Thursday, August 11, 2011

சிகை

இந்த சிகை அலங்கரிப்பு என்கிறது உங்களுக்கு எப்படியோ தெரியாது. ஆனால் எனக்கு அது ஒரு இன்பமான அனுபவம். அதற்கேற்றமாதிரியே தலை மயிரும் மசமசவென்று வளர்ந்து விடும். எனவே மாதத்திற்கு ஒரு முறையாவது எனக்கு இந்த அனுபவம் கிட்டும். பாபரின் கையிலுள்ள சீப்பு தலையில் மேயும் போதும் கத்தரிக்கோல் இதமாக சிகைக்குள் ஊடுருவும் போதும் கிறக்கமாக இருக்கும்.

சின்னப்பிள்ளையாக இருக்கும் போதெல்லாம் வீட்டிற்கு பாபர் வருவார். வீட்டிற்குப் பின் நிற்கும் கொய்யா மரநிழல் தான் தற்காலிக சலூனாகும். காலையில் நடக்கிற ஏற்பாடுகளே வீட்டிற்கு பாபர் வரபோவதை பறைசாற்றும். சிகைக்காய் ஊறப்போடுவதிலிருந்து பனங்குடலைக்குள் ஆட்டிறைச்சி வருவது வரை ஒரு முதலாந்தர முழுக்கு இண்டைக்கு இருக்கு என்பதை ஞாபகப்படுத்தும்.

அநேகமாக குடும்பத்தில் வரிசைக் கிரமத்தில் நான்தான் முதலாவது ஆளாய் கொய்யாமரத்தின் கீழ் பலகையில் இருக்க வேண்டும். பாபர் தனது பையிலிருந்து எடுத்து பரப்பும் சாதனங்களையே ஒரு பயம் கலந்த த்ரிலுடன் பார்த்துக் கொண்டிருப்பேன். ஆச்சி இடைக்கிடை வந்து மேற்பார்வை வேறு. மணியம் "சின்னவனுக்கு நல்ல பொலிஸ் குறப் அடிச்சு விடப்பா". எனக்கு அதில் உடன்பாடு இல்லாவிட்டாலும் பிற்பாடு சில சுவாரஸ்யமான தருணங்களுக்காக உடன்படுவேன். அவசரப்படாதேங்கோ.... அந்த தருணங்களைப் பிறகு சொல்கிறேன்.

ஆரம்பத்தில் தண்ணீர் எல்லாம் தலைக்குப் போட வேண்டியதில்லை. நல்லெண்ணையையே பானையைக் கவிழ்த்து ஊற்றிவிட்ட மாதிரி முகம் முழுக்க வழியிற மாதிரி ஆச்சி அப்பி விடுவா. முதலில் உச்சி பிரித்து நாடியில் பிடித்து தலை நிமிர்த்தி அப்பிடியும் இப்பிடியும் பார்த்துவிட்டு பாபர் வேலையை தொடங்கினார் என்றால் நான் என்னை மறந்து போவேன். காதில் ஒலிக்கும் கீச் கீச் கத்தரிக்ககோல் சத்தமும் சீப்பு கேசத்தை அடிக்கடி வருடும் போதும் ஆஹா என்ன ஒரு அனுபவம்!

வெட்டி முடிய முடி ஒதுக்கும் கத்தி பாவிப்பார் பாபர். எனக்கு அது ஒரு த்ரிலிங். இதற்கிடையில் ஆச்சியும், அம்மாவும் இடைக்கிடை விஜயம் செய்து உபரியாக ஏதாவது அழகு உபாயங்கள் உதிர்த்துவிட்டு போவார்கள். நான் ஒரு ஞான + பரவச நிலையில் அமர்ந்திருப்பேன். அவ்வப்போது தம்பி குனியப்பா - ஆ... இந்தப் பக்கம் என்று மணியத்தாரிடமிருந்து அறிவிப்புக்கள் வரும் போது இயந்திர தனமாக இயங்குவேன். முடி ஒதுக்கும் கத்தியால் காதை மடித்துக்கொண்டு மெதுவாக உரசி உரசி அப்பிடியே பிடரி வரை கொண்டுவந்து ங்ய்ய்...... என்று அப்பிடியே ஒரு லாவகமான இழுவை.... அந்த அதிர்வு அப்படியே கால்வரை சுண்டியிழுத்து புல்லரித்து ஒரு மெய்சிலிர்த்த நிலை அடைவேன். சில வேளைகளில் ஆச்சியிடம் முதலே சொல்லி அப்படி இரண்டு மூன்று தரம் இழுக்க வைத்திருக்கிறேன்.

