இந்த சிகை அலங்கரிப்பு என்கிறது உங்களுக்கு எப்படியோ தெரியாது. ஆனால் எனக்கு அது ஒரு இன்பமான அனுபவம். அதற்கேற்றமாதிரியே தலை மயிரும் மசமசவென்று வளர்ந்து விடும். எனவே மாதத்திற்கு ஒரு முறையாவது எனக்கு இந்த அனுபவம் கிட்டும். பாபரின் கையிலுள்ள சீப்பு தலையில் மேயும் போதும் கத்தரிக்கோல் இதமாக சிகைக்குள் ஊடுருவும் போதும் கிறக்கமாக இருக்கும்.
சின்னப்பிள்ளையாக இருக்கும் போதெல்லாம் வீட்டிற்கு பாபர் வருவார். வீட்டிற்குப் பின் நிற்கும் கொய்யா மரநிழல் தான் தற்காலிக சலூனாகும். காலையில் நடக்கிற ஏற்பாடுகளே வீட்டிற்கு பாபர் வரபோவதை பறைசாற்றும். சிகைக்காய் ஊறப்போடுவதிலிருந்து பனங்குடலைக்குள் ஆட்டிறைச்சி வருவது வரை ஒரு முதலாந்தர முழுக்கு இண்டைக்கு இருக்கு என்பதை ஞாபகப்படுத்தும்.
அநேகமாக குடும்பத்தில் வரிசைக் கிரமத்தில் நான்தான் முதலாவது ஆளாய் கொய்யாமரத்தின் கீழ் பலகையில் இருக்க வேண்டும். பாபர் தனது பையிலிருந்து எடுத்து பரப்பும் சாதனங்களையே ஒரு பயம் கலந்த த்ரிலுடன் பார்த்துக் கொண்டிருப்பேன். ஆச்சி இடைக்கிடை வந்து மேற்பார்வை வேறு. மணியம் "சின்னவனுக்கு நல்ல பொலிஸ் குறப் அடிச்சு விடப்பா". எனக்கு அதில் உடன்பாடு இல்லாவிட்டாலும் பிற்பாடு சில சுவாரஸ்யமான தருணங்களுக்காக உடன்படுவேன். அவசரப்படாதேங்கோ.... அந்த தருணங்களைப் பிறகு சொல்கிறேன்.
ஆரம்பத்தில் தண்ணீர் எல்லாம் தலைக்குப் போட வேண்டியதில்லை. நல்லெண்ணையையே பானையைக் கவிழ்த்து ஊற்றிவிட்ட மாதிரி முகம் முழுக்க வழியிற மாதிரி ஆச்சி அப்பி விடுவா. முதலில் உச்சி பிரித்து நாடியில் பிடித்து தலை நிமிர்த்தி அப்பிடியும் இப்பிடியும் பார்த்துவிட்டு பாபர் வேலையை தொடங்கினார் என்றால் நான் என்னை மறந்து போவேன். காதில் ஒலிக்கும் கீச் கீச் கத்தரிக்ககோல் சத்தமும் சீப்பு கேசத்தை அடிக்கடி வருடும் போதும் ஆஹா என்ன ஒரு அனுபவம்!
வெட்டி முடிய முடி ஒதுக்கும் கத்தி பாவிப்பார் பாபர். எனக்கு அது ஒரு த்ரிலிங். இதற்கிடையில் ஆச்சியும், அம்மாவும் இடைக்கிடை விஜயம் செய்து உபரியாக ஏதாவது அழகு உபாயங்கள் உதிர்த்துவிட்டு போவார்கள். நான் ஒரு ஞான + பரவச நிலையில் அமர்ந்திருப்பேன். அவ்வப்போது தம்பி குனியப்பா - ஆ... இந்தப் பக்கம் என்று மணியத்தாரிடமிருந்து அறிவிப்புக்கள் வரும் போது இயந்திர தனமாக இயங்குவேன். முடி ஒதுக்கும் கத்தியால் காதை மடித்துக்கொண்டு மெதுவாக உரசி உரசி அப்பிடியே பிடரி வரை கொண்டுவந்து ங்ய்ய்...... என்று அப்பிடியே ஒரு லாவகமான இழுவை.... அந்த அதிர்வு அப்படியே கால்வரை சுண்டியிழுத்து புல்லரித்து ஒரு மெய்சிலிர்த்த நிலை அடைவேன். சில வேளைகளில் ஆச்சியிடம் முதலே சொல்லி அப்படி இரண்டு மூன்று தரம் இழுக்க வைத்திருக்கிறேன்.
இறுதியாக பிடரியில் பவுடர் பஞ்சால் ஒத்தி மணியத்தார் அப்பிடியும் இப்பிடியும் பார்த்து துண்டால் ஒரு உதறு உதறி முதுகில் ஒரு தட்டு தட்டினார் என்றால் ஓ.கே ஆட்டம் முடிவடைந்தது என்று அர்த்தம்.
தலையில் சடை குறைந்து பொலிஸ் குறப்பில் காற்று கொஞ்சமும் தயக்கம் இல்லாமல் நுழைந்து மண்டையில் படும்போது லக்ஸ் விளம்பர நங்கை மாதிரி ஒரு புத்துணர்ச்சி ஏற்படும்.
