Sunday, March 23, 2008

திருகோணமலை நினைவுகள்..

கடலுக்குள் நீட்டிக்கொண்டிருக்கும் ஒரு வித்தியாசமான நிலப்பரப்பே திருகோணமலை நகரம். இந்த இயற்கையான புவியியல் அமைப்பே உலகின் தலைசிறந்த இயற்கை துறைமுகத்தையும் அளித்தது. அத்துடன் வீதியில் எங்கிருந்தும் இரு அந்தத்திலும் கடலைப்பார்க்க கூடியதான நேரிய கடல்முக வீதியையும் (Sea view road) அமைக்க உதவியது.



  • கோணேசர் ஆலயம் - அதுவரை பாடப்புத்தகத்தில் மட்டுமே பார்த்த ஆலயத்தை நேரில் கண்டது மகிழ்ச்சியே. இயற்கையாக அமைந்த செங்குத்தான மலைநுனியில் அமைந்த சிறிய ஆலயம். உண்மையான கோயில் கடலுக்குள் இருக்கின்றதென்று சொன்னார்கள். கோயிலுக்கு அப்புறம் இருந்த செங்குத்தான மலைச்சரிவின் கீழேயிருந்த கடலில் மீனவர்கள் புறப்படமுன்பு வள்ளத்திலிருந்தவாறே பாறையில் கற்பூரம் கொளுத்தி வழிபட்டுச்செல்வார்கள். பிரடெரிக்கோட்டைக்குள் இராணுவப்பாதுகாப்புடன் கோணேசர் பாதுகாப்பாகவே இருக்கிறார்..!


  • கோணேசர் உலா - ஒருவித இயந்திரத்தனத்துடன் இயங்கிக்கொண்டிருக்கும் நகரம் கோணேசர் உலாவுடன் புத்துணர்ச்சி பெறும். வீதிகள் எல்லாம் அலங்கரிக்கப்பட்டு கோணேசர் இரவில் ஒவ்வொரு வீதியாக வலம்வருவது அழகான காட்சி. வீதிகளுடன் மக்களும் அலங்கரிக்கப்பட்டே காட்சிதருவர். இக்கால வேளைகளில் நடந்தே திருமலை நகரத்தை ஒரு சுற்றுச் சுற்ற முடிந்தது.


  • தீர்த்தம் - கோணேசர் ஆலயத்தீர்த்தத்தின் பெயர் 'பாபநாசம்' என்று படித்திருக்கிறேன். சரி பாவங்களை நாசமாக்கிக்கொள்வோம் என தீர்த்தத்திற்கு போனபோது, கோட்டைக்குள் இருந்த ஒரு கூடைப்பந்தாட்டத்திடலில் நூற்றுக்கணக்கானவர்கள் குழுமியிருக்க கடற்படையின் தீயணைப்பு படைவீரர் ஒருவர் தண்ணீரை தீயணைக்கும் குழாய் மூலம் எல்லோர் மீதும் விசிறியடித்தார். திடீரென அடித்த சாரல் த்ரில் ஆக இருந்தாலும் பின்னர் தான் அறிந்து கொண்டேன் - பாபநாசம் என்பது ஒரு கிணறாம். அதில் கோணேசரிற்கு தீர்த்தம் ஆனதும் மக்கள் மீது நீரை விசிறுகிறார்களாம்.


  • தெப்பத்திருவிழா - கோணேசர் உற்சவத்தின் கடைசிநாள் நிகழ்வு என நினைக்கிறேன். மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட பெரிய தெப்பத்தில் கோணேசர் கடலுக்குள் வீற்றிருப்பார். இரவில்: இருளில்: கடலில் இறைவனைக்காண்பது வித்தியாசமான அனுபவம். தெப்பத்தில் அமைக்கப்பட்டிருந்த படிகளில் பக்தர்களின்! முண்டியடிப்பு இருந்ததனால் என்னுடன் வந்தவர்களுக்கு எனது வீரத்தைக்காட்ட படியில்லாத பக்கத்தால் சற்றே தம் பிடித்து பாய்ந்து ஏறவேண்டியிருந்தது!


