Wednesday, October 5, 2011

விடுதலை

(யாழிலிருந்து வெளிவரும் "வலம்புரி - சங்குநாதம்" 03-09 நவம்பர் வார இதழில் பிரசுரமானது.)

அந்தப் பிரதேசத்திற்கே உரித்தான தனித்துவமான கட்டியங்களோடு அந்தக் காலையும் புலர்ந்தது. காதைப் பிளந்து கடந்து சென்ற ஆட்லறிகள்; தவில் வித்துவானின் லய லாவண்யம் போல் துப்பாக்கி வேட்டுக்களின் சலிக்காத முழக்கங்கள்; புகையைக் கக்கியபடி வாகனங்களின் ஓட்டம்; பேய் அறைந்தது போல் காய்ந்து இறுகிச் சலித்துப்போன முகங்கள்; மரங்களின் கீழ் நான்கு தடிகளை நட்டு நான்கு புறமும் பழைய சீலைகளால் கட்டப்பட்டு மதியம் தவிர காலையும் மாலையும் சூரிய வெயிலில் வெளிறிப் போன குடிலா..? மறைப்பா..?, என்று ஐயப்படும் படியான மனித வாழ்விடங்கள்; பட்டினியே வழமையாகி உயிரைத் தக்க வைத்துக்கொண்டிருக்கும் மழலைத்தனம் வற்றிப்போன மழலைகள்; ஐயோ! ஆண்டவரே என்ற நோயாளிகளின் முனகல்கள்; எல்லாவற்றையும் வழமையான ஒரு லாவகத்தோடு சந்தித்தபடி அன்றைய காலையும் புலர்ந்திருந்தது.

அவன் அந்தப் பெரிய மரத்தின் வேரொன்றில் அமர்ந்திருந்தான். நேற்று வானில் (Van) கொண்டுவந்து கொடுத்த அரை இறாத்தல் பாணை வாங்க முண்டியடித்ததில் அவனது வலது காலின் சின்ன விரல் சிதைந்திருந்தது. அந்த ரணத்தினால் அவனது இரவுத் தூக்கம் கலைந்திருக்க இரவின் பெரும் பகுதியை கட்டாந்தரையில் ஒரு சொறிநாய்க்கு அருகாமையில் கழித்திருந்தான். உலகத்தின் சோகங்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து அவனது கண்களாக மாறியிருந்தன. காலில் மொய்த்த இலையான்களை கலைக்கவே அவனிற்கு திராணி இல்லாதிருந்தது. ஷெல் சத்தம் காதை செவிடுபடுத்தியது. அவனை அது பாதித்ததாகத் தெரியவில்லை. தூரத்தில் ஷெல்களால் எழுந்த புகை மூட்டங்கள் தெரிந்தன. நான்காவது மரத்தின் கீழிருந்த மறைப்பில் இருந்த கிழவி இறந்து போயிருக்க வேண்டும். ஒப்பாரிச் சத்தம் வெடியோசைகளையும் மீறி சூழ்நிலையை மிகவும் பயங்கரப்படுத்தியது.

அவன் மெதுவாக எழுந்திருக்க முயன்றான். கால்வலி சுண்டி இழுத்தது. ஐயோ! அம்மா!! பலமாக கத்துவதாக அவன் கருதினாலும் சத்தம் முனகலாகவே வெளிவந்தது. அருகில் படுத்திருந்த நாய் அசையாது இருந்தது. இடது காலினால் தட்டிப் பார்த்தான். 'பச்... செத்துப்போட்டுது..' அவன் வாய் அனுதாபத்தோடு முணுமுணுத்தது.

அடுத்த கூடாரத்தில் குழந்தை ஒன்று உச்சஸ்தாயியில் கதறியது. பசியாயிருக்குமோ? அப்படியே இருந்தாலும் அவர்களிடம் கொடுக்க எதுவுமில்லை. ஒவ்வொரு இடம்பெயர்வின் போதும் இழந்து இழந்து அவர்களிடம் இனி இழக்க உயிர் மட்டுமே எஞ்சியிருந்தது. மெதுவாக எழுந்து சில அடிகள் வைத்தான். நாய் ஒன்று ஒரு கூடாரத்திலிருந்து பாண் துண்டு ஒன்றைக் கெளவிக்கொண்டு ஓடியது. அடீக், தரித்திரம் மனிசருக்கே சாப்பிட வழியில்லை உனக்கு சாப்பாடோ? - கூடாரத்தில் இருந்து கத்தியபடி வந்தவன் எறிந்த கொட்டன் சரியாக நாயில் பட்டு அது கால்களை இரண்டு மூன்று தரம் உதறிவிட்டு அமைதியானது. அதன் வாயிலிருந்த பாண் மண்ணில் புரண்டு வித்தியாசமான பண்டமாக காட்சி தந்தது.

