Monday, September 12, 2011

ஓடும் ரயிலில் ஓடும் மனங்கள்

(பேராதனை பல்கலைக்கழகத்தின் கீதம் இலக்கியப்போட்டி - 2000 இல் இரண்டாம் பரிசு பெற்றது)

பண்டிதருக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. அந்தப் பெட்டி அவரது மனைவி இன்னுமொரு பெண்பிள்ளையை தவிர மற்ற ஆசனங்கள் காலியாகவே இருந்தது. அங்காலை எங்கயும் பிரச்சனையோ தெரியேல்லை - பண்டிதர் மெதுவாக கவலைப்பட்டுக் கொண்டார். அவரது மனைவிக்கு லேசான தடிமன் வந்ததும் படுத்து விட்டாள்.

பண்டிதரின் பெயர் வீரசாமிப்பிள்ளை. பழுத்த தமிழறிஞர். திருமணமானதில் இருந்து வவுனியாவிலேயே இருக்கிறார். பத்து வருடங்களிற்கு முன்னம் பாடசாலை அதிபராக இருந்து ஓய்வு பெற்றவர். மூத்த மகன் அவுஸ்திரலியாவில் படித்து அமெரிக்காவில் தொழில் பார்க்கின்றான். மகள் கொழும்பில் குடும்பத்துடன் இருக்கிறாள். கடைக்குட்டி சிங்கப்பூரில் ஏதோ ஸ்கொலர்ஷிப் கிடைத்து படித்து இப்போது லீவில் வந்து நிற்கிறானாம். கொழும்பில் மகளிடமிருந்து தகவல் வந்தது. வவுனியா வந்தா பாஸ் கெடுபிடியாம் அதனால் கொழும்புக்கு வரச்சொல்லி கட்டளையோ வேண்டுகோளோ என்ன என்று தெரியவில்லை. ஆனாலும் புத்திர வாஞ்சையால் பண்டிதரும் மனைவியும் கொழும்பு பிரயாணப்படும் முகமாக ரயிலேறி இருக்கிறார்கள்.

எதிர் ஆசனத்தில் இருந்த பெண் யன்னலூடாக தோழிகளாகத்தான் இருக்க வேண்டும் - அவர்களுடன் கதைத்துக்கொண்டிருந்தாள். ரயில் புறப்பட இரண்டு நிமிடம் இருந்தது. பண்டிதர் எதிர்புறத்தில் இருந்த பெண்ணை எடை போட்டார். தலையை நாகரீகமாக இழுத்து முன்பகுதியில் சிறிது விட்டு பின் பக்கம் கூந்தலை கிளிப்செய்திருந்தாள். கணுக்காலளவு வருமாறு கொழும்பு பிளானில் பாவாடை அணிந்து ஏற்றாற்போல் சட்டையும் அணிந்திருந்தாள். நெற்றியில் பொட்டில்லை. காதில் தங்கமா, பிளாஸ்ரிக்கா என்று அடையாளம் தெரியாத மாதிரி சிக்கனமாக தோடு, கழுத்தில் மெல்லிய செயின், கையில் ஒரு சோடி காப்பு என்று மிகவும் சிக்கனமாக ஒப்பனையோடு அழகாகத் தெரிந்தாள். கூடியளவில் தங்க நகைகளைத் தவிர்த்திருப்பது புரிந்தது. கள்ளர் பயமும் தானே. காலில் நாகரிகமான பின்னல் செருப்பணிந்து மொத்தத்தில் பண்பான நாகரிகமானவளாகவே தெரிந்ததில் பண்டிதர் நிம்மதிப் பெருமூச்சு விட்டார். இப்பவெல்லாம் கள்ளர் என்னென்னவோ பிரயாணங்களில் அவதானமாகவே இருப்பார்.

எதிர் ஆசனப் பெண் கையசைத்து கதைத்தவர்களிற்கு விடை கொடுத்தாள். பண்டிதரிற்கு பொதுவாக நெற்றியில் பொட்டில்லாத பெண்களைப் பிடிக்காது. இவளும் வைக்கேல்லை. சிங்களத்தியோ தெரியாது என்று நினைத்துக்கொண்டார். வயது இருபத்தியஞ்சு அப்படித்தான் இருக்கும். கலியாணம் ஆனதற்கான அறிகுறியும் இல்லை. இப்பவெல்லாம் சீதனக் கஷ்டமான எத்தனை பிள்ளைகள் இப்பிடி நிக்குதுகள். என்ரை பெடியளுக்கு அவ்வளவாய் சீதனம் வாங்கக்கூடாது. பண்டிதர் சிந்தனையில் ஆழ்ந்தார். அருகில் மனைவி தூங்கிவிட்டிருந்தாள். அவளிற்கு தடிமன் வேறு.