  • திருகோணமலை நூலகம் - நகரசபையின் நூலகம். கடற்கரைக்கு முன்பாக கணிசமான நூல்களுடன் இரவல் வழங்கும் பகுதி அமைந்திருக்கிறது. ஓஷோவின் 'காமத்திலிருந்து கடவுள்' முதல் ராஜீவ் கொலை வரையான பலவகை நூல்களைக்கொண்டு காணப்படுகிறது. பிரஞ்சு எழுத்தாளர் 'மாப்பசான்' இன் மிக யதார்த்தமான எமுத்துக்களை வாசிக்கமுடிந்ததும் இந்நூலகத்தினாலேயே. 12' x 15' அடி அறைத்தனிமையையும் ஹர்த்தால் ஊரடங்கு நேரங்களிலான மகாத்தனிமையையும் போக்க உதவியது இந்த நூலகமே.


  • கடற்கரை - நகரத்தின் அகோர வெப்பத்திற்கு மாலையில் இதமளிக்கும் இடம். வழக்கமான நண்பர்கள் சந்திப்பின் பின் கடலில் கால் நனைய ஓரமாக சிறிதுதூரம் நடந்து வருவது இன்பமான அனுபவம். பெரும்பாலும் வெறிச்சென்று காணப்படும் கடற்கரை மாலை ஐந்து மணியின்பின் ஜே ஜே என்று சனக்கூட்டமாக காணப்படும்.


  • பட்டங்கள் - நகரத்தில் மின்குமிழ்களுடன் இரவில் பறக்கும் பட்டங்கள் வியப்பானவை. பட்டத்தின் வாலில் கூட மின்விளக்குகள் நீளத்திற்கு காணப்படும். ஆடலோட்ட மின்சாரத்தில் நூலுடனேயே வயரையும் இணைத்து ஏற்றுகிறார்கள். கடற்கரை காற்று இருப்பதால் பட்டமேற்றுவதில் சிரமமில்லை.


  • உவர்மலை - Orrs hill என அழைக்கப்படும் இவ்விடத்தின் மலைப்பாங்கான தரைத்தோற்றம் அலாதியானது. உவர்மலை மத்தியவீதியில் குடியிருப்பவர்களுக்கு சிரமமில்லை. மற்றவாகள் பாடுதான் பெரும்பாடு. வீட்டிலிருந்து புறப்படுவது இலகு. வரும்போது மலையேறித்தான் வரவேண்டும். எண்பதுகளின் இறுதிப்பகுதியில் கூட காடாக இருந்த இடமாம். பின்னர் மாகாண சபை வரவோடு குடியிருப்புப்பகுதி ஆகிவிட்டது.


  • உட்துறைமுகவீதி - இரவில் ஒருபக்கம் கடலுடனும் தூரத்து பிறிமா ஆலையின் மின் விளக்குகளுடனும் ஓர்ஸ் ஹில் விளக்குகளுடனும் ரம்மியமாக காட்சி தரும். அதிகாலை வேளையில் நண்பர்களுடன் கடற்காற்றுடன் உடற்பயிற்சிக்காக ஓடுவது இனிய அனுபவம். மதியவேளையில் கடல்அலை வீதியின் கொங்கிறீற் கட்டில் மோதி நடுவீதி வரை நீர்த்துளிகள் சிதறும்.


  • மாசிமகம் - 2004 இல் நடைபெற்ற மாசிமகத்திருவிழா மறக்க முடியாதது. திருகோணமலை பத்ரகாளியம்மனுடன் கோணேசரும் வருகைதந்து பத்தாம் நம்பர் கடற்கரையில் வீற்றிருக்க ஆயிரக்கணக்கானவர்கள் ஒரே நேரத்தில் கடலில் மூழ்கி எழுந்தது ஒரு மினி கும்பமேளா..! அவ்வாறான உற்சவம் பன்னிரண்டு வருடங்களிற்கு ஒருமுறைதான் வருமாம்.