அதன் பின்னர் நான் ஆறாம் வகுப்பு அப்படி படிக்கும் போது வீட்டில் சிகை அலங்கரிக்கும் நிலை மாறி சலூனிற்கு போக வேண்டிய நிலை வந்தது. அடிப்படை விஷயந்தான் மாறாவிட்டாலும் உயரமான கதிரையும், பெரிய கண்ணாடியில் முடி கபளீகரம் செய்யப்படுவதை நேரடியாக தரிசிப்பதும், ஸ்பிறேயரில் தண்ணி அடிப்பதும் என்னதான் எண்ணெய் வைச்சாலும் தண்ணியை தலையில் ஒரு தடவை அடிச்சே தீருவார்கள். கண்ணாடிக்கு பக்கத்தில் கட்டண விபரங்கள் சுத்திவர ரஜனி, சிவாஜி, ரேவதி, சிலுக்கு படங்கள். மூலையில் சாமிப்படங்கள். முன்னால் சிணுங்கிக் கொண்டிருக்கும் விளக்கு என்பவை மேலதிகமாகச் சேர்க்கப்பட வேண்டிய விசயங்கள்.
என்ன தான் ஆறாம் வகுப்பு என்றாலும் கதிரை கைப்பிடிச் சட்டத்தில் பலகை வைத்து இன்னும் உயரமாக ஏறி இருப்பது கொஞ்சம் வெட்கமாகத் தான் இருக்கும் என்றாலும் சுகானுபவத்திற்காக பொறுத்துக்கொள்வேன். இப்பவும் அடிப்படை அலங்கரிப்பு அப்பா பின்னால் இருந்து கொண்டே சொல்லும் பொலிஸ் குறப் தான். இவனுக்கு கெதியா வளர்ந்திடும். பள்ளிக்கூடத்திலும் கொலரில் முடி படக்கூடாதாம் - உபரி விளக்கம் வேறு. - என்றாலும் நான் சகித்க் கொள்வேன் - பிற்பாடு அந்த தருணங்களிற்காக - . இப்ப சலூன் அலுவல் முடிஞ்சு வீட்டிற்குப் போனால் நேரே ஹோலுக்குப் போக முடியாது சுத்திக் கொண்டு பின் பக்கமாக கிணற்றடிப் பக்கம் போனால் அங்கு விமர்சனப் பட்டாளமே இருக்கும். அம்மா, ஆச்சி, சகோதரிகள். எல்லோரும் ஆராய்ச்சி செய்து ஆளாளுக்கு தலையை தடவி காதுப்பக்கம் இன்னும் வெட்டியிருக்கலாம். இதென்ன இந்தப் பக்கம் இப்பிடி இருக்கு. அங்கால கூடியிருக்கு - எல்லா விமர்சனங்களையும் கடந்து ஆச்சி ஜட்ஜ்மெண்ட் செய்து எல்லாரையும் அடக்கி சரி போய் முழுகு என்றால் சரி. இல்லாவிட்டால் திரும்பி சலூனுக்கு போக வேண்டியது தான். இஞ்ச கொஞ்சம் இப்பிடி வெட்டட்டுமாம். பொலிஸ் குறப்பில் நின்று கொண்டு இப்படி மைனூட்டான அலங்கரிப்புக்கள் சொல்லும் போது பயங்கர வெட்கமாக இருக்கும்.
முழுகி விட்டு மத்தியானம் நல்ல பிடி பிடித்து விட்டு ஒரு நித்திரை கொண்டு பின்னேரம் மெதுவா எழும்பும்போது தான் அந்த 'தருணம்' தொடங்கும். அதான் முன்னம் சொன்னனே அந்த தருணம் தான். பின்னேரங்களில் தான் பக்கத்து வீட்டு தாரா - அது தான் தாரங்கி - இது சுருக்கமாக தாரா. வரும்போதே இஞ்ச பாரேன் ஆளை மொட்டை பாப்பா என்று தலையை வாஞ்சையாக தடவி பிடரிமயிரில் கையால் தடவி 'ஐயோ கூசுது' என்று சொல்லும் போது நான் பிறவிப் பயன் எல்லாவற்றையும் அடைந்து விடுவேன்.
அதாவது நான் முன்பு குறிப்பிட்ட குழந்தைப் பருவத்திலிருந்து இது தொடர்ந்து வந்ததால் இருபது வயதிலும் நான் கட்டாயமாக பொலிஸ் குறப் வைத்துக் கொண்டு வேண்டுமேன்று பிடரியில் ஒரு சென்ரிமீற்றர் விட்டு வெட்டிக்கொண்டு அடிக்கடி பிடரியைக் காட்டிக் கொண்டு தாராவுக்கு முன்பு நிற்கும் போது இந்த மொட்டையைப் பாருங்கோவன் என்று குமாரி தாரா விரலால் பிடரியில் தடவும் போதும் இது விரசமாக படவில்லை. இந்த நேரத்தில் குமாரி தாராவை நான் வர்ணிக்கவில்லை எனின் அது நான் தமி்ழ் எழுத்துலகத்திற்கு செய்த பெரிய துரோகமாயிடும். ஆனாலும் நான் கொஞ்சம் பாஸ்ட் ஜெனரேசன். அதாலை நான்கு வரியில் எங்கேயோ கேட்ட கவிதை வரிகளை அப்படியே தாராவுக்கு அப்ளை பண்ணுகிறேன்.
நான்காம் பிறை பார்த்தால்
நாய் படாப் பாடென்பார்
நானோ - முழு நிலவைப் பார்த்துவிட்டு
அனுதினமும் அலைகின்றேன்.
இப்பிடியாக தொடங்கி தாரா கடைசியில் என்னை சொந்தமாகவே கவிதை எழுத வைத்து விட்டாள். அதற்கு கரு அவள் என்னைப் பார்த்தவுடன் சொல்லும் 'ஹாய்' தான். அதில் பிறந்தது தான் இந்தக் கவிதை அல்லது கவிதை மாதிரி்.
