இருந்தே இசை நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டதாகக் குறிப்பிடும் இவரது வெற்றி இலகுவாக வந்ததல்ல. சிறு வயது முதலே இசை நிகழ்ச்சிகளில் பங்குகொண்டபோதும் பின்னர் தொலைக்காட்சிகளால் நடாத்தப்படும் போட்டி நிகழ்ச்சிகளால் ஈர்க்கப்பட்டு பிலிப்பின்சின் பிரபல தொலைக்காட்சி ஒன்றின் Little Big Star Season 1 என்ற போட்டி நிகழ்ச்சியில் பங்குபற்றினார். அதில் இறுதிச்சுற்று வரை முன்னேறியிருந்தும் நடுவர்கள் இவருக்கே கூடிய புள்ளிகளை வழங்கியிருந்தபோதும் பார்வையாளர்களின் வாக்குகளை அதிகமாகப்பெறத் தவறியதால் தோல்வியடைந்தார்.


ஆனாலும் இந்த தொலைக்காட்சி இசைப்போட்டியில் இவர் பாடிய Whitney Houston என்பவரின் I Will Always Love You என்ற பாடல் YOU TUBE என்கின்ற இணைய வீடியோ சேவைமூலம் ரசிகர்களால் பார்க்கப்பட்டு மிகவும்பிரபலமானது. இதிலிருந்து அதிர்ஷ்டகாற்று இவர்பக்கம் வீச ஆரம்பித்தது. இதன் ஒரு கட்டமாக 2007 யூன் மாதம் இவர் சுவீடனுக்கு அழைக்கப்பட்டு இவரது ஏழு பாடல்கள் அடங்கிய குறுவட்டு சுவீடனில் வெளியிடப்பட்டது.


இது இவரை மேலும் பிரபலமாக்க 2007 ஒக்ரோபர் மாதம் கொரியாவில் மிகவும் பிரபல தொலைக்காட்சி வலைப்பின்னல் சேவை ஒன்று தங்களின் STAR KING போட்டி நிகழ்ச்சிக்காக இவரை அழைத்திருந்தது. இந்நிகழ்ச்சியில் இவரது பாடும் திறமை அனைவரையும் ஆச்சரியத்திலாழ்த்தி திக்குமுக்காடச் செய்ததுடன் பாராட்டு மழைகளும் வந்து குவியத்தொடங்கின. இந்தத் தொலைக்காட்சி சேவையின் குறித்த நிகழ்ச்சி அமெரிக்காவின் பிரபல தொலைக்காட்சிகளிலும் மறுஒளிபரப்பு செய்யப்பட்டு மிகுந்த பாராட்டைப்பெற்றது.இதனால் மிகவும் புகழ்பெற்ற இவர் அமெரிக்காவின் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் ஒன்றான Ellen DeGeneres Show எனும் நிகழ்வுக்கு அழைக்கப்பட்டார். இதில் இவரது இசைத்திறமை பார்வையாளர்களை மெய்சலிர்க்க வைத்து பாராட்டு மழையில் நனையவைத்தது. இன்று Yahoo online தரப்படுத்தலில் மூன்றாவது நிலையில் இருக்கும் அளவிற்கு இவரை, இவரது விடாமுயற்சியும் உழைப்பும் தன்னம்பிக்கையும் திறமையும் ஈடுபாடும் கொண்டுவந்துள்ளது.

Saturday, May 17, 2008

தேவாரமும் நானும்

சிறுவயதில் தேவாரம் பாடமாக்குதல் என்பது மிகப்பெரிய சவால்। கோவில்களில் தேவாரம் பாடினால் தான் கடவுள் வரம் தருவார் என்றும் சொல்லப்பட்டது। 'சொற்றுணை வேதியன்॥' பாடும்போது கல்லைக்கட்டி கடலில் போட்டபோது அவர் பாடியதை சும்மா நின்று கும்பிட்டுக்கொண்டிருக்கும் நான் ஏன் பாடவேண்டும் என நினைத்த காலங்களும் உண்டு। (கல்லைக்கட்டி கடலில் போட்டாலும் எமக்கு இன்னும் அதையொத்த துன்பங்கள் இருக்கின்றன என்று வாதிடுவது வேறு)।

அந்தக்காலத்தில் யாழ்ப்பாணத்தில் கடுமையான பொருளாதாரத்தடை இருந்தது। மின்சாரம் இல்லை। உடுப்புத்தோய்ப்பது பனங்களியில்। மோட்டார் சைக்கிள்கள் பெற்றோல் சிறுதுளிவிட்டு ஊதி ஸ்ராட் ஆகி பின்னர் மண்ணெண்ணெயில் ஓடியது। இரவில் மண்ணைண்ணை லாம்புதான்। படிப்பதற்கு மேசை லாம்பு। சாதாரண தேவைகளுக்கு ஜாம்போத்தல் விளக்கு என்று ஒன்றிருந்தது। அது தமிழீழ பொருண்மிய மேம்பாட்டு நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட சிக்கன விளக்கு என நினைக்கிறேன்। ஜாம்போத்தல் ஒன்றிற்குள் சிறிதளவு பஞ்சையிட்டு அதனுள் ஊறக்கூடியதாக சிறிதளவு மண்ணைண்ணையும் விட்டு சைக்கிள் ரியூப்பிலுள்ள வால்வை கழற்றி அதில் பேப்பரில் உருட்டிய திரியை பஞ்சில் தொடுமாறு நிறுத்தி எரியச்செய்வது தான் ஜாம்போத்தல் விளக்கு। அந்தக்காலங்களில் மாலை ஆறுமணிக்கு முன் விளக்கு சிமினிகள் துடைப்பதும் வீட்டில் ஒரு வேலையாக இருந்தது।

நான்கு வரிகள் தேவாரம் பாடமாக்கி விட்டு பின்னர் லாம்புச்சிமினியில் பேனை மூடியை உருக்கிக்கொண்டிருந்து வீட்டில் ஏச்சு வாங்குவதும் சாதாரணம்। 'தேவாரம் கத்திப்பாடமாக்குறான் எனக்கு பிறிம்பா ஒரு விளக்கு வேணும்' என்றமாதிரியான முறைப்பாடுகளும் வேறு। ஆனாலும் தேவாரம் பாடமாக்கிறது ஒரு த்ரில்தான்। பல முயற்சிகளின் பின்னர் தடங்கலில்லாமல் முழுத்தேவாரம் ஒன்றை சொல்லுவது மிகவும் உற்சாகமான விடயம்।

தேவாரம் பாடமாக்குவதில் செல்வாக்கு செலுத்திய இன்னுமொரு விடயமும் இருந்தது। இந்தக்காலகட்டத்தில் யாழ்ப்பாணத்தில் பல ஆலயங்களும் சமயஅறிவுப்போட்டிகள் நடத்தி பெறுமதியான பரிசில்கள் வழங்கினார்கள்। தங்கப்பதக்கங்களும் அடக்கம்। எனது பாடசாலையில்வேறு, கோவில்களில் அளிக்கப்படும் பதக்கங்களை பாடசாலையிலும் மீண்டும் சூட்டிக்கெளரவித்தார்கள்। இதையெல்லாம்விட இவ்வாறு போட்டிகளில் வெற்றிபெறுவோர் பெண்பிள்ளைகள் மத்தியிலும் கவனிப்பைப்பெற்றதால் தேவாரம் பாடமாக்க வேண்டிய நிர்ப்பந்தம் எனக்கு। அந்த வயதில் குரலும் கொஞ்சம் மாறத்தொடங்கியதால் ஒரு விதமான டபிள் குரலில் தேவாரம் பாடமாக்கி வீட்டாரை மட்டுமல்லாது பக்கத்து வீட்டினரையும் இம்சைப்படுத்தினேன்.

இதைத்தவிரவும் யாழ்ப்பாணம் சைவபரிபாலன சபையினரும் ஆண்டுதோறும் சைவசமய அறிவுப்பரீட்சை வைத்து சான்றிதழ்கள்வழங்கினார்கள்। அதிவிசேடம், விசேடம், திறமை, சாதாரணம் போன்ற தரங்கள் சான்றிதழ்களில் குறிக்கப்படும்। இப்பரீட்சையில் திறமைச்சித்தி எடுத்தாலே பாடசாலையில் ஏதோ பிராணியைப்பார்த்ததுமாதிரி பார்ப்பார்கள் இதனால் அதிவிசேடம் நோக்கியதாகவே தேவாரப்பாடமாக்கல்கள் இருந்தன।

கோவில்களில் பெரும்பாலும் வயதுபோனவர்கள் தான் தேவாரம் பாடுவார்கள். ஏதாவது உற்சவ காலங்களில் தான் இளையவர்கள் குறிப்பாக பெண்பிள்ளைகள் அழகாக இராகத்துடன் பாடுவார்கள். வயதானவர்கள் பாடும் தேவாரங்கள் அநேகமாக ஒரேதேவாரமாகவும் ஒரே இராகத்திலும் அமைந்திருக்கும். இங்கு நான் இராகமெனச்சொல்வது பாடுபவர்களின் தனிப்பட்ட இராகங்கள். அதற்கும் சங்கீதத்திற்கும் ஒருவேளை சம்பந்தமேயில்லாதிருக்கும். அவர்கள் பாடும் இராகத்தில் பெரும்பாலும் அவர்களின் தனிப்பட்ட இன்ப துன்பங்களும் கலந்திருக்கலாம். தேவாரம் பாடுவதற்கு சண்டை பிடிக்கும் கோவில்களும் உண்டு.

எனக்குத்தெரிந்து ஒரு சண்டை பிள்ளையார் கதை படிக்கும்போது இடம்பெற்றது। பிள்ளையார்கதை படிப்பதில் பெரும்போட்டி। காரணம் அது மைக்கில் (MIC) படிப்பதால் என நினைக்கிறேன். பிள்ளையார்கதை தொடங்கும்போது சின்ன சிட்டி ஒன்றில் கற்பூரம் கொளுத்துவார்கள். கதை படித்து முடியும் வரை தொடர்ச்சியாக கற்பூரம் எரிந்து கொண்டிருக்கும் வகையில் கற்பூரம் போட்டுக்கொண்டே இருக்கவேண்டும். இதில் சவாலான விடயம் என்ன என்றால் பொருளாதாரத்தடையில் தடைவிதிக்கப்பட்ட பொருட்களில் பிரதானமானது கற்பூரம். எனவே வெகு சிக்கனமாகப்பாவிக்கவேண்டும். ஒரு கட்டி கற்பூரம் எரிந்து முடிந்து அடியில் அந்த வெள்ளை நிறம் மறைந்து போவதற்கு இடையில் அடுத்த கட்டியைப்போடவேண்டும். இந்தப்பெரும்பணி எனக்குத்தரப்பட்டிருந்தது. எனவே பிள்ளையார் கதையின்போது 'இலக்கண சுந்தரி....' ஆட்களைவிட எனது கவனம் எல்லாம் கற்பூர ஜோதியிலேயே இருக்கும்.

அன்று அவ்வாறே படித்துக்கொண்டிருந்தபோது இரண்டு வயதானவர்களிற்கிடையில் சண்டை. முன்பே பொருந்திக்கொண்டதற்கு மாறாக சிலவரிகள் கூடப்படித்துவிட்டுத்தான் அடுத்த சந்தர்ப்பம் அளித்தாராம் என்று தொடங்கி காணிப்பிரச்சனை எல்லைப்பிரச்சனை எல்லாம் வந்து கடைசியில் ஐயர் நூல் சுற்றி வைத்திருந்த செம்புகளால் கைகலக்கும் நிலைமைக்குப்போனபோதும் பிள்ளையார் அமைதியாக இருந்தார்। ஆனால் நான் கொஞ்சம் ரென்சனாக இருந்தேன்। எனெனில் சண்டையால் ஒதுக்கபட்ட நேரத்தை விட நேரம் நீடிப்பதால் கற்பூர கையிருப்பு வெகுவாகக் குறைந்து வந்தது। திருவெம்பாவை நேரங்களிலும் இவ்வாறான சண்டைகள் வருவதுண்டு.