  • கும்ப ஆட்டம் - இது நவராத்திரிக்காலங்களில் பரவலாக இடம்பெறும். திருகோணமலை நகரத்தையடுத்துள்ள அயற்கிராம கோயில்களில் இருந்து தலையில் அடுக்கான கும்பங்களுடன் மேளதாள தாரை தப்பட்டை முழங்க ஒவ்வொரு வீதியாக வலம்வருவார்கள். இவவர்களுடன் பெரும் கோஷ்டியே ஊர்வலமாக வந்து முக்கிய சந்திகளில் ஆட்டம் இடம்பெறும். இவர்கள் பெரும்பாலும் மாந்திரீகத்துடன் சம்பந்தமானவர்கள் என்றும் சொல்வார்கள். இதில் கும்ப மறிப்பு என்பதும் நிகழும். அதாவது கும்பத்துடன் வரும் ஒருவரை மாந்ரீக பலத்தால் தடுத்து நிறுத்துவது. வீதியில் எலுமிச்சம் பழம் குங்குமம் முதலான பூசைப்பொருட்களுடன் பெரும்தொனியில் கடகடென்று புரியாத மந்திரங்கள் எல்லாம் சொல்லி தேசிக்காயை நறுக்குவார்கள். பார்க்கும்போது கொஞ்சம் திகிலாக இருந்தாலும் நான் பார்த்த 'மறிப்புக்களில்' ஒருவேளை நான் பார்த்துக்கொணடிருந்ததாலோ என்னமோ எதுவுமே வெற்றியளிக்கவில்லை.


  • குட்டிக் குட்டி கோயில்கள் - திருமலை நகரத்தில் சந்து பொந்துகளிலெல்லாம் சின்னஞ்சின்னதாக கோயில்கள் இருக்கின்றன. பெரும்பாலும் இவை தனியாரின் கோவில்களாக இருக்கும். நவராத்திரிக்காலங்களிலேயே இக்கோயில்களில் விசேட பூசைகள் நடக்கும். இப்படியான கோயில்களின் நள்ளிரவுப்பூசைகளில் கலந்து கொள்வது ஒரு த்ரில் ஆன அனுபவம். பெரும்பாலும் கலையாடுவார்கள். மந்திரித்து உருவேற்றுவார்கள். குறிசொல்வார்கள். உருவேறியவர்கள் வினோதமான சத்தத்தில் கூக்குரல் இடுவார்கள். சூழல் பக்தியும் பயமும் கலந்த ஒன்றாக இருக்கும். இதெல்லாம் இருந்துமா இந்நாட்டில் இனப்பிரச்சனை ஒன்றிருக்கிறது..? பிரச்சனை ஆனவர்களையெல்லாம் இப்படி கட்டிப்போட்டாலே போதுமே என்று கொஞசம் அவநம்பிக்கையாகவே இருந்தது.


  • சல்லித்திருவிழா - 2004 இல் நடைபெற்ற சல்லித்திருவிழா 1995 .ல் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற மாபெரும் இடப்பெயர்வையே ஞாபகப்படுத்தியது. நிலாவெளி உப்புவெளி வீதி நிறைய்ய சனக்கூட்டம். வாகனங்கள் அங்குலம் அங்குலமாக நகரவேண்டியிருந்தது. சல்லியில் பிலாப்பழத்துடன் புட்டு பெருமளவில் விற்பனை செய்யப்பட்டது ஆச்சரியமாக இருந்தது. அழகான கிராமியச்சூழலில் ஆலயம். நல்லூரைப்போன்றே கடைகளும் ஏராளம். சல்லியை தொடர்ந்து வரும் பாலம்போட்ட ஆறு (பாலம்பட்டாறு) உற்சவமும் பிரபலமானதே. ஆனாலும் சல்லி போக்குவரத்து அனுபவத்தினால் அதை தவிர்த்திருந்தேன்.


  • வெந்நீரூற்று - இலங்கையிலுள்ள அதிசயங்களில் ஒன்று. ஆனால் ஒரு காட்டுப்புறமான இடமொன்றில் கொஞ்சம் ஒதுங்கியே இருக்கின்றது. ஏழு ஊற்றுக்களும் வெவ்வேறு வெப்பநிலைகளில் காணப்படுவது ஆச்சரியமானதே.


  • கந்தளாய் குளம் - இயற்கையான தரைத்தோற்றஅமைவைக்கொண்டு கட்டப்பட்ட அலைகள் தோன்றக்சகூடிய பெரிய்ய குளம். ஒருபக்க அணைக்கட்டின் மேலாகவே கொழும்பு வீதி செல்கிறது. அணைக்கட்டின் இப்புறம் பள்ளத்தில் கிராமங்கள் குட்டி குட்டியாக வயல்கள். அணைக்கட்டு உடைந்தால் இக்கிராமங்களிற்கு அது ஒரு சுனாமியே. எண்பதுகளில் அப்படி ஒரு அனர்த்தம் நடந்ததாக சொல்கிறார்கள். திருகோணமலை நகரின் குடிநீரின் பெரும்பகுதியை இக்குளமே பூர்த்தி செய்கிறது.