ஆம்ஸ்ரோங் நிலவு செல்ல
அப்பலோ தேவையானது
ஆனால் - எனக்கோ
அவளின் ஒரு 'ஹாய்' மட்டும் -
உங்களுக்கு பிடிச்சிருக்கோ தெரியாது . ஆனால் எனக்கு பிடிக்க வேண்டிய ஆளுக்கு பிடிச்சிருந்ததில் நான் வெற்றிப் பெருமகனானேன்.
இந்த நேரத்தில் தான் நான் வேலை கிடைத்து A9 ஆல் தலைநகரம் செல்ல வேண்டி இருந்தது. அங்கும் போய் ஒரு சலூனில் சிகை அலங்கரிப்பு செய்வோம் என்றால் அங்கு அடிப்படையையே மாற்றியிருந்தார்கள். அங்கு குசன் வீல் கதிரைகள் .சமாந்தர கண்ணாடிகள், சுவரில் தனுஷ், திரிசா, மும்தாஜ், சகிலா என்று படங்கள் மூலையில் சுவாமி படம் கலர் கலராய் பல்ப் ஒளிர்ந்து கொண்டிருந்தது. கத்தரிக்கோலுக்கு பதில் மின்சார வெட்டும் சாதனம் (Electronic Hair Dressing Machine) டெனிம், புறோஸ்போட் லோசன்கள் இன்னும் எத்தனையோ. யாரோ தனக்கு முன்னால் தான் பிளேட் மாத்தோணும் என்று அடம்பிடித்துக் கொண்டிருந்தார்கள். எய்ட்ஸ் பயம். பவ்யமாக வெல்வெட் வெள்ளை சால்வை போத்தி அண்ணை எப்படி வெட்டுவம் நான் வழக்கம் போலவே நல்ல ஷோட்டா வெட்டுங்கோ என்றுவிட்டு இது வேண்டாம் கத்தரிக்கோலாலேயே வெட்டுங்கோ என்றேன். சலூன் காரன் நான் ஏதோ சபையில் செய்யக்கூடாததை செய்து விட்டவன் மாதிரி பார்த்தான். எனக்கு கத்தரிக்கோலால் வெட்டத் தெரியாது. இது தான் நல்லாயிருக்கும். இருங்கோ என்றுவிட்டு வேலையை தொடங்கினார். இரண்டு நிமிஷம் கொஞ்சம் வெக்கை காத்து அடிச்சது சட்டென்று போர்வை உதறி தட்டி சரி என்ற போது நான் திடுக்கிட்டுவிட்டேன். என்ன சரியோ என்று கண்ணாடியில் பார்த்தபோது அன்னியன் ஒருவன் கண்ணாடியில் தெரிந்தான். பின் இது வே வழக்கமாகி விட்டது.
இடையில் ஊருக்கு வந்த போது பாட்டி ஒப்பாரி வைத்தாள். எடேய்.. எப்படி இருந்த தலையடா இப்படி குரங்கு மாதிரி வந்து நிற்கிறியே. வளந்திடும் ஆச்சி வளந்திடும் - நான் ஆச்சியை சமாதானப்படுத்தினேன். ஆச்சிக்கு வயதேற ஏறத்தான் பிடிவாதமும். ஒரேயடியாய் பிடித்துக்கொண்டாள். உப்பிடியே வளர்ந்தால் சரியாய் வளராது. அடி - மொட்டையை - நான் அதிர்ந்து போனேன். - சே - தாரா என்ன நினைப்பாள். ஆனாலும் ஆச்சியின் பிடிவாதம் வென்று மொட்டையடித்து முழுகி பின்னேரம் சந்தனம் பூசி நின்ற போது - தாரா வந்தாள். எனக்கு உண்மையா கண் கலங்கீட்டுது. தாரா அழுதே விட்டாள். இது என்ன மொட்டை போட்டுக்கொண்டு செல்லமாக தலையை தடவ கையில் சந்தனம் - அழாதையடி பெட்டை கலியாணத்துக்கு முன்னம் அவனுக்கு தலைமயிர் வளர்ந்திடும் என்று தாராவின் கன்னத்தில் செல்லமாக கிள்ளினாள் ஆச்சி. எனக்கு இன்ப அதிர்ச்சி - அட இந்த கிழவியளுக்குத் தான் எவ்வளவு ஞானம் - நானும் தாராவும் கனகாலத்திற்கு பிறகு வெட்கப்பட்டோம்.
Thursday, August 11, 2011
சிகை
Monday, July 25, 2011
எனது முதலாவது சிறுகதை - "ஆறறிவு"
ஆறறிவு
(யாழிலிருந்து வெளிவந்த "சஞ்சீவி" வாரப்பத்திரிகையில் "விஷ்ணுவர்த்தனன்" என்ற புனைபெயரில் 19.09.1998 அன்று பிரசுரமானது.)
கோபுவிற்குச் சந்தோசமாக இருந்தது. இன்று நேரத்துடனேயே அம்மம்மா வந்துவிட்டாள். நேசறிக்கு இன்று பிள்ளைகளும் குறைவு. எப்போது அம்மம்மா வருவா என்று பார்த்துக் கொண்டேயிருந்தான்.
நேசறியில் ரீச்சர் சொன்னது அவனுக்குப் புதினமாக இருந்தது.
“எங்களுக்கு எல்லாம் ஆறு அறிவு இருக்கு. ஆனால் மிருகங்களுக்கு ஐந்தறிவுதான்” கோபுவின் மனதில் மீண்டும் மீண்டும் இதே வாக்கியம் எதிரொலித்தது.
