Wednesday, August 13, 2008

முதுமை


முதுமை குறித்தான நூலொன்றை அண்மையில் பார்க்கும் வாய்ப்புக்கிடைத்தது. உலகில் பொதுவாக அதிகரித்துள்ள குடும்பநல வசதிகள் காரணமாகவும் விஞ்ஞான முன்னேற்றங்கள் காரணமாகவும் மனிதரின் எதிர்பார்க்கப்படும் ஆயுட்காலம் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக உலகில் முதியோரின் எண்ணிக்கையும் வேகமாக அதிகரித்து வருகின்றது.


எனவே முதியோர் குறித்தான ஆய்வுகளும் தற்போது மேற்கொள்ளப்படுகின்றன. இந்த வகையில் யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்த இந்தநூல் என்னை ஆச்சரியப்படவைத்தது. முதுமை என்பது சர்வதேச ரீதியில் அணுகப்படத்தக்க ஒரு எண்ணக்கருவாக இருப்பினும் யாழ்ப்பாணச்சூழலை மையமாகவைத்து இந்தப்புத்தகம் முதுமை குறித்து ஆராய்வது காலத்தின் தேவை கருதிய பணி.



ஏனெனில் தொடர்ந்து வரும்போரால் இளம்சந்ததிகள் போரிட்டு மடிந்துபோகவும் எஞ்சியோர் புலம்பெயர்ந்து வெளிநாடுகளுக்குப்போகவும் யாழ்ப்பாணத்தில் எஞ்சியிருப்போர் முதியோர்களே.



எனவே இவர்கள் குறித்தான உளவியல் உடலியல் ஆய்வுகள் பிரதானமானது. அத்துடன் இப்போது யாழ்ப்பாணத்திலுள்ள முதியோர்கள் யாழ்ப்பாணத்தின் பல்வேறு பட்டகாலங்களில் ஏற்பட்ட அரசியல் சமூகமாற்றங்களுக்கூடாக வந்தவர்கள். இவ்வாறான மாற்றங்களின் இன்றையநிலை இவர்களுக்கு சலிப்பும் விரக்தியுமான ஒன்றாகவேயிருக்கும்.



பொதுவாக மனிதவாழ்வில் 40-45 வயதை தாண்டியவர்கள் தங்களை முதியவர்களாக எண்ணத்தலைப்படுகின்றார்கள். இதற்கு உடலில் ஏற்படும் மாற்றங்களும் (தலைநரைத்தல் உயர்குருதி அழுத்தம் போன்றன) உள்ளத்தில் ஏற்படும் மாற்றங்களும் (பிள்ளைகள் பெரியவர்களாக வளர்வது, தந்தை தாய் இறப்பு) காரணமாக அமைகின்றன.



எனவே இந்த வயதெல்லையிலேயே மனிதர்கள் சட்டென்று ஒரு 'பிறேக்' போட்டு சிந்திக்க தலைப்படுகிறார்கள். (விவேக் ஒரு படத்தில் சொல்வது போல.. 'அடடா நமக்கு ஏஜாகிப்போச்சா..')



இதன்காரணமாக இந்தவயதெல்லையில் பொதுவாக நடத்தைப்பிறழ்வுகள் ஏற்படுவதுண்டு. தாம் பின்பற்றி வந்த கொள்கைகள் வெற்றியளிக்காமை, 'எல்லாம் பின்னால் சரிவரும்' போன்ற சமாதானங்களுக்கான எல்லையாகவும் இந்தவயதெல்லை காணப்படுகின்றது.



இதனாலேயே நல்லவராக இருந்த சிலர் கெட்டவராக மாறுவதும் கெட்டவராக இருந்த சிலர் நல்லவராக மாறுவதும் நிகழ்கிறது. அத்துடன் ஆன்மீக நாட்டமும் அதிகரிக்கிறது. மேலும் பணியிலிருந்து ஓய்வுபெறும் வயதெல்லையும் இவர்களை முதியவர்களாக சிந்திக்கவைக்கிறது.



ஆயினும் பொதுவாக 60 வயதுக்கு மேற்பட்டவர்களே உண்மையில் முதியவர்களாக கணிக்கப்படுகிறார்கள். இந்த வயதுகளில் உடற்கலங்கள் படிப்படியாக சிதைவடைந்து போவதைப்போலவே உள்ளமும் இறப்பை நோக்கியதான ஒரு தயார்படுத்தலுக்கு உள்ளாகிறது.



இளையவரும் ஒருநாள் முதியவர்களாவார் என்பதையுணர்ந்து முதியவர்களின் ஆரோக்கியமான முதுமைவாழ்விற்கு உதவிடவேண்டும்.



"முயற்சிக்காமல் கிடைப்பது முதுமை மட்டுமே.."

2 comments:

கானா பிரபா said...

வணக்கம் கோகுலன்

இந்தப் பதிவும் என் கண்ணில் இருந்து தப்பி விட்டது. முதுமை நூல் குறித்த உங்கள் பார்வை சிறப்பு, இந்நூல் பற்றி அறிந்து கொள்ளக் கூடியதாக இருந்தது. நான் ஊருக்குப் போனபோதும் கண்ட அவலம் இது தான். என்ன செய்வது,,,

ஆ.கோகுலன் said...

கருத்துக்கு நன்றி கானாபிரபா..

யதார்த்தத்தை அப்படியே ஏற்றுக்கொள்ளவேண்டியதுதான்.. :(