  • தம்பலகாமம் - இயற்கை எழிலுடனான கிராமம். தம்பலகாமம் என்ற பெயர் பலகையுடனான வீதியில் நேரே சென்றபோது இரயில் பாதையை அடுத்து கொஞ்சம் தூரத்தில் தயிர் சந்தைப்படுத்தும் இடமொன்றுள்ளது. இரவு இரயிலில் கொழும்புக்கான தயிர்சட்டிகள் பெரும்தொகையாக அனுப்பப்படும். இதையும்தாண்டி நேரே செல்லம்போது வருவதும் ஒரு கோணேசர் ஆலயம். கோபுரத்தில் இராட்சத தேன் கூடுகள் காணப்பட்டன. தனிமையான சூழலில் அழகான ஆலயம்.


  • சுனாமி.. - இயற்கை தான் எவ்வளவு பெரிய ஆள் என்பதை நிரூபித்தது. ஞாயிற்றுக்கிழமை தானே என்று கொஞ்சம் அசந்து தூங்கி கண்விழித்தபோது வெளியில் ஒரே அல்லோல கல்லோலம். வாகனங்கள் பறந்தன. மக்கள் ஓடிக்கொண்டிருந்தார்கள். பஸ்நிலையத்திற்குள் கடல்வந்து விட்டது என்றார்கள். எனக்கு பிரமிப்பாக இருந்தது. நீர் உடைத்துக்கொண்டு வருமளவிற்கு அணைக்கட்டு ஏதும் இருந்ததா என்ன? குழப்பத்துடன் உட்துறைமுக வீதிக்கு சென்றபோது வாயடைத்துப்போனேன். கடலைக்காணவில்லை. பிறிமா நிறுவனத்தின் பெரிய கப்பலொன்று தண்ணீரில்லாமல் சரிந்து படுத்திருந்தது. மீன்பிடி வள்ளங்கள் ஆங்காங்கே தரையில் காணப்பட்டன. பார்த்துக்கொண்டிருக்கும்போதே வெள்ளி விளிம்பு போல கடல்நீர் ஓடிவந்தது. சட்டென்று நிலமைபுரிந்தது. மயான வீதியூடாக ஓடியவர்களுடன் நானும் ஓடினேன். கணநேரத்தில் எமக்குப்பின்னால் மதில்களையெல்லாம் மோதிக்கொண்டு நீர். மாகாணதிட்டமிடல் அலுவலகத்தின் மதில் விழுந்துபோய் இருந்தது. நிலாவெளி வீதியில் வரிசையாக சற்று முன்னர் உயிருடன் இருந்தவர்களையெல்லாம் பிணங்களாக கிடத்தியிருந்தார்கள். வீதி நெடுகிலும் பிணங்கள். சுனாமியின் பின்னர் வெகுநாட்கள் வரையிலும் நகரக்கடற்கரையில் செருப்புகளும் அந்நியமான மரப்பாகங்களும் ஒதுங்கியவண்ணம் இருந்தது.