அநேகமாக தமிழ்மொழிக்குத்தான் இந்தநிலை என்று நினைக்கிறேன்। அதாவது தமிழுக்கே ஒரு உரைபெயர்ப்பு வேண்டிய நிலை। திருக்குறளில் இருந்து தேவாரங்கள் சங்ககாலப்பாடல்கள் ஈறாக படித்தவுடனேயே விளங்கிக்கொள்பவர்கள் அல்லது விளக்கம்சொல்லக்கூடியவர்கள் மிகச்சிலரே। மொழியின் தொன்மையால் ஏற்பட்ட இடைவெளியால் இது ஏற்பட்டது। எனவே தேவாரங்கள் பாடமாக்கியது போக அதற்கு பொருள்சொல்வது அதனைவிட சவாலானது।

ஒரு இராணுவம் போரிட்டபடியே பின்வாங்குவதைப்போல நாமும் பண்பாடு கலாசாரம் என்று சொல்லிச் சொல்லியே அதிலிருந்து விலகிக்கொண்டு வருகிறோம்। அல்லது வரவைக்கப்படுகிறோம்। தற்போது நான் வேட்டி கட்டியே பலவருடங்கள் ஆகிவிட்டன। பழைய பாடமாக்கிய தேவாரங்கள் சிலதை ஞாபகப்படுத்திப்பார்க்கிறேன்। ஒன்றிரண்டு வரிகளின் பின்னர் தடுமாறுகிறது। குனித்த புருவமும்.... ஆலந்தானுகந்தமுது செய்தானை..., நிலைபெறுமாறெண்ணுதியே... என்று சில ஞாபகம் இருந்தாலும் முழுமையாக நினைவில் இல்லை। என்னபுண்ணியம் செய்தனை நெஞ்சமே.... எனும் தேவாரத்தை தர்ஷன் அண்ணா பாடசாலையில் அருமையாகப்பாடுவார்।

பதிவில் ஒரு தேவாரத்தையாவது முழுமையாகக் கொடுக்கவேண்டும் என்று முயற்சி செய்ததில் இத்தேவாரம் முழுமையாக வந்தது। அதிலும் 'மழபாடி' என்பதில் 'வனபாடி.... வானம்பாடி...' என்ற குழப்பங்கள் வந்ததில் வீட்டில் தொலைபேசி உறுதிப்படுத்திக்கொண்டேன்।

திருச்சிற்றம்பலம்
பொன்னார் மேனியனே புலித்தோலை அரைக்கசைத்து
மின்னார் செஞ்சடைமேல் மிளிர்கொன்றை யணிந்தவனே
மன்னே மாமணியே மழபாடியுள் மாணிக்கமே
அன்னே உன்னை யல்லால் இனியாரை நினைக்கேனே.
திருச்சிற்றம்பலம்

Saturday, May 10, 2008

சுவர்ண சுந்தரி

1958 இல் வெளிவந்த தெலுங்குத் திரைப்படம் சுவர்ணசுந்தரி. இத்திரைப்படத்தில் இடம்பெற்ற 'குஹீ குஹீ போலே கொயலியா..' எனத்தொடங்கும் பாடல் அனைத்து இசைப்பிரியர்களையும் கொள்ளை கொண்டது மட்டுமல்லாமல் இன்றைய தலைமுறையினரிடம் கூட பிரபல்யம் பெற்று விளங்குகிறது. இப்பாடலை பெரும்பாலான திரைஇசைப்போட்டிகளில் போட்டியாளர்கள் சவாலாக ஏற்று நம்பிக்கையுடன் பாடுவதை அவதானிக்க முடிகிறது. இப்பாடல் தொடர்பாக எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள் சொல்லும்போது இப்பாடல்களைப் பாடாத போட்டிகளும் குறைவு, இதைப்பாடியும் வெற்றிபெறாதவர்களும் குறைவு எனக்குறிப்பிடுகின்றார். இந்தளவிற்கு இப்பாடலின் இசை கவர்ச்சியாகவும் நுணுக்கம் மிகுந்ததாகவும் காணப்படுகிறது. மேடை நிகழ்வு ஒன்றில் லதாமங்கேஷ்கார் அவர்கள் பாடிய இந்தப் பாடலை இங்கே கேட்கலாம்

kuhu kuhu bole koyaliya - Latha Mankeshkar

ஆதிநாராயணராவ் என்ற இசையமைப்பாளரால் இசையமைக்கப்பட்ட இப்பாடல் ஹம்சானந்தி இராகத்துடன் தொடங்கி இராகமாலிகையின்பின்னர் கல்யாணி இராகத்துடன் முடிகிறது. இடையிடையில் வரும் சவாலான அசைவுகள் சிலாகிப்பானவை. இறுக்கமான லய அமைப்பும் கூட. 1958 இல் லதாமங்கேஷ்கார் மற்றும் எம்.லத்திஃப் இருவராலும் பாடப்பெற்றது.

Kuhu Kuhu Bole Koheliya - Latha Mankeshkar , M.Latif

பின்னர் இது தமிழில் 'மணாளனே மங்கையின் பாக்கியம்' என்றபெயரில் எடுக்கப்பட்டபோது இதே பாடல் 'தேசுலாவுதே தேன்மலராலே..' என்று தொடங்கும் பாடலாக மொழிமாற்றம் செய்யப்பட்டு பி.சுசீலா மற்றும் கண்டசாலா ஆகியோரால் பாடப்பட்டது. தென்னிந்திய தனியார் தொலைக்காட்சி ஒன்றின் போட்டி நிகழ்ச்சியொன்றில் ராகினிசிறீ தமிழ்வடிவத்தை சிறப்பாகப்பாடுகிறார்.
தற்போது பிரபலமான பாடகியாக விளங்கும் ஷ்ரேயா கோஷலும் சிறுவயதில் இப்பாடலை ஒரு Children's Mega Final போட்டி நிகழ்ச்சியொன்றில் கிளிப்பிள்ளை போல் ஒப்பிக்காமல் தனது கற்பனையையும் சேர்த்து பிரமாதமாகப்பாடுகிறார்.

shreya-kuhukuhu.mp3 - Shreya Goshal

மலையாள தொலைக்காட்சி நிகழ்வொன்றின் போட்டியின்போது போட்டியாளர் ரூபா கடும் பயிற்சியுடன் சிறப்பாகப்பாடி நடுவர்களையே அசத்துகிறார்.இவ்வாறு எக்காலத்திலும் சிலாகிக்கும் ஒரு பாடலைத்தந்து காலத்தால் அழியாதவராக இசையமைப்பாளர் ஆதிநாராயண ராவ் நிலைத்து நிற்கிறார்.

றேடியோஸ்பதியில் பின்னூட்டம் ஒன்றின் மூலம் இப்பாடலின் தமிழ் வடிவம் தொடர்பாக தகவல் தெரிவித்த திருமதி.துளசிகோபால் அவர்களுக்கு நன்றி.

இதோ அந்த பாடல் வரிகள்..

ஆ....ஆ...ஆ...ஆ...ஆ
?தேசுலாவுதே தேன் மலராலே
தேசுலாவுதே தேன் மலராலே
தென்றலே காதல் கவி பாடவா...
விளையாட வா...
தேசுலாவுதே தேன் மலராலே

மாசிலா இதயமேவிட வாராஇ.. ஆ..ஆ..ஆ..
மாசிலா இதயமேவிட வாராஇ.. ஆ..ஆ..ஆ..
மாசிலா இதயமேவிட வாராஇ
மது நிலை தவழ்ந்திடும் புது நிலை பாராய்.
மது நிலை தவழ்ந்திடும் புது நிலையால்
மன ஊஞ்சல் ஆடுவோம் உல்லாசமாய் சல்லாபமாய் ஆ..ஆ..ஆ..
தேசுலாவுதே தேன் மலராலே

பாராய்....
பாராய் மறைந்து வரும் மின்னலயே
பாராய் மறைந்து வரும் மின்னலயே..
மின்னுவதேனோ..
மேக ராஜான் சுகமேவிட தானோ'
உண்மை இதானோ
உயிர்கள் வாழ மழை பெய்திட தானோ
உரிமையோடு மன வானில் நாமே
உரிமையோடு மன வானில் நாமே
ஊஞ்சல் ஆடுவோம் உல்லாசமாய் சல்லாபமாய் ஆ..ஆ..ஆ..ஆ
தேசுலாவுதே தேன் மலராலே

ஓ..ஓ...ஓ......
ஓடி வா வெண்ணிலாவே
இங்கு ஓடி வா வெண்ணிலாவே
வருவாய் நிலாவே
வாழ்வினிலே ஒரு நாள் இதுவே நிலவே
ஓடி வா வெண்ணிலாவே
கண்ணால் பேசும் காவியமே
கண்ணால் பேசும் காவியமே
காவியமே புகழ் காதல் இன்பமே
காவியமே புகழ் காதல் இன்பமன
ஊஞ்சல் ஆடுவோம் உல்லாசமாய் சல்லாபமாய் .. ஆ. ஆ ..ஆ ..ஆ
தேசுலாவுதே தேன் மலராலே...

ஆ...ஆ..ஆ..ஆ..
மனதை போல் மலருமே குமுதமே
மதுவினில் சுகம் தருமே..ஏ..ஏ...
மனதை போல் மலருமே குமுதமே
மதுவினில் சுகம் தருமே..ஏ..ஏ...
மனதை போல் மலருமே
இதயமே உன்னிடமே
இதயமே உன்னிடமே
இன்பம் பாயும் உன்னாலே என் வாழ்விலே
பாயும் உன்னாலே என் வாழ்விலே

Wednesday, April 23, 2008

கொலம்ப சன்னிய

கொலம்ப சன்னிய - மிகவும் நகைச்சுவையான ஒரு சிங்களத்திரைப்படம். எழுபதுகளில் வெளிவந்திருக்கலாம் என நினைக்கிறேன். மனிக் சந்திரசேகர என்பவர் இயக்கிய கறுப்பு வெள்ளைப் படம்.


இலங்கையிலுள்ள குக்கிராமம் ஒன்றில் இயற்கை கடன் கழிக்கவென செல்லும் அந்தரே என்பவரிற்கு மிகவும் பெறுமதியான இரத்தினக்கல் ஒன்று கிடைக்கின்றது. அதை விற்று திடீர் பணக்காரராகும் அந்தரேயும் அவரது குடும்பத்தினரும் கொழும்பில் செல்வந்தர்கள் வசிக்கும் பகுதியொன்றில் வீடு வாங்கி அங்கு பண்ணும் ரகளைகளே படத்தின் சாராம்சம்.

இந்திய சினிமாவின் சாயலில் தற்போது வெளிவந்து ரசிகர்களின் பொறுமையைச் சீண்டும் சிங்களத்திரைப்படங்களிற்கு இதுவொரு விதிவிலக்கு. அந்தக்காலத்திலேயே சிறந்த திரைக்கதை, எடிட்டிங், ஒளிப்பதிவு என எதிலும் சோடைபோகாத மிகவும் ரசிக்கும் படியான ஒரு நகைச்சுவை திரைப்படத்தை அளித்த இயக்குனர் மனிக் சந்திரசேகரவை அவசியம் பாராட்ட வேண்டும்.

இரத்தினக்கல் கூட்டுத்தாபனத்திடம் சுமார் ஒரு கோடி ரூபாவிற்கு அந்த இரத்தினத்தை விற்று அவர்கள் தந்த காசோலையை 'உந்த கடதாசி எனக்கு வேண்டாம்' என்று தொகையை பணமாகவே பெற்று பணத்தை தலையணை உறையொன்றுக்குள் வாங்கிக்கொண்ட அந்தரே, தனது மகன், மகள், வயதான சகோதரி (கிழவி) மற்றும் தனது நெருங்கிய உறவினர் யாக்கோலிஸ் சகிதம் வெள்ளைக்காரர்கள் வசிக்கும் பகுதியொன்றில் குடியேறுகிறார்.

