Tuesday, April 8, 2008

இம்சை... இனிமை.... கவிதை!!

எனக்கு கவிதையெல்லாம் எழுதும் பழக்கம் இல்லாததால் தொடர்ந்து நீங்கள் தைரியமாகப் படிக்கலாம். என் நண்பர்களிற் சிலரிற்கு கவிதை எழுதும் பழக்கமிருக்கிறது. பெரும்பாலும் அவர்களுக்கு உணர்ச்சிப்பிழம்பாகத் தெரியும் கவிதைகள் எனக்கு இம்சையாகவே இருக்கும். பெரும்பாலான வேளைகளில் அவர்கள் கவிதைகளில் இடம்பெறும் 'அவளையும்', 'நீயையும்' சபித்தவாறே உடகார்ந்திருந்திருக்கிறேன். யார் எழுதிய கவிதையையும் 'நல்லாவேயில்லையே' என்று சொல்லும் தைரியம் இன்னும் வரவில்லை. ஒன்றன் கீழ் ஒன்றாக எழுதப்படுபவை எல்லாம் கவிதை அல்லவென்றும் அது மளிகைக்கடை சிட்டையாகவும் கூட இருக்கலாம் என்று அண்மையில் ஒரு வலைப்பதிவர் கவலைப்பட்டிருந்தார். ஆனால் இப்படிப்பட்ட கல்லுளிமங்கத்தனமான என்னைக்கூட சில கவிதைகள் ஆட்கொண்டிருக்கின்றன. அவற்றின் கவர்ச்சியே இந்தப்பதிவு. பல வருடங்களுக்கு முன்பு வாசித்த வரிகள் கூட இன்னும் ஞாபகமாய்... இந்தியாவில் தொடர் இரயில் குண்டுவெடிப்பு நேரம் இப்படி ஒரு கவிதை வாசித்ததாக ஞாபகம்..



விபத்திலிருந்து தப்பியவள்

செய்தி கேட்டு

செத்துப்போனாள்

குண்டு வைத்தவன்

மகனாம்..!

கவிதை என்றால் என்ன என்பதற்கு எனக்கு இன்னும் சரியான பதில் தெரியவில்லை. மரபுக்கவிதைகளுக்கான இலக்கணங்கள் இறுக்கமாக இருந்தாலும் புதுக்கவிதைகள் சற்று சுதந்திரமானதாகவே படுகிறது. கவிதைக்கு சந்தம் (Rhyme) பிரதானமானது என்ற கருத்து முன்னர் இருந்து வந்தது. ஆனால் தற்போது எழுதப்படும் கவிதைகளின் சந்தங்கள் ஐயப்படக்கூடியதாகவே இருக்கின்றன. எனவே கவிதை என்பதற்கு 'வசீகரமான வரிகள்' என்று தற்காலத்தில் அர்த்தம் கற்பித்துக்கொள்ள முடியும். இது சாரப்படவே Lyrics என்ற பதம் பாவிக்கப்படுகிறது. இது சுகிர்தராணியின் வசீகரமான வரிகள்.. (இதனையும் இடம்பெறும் இன்னும் சில கவிதைகளையும் அறிமுகப்படுத்திய ஒக்சிஜன் சதீஷிற்கு நன்றிகள்..!)




இடமற்று நிற்கும்

கர்ப்பிணியின்

பார்வை தவிர்க்க

பேருந்துக்கு வெளியே

பார்ப்பதாய்

பாசாங்கு செய்யும் நீ

என்னிடம் எதை

எதிர்பார்க்கிறாய் காதலையா?

இப்படி நச் என்று இருக்கும் குட்டி கவிதைகள் தான் கொஞ்சம் பொறுமை குறைந்தவர்களையும் சட்டென்று வசீகரிக்கும். கவிஞர் வைரமுத்து கவிதைகளின் நீளம் குறித்து விமர்சிக்கும் போது ' கோவணம் என்பது சால்வை போல இருக்கக்கூடாது' என்றார். ஆனால் இங்கு ஒரு சால்வை கூட மனதை தொடுகிறது. தீராநதியில் ராஜசேகர் என்பவர் எழுதியதை பதிவு செய்திருந்த மு.மயூரனிற்கு நன்றி.