  • புத்தர் சிலை - திருகோணமலை நகரம் எப்படிப்பரபரப்பானதோ அதுபோலவே சிறுசம்பவம் என்றாலும் உடனே வெறிச் என்று அடங்கிவிடும். புத்தர் சிலை விவகாரத்தை அடுத்து தொடர் ஹர்த்தாலும் தொடர் ஊரடங்கும் என்போல தனிய இருப்பவர்களை கடுமையாக பாதித்தது. கடைகள் உணவுக்கடைகள் தொடர்ச்சியாக மூடப்பட்டதாலும் என்னிடமிருந்த பிஸ்கட் கையிருப்புகள் தீர்ந்து போனதாலும் வீட்டிற்கு செல்லவேண்டியிருந்தது. நண்பரொருவர் அதிகாலையில் மட்டும் கொழும்பிற்கு ஒரு பஸ் செல்வதாக சொன்னார். அடுத்த நாள் அதிகாலை நண்பருடன் சனசந்தடி இல்லாத வீதிகளால் நடந்து போய் மிகக்கொஞ்சம் பேரே இருந்த அந்த பஸ்ஸிலேறி ஹபறணையில் இறங்கி தம்புள்ள சென்று அங்கிருந்து வவுனியா சென்று புறப்படும் நிலையிலிருந்த ஓமந்தை பஸ்ஸை அடைந்தால் பஸ்ஸில் நிரம்பி வழிந்தார்கள் அடுத்த பஸ்ஸில் போகலாம் என நின்றபோது அதுதான் கடைசி பஸ் என்று ஒருவர் பீதியை கிளப்பிவிட ஏற்கனவே நிரம்பிவழிந்த பஸ்ஸில் மிதிபலகையில் ஒருகாலைமட்டுமே ஊன்றி தொங்கிக்கொண்டு அசோக்லேடனின் அலுமினியச்சட்டம் வலுவானதாக இருக்கவேண்டுமே என்று கவலைப்பட்டுக்கொண்டிருந்தபோது என்னைவிட மோசமான நிலையில் தொங்கிக்கொண்டிருந்த நண்பர் சொன்னார்.. - எவ்வளவோ குண்டுவீச்சிலும் ஷெல்வீச்சிலுமிருந்து காப்பாற்றிய உயிர் இப்போது கேவலம் இந்த அலுமினியச்சட்டத்தில் தங்கியிருக்கிறது என்றார். எனக்கென்றால் உயிர் இப்படியானதிலை எல்லாம் தங்கியிருப்பதில்லை என்று படுகிறது. என்னவென்றே தெரியாத ஒன்றுக்கு உயிர் என்று பெயரிட்டிருக்கிறோம் அவ்வளவே. நல்லவேளையாக இதைநான் நண்பரிடம் அப்போது சொல்லவில்லை. சொல்லியிருந்தால் நண்பர் இருந்த நிலையில் அப்போதே என்னை இழுத்து விழுத்தியிருப்பார்..!!

Sunday, March 9, 2008

தெரிந்தால் சொல்லுங்களேன்..

நடனத்தில் பலவகைகள் உண்டு. சாஸ்திரிய நடனம், கிராமிய நடனம், மேற்கத்தைய நடனம் போன்றவை அதில் சில. இந்த வகைகளிற்குள்ளும் பலவிதமான வடிவங்கள் உண்டு. உதாரணத்திற்கு பரதத்தையும் கதகளியையும் எடுத்துக்கொண்டால் ஒரே உணர்ச்சி வெளிப்பாட்டை அல்லது செய்தியை இரு நாட்டிய முறையிலும் வெளிப்படுத்தும் விதம் வேறுவேறானதாகும். நடனமூலமாகவே செய்திகள் தெரிவிக்கும் அளவிற்கு நடனவடிவங்கள் நுணுக்கம் வாய்ந்தவை. இவற்றை பரிச்சயம் வாய்ந்தவர்களுடன் இருந்தே இரசிக்க முடியும். சர்வதேச நடன அரங்குகளில் ஆடப்படும் பல்வேறு நாட்டையும் சோந்த ஆடல்வடிவங்கள் பலசமயங்களில் என்னைப்போன்றவர்களிற்கு புரியாதுவிட்டாலும் அதற்கான ஒத்திகைகளும் பின்னணிகளும் பணச்செலவுகளும் அந்த நடனங்களின் பெறுமதி குறித்தே மேற்கொள்ளப்படுகிறது என்பதை உணரமுடிகிறது.
அந்தவகையில் இந்த நடனமும் எனக்கு பிடித்துப்போனது. பொறுமையாக! பலமுறை பார்த்தபோதும் எதனால் பிடித்தது என்பதை உணரமுடியவில்லை. இந்நடனம் ஒரு செய்தியை சொல்ல முற்படுகிறது என்பதை உணரமுடிந்தாலும் அது என்ன என்பதை உணரமுடியவில்லை. பாடல் பரிச்சயமான இசைஞானியின் நல்ல பாடல்தான். ஆனால் அதன் மூலம் சொல்லவருவது என்ன..? இதில் பங்கேற்றோர் உண்மையில் குருடர்களா..? உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்களேன்...


