Monday, July 25, 2011

எனது முதலாவது சிறுகதை - "ஆறறிவு"




ஆறறிவு
(யாழிலிருந்து வெளிவந்த "சஞ்சீவி" வாரப்பத்திரிகையில் "விஷ்ணுவர்த்தனன்" என்ற புனைபெயரில் 19.09.1998 அன்று பிரசுரமானது.)

கோபுவிற்குச் சந்தோசமாக இருந்தது. இன்று நேரத்துடனேயே அம்மம்மா வந்துவிட்டாள். நேசறிக்கு இன்று பிள்ளைகளும் குறைவு. எப்போது அம்மம்மா வருவா என்று பார்த்துக் கொண்டேயிருந்தான்.
நேசறியில் ரீச்சர் சொன்னது அவனுக்குப் புதினமாக இருந்தது.
“எங்களுக்கு எல்லாம் ஆறு அறிவு இருக்கு. ஆனால் மிருகங்களுக்கு ஐந்தறிவுதான்” கோபுவின் மனதில் மீண்டும் மீண்டும் இதே வாக்கியம் எதிரொலித்தது.
நேற்றுப் பெய்த மழையால் சகதியாகிவிட்ட ஒழுங்கையில் அம்மம்மா கூட்டிச் சென்றாள்.
தன்னிடம் எழுந்த ஐயத்தை அம்மம்மாவிடமே வெளியிட்டான் கோபு.
அம்மம்மா! எங்களுக்கு இருக்கிற ஆறாவது அறிவு என்ன? அம்மம்மா வியப்புடன் பார்த்து “அது அப்பன்……” என்று தொடங்குவதற்குள் கந்தையா மாஸ்டரைக் கண்டுவிட்டாள்.
“அப்ப மாஸ்டர் சாந்தி விசயம் என்ன மாதிரி”
சரி. இனி அம்மம்மா கதைக்க வெளிக்கிட்டுட்டா. கோபுவுக்கு சலிப்பாக இருந்ததது. இலேசில் முடிகின்ற பேச்சாகவும் அவனுக்குத் தோன்றவில்லை. சித்தியின் கல்யாண விஷயம் தான் பேசப்படுகிறது என்று அவன் அறிந்திருந்தான். ஆனால் வீட்டுக்கு விரைவாகப் போவதே அவனுக்கு விருப்பமாயிருந்தது. சுற்றிலும் வேடிக்கை பார்க்க ஒன்றும் இல்லை.
அட! அவனுக்கு ஆச்சரியமாகவும் சந்தோஷமாகவும் இருந்தது.
தெரு ஓரத்தில் சற்றுத் தொலைவில் ஒரு நாய் குட்டிகளுடன் படுத்திருந்தது. குட்டிகள் ஒய்யாரமாக தாய் நாயின் வயிற்றில் சாய்ந்து படுத்திருந்தன. தாய் நாய் கண்ணை மூடியிருந்தாலும் குட்டிகள் விழிப்பாகவே இருந்தன. அந்த நாய்க் குட்டிகள் தன்னை மிகவும் அலட்சியமாக நோக்குவதாக கோபுவுக்குப் பட்டது. தாங்கள்அருகில் நிற்பது பற்றிய உணர்வின்றி அவை திமிர்தனமாக நின்ற மாதிரி அவனுக்குத் தோன்றியது. அது தனது கெளரவத்தை பாதிப்பதாகவும் அவன் நினைத்தான். எதாவது செய்ய வேண்டும். அவன் சுற்றும் முற்றும் பார்த்தான். கதைப்பராக்கு என்றாலும் அம்மம்மா கையை இறுகப் பிடித்திருந்தது அவனுக்கு இடைஞ்சலாக இருந்தது. ஒன்றும் செய்ய முடியாது. காலடியை நோக்கினான். சிறுகற்கள் தான் இருந்தன.
குனிந்து ஒன்றை எடுத்தான். அம்மம்மாவின் பிடி தளரவில்லை. ஆனாலும் பரவாயில்லை.