விசில் சத்தத்துடன் ரயில் புறப்படவும் பண்டிதர் சிந்தனை கலைந்தார். திடுமென ஒரு இளைஞன் பெட்டியினுள் பிரவேசித்தான். பார்க்க மிகவும் நாகரிகமாகத் தெரிந்தான். ஆனாலும் பண்டிதரிற்கு அவன் செய்தது நாகரிகமாகப் படவில்லை. வந்தவுடன் அவ்வளவு ஆசனம் காலியாக இருந்தும் நேராக வந்து பண்டிதரின் எதிர் இருக்கையில் அப்பெண்ணிற்கு அருகில் அமர்ந்து கொண்டான். இவன் அமர்ந்ததும் அந்தப் பெண் யன்னலோரமாக ஒதுங்கிக்கொண்டாள். இடையில் தனது கைப்பையை வைத்தாள். வந்த இளைஞன் தான் கொண்டுவந்த பிரயாணப்பைகளை சீற்றுக்கு அடியில் தள்ளுவதில் ஈடுபட்டான்.

எதிர் இருக்கைப் பெண்ணின் செயல் பண்டிதரிற்கு திருப்தியாக இருந்தது. ஆதரவாக புன்னகை புரிந்தார். அவளும் சிரித்தாளோ இல்லையோ என்று ஐயப்படும் படியாக சிரித்தாள். தனியவோ வந்தனீங்கள் - பண்டிதர் தமிழிலேயே கேட்டார். "ஓம்" அநதப் பெண் சற்றுத் சத்தமாகவே சொன்ன மாதிரி இருந்தது பண்டிதரிற்கு. இளைஞன் ஒருமுறை இவர்களைத் திரும்பிப் பார்த்துவிட்டு அவர்களுடன் கலந்து கொள்ளாதவன் போல் வெளியில் வேடிக்கை பார்க்க முயன்றான். "கொழும்புக்குத் தானே போறீங்கள்" - பண்டிதர் தொடர்ந்தார். "ஓம் அங்கதான் பாங்ல வேக் பண்றன்" - சட்டெனச் சொல்லிவிட்டு யன்னலினூடாக வெளியில் பார்க்கத் தொடங்கினாள். பண்டிதரிற்கு சினம் வந்தது. அவரை இப்படி ஒருவரும் அலட்சியப்படுத்தியது இல்லை. எந்த பாங்க்.. என்று கேட்க விரும்பியவர் அவசரமாக அந்த யோசனையைக் கைவிட்டார். தமிழில் பேசியதிலிருந்து அவளும் தமிழ் தான் என்று தெரிந்தது. ஆனால் இவன் சிங்களவன் போல என்று பண்டிதர் ஊகித்தார். அவர்களது தமிழ் பேச்சு அவனிற்குப் புரிந்தது மாதிரிக் காட்டிக்கொள்ளவில்லை. தவிர தலையையும் சிங்கள பாணியில் மொட்டையாக வெட்டி இருந்தான். முகத்தில் எப்போதும் ஒரு புன்னகையோ மென்னகையோ எதுவோ ஒன்று தவழ்ந்து கொண்டிருக்க உணர்ச்சியேதும் வெளிக்காட்டாமல் 'கம்' என்று அமர்ந்திருந்தான். அதிலும் ஒரு கம்பீரம் இருப்பதாகப்பட்டது. ஆனாலும் நம்பேலாது. அந்தப் பெண்ணுக்குப் பக்கத்தில் வந்திருந்தது பண்டிதரிற்கு எச்சரிக்கை உணர்வையே ஊட்டியது. பாக்குக்குள் (Bag) பதத்தாயிரம் வேறு இருக்கிறது. பண்டிதர் தனது பித்தளைக் கைப்பிடிபோட்ட கைத்தடியை எடுத்து அருகில் வைத்துக்கொண்டார். அவர் ஒன்றும் தடியூன்றி நடப்பவரல்ல என்றாலும் ஒரு கம்பீரம் சக துணைக்காக அதனை வைத்திருக்கிறார்.