சில சதுர அடிகளே ஆன

எங்கள் ஒண்டுக்குடித்தனக் கவலை

மகளை தீண்டுவதில்லை



தனக்கான வீட்டை

அவள் வரைந்துகொள்கிறாள்.

வரைந்த வீட்டின்

வண்ணக்கலவை முகத்தில்

ஒளியாய் வழிய

தூங்கிப்போகிறாள்



சில பென்சில்களும்

கொஞ்ச நேரமும்

போதும் அவளுக்கு

வடிவங்கள் உயிர்பெற



ஒரு சமயம் வெகுநேரம் கழித்து

எழுந்தவள்

தன் வீட்டில் குழந்தை நண்பர்களுக்கு

விருந்து வைத்ததாகச் சொன்னாள்

அப்போது தேவன் வந்து போனாராம்



ஒரு மழை நாளில் வீடு வந்து சேர்ந்த

வெள்ளைப் பூனைக்குட்டியை விரட்டியபோது

அழுதுவிட்டாள்



தன் புதிய வரைபட வீட்டில்

அதற்கு ஒரு அறை ஒதுக்குவதாக

தூக்கி அணைத்துக்கொண்டாள்



குழந்தைகளின் உலகத்தில்

யாருக்குத்தான் இடமிருக்காமல் போகாது



கவிதை என்ற இந்த வடிவத்தின் தாக்கம் அபாரமானது. சில சொற்களில் ஆழ்ந்த கருத்துக்களை ஆழமாக முன்வைக்கக்கூடிய சாகசம் நிறைந்தது. தொண்ணூறுகளின் பிற்பகுதியில் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியான சஞ்சீவி வாரமலரில் எனது சிறுகதையொன்று பிரசுரமாகியிருந்தது. அச்சிறுகதை வெளியான அதேபக்கத்தில் கீழ்மூலையில் சின்னதாக இந்தக்கவிதை இடம்பெற்றிருந்தது. எழுதியவர் பெயர் ஞாபகமில்லை. ஆனால் நான் எழுதிய சில நூறு சொற்களை விட இந்தச்சில சொற்கள் மிகவும் பிடித்துப்போனது.



இடி

இதயத்தில் தானே

இங்கே ஏன்

மழை..!

பொதுவாக எல்லா மொழியிலும் இந்தக் கவிதையென்ற வடிவின் தாக்கம் இருப்பது ஆச்சரியமானது. சில கவிதைகள் சிலவரிகளிலேயே குறித்த கருத்திற்கான காட்சியை கண்ணுக்குள் கொண்டு வந்து விடும். இந்த யப்பானிய மொழிபெயர்ப்பு கவிதை கூட - பூங்கா: பூமரம்: மரத்திற்கு கீழே உதிர்ந்த பூக்கள் என ஒரு அழகான காட்சியை கற்பனையில் கொண்டு வருகிறது. (அருகில் கொஞ்சப் பூச்சாடிகள்: ஊரும் நத்தை: அதன் மெல்லிய உணர்கொம்புகள்: நிரம்ப பூக்களுடன் போகன்விலா மரம் என்பவை கூட என்கற்பனையில் வந்தன..! உங்களுக்கு எப்படியோ..!!)


'பூக்களைப் பறிக்காதீர்கள்..'
என்கிறது எச்சரிக்கைப்பலகை - ஆனால்
புல் தரை எங்கிலும்
பூக்களின் சிதறல்
காற்றைக் கோபித்துக் கொள்ளாதீர்
பாவம் அதற்கு படிக்கத்தெரியாது..!

ஹைக்கூவின் பிரமாண்டத்திற்கு ஒரு சின்ன உதாரணம். மேலே சில வரிகளில் உருவாகும் காட்சியை மூன்றே வரிகளில் ஆறே சொற்களில் இந்த ஹைக்கூ கொண்டுவருகிறது.. குளிர்கால காலை நேர புற்களும் அதன்மேல் பனியும் நாம் அனைவரும் அறிந்ததே.. இதோ அது ஹைக்கூவாக..