நான்கு குட்டிகளுள் ஒன்று இப்போ தாயின் வயிற்றின் மீது ஏறி நின்ற காட்சி மிகவும் அழகாக இருந்தது. ஆனாலும் அது “உன்னால் இப்படி முடியுமா?” என்ற தோரணையில் அலட்சியப் பார்வை பார்த்தது கோபுவிற்குப் பிடிக்கவில்லை. மெதுவாக ஒரு கல்லை எறிந்தான். அவன் அந்த சின்னச் செயலை மட்டுமே செய்தான். அவ்வளவு தான் கண்ணை மூடியிருந்த தாய் நாய் ‘விலுக்’ கென்று நிமிர்ந்தது. ‘லொள்’......என்று கொண்டே பாய்ந்து வந்தது.
“ஐயோ!, நாய் தள்ளுங்கோ! அடீக்!” என்றவாறு கந்தையா மாஸ்டர் சைக்கிளை நாயை தடுக்கு முகமாக திருப்பி விட்டார்.
கோபு வெலவெலத்துப் போனான். அம்மம்மா சடாரென்று அவனைத் தூக்கியிருந்தாள்.
“என்னப்பன் செய்தனி....?” அம்மம்மாவின் குரலில் கடுமையிருந்ததை அவதானிக்க முடிந்தது.
“நான்... கல்” கோபுவால் பேசமுடியாதவாறு அதிர்ச்சியாக இருந்ததது. அம்மம்மா அணைத்துக்கொண்டாள்.
“அது குட்டிபோட்ட நாயெல்லே. அதுக்கு எதாவது செய்தால் குட்டிக்குத்தான் ஏதோ செய்கினம் எண்டு எங்களை தான் கடிக்கும்” அம்மம்மா சொன்னார்.
“குட்டி போட்ட நாயிட்ட வலு கவனமாக இருக்கோனும் தம்பி. நாங்கள் கனநேரமாகக் கதைச்சது தம்பிக்கு போரடிச்சுப் போச்சுப் போல, கதிகலங்க வைச்சுட்டானே”..... கந்தையா மாஸ்டர் கோபுவின் கன்னத்தில் தட்டி விட்டு சைக்கிளில் ஏறினார்.
“ஓமோம்.. பிறகு ஆறுதலாகக் கதைப்பம். சொன்னதை மறந்து போயிடாதையுங்கோ” அம்மம்மா விடைபெற்றார்.
ஓமோம். அதெல்லாம் நான் பார்த்து செய்யிறன். அப்ப வாங்கோ” கந்தையா மாஸ்டர் போய்விட்டார்.
“கோபுவிற்கு இண்டைக்கு என்ன வந்தது? றோட்டிலை குழப்படி செய்ததை அப்பாட்டை கட்டாயம் சொல்ல வேணும்” அம்மம்மா கூறிக்கொண்டே அவனை இறக்கி விட்டாள். கோபு திரும்பிப் பார்த்தான். தாய் நாய் சுற்றும் முற்றும் பார்த்து தனதும், குட்டிகளினதும் பாதுகாப்பை உறுதி செய்து கொண்டது. குட்டிகள் தாய்க்கு கீழே நின்றன. இன்னும் திமிராகப் பார்த்தன. கோபுவுக்கு அவமானமாய் இருந்தது. ஆனாலும் ஒன்றும் செய்ய முடியாது.
வீட்டில் எதிர்பார்த்தளவு நிலமை மோசமில்லை. விடயத்தை அம்மம்மா சொல்ல “ஏன் கண்ணா?...” என்று சித்தி பின்பக்கத்தில் செல்லமாகத் தட்டினாள்.
“தம்பிக்கு குழப்படியள் கூடிப்போச்சு...” என்றதுடன் அம்மா நிறுத்திக்கொண்டாள். அவனுக்கு அப்பாடா என்று இருந்ததது. அப்பா பின்னேரம் தான் வருவார் முன்னம் ஊதி ஊதி மண்ணெண்ணையில் ஓடுகிற மோட்டார் சைக்கிளில் தான் வேலைக்குப் போகிறவர். இப்ப அவரை ‘பிக்-அப்’ ஒன்று வந்து ஏற்றிக்கொண்டு போகும். போகும் போதும் வரும்போதும் தெருவில் பெரிய தூசிப் படலமே கிளம்பும்.