பண்டிதருக்கு ஏமாற்றமாக இருந்தது. ரயில் மதவாச்சியில் நின்று போனபோதும் யாரும் அந்தப் பெட்டியில் ஏறவில்லை. பண்டிதரிற்கு யாராவது துணைக்கு வந்தால் இன்னும் பாதுகாப்பாக இருக்கும் என்று தோன்றியது. எதிர் ஆசனப் பெண் தமிழ் பேசுகிறாள். ஆனால் அதையும் தமிங்கிலீஷ் ஆகவே பேசுகிறாள். அதாவது ஆங்கிலம் கலந்து. அவள் தமிழ் தான் என்பதற்கு அவளிடம் எந்த அடையாளமும் இல்லை. பண்டிதரிற்கு லீலா கலண்டர் ஒற்றை ஒன்றை கிழிக்கும் போது பார்த்த "நரைபெயர்வதேன்" என்ற இலக்குவனாரின் கவிதை தான் ஞாபகத்திற்கு வந்தது.

யாண்டு பல இன்றியும் நரையுளவாகுதல்
யாங்காகிய தென வினவுவராயின்
ஆண்டநம் மக்கள் அடிமைகளாயினர்
பூண்டநம் பண்பு போலியதாகின்ற
நற்றமிழ் மறந்தனர் நானிலமதனில்
பிறமொழி பற்றிற் பெரியோராகினர்
தமிழகத் தெருவில்தமிழ்தான் இல்லை
ஊரும் பேரும் உயர் மொழி வழக்கும்
அயல்மொழி தன்னில் அமைந்திடக் கண்டோம்
தமிழைக்கற்றோர் தாழ்நிலையுறுவதால்
தமிழைப் பயில தமிழரே வந்திலர்
ஆட்சி மொழியாம் அன்னை மொழியினைச்
செல்லெனவாக்கினர் தூத்தமிழ் வெறுக்கும்
அயல்மொழிக் காதலர் ஆட்சி கொண்டுளர்
மக்கள் கருமயிர் நரையாதிருக்குமா?

…………………இவளுக்கு இன்னும் நரைக்கயில்லை பண்டிதர் சிரித்துக்கொண்டார்.


ரயிலின் ஆவர்த்தன இசையைத் தவிர அந்தப்பெட்டி நிசப்பதமாகவே இருந்தது. அந்த சூழ்நிலையை அந்த இளைஞன் தான் முதலில் கலைத்தான். அந்தப் பெண் இடையில் வைத்திருந்த கைப்பையையும் நெருக்கிக்கொண்டு அமர்ந்து அவளை நோக்கி ஏதோ சொன்னான். பண்டிதரிற்கு விளங்கவில்லை. அந்தப் பெண் வெடுக்.. என்று திரும்பி முகத்தைக் கடுப்பாக்கி மீண்டும் வெளியில் பார்த்தாள். பெடியனைப் பார்த்தால் படித்தவன் மாதிரித் தெரியுது. ஆனால் சுயரூபத்தைக் காட்டவெளிக்கிட்டுட்டான். பண்டிதர் அலேட் ஆனார். அந்த இளைஞன் முகத்தில் எந்த உணர்ச்சியும் இல்லாது புன்னகையோடு இருந்தான்.அயோக்கிய ராஸ்கல் ஒரு பிள்ளை தனிய வருகுதெண்டால் காணும் தடிப்பயல் மனதிற்குள் திட்டிக்கொண்டார். குரலை கொஞ்சம் செருமிக் கொண்டு "நீங்கள் இஞ்சாலை வாங்கோவன் நான் அதிலை இருக்கிறன் தம்பி கொஞ்சம் தகராறு பண்ணிறார் போல" - பண்டிதர் ஆதரவாக பேசினார். "தாங்ஸ்.... பரவாயில்லை" என்றுவிட்டு மீண்டும் வெளியில் பார்த்தாள்.

பண்டிதரிற்கு சினம் தாள முடியவில்லை. "இந்த பெடிச்சிக்கு எத்தனை திமிர் இருந்தால் இப்பிடி சொல்லுவாள். நான் பாவம் பெட்டை என்று சே... நல்லா பட்டுத் தெளியட்டும்" - பண்டிதர் வெறுத்துக்கொண்டார். அருகில் மனைவி அமைதியாக உறங்கியது அவர் சினத்தை மேலும் அதிகமாக்கியது. வெற்றிலை சப்பி தன்னை நிதானத்திற்குள் கொண்டுவர முயன்றார்.