வெளியே குளிரில்
புல்லுக்கு மடடும்
வியர்த்தது எப்படி..!

சில கவிதைத்தொகுப்புகளின் பெயரே ஆர்வமூட்டுபவையாக வித்தியாசமானவையாக இருக்கும். இன்றிரவு பகலில்.., முட்டை வாசிகள்.., உன்கண்ணால் தூங்குகிறேன்.., பெய்யெனப் பெய்யும் மழை.., அவளுக்கு நிலா என்று பெயர்.. என்பன சில திகைக்க வைத்த தலைப்புகள்.
அமரர் சுஜாதாவும் தனது எழுத்துக்களில் கவிதைகளை இரசிக்க உதவிசெய்திருந்தார். அவர் அறிமுகம் செய்த வ.ஐ.ச ஜெயபாலனின் கவிதையொன்று..

ஏன் எம் வாழ்வில் இத்தனை சுமைகள்
ஏன் எம் பாதையில் இத்தனை இருட்டு
குட்டப்பட்டு தலை குனிந்த அகதிகளாய்
ஏன் எங்களுக்கு இவ்விதம் எழுத்து
ஏன் எம் நெஞ்சில் இத்தனை நெருப்பு
பூவார் வசந்த மரங்களின் மறைப்பில்
காதற்பெண்களின் தாவணி விலக்கி
அபினி மலர்களின் மொட்டை சுவைக்கும்
இளம் பருவத்தில்
இடுகாட்டு மண்ணை சுவை என்று எமது
இளையவருக்கு விதித்தவர் யாரோ..?

நாட்டுப்புற பாடல்கள்கூட போகிறபோக்கில் மனதை அள்ளக்கூடியன. பாசாங்கற்ற நிர்ச்சலமான வரிகளே அவற்றின் பலம்.

கந்தனைக் காணவென
கார்த்திகைக்கு வந்தேனடி..
உந்தனைக் கண்டேன் - இனி
ஊருக்குப்போகமாட்டேன்..!

நக்கல் நளினங்கள் கூட கவிதைகளில் குறைவில்லை. மஹாகவியின் குறும்பா ஒன்று..

சொந்தத்தில் கார்; கொழும்பில் காணி
சோக்கான வீடு; வயல் கேணி
இந்தளவும் கொண்டு வரின்
இக்கணமே வாணியின் பால்
சிந்தை இழப்பான் தண்டபாணி..!

ஆரம்ப காலத்தில் பாட்டுக்கு மெட்டமைத்தார்கள். தற்போது மெட்டுக்களுக்கு பாட்டெழுதுகிறார்கள். இசையமைப்பாளர்களின் சவாலான இசைக்குள் தமிழையும் கற்பனையையும் செருக வேண்டிய நிலை கவிஞர்களுக்கு. இந்த நிலையிலும் சில கற்பனைகள் பிரமிக்க வைக்கிறது. அண்மைய சில பாடல் வரிகள்


ஊர் எல்லையோர
ஐயனாரின் கத்தி
வாங்கித்தான்
பென்சில் சீவலாமா..?
//
பெண்
இடையும் இறைவனும்
ஒன்றுதான் -அவை
இருந்தும் தெரிவதேயில்லை..

சில வரிகளின் கற்பனைகள் கொஞ்சம் பொறாமைப்பட வைப்பது மாதிரியாகவும் இருக்கும்..! (அட! இன்னா பின்னு பின்றாங்கப்பா..!!)


வாசல் பெருக்கிப் போனாள்
சுத்தமானது வாசல்
குப்பையானது மனசு..!

இது யாழ்ப்பாணத்தில் கேள்விப்பட்டது..


நாலாம் பிறை பார்த்தால்
நாய்படாப் பாடென்பார்
நானோ முழு நிலவை
பார்த்து விட்டு
அனு தினமும்
அலைகின்றேன்.