அந்த ஆடம்பரவீட்டில் மலசலகூட கொமெட்டில் உடுப்பு தோய்க்க முயற்சிப்பதிலிருந்து ரகளை ஆரம்பமாகிறது. அதன் பின்னர் ஒரே சிரிப்புத்தான். ஷவரில் குளித்து அலுத்துப்போய் கிராமத்தில் கிணற்றில் குளிக்கும் அனுபவத்தைப்பெற கிணறு ஒன்றை தோண்டுகின்றனர். யாக்கோலிஸ் அதற்கு நாளும் இடமும் பார்த்துச்சொல்ல குறிப்பிட்ட சுபநாளில் கிணறு தோண்டப்படுகிறது. சில அடிகள் தோண்டியதுமே தண்ணீர் பீரிட்டுக்கொண்டுவர எல்லோரும் மகிழ்ச்சியில் ஆரவாரித்து யாக்கோலிஸை பாராட்டுகிறார்கள். பக்கத்து வீட்டில் ஷவரில் குளித்துக்கொண்டிருந்த வெள்ளைக்காரர் ஒருவர் திடீரென்று தண்ணீர் வராமல் போகவே வெளியில் வந்து பார்த்து தலையிலடித்துக் கொள்கிறார். இவர்கள் கிணறு வெட்டியது அவர்களின் பைப் லைனில்..!!

கொழும்பு நாகரிகம் மற்றும் ஆங்கிலம் என்பவற்றை மகளிற்கு போதிப்பதற்காக வாத்தியார் ஒருவரை ஒழுங்கு செய்கிறார் ஆச்சி. வாத்தியார் முதல் பாடமாக நேர் கோடு ஒன்று கீறி தலையில் புத்தகத்தை விழாமல் வைத்தவாறு ஆச்சிக்கும் மகளுக்கும் பூனை நடை (cat walk) பயிற்றுவிக்கிறார் ! .

இவ்வாண்டு நடக்கும் ஒலிம்பிக்போட்டி ஆயத்தங்கள் தொடர்பான விபரண நிகழ்ச்சி ஒன்றில் கொரிய MBC ஒளிபரப்புச்சேவை மேற்படி நிகழ்வை ஒத்த ஒன்றையும் ஒளிபரப்பியது. வெற்றிப்பதக்கங்களை தட்டுக்களில் ஏந்தியவாறு அழகிகள் வெற்றிப்பீடத்தை நோக்கி நளினமாக நடந்து செல்வதற்கு அவர்களின் தலையில் புத்தகம் ஒன்றை வைத்து மூவரையும் ஒரே மாதிரி புன்னகைக்க வைத்து நடை பழக்கினார்கள்!!

Coming மற்றும் sweet என்ற இரண்டு வார்த்தைகளை மட்டுமே கற்றுக்கொண்டு அந்தரேயும் யாக்கோலிஸீம் சமாளிப்பது மிகுந்த வேடிக்கை. மகளிற்கு மணமகன் தேடுவதற்காக விருந்தொன்றுக்கு ஏற்பாடு செய்கிறார் அந்தரே. அந்த விருந்துக்கு முக்கிய பிரமுகர்கள் பலரும் அழைக்கப்படுகின்றனர். குமார் பொன்னம்பலமும் மனைவியும் கூட இவ்விருந்துக்காட்சியில் தோன்றுகிறார்கள். விருந்தில் மகள் கற்றுக்கொண்ட ஆங்கிலத்தை தப்பு தப்பாக பிரயோகிப்பதும் அந்தரேயும் யாக்கோலிஸீம் Coming sweet ஐ மட்டுமே வைத்துக்கொண்டு சமாளிப்பதும் படுஜோர்.

விருந்தில் வெள்ளையரையும் காப்பிலியினரையும் கண்டு வெறுத்துப்போன அந்தரே தமது கிராமத்தை சேர்ந்த உறவுப்பையன் ஒருவனுக்கே மகளை மணமுடிக்க தீர்மானிக்கிறார். ஆனால் நாகரிக மோகமும் அந்தஸ்து மோகமும் கொண்ட தமக்கையாரை ஏமாற்றி எப்படி அக்கல்யாணத்தை நடத்தி வைக்கிறார் என்பதே க்ளைமாக்ஸ்.

ஜோய் அபேவிக்ரம அபாரமான நடிகர். தனது கிராமியப்பாத்திரத்தை உணர்ந்து அபாரமாக நடித்திருக்கிறார். மற்றைய நடிக நடிகையரும் மிக இயல்பாக பாத்திரத்துடன் ஒன்றிப்போய் நடித்திருக்கின்றனர்.

சிங்கள திரைப்பட உலகில் ஜக்சன் அன்ரனியும் புகழ்பெற்றவர். இவர் நடித்த படங்கள் பெரும்பாலும் கதையம்சம் மிக்க தரமான படங்களாகவிருக்கும். நான் பார்த்த சிங்களப்படங்களுள் அக்னிதாஹய, சூர்ய அரண, மில்லசொயா, ஆதரணிய வசும என்பன பாசாங்கற்ற தரமான படங்கள். இவை இந்திய ஹீரோயிஸ படங்களிலிருந்து மாறுபட்டவை. தென்இந்திய ஹிந்தி திரைப்படப்பாணிகளை தழுவியதாக தத்தக்கா பித்தக்கா என எடுக்கும் சிங்கள படங்களை பார்ப்பதற்கு பதிலாக ரீ.வி சீரியலுக்கு முன் உட்கார்ந்து அழுது கொண்டிருப்பது எவ்வளவோ மேல்.

சிங்கள தொலைக்காட்சி தொடர்களும் யதார்த்தமான கதையமைப்பைக் கொண்டவை. சமையலறையிலும் கூறைப்புடைவையில் நிற்காமல் யதார்த்தமான பாத்திரப்படைப்புகளைக்கொண்டவை. கிரஹணய, அசல கலவர, ஹிருட்ட முவாமன் போன்றவை சிங்கள மக்கள் மத்தியில் பிரபலமான தொலைக்காட்சித் தொடர்களாகும்.

இலங்கையிலுள்ள இனமோதல் காரணமாக தரமான சிங்களப்படங்களை பார்க்கும் வாய்ப்பு இல்லாமல் போவதும், திரைப்படங்களினூடாக இனவாதக்கருத்துக்களை சிங்கள இனவாதிகள் புகுத்த முயற்சிப்பதும் யதார்த்தமானதும் வருந்தக்கூடியதுமான விடயங்கள் ஆகும். அண்மையில் 'பிரபாகரன்' என்ற சிங்களத்திரைப்படம் பலத்த சர்ச்சைக்குள்ளானது இங்கு குறிப்பிடத்தக்கது.

Tuesday, April 8, 2008

இம்சை... இனிமை.... கவிதை!!

எனக்கு கவிதையெல்லாம் எழுதும் பழக்கம் இல்லாததால் தொடர்ந்து நீங்கள் தைரியமாகப் படிக்கலாம். என் நண்பர்களிற் சிலரிற்கு கவிதை எழுதும் பழக்கமிருக்கிறது. பெரும்பாலும் அவர்களுக்கு உணர்ச்சிப்பிழம்பாகத் தெரியும் கவிதைகள் எனக்கு இம்சையாகவே இருக்கும். பெரும்பாலான வேளைகளில் அவர்கள் கவிதைகளில் இடம்பெறும் 'அவளையும்', 'நீயையும்' சபித்தவாறே உடகார்ந்திருந்திருக்கிறேன். யார் எழுதிய கவிதையையும் 'நல்லாவேயில்லையே' என்று சொல்லும் தைரியம் இன்னும் வரவில்லை. ஒன்றன் கீழ் ஒன்றாக எழுதப்படுபவை எல்லாம் கவிதை அல்லவென்றும் அது மளிகைக்கடை சிட்டையாகவும் கூட இருக்கலாம் என்று அண்மையில் ஒரு வலைப்பதிவர் கவலைப்பட்டிருந்தார். ஆனால் இப்படிப்பட்ட கல்லுளிமங்கத்தனமான என்னைக்கூட சில கவிதைகள் ஆட்கொண்டிருக்கின்றன. அவற்றின் கவர்ச்சியே இந்தப்பதிவு. பல வருடங்களுக்கு முன்பு வாசித்த வரிகள் கூட இன்னும் ஞாபகமாய்... இந்தியாவில் தொடர் இரயில் குண்டுவெடிப்பு நேரம் இப்படி ஒரு கவிதை வாசித்ததாக ஞாபகம்..விபத்திலிருந்து தப்பியவள்

செய்தி கேட்டு

செத்துப்போனாள்

குண்டு வைத்தவன்

மகனாம்..!

கவிதை என்றால் என்ன என்பதற்கு எனக்கு இன்னும் சரியான பதில் தெரியவில்லை. மரபுக்கவிதைகளுக்கான இலக்கணங்கள் இறுக்கமாக இருந்தாலும் புதுக்கவிதைகள் சற்று சுதந்திரமானதாகவே படுகிறது. கவிதைக்கு சந்தம் (Rhyme) பிரதானமானது என்ற கருத்து முன்னர் இருந்து வந்தது. ஆனால் தற்போது எழுதப்படும் கவிதைகளின் சந்தங்கள் ஐயப்படக்கூடியதாகவே இருக்கின்றன. எனவே கவிதை என்பதற்கு 'வசீகரமான வரிகள்' என்று தற்காலத்தில் அர்த்தம் கற்பித்துக்கொள்ள முடியும். இது சாரப்படவே Lyrics என்ற பதம் பாவிக்கப்படுகிறது. இது சுகிர்தராணியின் வசீகரமான வரிகள்.. (இதனையும் இடம்பெறும் இன்னும் சில கவிதைகளையும் அறிமுகப்படுத்திய ஒக்சிஜன் சதீஷிற்கு நன்றிகள்..!)
இடமற்று நிற்கும்

கர்ப்பிணியின்

பார்வை தவிர்க்க

பேருந்துக்கு வெளியே

பார்ப்பதாய்

பாசாங்கு செய்யும் நீ

என்னிடம் எதை

எதிர்பார்க்கிறாய் காதலையா?

இப்படி நச் என்று இருக்கும் குட்டி கவிதைகள் தான் கொஞ்சம் பொறுமை குறைந்தவர்களையும் சட்டென்று வசீகரிக்கும். கவிஞர் வைரமுத்து கவிதைகளின் நீளம் குறித்து விமர்சிக்கும் போது ' கோவணம் என்பது சால்வை போல இருக்கக்கூடாது' என்றார். ஆனால் இங்கு ஒரு சால்வை கூட மனதை தொடுகிறது. தீராநதியில் ராஜசேகர் என்பவர் எழுதியதை பதிவு செய்திருந்த மு.மயூரனிற்கு நன்றி.
சில சதுர அடிகளே ஆன

எங்கள் ஒண்டுக்குடித்தனக் கவலை

மகளை தீண்டுவதில்லைதனக்கான வீட்டை

அவள் வரைந்துகொள்கிறாள்.