அந்த இளைஞன் கொஞ்ச நேரம் கழித்து "நேரம் என்ன" என்று அவளிடம் ஆங்கிலத்தில் கேட்டான். அவள் அலட்சியமாக மணிக்கூடு இருந்த கையையும் மறுபக்கம் கொண்டுபோய் வெளியில் பார்த்துக்கொண்டு இருந்தாள். "இந்த ராஸ்கோலிற்கு என்னட்டையும் ஒரு சிற்றிசன் வோச் இருக்கிறது தெரியேல்லையோ.............. ராஸ்கல் தானும் ஒரு மணிக்கூடு கட்டிக்கொண்டு அவளைப்போய்க் கேட்கிறான். கழிசடை இவனிற்கும் வேணும் அவளிற்கும் வேணும் " - பண்டிதர் திட்டித் தீர்த்தார்.

அவன் அதே புன்னகையுடன் அவள் மணிக்கூடு கட்டியிருந்த கையை இழுத்து பலவந்தமாக நேரம் பார்த்தான். அவள் கையை இழுத்துக்கொண்டு அவனை முறைத்துப் பார்த்துவிட்டு இன்னும் ஓரமாக ஒதுங்கி வெளியில் பார்க்கத் தொடங்கினாள். பண்டிதர் திடுக்கிட்டுப் போனார். 'இந்த தடியனிற்கு நான் இருக்கிறது தெரியேல்லையோ தடிக்கழுதை தன்னை இந்தக் கிழவன் என்ன செய்யேலும் என்ற திமிர் தானே கள்ள நாய்ப்பயல்" - பண்டிதர் மனதில் திட்டியதை கண்களில் தேக்கி அவனை உக்கிரமாக முறைத்துப் பார்த்தான். அவன் அதற்கும் அதே புன்னகையுடன் இருந்தது பண்டிதரின் பிரஷரை இன்னும் ஏற்றியது.

அவள் என்னதான் திமிர் பிடித்த பெட்டையென்றாலும் இவனை இப்பிடியே விடக்கூடாது. இனி என்னவும் செய்யட்டும். இந்த வீரசாமி யார் என்று தெரியும் ராஸ்கோல் - பண்டிதர் கறுவிக் கொண்டார்.

அவன் கொஞ்ச நேரத்தில் இருவருக்குமிடையில் இருந்த கைப்பையை எடுத்து அதனை திறக்க முற்பட்டான். அவள் சட்டென:று திரும்பி அதை இழுக்க இவன் இன்னும் இழுக்க - பண்டிதரிற்கு பொறுமை மீறியது.
டேய் எளிய ராஸ்கோல் என்று கத்திக்கொண்டு கைத்தடியுடன் பாய்ந்தார். ஓ.... நோ என்று கத்திக்கொண்டே அந்தப் பெண் மிக விரைவாக பண்டிதரை தடுத்திராவிட்டால் அவனிற்கு மண்டை உடைந்திருக்கும். அவளிற்கு அதிர்ச்சியில் மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கியது. பண்டிதர் விக்கித்துப்போய் நின்றார்.
சத்தங்கேட்டு பண்டிதரின் மனைவியும் எழும்பி மலங்க மலங்க விழித்தபடி என்னப்பா என்ன கள்ளனே என்று கத்த தொடங்க பண்டிதர் அவளைப் பார்வையால் அடக்கிவிட்டு அந்தப் பெண்ணை சினத்துடன் பார்த்தாள். அவளே சொன்னாள் "சொறி சேர் இவர் என்ர ஹஸ்பண்ட் தான் இவரும் தமிழ் தான். அவசரமாக ஹான்ட் பாக்கினுள் இருந்த தாலிக்கொடியுடன் கல்யாணப் போட்டோவும் காட்டினாள். பொட்டு வைத்து கொடி போட்டால் தமிழர் என்று தெரியும். வீணான செக்கிங்குகள் தவிர கள்ளர் பயமும். அதுதான் இப்பிடியே இருந்தால் வசதி தானே. மற்றது அவரிற்கும் எனக்கும் ஒரு ஆர்கியூமென்டால சின்ன சண்டை அதுதான் அப்பிடி..." அவள் நாணிக் கோண..; அவள் சொன்னதைக் கேட்டு பண்டிதர் வாய்பிளந்து நிற்க..; அந்த இளைஞன் அதே புன்னகையுடன் இருக்க..; பண்டிதரின் மனைவி ஒன்றும் புரியாது விழித்தாள்.