பக்கத்து வீட்டு ராஜனும் பள்ளிக்கூடத்தால் வந்துவிட்டான். ஆனால் அவன் இன்னும் விளையாட வரவில்லை. இது கோபுவுக்கு பெரும் விசராக இருந்தது. ‘அவன்ர அம்மா ஏதோ பேசிப்போட்டா போல’ கோபு நினைத்துக்கொண்டான். அவனுக்குத் தெரியும்: “கழுதை, எருமைமாடு, மூதேவி” என்றெல்லாம் ராஜனை அவனது அம்மா ஏசுவது இங்கே கேட்கும். ஏன் என்ற காரணம் கோபுவுக்குத் தெரியாது. ஏச்சு விழுந்த காரணத்தை ராஜன் சொன்னால், தான் செய்யும் குழப்படிக்கு எப்படியான ஏச்சு விழும் என்று நினைக்கவே கோபுவுக்கு உடம்பு சிலிர்க்கும்.
கோபுவின் அம்மா அப்படி அல்ல. கோபு தனது அம்மாவின் கண்களுக்குள்ளேயே எல்லாவற்றையும் கண்டுகொள்வான். தாயார் ஒரு பார்வை பார்த்தால் காணும். அதுவும் இல்லையென்றால் கிட்டத்தில் அணைத்துக்கொண்டு முகத்தோடு முகம் வைத்து “இனி இப்படிச் செய்யாதையுங்கோ” என்றால் பிறகு கோபு அப்படியான குழப்படியைச் சிந்தித்தும் பார்ப்பதில்லை.
அன்று பின்னேரமும் ராஜன் வரவில்லை. கோபுவுக்குச் சலிப்பாக இருந்தது. “அப்பன்! நாங்கள் கோழிக்குஞ்சு அடைப்பம் வாங்கோவன்” அம்மம்மா அழைத்தாள். கோபுவுக்கு உற்சாகமாக இருந்தது. வீட்டிற்குப் பின்னால் போனார்கள்.
“பா....பா...........” அம்மம்மாவுடன் தானும் சேர்ந்து கத்தினான். முதலில் தாய்க்கோழி வந்தது. புற்களுக்குள் இருந்து அம்பாய் குஞ்சுகள் புறப்பட்டு வந்தன. அரிசியைத் தூவினார்கள்.
“கோபு அந்தக் கூட்டை எடுங்கோ” – அம்மம்மா சொன்னார். கூட்டை மெதுவாக சரித்துப்பிடித்தபடி குஞ்சுகளை உள்ளுக்கு விரட்டினார்கள். ஒரு குஞ்சு வெளியால் பாய்ந்தது. கோபு உற்சாகமாய்ப் பிடிக்கப் போனான். “கோழி கொத்தப் போகுது விடுங்கோ” என்று அம்மம்மா சொல்வதற்குள் விநோதமான ஒலியை எழுப்பியபடி கோழி சிலிர்த்துக் கொண்டு வந்தது. வெடுக்கென்று கோபுவின் கையில் கொத்தியது. “நான் சொன்னன் பார்த்தீங்களா....” அம்மம்மா எல்லாவற்றையும அப்படியே விட்டுவிட்டு அவனிடம் ஓடி வந்தாள். கோபுவுக்கு வலித்தது. ஆனால் அழுவதில் உடன்பாடு இல்லை. ஆனாலும் கண்களில் நீர் முட்டி விட்டது. மண்ணுக்குள் சரிந்து விழுந்ததில் மண் எல்லாம் உடம்பில் அப்பிக்கொண்டது. அம்மம்மா கோபுவைத் தூக்கி மண்ணைத் தட்டி விட்டாள். ஆரவாரம் கேட்டு முன்பக்கம் கதைத்துக்கொண்டிருந்த அம்மாவும் பக்கத்து வீட்டு அன்ரியும் வந்தார்கள்.
“இவனையும் ஏனம்மா விட்டனீங்கள்?” அம்மம்மாவை அம்மா கடிந்துகொண்டாள்.
“சரி சரி! நீங்கள் அடையுங்கோ. இவனுக்குமேல் கழுவி விடோணும். மேலெல்லாம் சேறு” – அம்மா கிணற்றடிக்கு கூட்டிச் சென்றாள்.