Wednesday, March 5, 2008

தேவை

கொஞ்சம் திகைத்துத்தான் போனேன் அந்த எலியின் வேலையைக்கண்டு। சென்ற வாரம் சமையலறையில் எலியொன்றின் நடமாட்டத்திற்கான அறிகுறிகளைக்கண்டு எப்படி வந்திருக்கக்கூடும் எனத்தேடியதில் அலுமாரியின் பின்புறம் நிலத்தின்மட்டத்துடன் சுவரில் ஒரு ஓட்டை இருந்தது தெரிந்தது। முன்னர் குழாய் ஏதேனும் பொருத்துவதற்கான ஓட்டையாக இருக்கும் என்றெண்ணி அதை அடைத்து விட்டேன்। நேற்று குழாயை திறந்ததும் காலடியில் தண்ணீர் சளசளக்கவே, ஆராய்ந்ததில் பேசினையும் சாக்கடை குழாயையும் இணைக்கும் இறப்பர் குழாய் எலியால் சின்னாபின்னமாயிருந்தது। ஆச்சரியமாகத்தான் இருந்தது. ஏனெனில் மூன்று அங்குலம் விட்டமுடைய சாக்கடைக்குழாய் சமையலறையிலிருந்து வெளியில் பலமீற்றர் தூரம் நீண்டுபோய் நகரசபை வடிகாலை அடைகின்றது। உறையவைக்கும் இந்த குளிர்காலத்தில் (Winter) சாக்கடைக்குழாயின் மறுஅந்தத்தை கண்டுபிடித்து திரும்பவும் சமையலறைக்கு வரவேண்டிய அளவிற்கு அந்த எலியின் 'தேவை' அதற்குப்பிரதானமாயிருந்திருக்கிறது।


எலிமட்டுமல்ல பொதுவாக எந்த உயிரினமோ அல்லது எந்த இனமோ, அமைப்போ, நிறுவனமோ, கட்சியோ, நாடோ தனது தேவையை நிறைவேற்றிக்கொள்வதற்கு பின்னிற்பதில்லை. தேவையை நிறைவேற்றிக்கொள்வதற்காக எந்தப்பிரயத்தனம் செய்யவும் தயாராகவே இருக்கின்றன. ஏனெனில் அவர்களது அல்லது அவைகளது தேவை அப்படிப்பட்டது. தேவை ஒன்றை நிறைவேற்றிக்கொள்வதற்காகவே அவை இயங்குகின்றன. மயில் ஆடுவதும் காகம் கரைவதும் கூட அதனதன் தேவை கருதித்தான். சூரிய சந்திர இயக்கம்கூட தேவையின்பாற்பட்டதே.

இங்கிலாந்தில் கைத்தொழில் புரட்சியை அடுத்து தேவைகள் அதிகரித்ததன் காரணமாக பலவிதமான உபகரணங்களும் கனியங்களும் கண்டுபிடிக்கப்பட்டன. மூலப்பொருட்களை தொழிற்சாலைகளுக்கு கொண்டு செல்லவும் முடிவுப்பொருட்களை துறைமுகங்களுக்கு விரைவாகக்கொண்டு போய்ச்சேர்க்கவும் தண்டவாளங்களில் ஓடும் புகையிரதங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அதன் வேகம் குறித்தான தேவை இன்று புல்லட் இரயில் வரை கொண்டுவந்து விட்டிருக்கிறது. நாடுகாண் பயணங்களின் நிறைவில் நாடுகளிற்கிடையிலான விரைவான போக்குவரத்து மார்க்கம் ஒன்று தேவைப்பட்டது. பறவைகள் இலகுவாக இடத்துக்கிடம் செல்வதைப்பார்த்து விமானம் கண்டுபிடிக்கப்பட்டது.அதன் வேகம் குறித்தான தேவை இன்று மிகையொலி விமானம் வரை கொண்டுவந்து விட்டிருக்கிறது.



இரண்டாம் உலகப்போரின் பின் ஏற்பட்ட புதியஉலக ஒழுங்கின் தேவையின் நிமித்தம் ஐக்கியநாடுகள் சபை தாபிக்கப்பட்டது. ஐக்கியநாடுகள் சபையில் பலமிக்கநாடாக விளங்கவேண்டும் அல்லது காட்டவேண்டும் என்ற தேவையில் புதிய புதிய ஏவுகணைப் பரிசோதனைகளும் அணுகுண்டுப்பரிசோதனைகளும் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன.