வரைந்த வீட்டின்

வண்ணக்கலவை முகத்தில்

ஒளியாய் வழிய

தூங்கிப்போகிறாள்சில பென்சில்களும்

கொஞ்ச நேரமும்

போதும் அவளுக்கு

வடிவங்கள் உயிர்பெறஒரு சமயம் வெகுநேரம் கழித்து

எழுந்தவள்

தன் வீட்டில் குழந்தை நண்பர்களுக்கு

விருந்து வைத்ததாகச் சொன்னாள்

அப்போது தேவன் வந்து போனாராம்ஒரு மழை நாளில் வீடு வந்து சேர்ந்த

வெள்ளைப் பூனைக்குட்டியை விரட்டியபோது

அழுதுவிட்டாள்தன் புதிய வரைபட வீட்டில்

அதற்கு ஒரு அறை ஒதுக்குவதாக

தூக்கி அணைத்துக்கொண்டாள்குழந்தைகளின் உலகத்தில்

யாருக்குத்தான் இடமிருக்காமல் போகாதுகவிதை என்ற இந்த வடிவத்தின் தாக்கம் அபாரமானது. சில சொற்களில் ஆழ்ந்த கருத்துக்களை ஆழமாக முன்வைக்கக்கூடிய சாகசம் நிறைந்தது. தொண்ணூறுகளின் பிற்பகுதியில் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியான சஞ்சீவி வாரமலரில் எனது சிறுகதையொன்று பிரசுரமாகியிருந்தது. அச்சிறுகதை வெளியான அதேபக்கத்தில் கீழ்மூலையில் சின்னதாக இந்தக்கவிதை இடம்பெற்றிருந்தது. எழுதியவர் பெயர் ஞாபகமில்லை. ஆனால் நான் எழுதிய சில நூறு சொற்களை விட இந்தச்சில சொற்கள் மிகவும் பிடித்துப்போனது.இடி

இதயத்தில் தானே

இங்கே ஏன்

மழை..!

பொதுவாக எல்லா மொழியிலும் இந்தக் கவிதையென்ற வடிவின் தாக்கம் இருப்பது ஆச்சரியமானது. சில கவிதைகள் சிலவரிகளிலேயே குறித்த கருத்திற்கான காட்சியை கண்ணுக்குள் கொண்டு வந்து விடும். இந்த யப்பானிய மொழிபெயர்ப்பு கவிதை கூட - பூங்கா: பூமரம்: மரத்திற்கு கீழே உதிர்ந்த பூக்கள் என ஒரு அழகான காட்சியை கற்பனையில் கொண்டு வருகிறது. (அருகில் கொஞ்சப் பூச்சாடிகள்: ஊரும் நத்தை: அதன் மெல்லிய உணர்கொம்புகள்: நிரம்ப பூக்களுடன் போகன்விலா மரம் என்பவை கூட என்கற்பனையில் வந்தன..! உங்களுக்கு எப்படியோ..!!)


'பூக்களைப் பறிக்காதீர்கள்..'
என்கிறது எச்சரிக்கைப்பலகை - ஆனால்
புல் தரை எங்கிலும்
பூக்களின் சிதறல்
காற்றைக் கோபித்துக் கொள்ளாதீர்
பாவம் அதற்கு படிக்கத்தெரியாது..!

ஹைக்கூவின் பிரமாண்டத்திற்கு ஒரு சின்ன உதாரணம். மேலே சில வரிகளில் உருவாகும் காட்சியை மூன்றே வரிகளில் ஆறே சொற்களில் இந்த ஹைக்கூ கொண்டுவருகிறது.. குளிர்கால காலை நேர புற்களும் அதன்மேல் பனியும் நாம் அனைவரும் அறிந்ததே.. இதோ அது ஹைக்கூவாக..


வெளியே குளிரில்
புல்லுக்கு மடடும்
வியர்த்தது எப்படி..!

சில கவிதைத்தொகுப்புகளின் பெயரே ஆர்வமூட்டுபவையாக வித்தியாசமானவையாக இருக்கும். இன்றிரவு பகலில்.., முட்டை வாசிகள்.., உன்கண்ணால் தூங்குகிறேன்.., பெய்யெனப் பெய்யும் மழை.., அவளுக்கு நிலா என்று பெயர்.. என்பன சில திகைக்க வைத்த தலைப்புகள்.
அமரர் சுஜாதாவும் தனது எழுத்துக்களில் கவிதைகளை இரசிக்க உதவிசெய்திருந்தார். அவர் அறிமுகம் செய்த வ.ஐ.ச ஜெயபாலனின் கவிதையொன்று..

ஏன் எம் வாழ்வில் இத்தனை சுமைகள்
ஏன் எம் பாதையில் இத்தனை இருட்டு
குட்டப்பட்டு தலை குனிந்த அகதிகளாய்
ஏன் எங்களுக்கு இவ்விதம் எழுத்து
ஏன் எம் நெஞ்சில் இத்தனை நெருப்பு
பூவார் வசந்த மரங்களின் மறைப்பில்
காதற்பெண்களின் தாவணி விலக்கி
அபினி மலர்களின் மொட்டை சுவைக்கும்
இளம் பருவத்தில்
இடுகாட்டு மண்ணை சுவை என்று எமது
இளையவருக்கு விதித்தவர் யாரோ..?

நாட்டுப்புற பாடல்கள்கூட போகிறபோக்கில் மனதை அள்ளக்கூடியன. பாசாங்கற்ற நிர்ச்சலமான வரிகளே அவற்றின் பலம்.

கந்தனைக் காணவென
கார்த்திகைக்கு வந்தேனடி..
உந்தனைக் கண்டேன் - இனி
ஊருக்குப்போகமாட்டேன்..!

நக்கல் நளினங்கள் கூட கவிதைகளில் குறைவில்லை. மஹாகவியின் குறும்பா ஒன்று..

சொந்தத்தில் கார்; கொழும்பில் காணி
சோக்கான வீடு; வயல் கேணி
இந்தளவும் கொண்டு வரின்
இக்கணமே வாணியின் பால்
சிந்தை இழப்பான் தண்டபாணி..!

ஆரம்ப காலத்தில் பாட்டுக்கு மெட்டமைத்தார்கள். தற்போது மெட்டுக்களுக்கு பாட்டெழுதுகிறார்கள். இசையமைப்பாளர்களின் சவாலான இசைக்குள் தமிழையும் கற்பனையையும் செருக வேண்டிய நிலை கவிஞர்களுக்கு. இந்த நிலையிலும் சில கற்பனைகள் பிரமிக்க வைக்கிறது. அண்மைய சில பாடல் வரிகள்


ஊர் எல்லையோர
ஐயனாரின் கத்தி
வாங்கித்தான்
பென்சில் சீவலாமா..?
//
பெண்
இடையும் இறைவனும்
ஒன்றுதான் -அவை
இருந்தும் தெரிவதேயில்லை..

சில வரிகளின் கற்பனைகள் கொஞ்சம் பொறாமைப்பட வைப்பது மாதிரியாகவும் இருக்கும்..! (அட! இன்னா பின்னு பின்றாங்கப்பா..!!)


வாசல் பெருக்கிப் போனாள்
சுத்தமானது வாசல்
குப்பையானது மனசு..!

இது யாழ்ப்பாணத்தில் கேள்விப்பட்டது..


நாலாம் பிறை பார்த்தால்
நாய்படாப் பாடென்பார்
நானோ முழு நிலவை
பார்த்து விட்டு
அனு தினமும்
அலைகின்றேன்.

சில கவிதைகள் நாம் எந்த மனநிலையிலிருந்தாலும் எம்மையும் கவிஞரின் மனநிலைக்கு அழைத்துச்சென்று உணரவைக்கும். குழந்தைகள் ஏமாறுவதென்பது துன்பமான ஒன்று. இதோ ஒரு குழந்தையின் ஏமாற்றத்தை நா.விஸ்வநாதன் நாசூக்காக சொல்கிறார்..


விருந்தாளி பையில் திராட்சை
நீண்ட நேர பேச்சு
உறங்கிப் போன குழந்தை.

கவிஞர்கள் பொதுவாகவே கொஞ்சம் இறுமாந்தவர்கள். வார்த்தைகள் வசமாவதும் உயர்ந்த கற்பனையும் தத்துவஞானமும் சந்தமாவதிலும் மிருகங்களிலிருந்து மனிதனை பிரதானமாக வேறுபிரிக்கும் மொழியை இலகுவாக ஆட்கொள்வதாலும் இது வருகிறது என நினைக்கின்றேன். இது கவியரசு கண்ணதானின் இறுமாப்பு..


காவியத்தாயின் இளையமகன்
காதல் பெண்களின் பெருந்தலைவன்
பாமரஜாதியின் தனிமனிதன் - நான்
படைப்பதால் என் பெயர் இறைவன்.

உலகெங்கிலுமுள்ள தீவிரவாதத்தால் பெருமளவு பாதிக்கப்படுவது அப்பாவி ஜனங்களும் குழந்தைகளுமே. வட்டங்கள் என்ற த லைப்பிலான பாலுமகேந்திராவின் இந்த வரிகள் மூலம் அதன் நிதர்சனத்தை தரிசிக்க முடிகிறது.

அந்தக் குண்டின் சுற்றளவு
வெறும் முப்பது சென்டிமீட்டர்தான்.
வெடிதத பொழுது
அதன் வீரியம்
மையத்திலிருந்து
ஏறத்தாழ ஏழு மீட்டர்தான்.
இந்த வட்டத்துள்,
இறந்து கிடந்தவர்கள் எட்டு
காயமடைந்தவர்கள் பன்னிரெண்டு.
இவர்களைச் சுற்றி,


நெஞ்சைப் பிளக்கும் சோகத்தாலும்
நிர்ணயமற்ற காலத்தாலுமான
ஒரு பெரிய வட்டத்துள்,
இரண்டு ஆஸ்பத்திரிகள்
ஒரு சுடுகாடு.

நூற்றுச்சொச்சம் கிலோமீட்டர் தள்ளி,
சொந்த ஊரில் புதைக்கப்பட்ட
அந்த இளம் பெண்ணையும்
கணக்கில் கொண்டால்
கணிசமாக விரிவடையும்
மற்றொரு வட்டம்.

கடல்களுக்கப்பால்எங்கோ ஓர் மூலையில்,
இவளுக்காய் கண்ணீர் விட்டுக்கொண்டிருக்கும்
அந்த ஒற்றை மனிதனால்
உலகளவாய் உருமாறும் இன்னொரு வட்டம்.

சொர்க்கத்தில் இருப்பதாக சொல்லப்படும்
கடவுளின் கதவு வரை சென்று
அவல ஓலமிடும்,
அநாதையாக்கப்பட்ட
அந்த குழந்தையின் அழுகுரல் போடும்,
அண்டங்களை கடந்த -
கடவுளும்
கணக்குகளுமில்லாதவேறொரு வட்டத்தை பற்றி
நான் சொல்லப் போவதில்லை

Sunday, March 23, 2008

திருகோணமலை நினைவுகள்..

கடலுக்குள் நீட்டிக்கொண்டிருக்கும் ஒரு வித்தியாசமான நிலப்பரப்பே திருகோணமலை நகரம். இந்த இயற்கையான புவியியல் அமைப்பே உலகின் தலைசிறந்த இயற்கை துறைமுகத்தையும் அளித்தது. அத்துடன் வீதியில் எங்கிருந்தும் இரு அந்தத்திலும் கடலைப்பார்க்க கூடியதான நேரிய கடல்முக வீதியையும் (Sea view road) அமைக்க உதவியது. • கோணேசர் ஆலயம் - அதுவரை பாடப்புத்தகத்தில் மட்டுமே பார்த்த ஆலயத்தை நேரில் கண்டது மகிழ்ச்சியே. இயற்கையாக அமைந்த செங்குத்தான மலைநுனியில் அமைந்த சிறிய ஆலயம். உண்மையான கோயில் கடலுக்குள் இருக்கின்றதென்று சொன்னார்கள். கோயிலுக்கு அப்புறம் இருந்த செங்குத்தான மலைச்சரிவின் கீழேயிருந்த கடலில் மீனவர்கள் புறப்படமுன்பு வள்ளத்திலிருந்தவாறே பாறையில் கற்பூரம் கொளுத்தி வழிபட்டுச்செல்வார்கள். பிரடெரிக்கோட்டைக்குள் இராணுவப்பாதுகாப்புடன் கோணேசர் பாதுகாப்பாகவே இருக்கிறார்..!