அவன் இதையெல்லாம் பார்த்தபடி நின்றான். அவனிற்கு இப்போது ஏழு வயதாகிறது. நான்கு வயதில் ஆரம்பித்த இடம்பொயர்வுகளும், அழிவுகளும் இறுதியி்ல் இந்த காட்டு வாழ்க்கைக்கு மாற்றியிருந்தன. போன மாதம் நிவாரணம் பதிய என்று புறப்பட்டுப்போன பெற்றோர் பின் திரும்பிவரவேயில்லை. குண்டு வீச்சில் உருத்தெரியாத சடலங்களில் அவர்களும் அடங்கியிருக்கலாம். இவனிற்கு காய்ச்சல் என்று பக்கத்து கூடாரத்தவர்களிடம் ஒப்படைத்துப் போனார்கள். பெற்றோர் போனதுடன் கூடாரத்தில் இருந்த துணிகளும் எஞ்சிய ஓரிரண்டு சாமான்களும் காணாமல் போக இவன் அந்தப் பிரதேச அநாதைகளின் எண்ணிக்கையை ஒன்றால் அதிகப்படுத்தினான். அதன் பின் அவன் இரண்டு இடங்கள் மாறிவிட்டான். யாரும் அவனை என்ன ஏது என்று விசாரிக்கவில்லை. குளித்து நாளாகிறது. சாப்பாடு கிடைக்கும் போது உண்பான். மரங்களின் கீழ் உறக்கம். மனித இன ஆரம்பத்தை நோக்கி அவன் போய்க்கொண்டிருந்தான்.

ஆங்காங்கே பிய்ந்து தொங்கிய காற்சட்டையை இழுத்துவிட்டபடி அவன் நடந்து கொண்டிருந்தான். சூரியக் கதிர்களின் வெம்மை கலக்க ஆரம்பித்திருந்தது. இவனிற்கு கண்கள் புகைந்தது. இன்றைக்கு எப்படியாவது சாப்பிட வேண்டும் அவன் வயிறு கெஞ்சி அலுத்துப்போய்விட்டது. கிணறு ஒன்றில் கும்பலாக சனங்கள் நின்றார்கள். மனித சடலங்கள் என்ற பெயரிற்கு அவர்கள் பொருத்தமானவர்கள். ஒட்டியுலர்நத கைகளும் கால்களும்; உணர்வுகள் வற்றிப்போன கண்களும்; உண்ணத் துடிக்கும் வாய்களும் அவர்களிடம் பயங்கரத்தோடு கூடிய அருவருப்பான தோற்றத்தை ஏற்படுத்தியிருந்தது.

இவன் அவர்கள் கால்களுக்கு இடையில் புகுந்து தண்ணீர் குடிக்க முயன்றான். "சீ...சீ போடா.." யாரோ அவனைத் தள்ளினார்கள். "சீ பாவம் அதுக்கு முதலில் ஊத்துங்கோ..." யாரோ தண்ணீர் ஊற்றினார்கள். இவன் குடித்துவிட்டு கூட்டத்தை விலத்தி நடந்தான். தண்ணீர் பட்டதில் கால்வலி இன்னும் கூடிய மாதிரி இருந்தது.

நேற்று எவ்வளவு முண்டியடித்தும் அவனால் பாணை வாங்கமுடியவில்லை. லொறி வரேல்லையாம். இன்றைக்கு பாண் வான் வரும் என எதிர்பார்க்க முடியாது. காட்டிற்குள் போய் உணவு தேடுவதே அவனது நோக்கமாக இருந்தது.