அணுகுண்டுப்பெருக்கத்தினால் பூமியில் உள்ளவர்கள் அனைவரும் அழிந்துபோகச் சாத்தியம் உள்ளதனால் பிறகிரகங்களில் மனிதன் குடியேற சாத்தியம் உள்ளதா எனும் ஆராயும்தேவையில் தற்போது செவ்வாய்கிரகம் ஆராயப்பட்டுக்கொண்டிருக்கிறது. இதில் விண்கலங்களும் செய்மதிகளும் சம்பந்தப்பட்டிருப்பதால் அவற்றை விண்ணிலேயே தாக்கியழிப்பதற்கான தேவையும் தற்போது புதிதாக ஏற்பட்டிருக்கிறது. இது விண்வெளிப்போட்டி எனப்படுகின்றது. அண்மையில் சீனாவும் இதில் இணைந்து கொண்டுள்ளது.


இவ்வாறாக தேவைகள் ஏற்படும்போதெல்லாம் அத்தேவைகள் ஏதோ ஒரு வகையில் நிறைவேற்றியே தீர்க்கப்படுகின்றது. தேவை ஒன்று தீர்க்கப்படுவதற்கு தேவையின்பால் காட்டப்படும் கரிசனம், அத்தேவையை பூர்த்திசெய்து கொள்வதற்கான அர்ப்பணிப்பு என்பன பிரதான இடம் வகிக்கின்றன. எனவே பலமான தேவை ஒன்று இருக்குமாயின் அது நிறைவேறுவதற்கு உரித்துடையது.


அப்படியாயின் இலங்கையில் ஏன் இன்னமும் சமாதானம் ஏற்படவில்லை. இலங்கையில் சமாதானம் குறித்ததேவை இல்லையா எனக்கேட்டால் இல்லை என்றே சொல்ல வேண்டும். ஆயுத உற்பத்திநாடுகள் தமது ஆயுதங்களை விற்பனை செய்வதற்கும் அவ்வாயுதங்களின் திறன் குறித்துப்பரிசோதிப்பதற்கும்; குழம்பிப்போன நாடொன்றிலேயே உதவிஎன்ற பெயரில் மூக்கை நீட்டலாம் என நினைக்கும் வல்லரசு நாடுகளிற்கும்; யுத்தத்தைக்காரணம் காட்டி தமது ஊழல்மோசடிகளை மறைக்கநினைக்கும் அரசியல்வாதிகளுக்கும்; தனது வாக்கு வங்கிக்கு இனவாதக்கருத்துக்களையே நம்பியிருக்கும் கட்சிகளுக்கும் இலங்கையில் சமாதானம் என்பது தேவையில்லை. இவர்கள் மட்டுமா இப்படி? சமாதானம் வந்தால் - நிவாரணம் நின்றுபோகும் என நினைக்கும் அகதிமுகாம் சோம்பேறிகளிற்கும், யுத்தத்தை காட்டி கொழும்புக்கு இடமாற்றம் பெற்ற அரசஊழியரிற்கும், சமாதானம் வந்தால் திருப்பியனுப்பப்படுவோமே என நினைக்கும் அகதி புலம்பெயர்வாழர்களிற்கும், வியாபாரிகளிற்கும் இலங்கையில் சமாதானம் தேவையில்லை. மொத்த சனத்தொகையில் இப்படியானவர்கள் எத்தனை சதவீதம் என்பதிலேயே இலங்கையின் சமாதானம் குறித்தான தேவை தங்கியுள்ளது. ஏனெனில் காத்திரமான தேவை எதுவும் பூர்த்திசெய்யப்பட வேண்டியது நியதியாகும்.


'சமாதானத்தில் தீவிரவிருப்பம் கொண்ட நூறுபேராவது துணிந்து குரல்கொடுத்து சமாதானத்தின் தேவையை முன்வைத்தால் மாற்றத்தைக்கொண்டுவர முடியும்' என கலாநிதி. குமார் ரூபசிங்க சென்ற திங்கட்கிழமை கொழும்பில் நடைபெற்ற 'சமாதானத்திற்கான ஒரு குரல்' என்ற தனது புத்தக வெளியீட்டு விழாவில் கூறியிருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.