நேற்றுப் பெய்த மழையால் சகதியாகிவிட்ட ஒ
ழுங்கையில் அம்மம்மா கூட்டிச் சென்றாள்.
தன்னிடம் எழுந்த ஐயத்தை அம்மம்மாவிடமே வெளியிட்டான் கோபு.
அம்மம்மா! எங்களுக்கு இருக்கிற ஆறாவது அறிவு என்ன? அம்மம்மா வியப்புடன் பார்த்து “அது அப்பன்……” என்று தொடங்குவதற்குள் கந்தையா மாஸ்டரைக் கண்டுவிட்டாள்.
“அப்ப மாஸ்டர் சாந்தி விசயம் என்ன மாதிரி”
சரி. இனி அம்மம்மா கதைக்க வெளிக்கிட்டுட்டா. கோபுவுக்கு சலிப்பாக இருந்ததது. இலேசில் முடிகின்ற பேச்சாகவும் அவனுக்குத் தோன்றவில்லை. சித்தியின் கல்யாண விஷயம் தான் பேசப்படுகிறது என்று அவன் அறிந்திருந்தான். ஆனால் வீட்டுக்கு விரைவாகப் போவதே அவனுக்கு விருப்பமாயிருந்தது. சுற்றிலும் வேடிக்கை பார்க்க ஒன்றும் இல்லை.
அட! அவனுக்கு ஆச்சரியமாகவும் சந்தோஷமாகவும் இருந்தது.
தெரு ஓரத்தில் சற்றுத் தொலைவில் ஒரு நாய் குட்டிகளுடன் படுத்திருந்தது. குட்டிகள் ஒய்யாரமாக தாய் நாயின் வயிற்றில் சாய்ந்து படுத்திருந்தன. தாய் நாய் கண்ணை மூடியிருந்தாலும் குட்டிகள் விழிப்பாகவே இருந்தன. அந்த நாய்க் குட்டிகள் தன்னை மிகவும் அலட்சியமாக நோக்குவதாக கோபுவுக்குப் பட்டது. தாங்கள்அ
ருகில் நிற்பது பற்றிய உணர்வின்றி அவை திமிர்தனமாக நின்ற மாதிரி அவனுக்குத் தோன்றியது. அது தனது கெளரவத்தை பாதிப்பதாகவும் அவன் நினைத்தான். எதாவது செய்ய வேண்டும். அவன் சுற்றும் முற்றும் பார்த்தான். கதைப்பராக்கு என்றாலும் அம்மம்மா கையை இறுகப் பிடித்திருந்தது அவனுக்கு இடைஞ்சலாக இருந்தது. ஒன்றும் செய்ய முடியாது. காலடியை நோக்கினான். சிறுகற்கள் தான் இருந்தன.
குனிந்து ஒன்றை எடுத்தான். அம்மம்மாவின் பிடி தளரவில்லை. ஆனாலும் பரவாயில்லை.
நான்கு குட்டிகளுள் ஒன்று இப்போ தாயின் வயிற்றின் மீது ஏறி நின்ற காட்சி மிகவும் அழகாக இருந்தது. ஆனாலும் அது “உன்னால் இப்படி முடியுமா?” என்ற தோரணையில் அலட்சியப் பார்வை பார்த்தது கோபுவிற்குப் பிடிக்கவில்லை. மெதுவாக ஒரு கல்லை எறிந்தான். அவன் அந்த சின்னச் செயலை மட்டுமே செய்தான். அவ்வளவு தான் கண்ணை மூடியிருந்த தாய் நாய் ‘விலுக்’ கென்று நிமிர்ந்தது. ‘லொள்’......என்று கொண்டே பாய்ந்து வந்தது.
“ஐயோ!, நாய் தள்ளுங்கோ! அடீக்!” என்றவாறு கந்தையா மாஸ்டர் சைக்கிளை நாயை தடுக்கு முகமாக திருப்பி விட்டார்.
கோபு வெலவெலத்துப் போனான். அம்மம்மா சடாரென்று அவனைத் தூக்கியிருந்தாள்.
“என்னப்பன் செய்தனி....?” அம்மம்மாவின் குரலில் கடுமையிருந்ததை அவதானிக்க முடிந்தது.
“நான்... கல்” கோபுவால் பேசமுடியாதவாறு அதிர்ச்சியாக இருந்ததது. அம்மம்மா அணைத்துக்கொண்டாள்.
“அது குட்டிபோட்ட நாயெல்லே. அதுக்கு எதாவது செய்தால் குட்டிக்குத்தான் ஏதோ செய்கினம் எண்டு எங்களை தான் கடிக்கும்” அம்மம்மா சொன்னார்.
“குட்டி போட்ட நாயிட்ட வலு கவனமாக இருக்கோனும் தம்பி. நாங்கள் கனநேரமாகக் கதைச்சது தம்பிக்கு போரடிச்சுப் போச்சுப் போல, கதிகலங்க வைச்சுட்டானே”..... கந்தையா மாஸ்டர் கோபுவின் கன்னத்தில் தட்டி விட்டு சைக்கிளில் ஏறினார்.
“ஓமோம்.. பிறகு ஆறுதலாகக் கதைப்பம். சொன்னதை மறந்து போயிடாதையுங்கோ” அம்மம்மா விடைபெற்றார்.
ஓமோம். அதெல்லாம் நான் பார்த்து செய்யிறன். அப்ப வாங்கோ” கந்தையா மாஸ்டர் போய்விட்டார்.