 • கோணேசர் உலா - ஒருவித இயந்திரத்தனத்துடன் இயங்கிக்கொண்டிருக்கும் நகரம் கோணேசர் உலாவுடன் புத்துணர்ச்சி பெறும். வீதிகள் எல்லாம் அலங்கரிக்கப்பட்டு கோணேசர் இரவில் ஒவ்வொரு வீதியாக வலம்வருவது அழகான காட்சி. வீதிகளுடன் மக்களும் அலங்கரிக்கப்பட்டே காட்சிதருவர். இக்கால வேளைகளில் நடந்தே திருமலை நகரத்தை ஒரு சுற்றுச் சுற்ற முடிந்தது.


 • தீர்த்தம் - கோணேசர் ஆலயத்தீர்த்தத்தின் பெயர் 'பாபநாசம்' என்று படித்திருக்கிறேன். சரி பாவங்களை நாசமாக்கிக்கொள்வோம் என தீர்த்தத்திற்கு போனபோது, கோட்டைக்குள் இருந்த ஒரு கூடைப்பந்தாட்டத்திடலில் நூற்றுக்கணக்கானவர்கள் குழுமியிருக்க கடற்படையின் தீயணைப்பு படைவீரர் ஒருவர் தண்ணீரை தீயணைக்கும் குழாய் மூலம் எல்லோர் மீதும் விசிறியடித்தார். திடீரென அடித்த சாரல் த்ரில் ஆக இருந்தாலும் பின்னர் தான் அறிந்து கொண்டேன் - பாபநாசம் என்பது ஒரு கிணறாம். அதில் கோணேசரிற்கு தீர்த்தம் ஆனதும் மக்கள் மீது நீரை விசிறுகிறார்களாம்.


 • தெப்பத்திருவிழா - கோணேசர் உற்சவத்தின் கடைசிநாள் நிகழ்வு என நினைக்கிறேன். மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட பெரிய தெப்பத்தில் கோணேசர் கடலுக்குள் வீற்றிருப்பார். இரவில்: இருளில்: கடலில் இறைவனைக்காண்பது வித்தியாசமான அனுபவம். தெப்பத்தில் அமைக்கப்பட்டிருந்த படிகளில் பக்தர்களின்! முண்டியடிப்பு இருந்ததனால் என்னுடன் வந்தவர்களுக்கு எனது வீரத்தைக்காட்ட படியில்லாத பக்கத்தால் சற்றே தம் பிடித்து பாய்ந்து ஏறவேண்டியிருந்தது!


 • திருகோணமலை நூலகம் - நகரசபையின் நூலகம். கடற்கரைக்கு முன்பாக கணிசமான நூல்களுடன் இரவல் வழங்கும் பகுதி அமைந்திருக்கிறது. ஓஷோவின் 'காமத்திலிருந்து கடவுள்' முதல் ராஜீவ் கொலை வரையான பலவகை நூல்களைக்கொண்டு காணப்படுகிறது. பிரஞ்சு எழுத்தாளர் 'மாப்பசான்' இன் மிக யதார்த்தமான எமுத்துக்களை வாசிக்கமுடிந்ததும் இந்நூலகத்தினாலேயே. 12' x 15' அடி அறைத்தனிமையையும் ஹர்த்தால் ஊரடங்கு நேரங்களிலான மகாத்தனிமையையும் போக்க உதவியது இந்த நூலகமே.


 • கடற்கரை - நகரத்தின் அகோர வெப்பத்திற்கு மாலையில் இதமளிக்கும் இடம். வழக்கமான நண்பர்கள் சந்திப்பின் பின் கடலில் கால் நனைய ஓரமாக சிறிதுதூரம் நடந்து வருவது இன்பமான அனுபவம். பெரும்பாலும் வெறிச்சென்று காணப்படும் கடற்கரை மாலை ஐந்து மணியின்பின் ஜே ஜே என்று சனக்கூட்டமாக காணப்படும்.


 • பட்டங்கள் - நகரத்தில் மின்குமிழ்களுடன் இரவில் பறக்கும் பட்டங்கள் வியப்பானவை. பட்டத்தின் வாலில் கூட மின்விளக்குகள் நீளத்திற்கு காணப்படும். ஆடலோட்ட மின்சாரத்தில் நூலுடனேயே வயரையும் இணைத்து ஏற்றுகிறார்கள். கடற்கரை காற்று இருப்பதால் பட்டமேற்றுவதில் சிரமமில்லை.


 • உவர்மலை - Orrs hill என அழைக்கப்படும் இவ்விடத்தின் மலைப்பாங்கான தரைத்தோற்றம் அலாதியானது. உவர்மலை மத்தியவீதியில் குடியிருப்பவர்களுக்கு சிரமமில்லை. மற்றவாகள் பாடுதான் பெரும்பாடு. வீட்டிலிருந்து புறப்படுவது இலகு. வரும்போது மலையேறித்தான் வரவேண்டும். எண்பதுகளின் இறுதிப்பகுதியில் கூட காடாக இருந்த இடமாம். பின்னர் மாகாண சபை வரவோடு குடியிருப்புப்பகுதி ஆகிவிட்டது.


 • உட்துறைமுகவீதி - இரவில் ஒருபக்கம் கடலுடனும் தூரத்து பிறிமா ஆலையின் மின் விளக்குகளுடனும் ஓர்ஸ் ஹில் விளக்குகளுடனும் ரம்மியமாக காட்சி தரும். அதிகாலை வேளையில் நண்பர்களுடன் கடற்காற்றுடன் உடற்பயிற்சிக்காக ஓடுவது இனிய அனுபவம். மதியவேளையில் கடல்அலை வீதியின் கொங்கிறீற் கட்டில் மோதி நடுவீதி வரை நீர்த்துளிகள் சிதறும்.


 • மாசிமகம் - 2004 இல் நடைபெற்ற மாசிமகத்திருவிழா மறக்க முடியாதது. திருகோணமலை பத்ரகாளியம்மனுடன் கோணேசரும் வருகைதந்து பத்தாம் நம்பர் கடற்கரையில் வீற்றிருக்க ஆயிரக்கணக்கானவர்கள் ஒரே நேரத்தில் கடலில் மூழ்கி எழுந்தது ஒரு மினி கும்பமேளா..! அவ்வாறான உற்சவம் பன்னிரண்டு வருடங்களிற்கு ஒருமுறைதான் வருமாம்.


 • கும்ப ஆட்டம் - இது நவராத்திரிக்காலங்களில் பரவலாக இடம்பெறும். திருகோணமலை நகரத்தையடுத்துள்ள அயற்கிராம கோயில்களில் இருந்து தலையில் அடுக்கான கும்பங்களுடன் மேளதாள தாரை தப்பட்டை முழங்க ஒவ்வொரு வீதியாக வலம்வருவார்கள். இவவர்களுடன் பெரும் கோஷ்டியே ஊர்வலமாக வந்து முக்கிய சந்திகளில் ஆட்டம் இடம்பெறும். இவர்கள் பெரும்பாலும் மாந்திரீகத்துடன் சம்பந்தமானவர்கள் என்றும் சொல்வார்கள். இதில் கும்ப மறிப்பு என்பதும் நிகழும். அதாவது கும்பத்துடன் வரும் ஒருவரை மாந்ரீக பலத்தால் தடுத்து நிறுத்துவது. வீதியில் எலுமிச்சம் பழம் குங்குமம் முதலான பூசைப்பொருட்களுடன் பெரும்தொனியில் கடகடென்று புரியாத மந்திரங்கள் எல்லாம் சொல்லி தேசிக்காயை நறுக்குவார்கள். பார்க்கும்போது கொஞ்சம் திகிலாக இருந்தாலும் நான் பார்த்த 'மறிப்புக்களில்' ஒருவேளை நான் பார்த்துக்கொணடிருந்ததாலோ என்னமோ எதுவுமே வெற்றியளிக்கவில்லை.


 • குட்டிக் குட்டி கோயில்கள் - திருமலை நகரத்தில் சந்து பொந்துகளிலெல்லாம் சின்னஞ்சின்னதாக கோயில்கள் இருக்கின்றன. பெரும்பாலும் இவை தனியாரின் கோவில்களாக இருக்கும். நவராத்திரிக்காலங்களிலேயே இக்கோயில்களில் விசேட பூசைகள் நடக்கும். இப்படியான கோயில்களின் நள்ளிரவுப்பூசைகளில் கலந்து கொள்வது ஒரு த்ரில் ஆன அனுபவம். பெரும்பாலும் கலையாடுவார்கள். மந்திரித்து உருவேற்றுவார்கள். குறிசொல்வார்கள். உருவேறியவர்கள் வினோதமான சத்தத்தில் கூக்குரல் இடுவார்கள். சூழல் பக்தியும் பயமும் கலந்த ஒன்றாக இருக்கும். இதெல்லாம் இருந்துமா இந்நாட்டில் இனப்பிரச்சனை ஒன்றிருக்கிறது..? பிரச்சனை ஆனவர்களையெல்லாம் இப்படி கட்டிப்போட்டாலே போதுமே என்று கொஞசம் அவநம்பிக்கையாகவே இருந்தது.


 • சல்லித்திருவிழா - 2004 இல் நடைபெற்ற சல்லித்திருவிழா 1995 .ல் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற மாபெரும் இடப்பெயர்வையே ஞாபகப்படுத்தியது. நிலாவெளி உப்புவெளி வீதி நிறைய்ய சனக்கூட்டம். வாகனங்கள் அங்குலம் அங்குலமாக நகரவேண்டியிருந்தது. சல்லியில் பிலாப்பழத்துடன் புட்டு பெருமளவில் விற்பனை செய்யப்பட்டது ஆச்சரியமாக இருந்தது. அழகான கிராமியச்சூழலில் ஆலயம். நல்லூரைப்போன்றே கடைகளும் ஏராளம். சல்லியை தொடர்ந்து வரும் பாலம்போட்ட ஆறு (பாலம்பட்டாறு) உற்சவமும் பிரபலமானதே. ஆனாலும் சல்லி போக்குவரத்து அனுபவத்தினால் அதை தவிர்த்திருந்தேன்.


 • வெந்நீரூற்று - இலங்கையிலுள்ள அதிசயங்களில் ஒன்று. ஆனால் ஒரு காட்டுப்புறமான இடமொன்றில் கொஞ்சம் ஒதுங்கியே இருக்கின்றது. ஏழு ஊற்றுக்களும் வெவ்வேறு வெப்பநிலைகளில் காணப்படுவது ஆச்சரியமானதே.


 • கந்தளாய் குளம் - இயற்கையான தரைத்தோற்றஅமைவைக்கொண்டு கட்டப்பட்ட அலைகள் தோன்றக்சகூடிய பெரிய்ய குளம். ஒருபக்க அணைக்கட்டின் மேலாகவே கொழும்பு வீதி செல்கிறது. அணைக்கட்டின் இப்புறம் பள்ளத்தில் கிராமங்கள் குட்டி குட்டியாக வயல்கள். அணைக்கட்டு உடைந்தால் இக்கிராமங்களிற்கு அது ஒரு சுனாமியே. எண்பதுகளில் அப்படி ஒரு அனர்த்தம் நடந்ததாக சொல்கிறார்கள். திருகோணமலை நகரின் குடிநீரின் பெரும்பகுதியை இக்குளமே பூர்த்தி செய்கிறது.


 • தம்பலகாமம் - இயற்கை எழிலுடனான கிராமம். தம்பலகாமம் என்ற பெயர் பலகையுடனான வீதியில் நேரே சென்றபோது இரயில் பாதையை அடுத்து கொஞ்சம் தூரத்தில் தயிர் சந்தைப்படுத்தும் இடமொன்றுள்ளது. இரவு இரயிலில் கொழும்புக்கான தயிர்சட்டிகள் பெரும்தொகையாக அனுப்பப்படும். இதையும்தாண்டி நேரே செல்லம்போது வருவதும் ஒரு கோணேசர் ஆலயம். கோபுரத்தில் இராட்சத தேன் கூடுகள் காணப்பட்டன. தனிமையான சூழலில் அழகான ஆலயம்.