வீதியை விட்டு பற்றைக்குள் இறங்கினான். தூரத்தில் சண்டை நடந்துகொண்டிருப்பது தெளிவாக கேட்டது. ஷெல்கள் இனி இங்காலையும் விழலாம். அனுபவத்தில் ஊகித்துக் கொண்டான். அவனிற்கு முன்பே சிலர் காட்டிற்குள் வேட்டையாட இறங்கி இருந்தனர். தூரத்தில் அவர்களின் நடமாட்டம் தெரிந்தது. இவனுக்கு ஒவ்வோர் அடியும் எடுத்து வைப்பது பெரும் பிரயத்தனமாக இருந்தது. பற்றைக்குள் இருந்து சரக்கென்று ஏதோ ஓடியது. இவன் நடந்துகொண்டிருந்தான்.

திடீரென ஒரு சலசலப்புத் தோன்றியது. பறவைகள் கலவரமாகப் பறந்தன. காகங்கள் அந்தரித்துப் கரைந்தன. அவனுக்கு அந்தப்பாஷை அனுபவத்தில் தெரிந்திருந்தது. காதுகளைக் கூர்மையாக்கி வானத்தின் விளிம்புகள் வரை பார்வையை படரவிட்டான். ஆம், அவன் நினைத்தது சரியாகிவிட்டது. தூரத்தில் இரண்டு குண்டுவீச்சு விமானங்கள் வருவது தெரிந்தது. மக்கள் குடியிருந்த மரங்களின் கீழும் பதற்றமான ஒலிகள் எழும்ப ஆரம்பித்தன. பழுதாகிப் போய் நின்றிருந்த வாகனம் குண்டுவீசப்படும் பிரதேசத்தை உறுதியாக்கியது. 'டேய் பொம்மர் ஓர்றா...'; ஐயோ பிள்ளை இஞ்சை வாடி'; 'படுங்கோ எல்லாரும் படுங்கோ'; அப்பா தம்பிரானே முருகா' பேதலித்த குரல்கள் உச்சஸ்தாயியில் ஒலித்துக்கொண்டிருக்க சிலர் பதுங்கினார்கள். சிலர் சிதறி ஓடினார்கள். இவனிற்கு நிலமை விளங்க அருகில் இருந்த பெரிய பாறை ஒன்றுடன் ஒட்டிக்கொண்டான். கீழே கடியெறும்புகள். தட்டிக்கொண்டே பாறையின் மறுபக்கம் பதுங்கினான்.

விமானங்கள் கிட்ட நெருங்கிவிட்டன. இரைச்சல் காதிற்கு ஒவ்வாததாக இருந்தது. முதல் குண்டு விழுந்ததுமே வீதியோரம் புகைமண்டலமாகியது. அவலக் குரல்கள் ஓங்கி ஒலித்தன. பதுங்கி இருந்தவர்கள் மேலும் சிதறி ஓடினார்கள். சிலர் காயப்பட்டவர்களைத் தூக்கி முதலுதவி செய்ய, சிலர் சிதறிய கூட்டத்தில் தங்கள் உறவுகள் இருப்பதை நிச்சயப்படுத்தக் கூவி அழைக்க சூழல் பெரும் அவலமாகியது. இவனிற்கு மிகவும் பயமாக இருந்தது. அழுதழுது வற்றிப்போன கண்ணீர் மீண்டும் ஊற்றெடுத்து கன்னங்களில் வழிந்தது. பெற்றோரை நினைத்துக்கொண்டான். நானும் செத்துப்போவேனா? ஏக்கத்துடன் இன்னும் பாறையுடன் ஒண்டிக்கொண்டான்.

அடுத்த விமானம் குண்டை கழற்றியது இவனிற்கு இங்கிருந்தே தெரிந்தது. கறுப்பாக சின்னதாக ஒன்று விமானத்திலிருந்து பிரிந்தது. இவனிற்குள் அவஸ்தையாயிருந்தது. செத்தால் நல்லது போலப்பட்டது. இப்படி அலைச்சலில்லை, பசியில்லை, பயமில்லை. எல்லாவற்றிற்கும் மேலாக இந்தக் காலின் வலி இல்லை.

அவனது கண்ணீர் பாறையை நனைத்தது. சின்னதாகத் தெரிநத குண்டு பெரிதாகிப் பெரிதாகி... அட இதென்ன அவன் உச்சி முதல் உள்ளங் கால் வரை மின்சாரம் பாய்ந்து, நிலமை விளங்கி சுதாகரிப்பதற்கிடையில் அப்பகுதி புகைமண்டலமாகி அவன் ஒண்டியிருந்த பாறை காணாமற் போயிருக்க அவன் காற்றுடன் கலந்திருந்தான்.