“கோபுவிற்கு இண்டைக்கு என்ன வந்தது? றோட்டிலை குழப்படி செய்ததை அப்பாட்டை கட்டாயம் சொல்ல வேணும்” அம்மம்மா கூறிக்கொண்டே அவனை இறக்கி விட்டாள். கோபு திரும்பிப் பார்த்தான். தாய் நாய் சுற்றும் முற்றும் பார்த்து தனதும், குட்டிகளினதும் பாதுகாப்பை உறுதி செய்து கொண்டது. குட்டிகள் தாய்க்கு கீழே நின்றன. இன்னும் திமிராகப் பார்த்தன. கோபுவுக்கு அவமானமாய் இருந்தது. ஆனாலும் ஒன்றும் செய்ய முடியாது.
வீட்டில் எதிர்பார்த்தளவு நிலமை மோசமில்லை. விடயத்தை அம்மம்மா சொல்ல “ஏன் கண்ணா?...” என்று சித்தி பின்பக்கத்தில் செல்லமாகத் தட்டினாள்.
“தம்பிக்கு குழப்படியள் கூடிப்போச்சு...” என்றதுடன் அம்மா நிறுத்திக்கொண்டாள். அவனுக்கு அப்பாடா என்று இருந்ததது. அப்பா பின்னேரம் தான் வருவார் முன்னம் ஊதி ஊதி மண்ணெண்ணையில் ஓடுகிற மோட்டார் சைக்கிளில் தான் வேலைக்குப் போகிறவர். இப்ப அவரை ‘பிக்-அப்’ ஒன்று வந்து ஏற்றிக்கொண்டு போகும். போகும் போதும் வரும்போதும் தெருவில் பெரிய தூசிப் படலமே கிளம்பும்.
பக்கத்து வீட்டு ராஜனும் பள்ளிக்கூடத்தால் வந்துவிட்டான். ஆனால் அவன் இன்னும் விளையாட வரவில்லை. இது கோபுவுக்கு பெரும் விசராக இருந்தது. ‘அவன்ர அம்மா ஏதோ பேசிப்போட்டா போல’ கோபு நினைத்துக்கொண்டான். அவனுக்குத் தெரியும்: “கழுதை, எருமைமாடு, மூதேவி” என்றெல்லாம் ராஜனை அவனது அம்மா ஏசுவது இங்கே கேட்கும். ஏன் என்ற காரணம் கோபுவுக்குத் தெரியாது. ஏச்சு விழுந்த காரணத்தை ராஜன் சொன்னால், தான் செய்யும் குழப்படிக்கு எப்படியான ஏச்சு விழும் என்று நினைக்கவே கோபுவுக்கு உடம்பு சிலிர்க்கும்.
கோபுவின் அம்மா அப்படி அல்ல. கோபு தனது அம்மாவின் கண்களுக்குள்ளேயே எல்லாவற்றையும் கண்டுகொள்வான். தாயார் ஒரு பார்வை பார்த்தால் காணும். அதுவும் இல்லையென்றால் கிட்டத்தில் அணைத்துக்கொண்டு முகத்தோடு முகம் வைத்து “இனி இப்படிச் செய்யாதையுங்கோ” என்றால் பிறகு கோபு அப்படியான குழப்படியைச் சிந்தித்தும் பார்ப்பதில்லை.
அன்று பின்னேரமும் ராஜன் வரவில்லை. கோபுவுக்குச் சலிப்பாக இருந்தது. “அப்பன்! நாங்கள் கோழிக்குஞ்சு அடைப்பம் வாங்கோவன்” அம்மம்மா அழைத்தாள். கோபுவுக்கு உற்சாகமாக இருந்தது. வீட்டிற்குப் பின்னால் போனார்கள்.
“பா....பா...........” அம்மம்மாவுடன் தானும் சேர்ந்து கத்தினான். முதலில் தாய்க்கோழி வந்தது. புற்களுக்குள் இருந்து அம்பாய் குஞ்சுகள் புறப்பட்டு வந்தன. அரிசியைத் தூவினார்கள்.
“கோபு அந்தக் கூட்டை எடுங்கோ” – அம்மம்மா சொன்னார். கூட்டை மெதுவாக சரித்துப்பிடித்தபடி குஞ்சுகளை உள்ளுக்கு விரட்டினார்கள். ஒரு குஞ்சு வெளியால் பாய்ந்தது. கோபு உற்சாகமாய்ப் பிடிக்கப் போனான். “கோழி கொத்தப் போகுது விடுங்கோ” என்று அம்மம்மா சொல்வதற்குள் விநோதமான ஒலியை எழுப்பியபடி கோழி சிலிர்த்துக் கொண்டு வந்தது. வெடுக்கென்று கோபுவின் கையில் கொ
த்தியது. “நான் சொன்னன் பார்த்தீங்களா....” அம்மம்மா எல்லாவற்றையும அப்படியே விட்டுவிட்டு அவனிடம் ஓடி வந்தாள். கோபுவுக்கு வலித்தது. ஆனால் அழுவதில் உடன்பாடு இல்லை. ஆனாலும் கண்களில் நீர் முட்டி விட்டது. மண்ணுக்குள் சரிந்து விழுந்ததில் மண் எல்லாம் உடம்பில் அப்பிக்கொண்டது. அம்மம்மா கோபுவைத் தூக்கி மண்ணைத் தட்டி விட்டாள். ஆரவாரம் கேட்டு முன்பக்கம் கதைத்துக்கொண்டிருந்த அம்மாவும் பக்கத்து வீட்டு அன்ரியும் வந்தார்கள்.