இறுதியாக பிடரியில் பவுடர் பஞ்சால் ஒத்தி மணியத்தார் அப்பிடியும் இப்பிடியும் பார்த்து துண்டால் ஒரு உதறு உதறி முதுகில் ஒரு தட்டு தட்டினார் என்றால் ஓ.கே ஆட்டம் முடிவடைந்தது என்று அர்த்தம்.

தலையில் சடை குறைந்து பொலிஸ் குறப்பில் காற்று கொஞ்சமும் தயக்கம் இல்லாமல் நுழைந்து மண்டையில் படும்போது லக்ஸ் விளம்பர நங்கை மாதிரி ஒரு புத்துணர்ச்சி ஏற்படும்.

அதன் பின்னர் நான் ஆறாம் வகுப்பு அப்படி படிக்கும் போது வீட்டில் சிகை அலங்கரிக்கும் நிலை மாறி சலூனிற்கு போக வேண்டிய நிலை வந்தது. அடிப்படை விஷயந்தான் மாறாவிட்டாலும் உயரமான கதிரையும், பெரிய கண்ணாடியில் முடி கபளீகரம் செய்யப்படுவதை நேரடியாக தரிசிப்பதும், ஸ்பிறேயரில் தண்ணி அடிப்பதும் என்னதான் எண்ணெய் வைச்சாலும் தண்ணியை தலையில் ஒரு தடவை அடிச்சே தீருவார்கள். கண்ணாடிக்கு பக்கத்தில் கட்டண விபரங்கள் சுத்திவர ரஜனி, சிவாஜி, ரேவதி, சிலுக்கு படங்கள். மூலையில் சாமிப்படங்கள். முன்னால் சிணுங்கிக் கொண்டிருக்கும் விளக்கு என்பவை மேலதிகமாகச் சேர்க்கப்பட வேண்டிய விசயங்கள்.

என்ன தான் ஆறாம் வகுப்பு என்றாலும் கதிரை கைப்பிடிச் சட்டத்தில் பலகை வைத்து இன்னும் உயரமாக ஏறி இருப்பது கொஞ்சம் வெட்கமாகத் தான் இருக்கும் என்றாலும் சுகானுபவத்திற்காக பொறுத்துக்கொள்வேன். இப்பவும் அடிப்படை அலங்கரிப்பு அப்பா பின்னால் இருந்து கொண்டே சொல்லும் பொலிஸ் குறப் தான். இவனுக்கு கெதியா வளர்ந்திடும். பள்ளிக்கூடத்திலும் கொலரில் முடி படக்கூடாதாம் - உபரி விளக்கம் வேறு. - என்றாலும் நான் சகித்க் கொள்வேன் - பிற்பாடு அந்த தருணங்களிற்காக - . இப்ப சலூன் அலுவல் முடிஞ்சு வீட்டிற்குப் போனால் நேரே ஹோலுக்குப் போக முடியாது சுத்திக் கொண்டு பின் பக்கமாக கிணற்றடிப் பக்கம் போனால் அங்கு விமர்சனப் பட்டாளமே இருக்கும். அம்மா, ஆச்சி, சகோதரிகள். எல்லோரும் ஆராய்ச்சி செய்து ஆளாளுக்கு தலையை தடவி காதுப்பக்கம் இன்னும் வெட்டியிருக்கலாம். இதென்ன இந்தப் பக்கம் இப்பிடி இருக்கு. அங்கால கூடியிருக்கு - எல்லா விமர்சனங்களையும் கடந்து ஆச்சி ஜட்ஜ்மெண்ட் செய்து எல்லாரையும் அடக்கி சரி போய் முழுகு என்றால் சரி. இல்லாவிட்டால் திரும்பி சலூனுக்கு போக வேண்டியது தான். இஞ்ச கொஞ்சம் இப்பிடி வெட்டட்டுமாம். பொலிஸ் குறப்பில் நின்று கொண்டு இப்படி மைனூட்டான அலங்கரிப்புக்கள் சொல்லும் போது பயங்கர வெட்கமாக இருக்கும்.