சில கவிதைகள் நாம் எந்த மனநிலையிலிருந்தாலும் எம்மையும் கவிஞரின் மனநிலைக்கு அழைத்துச்சென்று உணரவைக்கும். குழந்தைகள் ஏமாறுவதென்பது துன்பமான ஒன்று. இதோ ஒரு குழந்தையின் ஏமாற்றத்தை நா.விஸ்வநாதன் நாசூக்காக சொல்கிறார்..


விருந்தாளி பையில் திராட்சை
நீண்ட நேர பேச்சு
உறங்கிப் போன குழந்தை.

கவிஞர்கள் பொதுவாகவே கொஞ்சம் இறுமாந்தவர்கள். வார்த்தைகள் வசமாவதும் உயர்ந்த கற்பனையும் தத்துவஞானமும் சந்தமாவதிலும் மிருகங்களிலிருந்து மனிதனை பிரதானமாக வேறுபிரிக்கும் மொழியை இலகுவாக ஆட்கொள்வதாலும் இது வருகிறது என நினைக்கின்றேன். இது கவியரசு கண்ணதானின் இறுமாப்பு..


காவியத்தாயின் இளையமகன்
காதல் பெண்களின் பெருந்தலைவன்
பாமரஜாதியின் தனிமனிதன் - நான்
படைப்பதால் என் பெயர் இறைவன்.

உலகெங்கிலுமுள்ள தீவிரவாதத்தால் பெருமளவு பாதிக்கப்படுவது அப்பாவி ஜனங்களும் குழந்தைகளுமே. வட்டங்கள் என்ற த லைப்பிலான பாலுமகேந்திராவின் இந்த வரிகள் மூலம் அதன் நிதர்சனத்தை தரிசிக்க முடிகிறது.

அந்தக் குண்டின் சுற்றளவு
வெறும் முப்பது சென்டிமீட்டர்தான்.
வெடிதத பொழுது
அதன் வீரியம்
மையத்திலிருந்து
ஏறத்தாழ ஏழு மீட்டர்தான்.
இந்த வட்டத்துள்,
இறந்து கிடந்தவர்கள் எட்டு
காயமடைந்தவர்கள் பன்னிரெண்டு.
இவர்களைச் சுற்றி,


நெஞ்சைப் பிளக்கும் சோகத்தாலும்
நிர்ணயமற்ற காலத்தாலுமான
ஒரு பெரிய வட்டத்துள்,
இரண்டு ஆஸ்பத்திரிகள்
ஒரு சுடுகாடு.

நூற்றுச்சொச்சம் கிலோமீட்டர் தள்ளி,
சொந்த ஊரில் புதைக்கப்பட்ட
அந்த இளம் பெண்ணையும்
கணக்கில் கொண்டால்
கணிசமாக விரிவடையும்
மற்றொரு வட்டம்.

கடல்களுக்கப்பால்எங்கோ ஓர் மூலையில்,
இவளுக்காய் கண்ணீர் விட்டுக்கொண்டிருக்கும்
அந்த ஒற்றை மனிதனால்
உலகளவாய் உருமாறும் இன்னொரு வட்டம்.

சொர்க்கத்தில் இருப்பதாக சொல்லப்படும்
கடவுளின் கதவு வரை சென்று
அவல ஓலமிடும்,
அநாதையாக்கப்பட்ட
அந்த குழந்தையின் அழுகுரல் போடும்,
அண்டங்களை கடந்த -
கடவுளும்
கணக்குகளுமில்லாதவேறொரு வட்டத்தை பற்றி
நான் சொல்லப் போவதில்லை

18 comments:

Chandravathanaa said...

நல்ல பதிவு கோகுலன்.

கவிதைகள் பற்றிய வரைமுறைகளில் எனக்கும் குழப்பம்தான்.ஆனாலும் நீங்கள் குறிப்பிட்டது போல சில கவிதைகள் மனதை ஆட்கொண்டு விடுகின்றன.உங்கள் பார்வையும், தெரிவுகளும் விளக்கங்களும் அருமையாக உள்ளன.