பக்கத்து வீட்டு அன்ரியும் நின்றது கோபுவுக்கு வெட்கமாக இருந்தது.
“என்ன கோபு அழுதவரோ?” – அன்ரி கேட்டார்.
“சீச்சீ, இல்லை” – கோபு அவசரமாகப் பதில் சொன்னான். கையில் காயம் எதுவும் இல்லையாயினும்அவனுக்கு வலித்தது.
கிணற்றடியில் உடம்பு கழுவும் போது மீண்டும் அதே கேள்வி கோபுவுக்கு எழுந்தது.
“அம்மா எங்கடை ஆறாவது அறிவு என்றால் என்ன?” அம்மாவுக்கு கேள்வி வியப்பாக இருந்தது.
“யாரப்பன் இதெல்லாம் சொல்லித் தந்தது?” – அம்மா கேட்பதற்குள் கேற்றடியில் ‘பிக்-அப்’ வரும் ஓசை கேட்க சம்பாஷணை குழம்பியது.
இரவு அப்பாவிடம் கேட்டான்.
“அப்பா கோழிக்குஞ்சு பார்த்திட்டு வருவமே”.
“இப்ப இரவிலேயோ?” அப்பா.
“குஞ்சுகள் எப்படி நித்திரை கொள்கிறது எண்டு பாப்பம் அப்பா” என்றான் கோபு.
“சரி வாங்கோ” – என்று அப்பா ரோச்சையும் எடுத்துக்கொண்டு வந்தார். கோழிக்கூட்டு இடுக்கு வழியாக கோபு பார்த்தான். ஒரு குஞ்சையும் காணவில்லை. தாய்க்கோழி கொக்.. கொக்…. என்றது. பின்னர் கொஞ்ச நேரத்தில் ஒவ்வொரு குஞ்சாக கோழியின் இறக்கைக்குள் இருந்து எட்டிப்பார்த்தன. ஒரு குஞ்சு வெளியால் வந்து தாய்க் கோழி மேல் தாவி ஏறியது. ரோச் வெளிச்சத்தில் அவற்றுக்கு கண் கூசியது போலும். கண்ணை மூடி மூடி திறந்தன. கோபுவுக்கு தன்னைப் பார்த்து நக்கலாகக் கண்ணடிப்பது போல் தோன்றியது. கோழி கொத்திய கையைத் தடவிக்கொண்டான்.
“பார்த்தது காணும் வாங்கோ போவம்” அப்பா தூக்கிக் கொணடார்.
“ஆட்டின்ர குட்டியை நாங்கள் பிடிச்சாலும் ஆடு இடிக்குமோ அப்பா?” – கோபு கேட்டான்.
“ஓமப்பன். எல்லா மிருகங்கள், பறவைகள் எல்லாம் தங்கட குட்டியளைக் கவனமாகப் பாதுகாக்கும். அதுகளின்ரை குட்டிக்கு ஏதேனும் செய்தால் எங்களுக்குத்தான் அதுகள் அடிக்க வரும்” அப்பா சொன்னார்.
“”அப்ப அதுகளுக்கு ஐந்தறிவு தானே?” – கோபு கேட்டான். அப்பா ஓம் என்று தலையாட்டினார்.
“அப்ப எங்களுக்கு ஏன் ஆறறிவு?” – கோபு தீவிரமாகக் கேட்டான்.
“அவர் இப்ப ஆறறிவு ஆராய்ச்சியிலை இறங்கவிட்டாரோ. இப்ப சாப்பிட வாங்கோ. பேந்து ஆராயலாம்” – அம்மா அழைத்தாள். இரவு படுக்கும் போது இந்தக் கேள்வி நினைவு வந்தாலும் காலையில் கேட்கலாம் என்ற நினைவில் கோபு தூங்கிப் போனான்.