“இவனையும் ஏனம்மா விட்டனீங்கள்?” அம்மம்மாவை அம்மா கடிந்துகொண்டாள்.
“சரி சரி! நீங்கள் அடையுங்கோ. இவனுக்குமேல் கழுவி விடோணும். மேலெல்லாம் சேறு” – அம்மா கிணற்றடிக்கு கூட்டிச் சென்றாள்.
பக்கத்து வீட்டு அன்ரியும் நின்றது கோபுவுக்கு வெட்கமாக இருந்தது.
“என்ன கோபு அழுதவரோ?” – அன்ரி கேட்டார்.
“சீச்சீ, இல்லை” – கோபு அவசரமாகப் பதில் சொன்னான். கையில் காயம் எதுவும் இல்லையாயினும்அவனுக்கு வலித்தது.
கிணற்றடியில் உடம்பு கழுவும் போது மீண்டும் அதே கேள்வி கோபுவுக்கு எழுந்தது.
“அம்மா எங்கடை ஆறாவது அறிவு என்றால் என்ன?” அம்மாவுக்கு கேள்வி வியப்பாக இருந்தது.
“யாரப்பன் இதெல்லாம் சொல்லித் தந்தது?” – அம்மா கேட்பதற்குள் கேற்றடியில் ‘பிக்-அப்’ வரும் ஓசை கேட்க சம்பாஷணை குழம்பியது.
இரவு அப்பாவிடம் கேட்டான்.
“அப்பா கோழிக்குஞ்சு பார்த்திட்டு வருவமே”.
“இப்ப இரவிலேயோ?” அப்பா.
“குஞ்சுகள் எப்படி நித்திரை கொள்கிறது எண்டு பாப்பம் அப்பா” என்றான் கோபு.
“சரி வாங்கோ” – என்று அப்பா ரோச்சையும் எடுத்துக்கொண்டு வந்தார். கோழிக்கூட்டு இடுக்கு வழியாக கோபு பார்த்தான். ஒரு குஞ்சையும் காணவில்லை. தாய்க்கோழி கொக்.. கொக்…. என்றது. பின்னர் கொஞ்ச நேரத்தில் ஒவ்வொரு குஞ்சாக கோழியின் இறக்கைக்குள் இருந்து எட்டிப்பார்த்தன. ஒரு குஞ்சு வெளியால் வந்து தாய்க் கோழி மேல் தாவி ஏறியது. ரோச் வெளிச்சத்தில் அவற்றுக்கு கண் கூசியது போலும். கண்ணை மூடி மூடி திறந்தன. கோபுவுக்கு தன்னைப் பார்த்து நக்கலாகக் கண்ணடிப்பது போல் தோன்றியது. கோழி கொத்திய கையைத் தடவிக்கொண்டான்.
“பார்த்தது காணும் வாங்கோ போவம்” அப்பா தூக்கிக் கொணடார்.
“ஆட்டின்ர குட்டியை நாங்கள் பிடிச்சாலும் ஆடு இடிக்குமோ அப்பா?” – கோபு கேட்டான்.
“ஓமப்பன். எல்லா மிருகங்கள், பறவைகள் எல்லாம் தங்கட குட்டியளைக் கவனமாகப் பாதுகாக்கும். அதுகளின்ரை குட்டிக்கு ஏதேனும் செய்தால் எங்களுக்குத்தான் அதுகள் அடிக்க வரும்” அப்பா சொன்னார்.
“”அப்ப அதுகளுக்கு ஐந்தறிவு தானே?” – கோபு கேட்டான். அப்பா ஓம் என்று தலையாட்டினார்.
“அப்ப எங்களுக்கு ஏன் ஆறறிவு?” – கோபு தீவிரமாகக் கேட்டான்.
“அவர் இப்ப ஆறறிவு ஆராய்ச்சியிலை இறங்கவிட்டாரோ. இப்ப சாப்பிட வாங்கோ. பேந்து ஆராயலாம்” – அம்மா அழைத்தாள். இரவு படுக்கும் போது இந்தக் கேள்வி நினைவு வந்தாலும் காலையில் கேட்கலாம் என்ற நினைவில் கோபு தூங்கிப் போனான்.
காலை எழுந்த போது வீட்டில் ஆளரவம் இல்லாதது கோபுவுக்கு ஆச்சரியமாக இருந்தது. “குட்மோனிங்” சொல்ல சித்தியையும் காணவில்லை. வீட்டின் முன்னாலும் ஒருவருமில்லை. தெருவில் ஆளரவம் அதிகமாக இருந்ததை கோபு உணர்ந்தான். அந்தத் தெருவிலுள்ள ஷெல்லடியால் இடிந்து போன வீட்டின் முன் பலர் குழுமி நின்றார்கள். கோபு கேற்றடியில் நின்றே “அம்மா! அம்மா” என்று அழைத்தான். அம்மா விரைந்து வந்து தூக்கிக்கொண்டு திரும்பவும் அதே வீட்டிற்கே சென்றாள். அண்மித்த போது தான் கோபுவால் அந்த ஒலியை உணர முடிந்தது. “குவா... குவா...” என்று ஒரு குழந்தை அழும் சத்தம் கேட்டது. அம்மாவின் மேலிருந்தவாறே கூட்டத்திற்குள்ளால் எட்டிப் பார்த்தான். அட! சரியான சின்னக் குழந்தை, இப்ப தான் பிறந்த மாதிரி அவ்வளவு சின்னனாக இருந்தது.
“இஞ்சை தள்ளுங்கோ பொலீஸ் வருகுது” – யாரோ கத்தினார்கள்.