 • சுனாமி.. - இயற்கை தான் எவ்வளவு பெரிய ஆள் என்பதை நிரூபித்தது. ஞாயிற்றுக்கிழமை தானே என்று கொஞ்சம் அசந்து தூங்கி கண்விழித்தபோது வெளியில் ஒரே அல்லோல கல்லோலம். வாகனங்கள் பறந்தன. மக்கள் ஓடிக்கொண்டிருந்தார்கள். பஸ்நிலையத்திற்குள் கடல்வந்து விட்டது என்றார்கள். எனக்கு பிரமிப்பாக இருந்தது. நீர் உடைத்துக்கொண்டு வருமளவிற்கு அணைக்கட்டு ஏதும் இருந்ததா என்ன? குழப்பத்துடன் உட்துறைமுக வீதிக்கு சென்றபோது வாயடைத்துப்போனேன். கடலைக்காணவில்லை. பிறிமா நிறுவனத்தின் பெரிய கப்பலொன்று தண்ணீரில்லாமல் சரிந்து படுத்திருந்தது. மீன்பிடி வள்ளங்கள் ஆங்காங்கே தரையில் காணப்பட்டன. பார்த்துக்கொண்டிருக்கும்போதே வெள்ளி விளிம்பு போல கடல்நீர் ஓடிவந்தது. சட்டென்று நிலமைபுரிந்தது. மயான வீதியூடாக ஓடியவர்களுடன் நானும் ஓடினேன். கணநேரத்தில் எமக்குப்பின்னால் மதில்களையெல்லாம் மோதிக்கொண்டு நீர். மாகாணதிட்டமிடல் அலுவலகத்தின் மதில் விழுந்துபோய் இருந்தது. நிலாவெளி வீதியில் வரிசையாக சற்று முன்னர் உயிருடன் இருந்தவர்களையெல்லாம் பிணங்களாக கிடத்தியிருந்தார்கள். வீதி நெடுகிலும் பிணங்கள். சுனாமியின் பின்னர் வெகுநாட்கள் வரையிலும் நகரக்கடற்கரையில் செருப்புகளும் அந்நியமான மரப்பாகங்களும் ஒதுங்கியவண்ணம் இருந்தது.


 • புத்தர் சிலை - திருகோணமலை நகரம் எப்படிப்பரபரப்பானதோ அதுபோலவே சிறுசம்பவம் என்றாலும் உடனே வெறிச் என்று அடங்கிவிடும். புத்தர் சிலை விவகாரத்தை அடுத்து தொடர் ஹர்த்தாலும் தொடர் ஊரடங்கும் என்போல தனிய இருப்பவர்களை கடுமையாக பாதித்தது. கடைகள் உணவுக்கடைகள் தொடர்ச்சியாக மூடப்பட்டதாலும் என்னிடமிருந்த பிஸ்கட் கையிருப்புகள் தீர்ந்து போனதாலும் வீட்டிற்கு செல்லவேண்டியிருந்தது. நண்பரொருவர் அதிகாலையில் மட்டும் கொழும்பிற்கு ஒரு பஸ் செல்வதாக சொன்னார். அடுத்த நாள் அதிகாலை நண்பருடன் சனசந்தடி இல்லாத வீதிகளால் நடந்து போய் மிகக்கொஞ்சம் பேரே இருந்த அந்த பஸ்ஸிலேறி ஹபறணையில் இறங்கி தம்புள்ள சென்று அங்கிருந்து வவுனியா சென்று புறப்படும் நிலையிலிருந்த ஓமந்தை பஸ்ஸை அடைந்தால் பஸ்ஸில் நிரம்பி வழிந்தார்கள் அடுத்த பஸ்ஸில் போகலாம் என நின்றபோது அதுதான் கடைசி பஸ் என்று ஒருவர் பீதியை கிளப்பிவிட ஏற்கனவே நிரம்பிவழிந்த பஸ்ஸில் மிதிபலகையில் ஒருகாலைமட்டுமே ஊன்றி தொங்கிக்கொண்டு அசோக்லேடனின் அலுமினியச்சட்டம் வலுவானதாக இருக்கவேண்டுமே என்று கவலைப்பட்டுக்கொண்டிருந்தபோது என்னைவிட மோசமான நிலையில் தொங்கிக்கொண்டிருந்த நண்பர் சொன்னார்.. - எவ்வளவோ குண்டுவீச்சிலும் ஷெல்வீச்சிலுமிருந்து காப்பாற்றிய உயிர் இப்போது கேவலம் இந்த அலுமினியச்சட்டத்தில் தங்கியிருக்கிறது என்றார். எனக்கென்றால் உயிர் இப்படியானதிலை எல்லாம் தங்கியிருப்பதில்லை என்று படுகிறது. என்னவென்றே தெரியாத ஒன்றுக்கு உயிர் என்று பெயரிட்டிருக்கிறோம் அவ்வளவே. நல்லவேளையாக இதைநான் நண்பரிடம் அப்போது சொல்லவில்லை. சொல்லியிருந்தால் நண்பர் இருந்த நிலையில் அப்போதே என்னை இழுத்து விழுத்தியிருப்பார்..!!

Sunday, March 9, 2008

தெரிந்தால் சொல்லுங்களேன்..

நடனத்தில் பலவகைகள் உண்டு. சாஸ்திரிய நடனம், கிராமிய நடனம், மேற்கத்தைய நடனம் போன்றவை அதில் சில. இந்த வகைகளிற்குள்ளும் பலவிதமான வடிவங்கள் உண்டு. உதாரணத்திற்கு பரதத்தையும் கதகளியையும் எடுத்துக்கொண்டால் ஒரே உணர்ச்சி வெளிப்பாட்டை அல்லது செய்தியை இரு நாட்டிய முறையிலும் வெளிப்படுத்தும் விதம் வேறுவேறானதாகும். நடனமூலமாகவே செய்திகள் தெரிவிக்கும் அளவிற்கு நடனவடிவங்கள் நுணுக்கம் வாய்ந்தவை. இவற்றை பரிச்சயம் வாய்ந்தவர்களுடன் இருந்தே இரசிக்க முடியும். சர்வதேச நடன அரங்குகளில் ஆடப்படும் பல்வேறு நாட்டையும் சோந்த ஆடல்வடிவங்கள் பலசமயங்களில் என்னைப்போன்றவர்களிற்கு புரியாதுவிட்டாலும் அதற்கான ஒத்திகைகளும் பின்னணிகளும் பணச்செலவுகளும் அந்த நடனங்களின் பெறுமதி குறித்தே மேற்கொள்ளப்படுகிறது என்பதை உணரமுடிகிறது.
அந்தவகையில் இந்த நடனமும் எனக்கு பிடித்துப்போனது. பொறுமையாக! பலமுறை பார்த்தபோதும் எதனால் பிடித்தது என்பதை உணரமுடியவில்லை. இந்நடனம் ஒரு செய்தியை சொல்ல முற்படுகிறது என்பதை உணரமுடிந்தாலும் அது என்ன என்பதை உணரமுடியவில்லை. பாடல் பரிச்சயமான இசைஞானியின் நல்ல பாடல்தான். ஆனால் அதன் மூலம் சொல்லவருவது என்ன..? இதில் பங்கேற்றோர் உண்மையில் குருடர்களா..? உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்களேன்...


Wednesday, March 5, 2008

தேவை

கொஞ்சம் திகைத்துத்தான் போனேன் அந்த எலியின் வேலையைக்கண்டு। சென்ற வாரம் சமையலறையில் எலியொன்றின் நடமாட்டத்திற்கான அறிகுறிகளைக்கண்டு எப்படி வந்திருக்கக்கூடும் எனத்தேடியதில் அலுமாரியின் பின்புறம் நிலத்தின்மட்டத்துடன் சுவரில் ஒரு ஓட்டை இருந்தது தெரிந்தது। முன்னர் குழாய் ஏதேனும் பொருத்துவதற்கான ஓட்டையாக இருக்கும் என்றெண்ணி அதை அடைத்து விட்டேன்। நேற்று குழாயை திறந்ததும் காலடியில் தண்ணீர் சளசளக்கவே, ஆராய்ந்ததில் பேசினையும் சாக்கடை குழாயையும் இணைக்கும் இறப்பர் குழாய் எலியால் சின்னாபின்னமாயிருந்தது। ஆச்சரியமாகத்தான் இருந்தது. ஏனெனில் மூன்று அங்குலம் விட்டமுடைய சாக்கடைக்குழாய் சமையலறையிலிருந்து வெளியில் பலமீற்றர் தூரம் நீண்டுபோய் நகரசபை வடிகாலை அடைகின்றது। உறையவைக்கும் இந்த குளிர்காலத்தில் (Winter) சாக்கடைக்குழாயின் மறுஅந்தத்தை கண்டுபிடித்து திரும்பவும் சமையலறைக்கு வரவேண்டிய அளவிற்கு அந்த எலியின் 'தேவை' அதற்குப்பிரதானமாயிருந்திருக்கிறது।


எலிமட்டுமல்ல பொதுவாக எந்த உயிரினமோ அல்லது எந்த இனமோ, அமைப்போ, நிறுவனமோ, கட்சியோ, நாடோ தனது தேவையை நிறைவேற்றிக்கொள்வதற்கு பின்னிற்பதில்லை. தேவையை நிறைவேற்றிக்கொள்வதற்காக எந்தப்பிரயத்தனம் செய்யவும் தயாராகவே இருக்கின்றன. ஏனெனில் அவர்களது அல்லது அவைகளது தேவை அப்படிப்பட்டது. தேவை ஒன்றை நிறைவேற்றிக்கொள்வதற்காகவே அவை இயங்குகின்றன. மயில் ஆடுவதும் காகம் கரைவதும் கூட அதனதன் தேவை கருதித்தான். சூரிய சந்திர இயக்கம்கூட தேவையின்பாற்பட்டதே.

இங்கிலாந்தில் கைத்தொழில் புரட்சியை அடுத்து தேவைகள் அதிகரித்ததன் காரணமாக பலவிதமான உபகரணங்களும் கனியங்களும் கண்டுபிடிக்கப்பட்டன. மூலப்பொருட்களை தொழிற்சாலைகளுக்கு கொண்டு செல்லவும் முடிவுப்பொருட்களை துறைமுகங்களுக்கு விரைவாகக்கொண்டு போய்ச்சேர்க்கவும் தண்டவாளங்களில் ஓடும் புகையிரதங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அதன் வேகம் குறித்தான தேவை இன்று புல்லட் இரயில் வரை கொண்டுவந்து விட்டிருக்கிறது. நாடுகாண் பயணங்களின் நிறைவில் நாடுகளிற்கிடையிலான விரைவான போக்குவரத்து மார்க்கம் ஒன்று தேவைப்பட்டது. பறவைகள் இலகுவாக இடத்துக்கிடம் செல்வதைப்பார்த்து விமானம் கண்டுபிடிக்கப்பட்டது.அதன் வேகம் குறித்தான தேவை இன்று மிகையொலி விமானம் வரை கொண்டுவந்து விட்டிருக்கிறது.இரண்டாம் உலகப்போரின் பின் ஏற்பட்ட புதியஉலக ஒழுங்கின் தேவையின் நிமித்தம் ஐக்கியநாடுகள் சபை தாபிக்கப்பட்டது. ஐக்கியநாடுகள் சபையில் பலமிக்கநாடாக விளங்கவேண்டும் அல்லது காட்டவேண்டும் என்ற தேவையில் புதிய புதிய ஏவுகணைப் பரிசோதனைகளும் அணுகுண்டுப்பரிசோதனைகளும் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன.