உங்களது மற்றைய பதிவுகளையும் பார்த்தேன். எழுதுவதில் அழகும், நேர்த்தியும், வித்தியாசமான சிந்தனைகளும் தெரிகிறது. தொடர்ந்தும் எழுதுங்கள்.
வாழ்த்துக்கள்.

நட்புடன்
சந்திரவதனா

ஆ.கோகுலன் said...

மிக்க நன்றி திருமதி.சந்திரவதனா. உங்களைப்போன்ற வலையுலகில் மூத்த பதிவரிடம் பாராட்டுப் பெறுவது எனக்கும் மிக்க மகிழ்ச்சி.

MJS said...

அருமையான பதிவு கோகுலன்!!!

ஆ.கோகுலன் said...

நன்றி, நன்றி.. ஜில் ஜில்!

Aruna said...

கவிதை பிடிக்காதுன்னு சொல்லி சொல்லி இவ்வளோ நல்ல நல்ல கவிதைகளை எடுத்துப் போட்டு இருக்கீங்க அருமை.....
அன்புடன் அருணா

ஆ.கோகுலன் said...

வாருங்கள் அருணா..!

அச்சச்சோ.. கவிதை பிடிக்காதென்று சொல்லவில்லை. கவிதை என்ற பெயரிலான இம்சை தான் பிடிப்பதில்லை.

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

ரூபன் தேவேந்திரன் said...

நெடுநாளைக்கு பிறகு நல்ல கவிதைகளுடன் கூடிய பதிவொன்றை வாசித்து இருக்கின்றேன். உண்மையில் இப்படியொரு பதிவையிட்டதற்கு உங்களை பாராட்டத்தான் வேண்டும்.

ஆ.கோகுலன் said...

வாங்கோ கோசலன்,

வாவ்.. இருவருக்கும் ஒரு எழுத்துதான் வித்தியாசம்!!.
கானாபிரபா கூட ஒரு பின்னூட்டத்தில் கோசலன் என்றே விளித்தார்..! :)
தங்கள் பாராட்டிற்கு மிக்க நன்றி.

தமிழ் said...

அத்தனை
கவிதையும்
அருமை

ஆ.கோகுலன் said...

வருக திகழ்மிளிர், மிக்க நன்றி கருத்துக்கு.
உங்கள் பெயர்கூட அருமை. இரண்டு வினைச்சொற்கள் சேர்ந்த ஒரு பெயர்ச்சொல்..!! :)

anujanya said...

கோகுலன்,

நல்ல பதிவு. 'திகழ்மிளிர்' என்ற பெயரின் வசீகரத்தில் இருந்தேனே ஒழிய இவ்வளவு அழகாக அதைப் பிரித்துப் பார்க்கத் தோன்றவில்லை. எல்லாக் கவிதையும் நல்ல தேர்வு எனினும், 'உறங்கிப் போன குழந்தை' அருமை. வாழ்த்துக்கள்.

அனுஜன்யா

ஆ.கோகுலன் said...

வருக அனுஜன்யா!


பகிர்விற்கும் வாழ்த்திற்கும் மிகவும் நன்றி.

சென்ஷி said...

கவிதையை பற்றிய சொல்லாடல்களை எங்கள் அண்ணாச்சி எலக்கிய பேராளுமை ஆசிப் மீரான் ரொம்ப நல்லா மொக்க போட்டிருக்காரு. படிச்சிருக்கீங்களா ;))

ஆ.கோகுலன் said...

படித்ததில்லையே சென்ஷி. இணைப்பையும் குறிப்பிட்டிருந்தால் உதவியாகஇருக்கும். எனினும் தகவலுக்கு மிக்க நன்றி.

சின்னப் பையன் said...

அருமையான கவிதைகள்....

ஆ.கோகுலன் said...

வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி ச்சின்னப்பையன்..!

தெருப்பாடகன் said...

தங்களின் பதிவு சிறப்பானது. ஏன் இப்போது எழுதுவதில்லை?.

ஆ.கோகுலன் said...

நன்றி சர்வேஷ்..

நேரப்பற்றாக்குறைதான்..

எழுத முயற்சிக்கிறேன்..