கோபு திடுக்கிட்டுப் போனான் “ஏன் பொலீஸ்?” – அவன் கேள்வியை அம்மாவே கவனித்த மாதிரி தெரியவில்லை.
“எந்தப் பாவி இப்படி விட்டிட்டுப்போனாளோ?” – பக்கத்து வீட்டு ஆச்சி முனகினாள்.
“இதுகளுக்கெல்லாம் என்னண்டுதான் மனம் வருகுதோ?” – இது பாக்கியம் மாமி
அம்புலன்ஸ் வந்து குழந்தையை ஏற்றிக்கொண்டு போனது. அதனது அழுகை கோபுவை என்னவோ செய்தது. எல்லோரும் பலவித விமர்சனங்களுடன் கலைந்து போனார்கள். அம்மா கோபுவை அணைத்தாவாறே நடந்தாள்.
“இந்த பபாவின்ரை
அம்மா எங்கயம்மா?” – கோபுவின் குரல் உடைந்திருந்தது.
“அவ எங்கேயோ போயிட்டாவாம்” – அம்மா
“ஏன் – விம்மலுடன் வந்தது கேள்வி. அம்மா இன்னும் இறுக அணைத்துக்கொண்டாள்.
“அவவிற்குப் பிடிக்கல்லையாக்கும்” – அம்மா சமாளித்தாள்.
“இனி இந்த பபாவை என்ன செய்வினம்?” – கோபு கேட்டான். அம்மாவுக்கும் குழப்பமாக இ்ருந்தது. ஆனாலும் சொன்னாள்.
“யாரும் பபா வேணுமெண்டால் குடுப்பினம்.
அப்படி ஒருதரும் வராட்டில்....?” – இது கோபு.
“என்னப்பன் நீங்கள்” அம்மாவிற்கும் அழுகை வந்த மாதிரி இருந்தது.
“கட்டாயம் யாராவது வருவினம். நீங்கள் நேசறிக்கு வெளிக்கிடோணுமில்லே” – அம்மா பேச்சை மாற்றினாள்.
கொஞ்ச தூரம் வரை கனதியான மெளனம் நீடித்தது. கோபு அம்மாவின் தோளில் சாய்ந்து படுத்திருந்தான். அவனுக்குள் பல சிந்தனைகள். தொண்டைக்குள் ஏதோ அடைத்தமாதிரி இ்ருந்தது. கண்ணை இறுக மூடிக்கொண்டான். அவன் நினைவில் நேற்றைய நிகழ்ச்சிகள் தோன்றின. நாய்க்குட்டி தாயின் மேல் சாய்ந்து கொண்டு திமிராகப் பார்த்தது. கோழிக்குஞ்சு கண்ணடித்து நக்கலாய்ப் பார்த்தது. அவனது கண்ணால் நீர் வடிந்தது. சட்டென்று நிமிர்ந்து கோபு தாயிடம் கேட்டான் “ஓ... இது தான் அந்த ஆறறிவோ?”
கேள்வியால் மிகவும் அதிர்ந்து நிமிர்ந்து நோக்கினாள் அந்தத் தாய்……. தன் சேயை……!
Wednesday, August 13, 2008
முதுமை
முதுமை குறித்தான நூலொன்றை அண்மையில் பார்க்கும் வாய்ப்புக்கிடைத்தது. உலகில் பொதுவாக அதிகரித்துள்ள குடும்பநல வசதிகள் காரணமாகவும் விஞ்ஞான முன்னேற்றங்கள் காரணமாகவும் மனிதரின் எதிர்பார்க்கப்படும் ஆயுட்காலம் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக உலகில் முதியோரின் எண்ணிக்கையும் வேகமாக அதிகரித்து வருகின்றது.
எனவே முதியோர் குறித்தான ஆய்வுகளும் தற்போது மேற்கொள்ளப்படுகின்றன. இந்த வகையில் யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்த இந்தநூல் என்னை ஆச்சரியப்படவைத்தது. முதுமை என்பது சர்வதேச ரீதியில் அணுகப்படத்தக்க ஒரு எண்ணக்கருவாக இருப்பினும் யாழ்ப்பாணச்சூழலை மையமாகவைத்து இந்தப்புத்தகம் முதுமை குறித்து ஆராய்வது காலத்தின் தேவை கருதிய பணி.
ஏனெனில் தொடர்ந்து வரும்போரால் இளம்சந்ததிகள் போரிட்டு மடிந்துபோகவும் எஞ்சியோர் புலம்பெயர்ந்து வெளிநாடுகளுக்குப்போகவும் யாழ்ப்பாணத்தில் எஞ்சியிருப்போர் முதியோர்களே.
எனவே இவர்கள் குறித்தான உளவியல் உடலியல் ஆய்வுகள் பிரதானமானது. அத்துடன் இப்போது யாழ்ப்பாணத்திலுள்ள முதியோர்கள் யாழ்ப்பாணத்தின் பல்வேறு பட்டகாலங்களில் ஏற்பட்ட அரசியல் சமூகமாற்றங்களுக்கூடாக வந்தவர்கள். இவ்வாறான மாற்றங்களின் இன்றையநிலை இவர்களுக்கு சலிப்பும் விரக்தியுமான ஒன்றாகவேயிருக்கும்.