அணுகுண்டுப்பெருக்கத்தினால் பூமியில் உள்ளவர்கள் அனைவரும் அழிந்துபோகச் சாத்தியம் உள்ளதனால் பிறகிரகங்களில் மனிதன் குடியேற சாத்தியம் உள்ளதா எனும் ஆராயும்தேவையில் தற்போது செவ்வாய்கிரகம் ஆராயப்பட்டுக்கொண்டிருக்கிறது. இதில் விண்கலங்களும் செய்மதிகளும் சம்பந்தப்பட்டிருப்பதால் அவற்றை விண்ணிலேயே தாக்கியழிப்பதற்கான தேவையும் தற்போது புதிதாக ஏற்பட்டிருக்கிறது. இது விண்வெளிப்போட்டி எனப்படுகின்றது. அண்மையில் சீனாவும் இதில் இணைந்து கொண்டுள்ளது.


இவ்வாறாக தேவைகள் ஏற்படும்போதெல்லாம் அத்தேவைகள் ஏதோ ஒரு வகையில் நிறைவேற்றியே தீர்க்கப்படுகின்றது. தேவை ஒன்று தீர்க்கப்படுவதற்கு தேவையின்பால் காட்டப்படும் கரிசனம், அத்தேவையை பூர்த்திசெய்து கொள்வதற்கான அர்ப்பணிப்பு என்பன பிரதான இடம் வகிக்கின்றன. எனவே பலமான தேவை ஒன்று இருக்குமாயின் அது நிறைவேறுவதற்கு உரித்துடையது.


அப்படியாயின் இலங்கையில் ஏன் இன்னமும் சமாதானம் ஏற்படவில்லை. இலங்கையில் சமாதானம் குறித்ததேவை இல்லையா எனக்கேட்டால் இல்லை என்றே சொல்ல வேண்டும். ஆயுத உற்பத்திநாடுகள் தமது ஆயுதங்களை விற்பனை செய்வதற்கும் அவ்வாயுதங்களின் திறன் குறித்துப்பரிசோதிப்பதற்கும்; குழம்பிப்போன நாடொன்றிலேயே உதவிஎன்ற பெயரில் மூக்கை நீட்டலாம் என நினைக்கும் வல்லரசு நாடுகளிற்கும்; யுத்தத்தைக்காரணம் காட்டி தமது ஊழல்மோசடிகளை மறைக்கநினைக்கும் அரசியல்வாதிகளுக்கும்; தனது வாக்கு வங்கிக்கு இனவாதக்கருத்துக்களையே நம்பியிருக்கும் கட்சிகளுக்கும் இலங்கையில் சமாதானம் என்பது தேவையில்லை. இவர்கள் மட்டுமா இப்படி? சமாதானம் வந்தால் - நிவாரணம் நின்றுபோகும் என நினைக்கும் அகதிமுகாம் சோம்பேறிகளிற்கும், யுத்தத்தை காட்டி கொழும்புக்கு இடமாற்றம் பெற்ற அரசஊழியரிற்கும், சமாதானம் வந்தால் திருப்பியனுப்பப்படுவோமே என நினைக்கும் அகதி புலம்பெயர்வாழர்களிற்கும், வியாபாரிகளிற்கும் இலங்கையில் சமாதானம் தேவையில்லை. மொத்த சனத்தொகையில் இப்படியானவர்கள் எத்தனை சதவீதம் என்பதிலேயே இலங்கையின் சமாதானம் குறித்தான தேவை தங்கியுள்ளது. ஏனெனில் காத்திரமான தேவை எதுவும் பூர்த்திசெய்யப்பட வேண்டியது நியதியாகும்.


'சமாதானத்தில் தீவிரவிருப்பம் கொண்ட நூறுபேராவது துணிந்து குரல்கொடுத்து சமாதானத்தின் தேவையை முன்வைத்தால் மாற்றத்தைக்கொண்டுவர முடியும்' என கலாநிதி. குமார் ரூபசிங்க சென்ற திங்கட்கிழமை கொழும்பில் நடைபெற்ற 'சமாதானத்திற்கான ஒரு குரல்' என்ற தனது புத்தக வெளியீட்டு விழாவில் கூறியிருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.

Thursday, February 28, 2008

பல்பரிமாண எழுத்தாளர் சுஜாதா

மரணம் தொடர்பாக சுஜாதா ஆயத்தமாகவே இருந்தார் எனச்சொல்ல வேண்டும்। "இப்போதெல்லாம் ஹிந்துவில் முதலில் obtituary தான் பார்க்கிறேன்। இறந்தவர் என்னைவிட இளையவர் என்றால் பரவாயில்லை நாம் இன்னும் இருக்கிறோம் என்று சந்தோஷப்பட்டுகொள்கிறேன்। என்னை விட வயதானவர் என்றால் என் நாள் எந்நாள் என்று யோசனை வருகிறது" - இதை அவரின் 'கற்றதும் பெற்றதும்' என்ற நூலில் குறிப்பிட்டிருந்தார்। எனது வாசிப்பு பரிச்சயங்களில் அதிசயிக்க வைத்த எழுத்தாளர்।

தொடாத தலைப்பே இல்லை எனும் அளவிற்கு அனைத்து துறையிலும் தனது எழுத்தைக் கொண்டு சேர்த்தவர்। 'எந்த மரபையும் உடைக்கின்றபோது ஒரு புதுமையான இலக்கியம் தோன்றும்' என்ற வகையில் அதுவரை இருந்த எழுத்து நடைகளை மாற்றி தனக்கென்ற வகையில் வேகமான சுவாரசியமான நடைக்குள் தமிழ் மொழியைக்கொண்டு வந்தவர்। இவரது எழுத்து வரிகளில் கலந்திருக்கும் நகைச்சுவை அலாதியானனது: நாசூக்கானது। சொற்களின் அளவைக்குறைத்து கதையில் தன்னுடன் வாசகனையும் வரச்செய்து பெரும்பாலானவற்றை வாசகனே ஊகித்து உணரும் வகையிலான இரசாயனத்தை தனக்கும் வாசகனுக்குமிடையில் தனது மொழிநடை மூலம் ஏற்படுத்திக்கொண்டவர்। சூழ்நிலைகளையும் சம்பவங்களையும் கூர்ந்து அவதானித்து அவற்றை மிகச்சில சொற்களில் சொல்லி முடிக்கின்ற சாகசக்காரர்। தலைமுறை இடைவெளி இல்லாமல் இக்கால இளைஞர்களினதும் எண்ணஓட்டங்களையும் புரிந்து கொண்டு எழுத்திலும் இளமையைக் கொண்டு வந்தவர்। ஆரம்பகால இவரது சிறுகதை முயற்சிகள் இன்றும் பிரமிப்பூட்டுபவை। வேறுபட்ட கருக்கள், வேறுபட்ட அணுகுமுறைகள் எழுத்தில் வடிக்கமுடியாதவை। சிக்கலான மருத்துவ, விஞ்ஞான,தொழில்நுட்ப,கணணி விடயங்களையும் மிக எளிமையான எடுத்துக்காட்டுக்களோடு பாமரரும் விளங்கும் வகையில் தமிழில் தந்தவர்।


இளமைக்காலத்தை பாட்டியுடன் சிறீரங்கத்தில் கழித்த பசுமையான நினைவுகளை சிறீரங்கத்து தேவதைகள் என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்। கவிஞர் வாலி சிறீரங்கத்தில் இவரது அயலவர்। திருச்சி சென்।ஜோசப் கல்லூரியில் பெளதிகவியலில் பட்டப்படிப்பை மேற்கொள்ளும்போது முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமுடன் சகபாடியாக இருந்திருக்கிறார்। இதன் பின்னர் சென்னை தொழில்நுட்ப நிறுவகத்தில் இலத்திரனியல் துறையில் பட்டம் பெற்றார்। இந்திய அரசுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை உருவாக்கும் குழுவிற்கு தலைமை தாங்கி செயற்பட்டவர்। இவரது விஞ்ஞானக்கதைகளும் அற்புதமானவை। என் இனிய இயந்திரா॥ மீண்டும் ஜீனோ போன்ற நூல்களில் தவறுகளில் இருந்து கற்றுக்கொள்ளும் ஒரு எந்திர நாய்பற்றி கற்பனை செய்துள்ளார்। அது தவறுகளில் இருந்து கற்றுக்கொண்டு ஒரு நிலையில் தவறே செய்யாத ஒரு நிலையை அடைகிறது। இந்த நாயைவைத்து பின்னப்பட்ட அருமையான விஞ்ஞானக்கதை। இவரது துப்பறியும் நாவல்கள் இவரிற்கு அதீத இரசிகர்களைத் தேடித்தந்தது। இவரது கற்பனையான பாத்திரங்கள் உண்மையிலேயே இருக்கிறார்கள் என்று பலரை நம்பவைத்தது இவரது எழுத்து। வெகுஜனப்பத்திரிகைகளிலும் சரி, சிறுபத்திரிகைகளிலும் சரி தனக்கென்று ஒரு முத்திரையை பதித்துக்கொண்டவர்। இவர் எழுதிய நாடகங்கள் கூடப்புகழ்பெற்றவை। பூரணம் விஸ்வநாதன் நடிப்பில் இவரது நாடகங்கள் சிலாகிக்கப்படட்டன। நாடகத்தையும் மேடை அமைப்பு பின்னணி முதலிய தொழில்நுட்ப அம்சங்களையும் உள்ளடக்கியதாக எழுதியது அவரது பரந்து பட்ட அறிவிற்கு சான்று।

'கனவுத்தொழிற்சாலை' என்ற நூல் சினிமா திரைஉலகின் ஜிகினா பக்கத்திற்கான மறுபக்கத்தைக்காட்டி சாதாரண மக்களுக்கும் திரைஉலகு குறித்த உண்மை நிலையை எடுத்துக்காட்டியது। இவரது தயாரிப்பில் உருவான பாரதி படம் அனைவரதும் பாராட்டைப்பெற்றது। அறிவியல் சார்ந்த ஒரு படமாக 'விக்ரம்' என்ற படத்திற்கான கதை திரைக்தையை எழுதினார்। தனது கதைகள் திரைப்படமாகும்போது நடக்கும் கதை சீர்குலைவுகளை விமர்சித்த இவர் ஒரு திரைப்படம் ஒன்று உருவாகுவதற்கான சவால்கள் சிரமங்கள் குறித்தும் அவ்வப்போது எழுதியுள்ளார்। சென்னை மீடியா ட்ரீம்சின் ஆலோசகராகவும் பணியாற்றியுள்ளார்।


சிறுகதை நாவல்களை விட இவர் ஜீனியர் விகடனில் எழுதிய ஏன் எதற்கு எப்படி?, கணையாளியில் எழுதிய 'கணையாளியின் கடைசிப்பக்கம்', ஆனந்த விகடனில் எழுதிய கற்றதும் பெற்றதும் என்பவை மிகப்பிரபலமாயின। மூளை மற்றும் ஓமோன்கள் குறித்து எழுதிய 'தலைமைச்செயலகம்' சிறந்த அறிவியல் நூலாகும்।

அவரது நுண்ணறிவும் ஆராயும்திறனும் மொழித்திறனும் சேர்ந்து எமக்கொரு நல்ல எழுத்தாளரைத்தந்தது.