காலை எழுந்த போது வீட்டில் ஆளரவம் இல்லாதது கோபுவுக்கு ஆச்சரியமாக இருந்தது. “குட்மோனிங்” சொல்ல சித்தியையும் காணவில்லை. வீட்டின் முன்னாலும் ஒருவருமில்லை. தெருவில் ஆளரவம் அதிகமாக இருந்ததை கோபு உணர்ந்தான். அந்தத் தெருவிலுள்ள ஷெல்லடியால் இடிந்து போன வீட்டின் முன் பலர் குழுமி நின்றார்கள். கோபு கேற்றடியில் நின்றே “அம்மா! அம்மா” என்று அழைத்தான். அம்மா விரைந்து வந்து தூக்கிக்கொண்டு திரும்பவும் அதே வீட்டிற்கே சென்றாள். அண்மித்த போது தான் கோபுவால் அந்த ஒலியை உணர முடிந்தது. “குவா... குவா...” என்று ஒரு குழந்தை அழும் சத்தம் கேட்டது. அம்மாவின் மேலிருந்தவாறே கூட்டத்திற்குள்ளால் எட்டிப் பார்த்தான். அட! சரியான சின்னக் குழந்தை, இப்ப தான் பிறந்த மாதிரி அவ்வளவு சின்னனாக இருந்தது.
“இஞ்சை தள்ளுங்கோ பொலீஸ் வருகுது” – யாரோ கத்தினார்கள்.
கோபு திடுக்கிட்டுப் போனான் “ஏன் பொலீஸ்?” – அவன் கேள்வியை அம்மாவே கவனித்த மாதிரி தெரியவில்லை.
“எந்தப் பாவி இப்படி விட்டிட்டுப்போனாளோ?” – பக்கத்து வீட்டு ஆச்சி முனகினாள்.
“இதுகளுக்கெல்லாம் என்னண்டுதான் மனம் வருகுதோ?” – இது பாக்கியம் மாமி
அம்புலன்ஸ் வந்து குழந்தையை ஏற்றிக்கொண்டு போனது. அதனது அழுகை கோபுவை என்னவோ செய்தது. எல்லோரும் பலவித விமர்சனங்களுடன் கலைந்து போனார்கள். அம்மா கோபுவை அணைத்தாவாறே நடந்தாள்.
“இந்த பபாவின்ரை அம்மா எங்கயம்மா?” – கோபுவின் குரல் உடைந்திருந்தது.
“அவ எங்கேயோ போயிட்டாவாம்” – அம்மா
“ஏன் – விம்மலுடன் வந்தது கேள்வி. அம்மா இன்னும் இறுக அணைத்துக்கொண்டாள்.
“அவவிற்குப் பிடிக்கல்லையாக்கும்” – அம்மா சமாளித்தாள்.
“இனி இந்த பபாவை என்ன செய்வினம்?” – கோபு கேட்டான். அம்மாவுக்கும் குழப்பமாக இ்ருந்தது. ஆனாலும் சொன்னாள்.
“யாரும் பபா வேணுமெண்டால் குடுப்பினம்.
அப்படி ஒருதரும் வராட்டில்....?” – இது கோபு.
“என்னப்பன் நீங்கள்” அம்மாவிற்கும் அழுகை வந்த மாதிரி இருந்தது.
“கட்டாயம் யாராவது வருவினம். நீங்கள் நேசறிக்கு வெளிக்கிடோணுமில்லே” – அம்மா பேச்சை மாற்றினாள்.
கொஞ்ச தூரம் வரை கனதியான மெளனம் நீடித்தது. கோபு அம்மாவின் தோளில் சாய்ந்து படுத்திருந்தான். அவனுக்குள் பல சிந்தனைகள். தொண்டைக்குள் ஏதோ அடைத்தமாதிரி இ்ருந்தது. கண்ணை இறுக மூடிக்கொண்டான். அவன் நினைவில் நேற்றைய நிகழ்ச்சிகள் தோன்றின. நாய்க்குட்டி தாயின் மேல் சாய்ந்து கொண்டு திமிராகப் பார்த்தது. கோழிக்குஞ்சு கண்ணடித்து நக்கலாய்ப் பார்த்தது. அவனது கண்ணால் நீர் வடிந்தது. சட்டென்று நிமிர்ந்து கோபு தாயிடம் கேட்டான் “ஓ... இது தான் அந்த ஆறறிவோ?”
கேள்வியால் மிகவும் அதிர்ந்து நிமிர்ந்து நோக்கினாள் அந்தத் தாய்……. தன் சேயை……!