முழுகி விட்டு மத்தியானம் நல்ல பிடி பிடித்து விட்டு ஒரு நித்திரை கொண்டு பின்னேரம் மெதுவா எழும்பும்போது தான் அந்த 'தருணம்' தொடங்கும். அதான் முன்னம் சொன்னனே அந்த தருணம் தான். பின்னேரங்களில் தான் பக்கத்து வீட்டு தாரா - அது தான் தாரங்கி - இது சுருக்கமாக தாரா. வரும்போதே இஞ்ச பாரேன் ஆளை மொட்டை பாப்பா என்று தலையை வாஞ்சையாக தடவி பிடரிமயிரில் கையால் தடவி 'ஐயோ கூசுது' என்று சொல்லும் போது நான் பிறவிப் பயன் எல்லாவற்றையும் அடைந்து விடுவேன்.

அதாவது நான் முன்பு குறிப்பிட்ட குழந்தைப் பருவத்திலிருந்து இது தொடர்ந்து வந்ததால் இருபது வயதிலும் நான் கட்டாயமாக பொலிஸ் குறப் வைத்துக் கொண்டு வேண்டுமேன்று பிடரியில் ஒரு சென்ரிமீற்றர் விட்டு வெட்டிக்கொண்டு அடிக்கடி பிடரியைக் காட்டிக் கொண்டு தாராவுக்கு முன்பு நிற்கும் போது இந்த மொட்டையைப் பாருங்கோவன் என்று குமாரி தாரா விரலால் பிடரியில் தடவும் போதும் இது விரசமாக படவில்லை. இந்த நேரத்தில் குமாரி தாராவை நான் வர்ணிக்கவில்லை எனின் அது நான் தமி்ழ் எழுத்துலகத்திற்கு செய்த பெரிய துரோகமாயிடும். ஆனாலும் நான் கொஞ்சம் பாஸ்ட் ஜெனரேசன். அதாலை நான்கு வரியில் எங்கேயோ கேட்ட கவிதை வரிகளை அப்படியே தாராவுக்கு அப்ளை பண்ணுகிறேன்.

நான்காம் பிறை பார்த்தால்
நாய் படாப் பாடென்பார்
நானோ - முழு நிலவைப் பார்த்துவிட்டு
அனுதினமும் அலைகின்றேன்.

இப்பிடியாக தொடங்கி தாரா கடைசியில் என்னை சொந்தமாகவே கவிதை எழுத வைத்து விட்டாள். அதற்கு கரு அவள் என்னைப் பார்த்தவுடன் சொல்லும் 'ஹாய்' தான். அதில் பிறந்தது தான் இந்தக் கவிதை அல்லது கவிதை மாதிரி்.

ஆம்ஸ்ரோங் நிலவு செல்ல
அப்பலோ தேவையானது
ஆனால் - எனக்கோ
அவளின் ஒரு 'ஹாய்' மட்டும் -

உங்களுக்கு பிடிச்சிருக்கோ தெரியாது . ஆனால் எனக்கு பிடிக்க வேண்டிய ஆளுக்கு பிடிச்சிருந்ததில் நான் வெற்றிப் பெருமகனானேன்.