பெண்கள் குறித்து சற்று அதிகமாகவே வர்ணிப்பவர் என்ற குற்றச்சாட்டுகள் இருந்தாலும் 'எப்போதும் பெண்' என்ற தன் நூலில் இவ்வாறு குறிப்பிடுகிறார்। 'இதை எப்படி வேண்டுமானாலும் அழைத்துக்கொள்ளுங்கள், படியுங்கள்। இதன் விஷயம் எனக்குப்பிடித்தமானது। பொய் இல்லாமல் பாவனைகள் இல்லாமல் எழுதியிருக்கிறேன்। பெண் என்கிற தீராத அதிசயத்தின்பால் அன்பும் ஆச்சரியமும் ஏன் பக்தியும்தான் என்னை இதை எழுதச்செலுத்தும் சக்திகள்'

ஆயிரத்து தொளாயிரத்து முப்பத்தைந்தாம் ஆண்டு மே மாதம் மூன்றாம் நாள் பிறந்த சுஜாதா அவர்கள் தனது 73ம் வயதில் காலமாகியிருக்கிறார்கள்। சிறீரங்கநாதரில் ஆழ்ந்த பக்தியும் ஆழ்வார்களின் பிரபந்தங்களில் ஆழ்ந்த ஈடுபாடும் கொண்ட சுஜாதா அவர்களின் வாழ்வு நிறைவானது என்பதில் ஐயமில்லை। அன்னாரின் எழுத்துப்பணிக்கு சிரம்தாழ்த்திய அஞ்சலிகள்।

கவிதைகளிலும் ஹைக்கூக்களிலும் வெண்பாக்களிலும் நாட்டங்கொண்டவராகிய இவர் தனது எழுத்துக்களில் இளைய தலைமுறையினரை அறிமுகப்படுத்தவும் தவறுவதில்லை। விஞ்ஞானம் சம்பந்தமான ஹைக்கூக்கள் சைஃபிகூ எனப்படுகின்றன। இதில் சுஜாதாவின் முயற்சி இவ்வாறாக இருக்கிறது।

சந்திரனில் இறங்கினேன்

பூமியில் புறப்படும்போது
கதவைப்பூட்டினேனா?
அவரது எழுத்துக்கு என்றும் மரணமில்லை.

Thursday, February 21, 2008

இசையில் அசத்தும் சிறுவர்கள்..!

இந்திய தொலைக்காட்சிகளில் நடாத்தப்படும் இசை சம்பந்தமான போட்டிகளில் கலந்து கொள்ளும் சிறுவர்களின் இசைத்திறமை ஆச்சரியமளிக்கின்றது. போட்டிகளில் அவர்கள் காட்டும் ஈடுபாடு, தன்னம்பிக்கை, துணிவு, உழைப்பு என்பவற்றை இப்போட்டிகளினூடாகத் தெளிவாக அறிந்து கொள்ள முடிகிறது. பெரியவர்களே சிலவேளைகளில் தடுமாறும் பாட்டிற்கான பாவத்தை சிறுவர்கள் தமது குரலில் மிக இலகுவாகக்கையாள்கிறார்கள். பாடலில் இடையில் வரும் சங்கதிகள் அசைவுகள் முதலியவற்றை கிரகித்துப்பாடுவதில் இதற்கான அவர்களின் பயிற்சியும் உழைப்பும் தெளிவாகத்தெரிகின்றன.

நடுவர்களையே அசத்துபவையாகவும் உரியவர்களை தேர்ந்தெடுப்பதில் நெருக்கடியை ஏற்படுத்துபவையாகவும் இவர்களது பாடும்திறன் அசத்தலாகவுள்ளது. இந்தியாவில் தமிழில் மட்டுமல்லாது பிறமாநில மொழிகளிலும் இவ்வாறான போட்டிகள் நடத்தப்படுகின்றன. தமிழ் மொழி தெரியாத சிறுவர்கள்கூட உச்சரிப்பு பிழைகள் இருப்பினும் இசைக்கேற்ற பாவத்தில் பாடுவதில் சிலாகிக்கவைக்கிறார்கள்.

இதன்மூலம் சிறுவர்கள் சிறுவயதிலேயே அடையாளம் காணப்பட்டு வருங்காலத்தில் அவர்கள் மேலும் மெருகேற வாய்ப்புக்கள் பிரகாசமாக அமைகின்றன. ஆயினும் சிறுவயதிலேயே இவ்வாறு புகழ்பெறுவதாலும் ஊடகங்களில் வர்த்தக மற்றும் விளம்பர நோக்கம் கருதி பெறப்பட்ட வெற்றி மிகைப்படுத்தலாக காட்டப்படுவதாலும் சுயகர்வமும், அடைவில் சுயதிருப்தியும் ஏற்பட்டு எதிர்காலத்தில் மேலும் கற்றுக்கொள்ளும் தேடலிற்கான ஆர்வத்தையும் வாய்ப்புகளையும் இழந்துவிடும் சந்தர்ப்பத்தையும் ஏற்படுத்தக்கூடும் என்பதையும் மறுக்கமுடியாது. ஆயினும் பங்கு கொள்ளும் சிறுவர்கள் வெற்றியையும் தோல்வியையும் சமமாகக்கொண்டு எதிர்காலத்தில் மேலும் தகுதிகளை வளர்த்துக்கொள்ள பெற்றோரும் ஆசிரியர்களும் உதவவேண்டும். ஏனெனில் தொலைக்காட்சிகளில் பிரமாண்டமாக வெற்றிகள் காண்பிக்கப்படும்போது தோல்விகளும் அதற்கேற்ற பிரமாண்டத்தை இயற்கையாகவே பெறுகின்றன.
(மேலும் திறமையான சிறுவர்களைக்காண கீழே பெயருடனான இணைப்புக்களில் அழுத்துங்கள்)

Sunday, February 17, 2008

மரணம் பற்றி...

பிறந்த ஒவ்வொருவரும் இறப்பது நியதியேயாயினும் மரணம் சமமாக எல்லோருக்கும் வருவதில்லை. கருவில் இறப்போரும் உண்டு, தெருவில் இறப்போரும் உண்டு, முதிர்ந்து இறப்போரும் உண்டு. மரணம் என்பது நிச்சயமான பிறகு, மரணத்திற்குப்பின் என்னவாவோம் என்கிற கேள்வி எழுகிறது. பல சமயங்களும் பலவாறாக சொல்கின்றன. பாவ புண்ணியங்களை தவிர்த்த எளிமையான சிந்தனைக்கு மூன்று தேர்வுகள் (Choice) உள்ளன.
 1. மரணத்தின் பின் இல்லாது போதல்
 2. மரணத்தின் பின் இன்னொன்றாக மாறுதல்
 3. மரணத்தின் பின் பிறப்புக்கு முன் இருந்த நிலையை அடைதல் (வந்த இடத்திற்கே திரும்ப போதல்)

நமது ஐம்புலன்களின் சக்தியும் வரையறுக்கப்பட்டவை. அதாவது குறிப்பிட்ட தூரம் வரையே எம்மால் பார்க்க முடியும், குறிப்பிட்ட அளவு ஒலியையே கேட்கமுடியும். எனவே இந்த எல்லைகளுக்கு அப்பாற்பட்டவற்றை அறியக்கூடியதாகவும் அல்லது உணரக்கூடியதாகவுமான சக்திகள் இருக்கக்கூடும். அவ்வாறான சக்திகளை மரணத்தின் பின் பெறுகிறோமா?

பொதுவாகவே மரணத்திற்கு மனிதர்கள் பயப்பிடுகிறார்கள். மரணத்துக்கு முன்பு அது தொடர்பான வலி, அவஸ்தை இருக்கிறது. ஆகக்கூடியநேரம் வரை மூச்சை அடக்கும்போது இவ் அவஸ்தையின் சிறிதளவை உணரமுடியும். முன்னர் மரணம் என்பது பெரிய விடயமாக இருந்தது. பெரும்பாலும் மூப்படைந்து அல்லது நோய் வந்து மரணம் சம்பவித்தது. மரணம் நிகழ்ந்த வீட்டை அல்லது இடத்தை தவிர்த்து வேறுபாதைகளை பாவித்து பயணிப்பார்கள். யமன் வந்திட்டுது, சேடம் இழுக்கிறது போன்ற பிரயோகங்கள் மரணஅறிகுறிகளைக்கொண்டு பாவிக்கப்பட்டது. இப்போது யமன் வராமலே சேடம் இழுக்காமலே கணப்பொழுதில் மரணிக்கிறார்கள்.

மறைமலை அடிகள் 'மரணத்துக்கு பின் மனிதர் நிலை' (1911 ல் எழுதப்பட்டது) என்ற நூலில் ஸ்தூல உடம்பு, சூக்கும உடம்பு என இருவகையான நிலை குறித்து குறிப்பிடுகிறார். ஸ்தூலம் என்பது கண்ணுக்கு தெரிவது, சூக்குமம் என்பது கண்ணுக்குத் தெரியாதது. எனவே மரணம் என்பது ஸ்தூலத்திலிருந்து சூக்குமத்திற்கு மாறுவது என்று குறிப்பிடுகிறார். ஆயினும் சூக்கும உடம்பிலும் அவர்களது பாவபுண்ணியத்திற்கேற்ப வெள்ளையாகவும் கறுப்பாகவும் தோன்றுவதாக பலரின் கனவுகளை உதாரணம் காட்டி குறிப்பிடுகின்றார். கனவு என்பதும் ஆழ்மனப்பதிவு சார்ந்தது என்பதால் கனவை ஆதாரமாகக் கொள்ளல் இயலாது. எனினும் சடுதியான மாரடைப்பிலிருந்து மீண்டவர்கள் சிலர் தங்களது உடலை மேலிருந்து பார்க்கும் நிலையிலிருந்ததாக (Top elevation view) சொல்லியுள்ளார்கள். எனினும் இவையெதையும் நிரூபிக்கமுடியாது. ஏனெனில் மரணம் என்பது உயிர் ஒன்றுக்கு இவ்வுலகில் ஏற்படும் கடைசி நிகழ்வு. அதன் பின் இவ்வுலகின் செல்வாக்கு அவ்வுயிரில் இல்லாது போகிறது என்பதே உண்மை. இதனாலேயே சட்டமும் சமயமும் வலிந்து ஏற்படுத்தப்படும் மரணங்களை குற்றம் என்கிறது.

ஆமாம் இதெல்லாம் இருக்கட்டும், இன்று உலகெங்கும் தங்களை வெடிக்க வைத்துக்கொள்ளும் தற்கொலை(டை)யாளிகள் வெடிக்க நினைக்கும் முதற்கணத்தில் வெடித்தபின்னான அடுத்த கணம் பற்றி என்ன நினைப்பார்கள்...??

MP3 பாடல்களை இலவசமாய் பதிவிறக்கிக்கொள்ள...

பெரும்பாலான எந்தக்காலத்து தமிழ் பாடல்கள் என்றாலும் http://www.cooltoad.com/ மூலமாக இலவசமாக இலகுவாக பதிவிறக்கிக்கொள்ள முடியும். முதலில் மேற்படி இணையதளத்தில் இலவசமாகப் பதிவு செய்து User name, Password என்பவற்றை பெற்றுக்கொள்ள வேண்டும். பின்னர் Music என்பதை தெரிவுசெய்து தேடலில் (Search) எமக்கு தேவையான பாடலின் முதல் வரி, அல்லது பாடல் இடம்பெற்ற படத்தின் பெயர், அல்லது இசையமைப்பாளர் பெயர் முதலியவற்றை கொடுப்பதன்மூலம் எமக்கு தேவையான பாடலை தேடிக்கொள்ளலாம். தமிழுக்கு ஆங்கிலத்தில் வேறு வேறான முறைகளில் எழுதமுடியுமாதலால் பாடல் கிடைக்கும் வரை வெவ்வேறு Spelling இல் முயற்சி செய்யலாம். உதாரணமாக தமிழா தமிழா.. எனத்தொடங்கும் பாடலிற்கு Thamila,Tamila, Thamizha என்றவாறாகத்தேடமுடியும். பராசக்தி முதல் தற்சமயம் வெளியாகும் பாடல்கள் வரை பெரும்பாலான பாடல்கள் கிடைக்கின்றன. இது தவிர ஹிந்தி, மலையாளம், தெலுங்கு ஆங்கிலம் முதலான மொழிப்பாடல்களும் கிடைக்கின்றன. கேட்கக்கிடைக்காத உங்களின் ஞாபகங்களில் நின்ற பாடல்கள் கிடைத்திட வாழ்த்துக்கள்!.