இந்த நேரத்தில் தான் நான் வேலை கிடைத்து A9 ஆல் தலைநகரம் செல்ல வேண்டி இருந்தது. அங்கும் போய் ஒரு சலூனில் சிகை அலங்கரிப்பு செய்வோம் என்றால் அங்கு அடிப்படையையே மாற்றியிருந்தார்கள். அங்கு குசன் வீல் கதிரைகள் .சமாந்தர கண்ணாடிகள், சுவரில் தனுஷ், திரிசா, மும்தாஜ், சகிலா என்று படங்கள் மூலையில் சுவாமி படம் கலர் கலராய் பல்ப் ஒளிர்ந்து கொண்டிருந்தது. கத்தரிக்கோலுக்கு பதில் மின்சார வெட்டும் சாதனம் (Electronic Hair Dressing Machine) டெனிம், புறோஸ்போட் லோசன்கள் இன்னும் எத்தனையோ. யாரோ தனக்கு முன்னால் தான் பிளேட் மாத்தோணும் என்று அடம்பிடித்துக் கொண்டிருந்தார்கள். எய்ட்ஸ் பயம். பவ்யமாக வெல்வெட் வெள்ளை சால்வை போத்தி அண்ணை எப்படி வெட்டுவம் நான் வழக்கம் போலவே நல்ல ஷோட்டா வெட்டுங்கோ என்றுவிட்டு இது வேண்டாம் கத்தரிக்கோலாலேயே வெட்டுங்கோ என்றேன். சலூன் காரன் நான் ஏதோ சபையில் செய்யக்கூடாததை செய்து விட்டவன் மாதிரி பார்த்தான். எனக்கு கத்தரிக்கோலால் வெட்டத் தெரியாது. இது தான் நல்லாயிருக்கும். இருங்கோ என்றுவிட்டு வேலையை தொடங்கினார். இரண்டு நிமிஷம் கொஞ்சம் வெக்கை காத்து அடிச்சது சட்டென்று போர்வை உதறி தட்டி சரி என்ற போது நான் திடுக்கிட்டுவிட்டேன். என்ன சரியோ என்று கண்ணாடியில் பார்த்தபோது அன்னியன் ஒருவன் கண்ணாடியில் தெரிந்தான். பின் இது வே வழக்கமாகி விட்டது.

இடையில் ஊருக்கு வந்த போது பாட்டி ஒப்பாரி வைத்தாள். எடேய்.. எப்படி இருந்த தலையடா இப்படி குரங்கு மாதிரி வந்து நிற்கிறியே. வளந்திடும் ஆச்சி வளந்திடும் - நான் ஆச்சியை சமாதானப்படுத்தினேன். ஆச்சிக்கு வயதேற ஏறத்தான் பிடிவாதமும். ஒரேயடியாய் பிடித்துக்கொண்டாள். உப்பிடியே வளர்ந்தால் சரியாய் வளராது. அடி - மொட்டையை - நான் அதிர்ந்து போனேன். - சே - தாரா என்ன நினைப்பாள். ஆனாலும் ஆச்சியின் பிடிவாதம் வென்று மொட்டையடித்து முழுகி பின்னேரம் சந்தனம் பூசி நின்ற போது - தாரா வந்தாள். எனக்கு உண்மையா கண் கலங்கீட்டுது. தாரா அழுதே விட்டாள். இது என்ன மொட்டை போட்டுக்கொண்டு செல்லமாக தலையை தடவ கையில் சந்தனம் - அழாதையடி பெட்டை கலியாணத்துக்கு முன்னம் அவனுக்கு தலைமயிர் வளர்ந்திடும் என்று தாராவின் கன்னத்தில் செல்லமாக கிள்ளினாள் ஆச்சி. எனக்கு இன்ப அதிர்ச்சி - அட இந்த கிழவியளுக்குத் தான் எவ்வளவு ஞானம் - நானும் தாராவும் கனகாலத்திற்கு பிறகு வெட்கப்பட்டோம்.

2 comments:

கார்த்தி கேயனி said...

உங்களுடைய கட்டிங் நினைவுகள் சூப்பர்

ஆ.கோகுலன் said...

நன்றி கார்த்திகேயனி..