பொதுவாக மனிதவாழ்வில் 40-45 வயதை தாண்டியவர்கள் தங்களை முதியவர்களாக எண்ணத்தலைப்படுகின்றார்கள். இதற்கு உடலில் ஏற்படும் மாற்றங்களும் (தலைநரைத்தல் உயர்குருதி அழுத்தம் போன்றன) உள்ளத்தில் ஏற்படும் மாற்றங்களும் (பிள்ளைகள் பெரியவர்களாக வளர்வது, தந்தை தாய் இறப்பு) காரணமாக அமைகின்றன.
எனவே இந்த வயதெல்லையிலேயே மனிதர்கள் சட்டென்று ஒரு 'பிறேக்' போட்டு சிந்திக்க தலைப்படுகிறார்கள். (விவேக் ஒரு படத்தில் சொல்வது போல.. 'அடடா நமக்கு ஏஜாகிப்போச்சா..')
இதன்காரணமாக இந்தவயதெல்லையில் பொதுவாக நடத்தைப்பிறழ்வுகள் ஏற்படுவதுண்டு. தாம் பின்பற்றி வந்த கொள்கைகள் வெற்றியளிக்காமை, 'எல்லாம் பின்னால் சரிவரும்' போன்ற சமாதானங்களுக்கான எல்லையாகவும் இந்தவயதெல்லை காணப்படுகின்றது.
இதனாலேயே நல்லவராக இருந்த சிலர் கெட்டவராக மாறுவதும் கெட்டவராக இருந்த சிலர் நல்லவராக மாறுவதும் நிகழ்கிறது. அத்துடன் ஆன்மீக நாட்டமும் அதிகரிக்கிறது. மேலும் பணியிலிருந்து ஓய்வுபெறும் வயதெல்லையும் இவர்களை முதியவர்களாக சிந்திக்கவைக்கிறது.
ஆயினும் பொதுவாக 60 வயதுக்கு மேற்பட்டவர்களே உண்மையில் முதியவர்களாக கணிக்கப்படுகிறார்கள். இந்த வயதுகளில் உடற்கலங்கள் படிப்படியாக சிதைவடைந்து போவதைப்போலவே உள்ளமும் இறப்பை நோக்கியதான ஒரு தயார்படுத்தலுக்கு உள்ளாகிறது.
இளையவரும் ஒருநாள் முதியவர்களாவார் என்பதையுணர்ந்து முதியவர்களின் ஆரோக்கியமான முதுமைவாழ்விற்கு உதவிடவேண்டும்.
"முயற்சிக்காமல் கிடைப்பது முதுமை மட்டுமே.."
Tuesday, July 22, 2008
தென்கிழக்காசிய வேங்கை - தென்கொரியா - 02
தென்கொரியா பெளத்தமதம் சார்ந்த நாடாக இருந்தபோதும் 46 வீதத்திற்கும் கூடுதலானவர்கள் எந்தமதத்தையும் சாராதவர்களாகவே இருக்கிறார்கள். விண்ணப்பப்படிவங்களில் கூட 'எந்த மதத்தையும் சாராதவர்..' என்ற தெரிவும் தரப்பட்டிருக்கும்.
30 வீதமானவர்கள் பெளத்தர்களாகவும் 15 வீதமானவர்கள் கிறிஸ்தவர்களாகவும் இருக்கிறார்கள். 50000 பேர்வரை முஸ்லிம்களாகவும் இருக்கிறார்கள்.
(படம் - கொரிய மயானம்)
மதநிகழ்வுகளில் மக்கள் பங்களிப்பு குறைவாக இருக்கும். வெசாக்குடன் வரும் ஊர்வலத்தில் இலங்கை பெரஹராவை ஒத்தஊர்வலங்கள் நடைபெறும்.
அரசியல் குறித்தும் பெரும்பாலானவர்கள் அலட்டிக்கொள்வதில்லை. அதற்கு அவர்களுக்கு நேரமும் இருப்பதில்லை. தற்போதய ஜனாதிபதி திரு.லீ மியுன் பக் அவர்கள் வேட்பாளராக இருந்தபோது கொரியாவின் ஹீண்டாய் நிறுவன ஊழல் வழக்கொன்றில் சம்பந்தப்பட்டிருந்தார். ஆனால் அதையும் மீறி மக்களால் அவர் தெரிவுசெய்யப்பட்டார். அதன்பின்னர் நீதிமன்றம் அந்த வழக்குகளில் இருந்து அவரை விடுவித்தது.
தேர்தல் பிரச்சாரங்கள் அமைதியாகவும் நாசூக்கான முறையிலும் செய்யப்படும்.
(படம்- வீதியோரத்தில் தேர்தல் பிரசாரம்)
பொதுவாக மேடையுடன் கூடிய வாகனம் ஒன்றில் வேட்பாளர் மக்கள்கூடும் சந்திகளில் உரையாற்றும்போது சீருடையணிந்த பெண்கள் அவருக்கு ஆதரவாக கோஷமிடுவார்கள். சுவரொட்டிகள் மற்றும் பதாதைகள் நகரசபையால் ஒதுக்கப்பட்ட இடங்களில் மட்டுமே காட்சிப்படுத்தப்படும்.
கொரியர்
களின் பாரம்பரிய உடை யப்பானியர்களின் கிமோனோ உடையை சிறிதளவு ஒத்தது. ஆயினும் இவ்வாறு பாரம்பரிய உடைகளை அணிபவர்களின் எண்ணிக்கை மிகக்குறைவு என்று சொல்லலாம். இளைய தலைமுறையினர் பெரும்பாலும் அமெரிக்கபாணியிலான நாகரிகங்களிலேயே ஆர்வம் காட்டுகிறார்கள்.
(படம் - கொரிய பாரம்பரிய உடை)
கொரியாவில் சாதாரணமாக விருந்துகளும் கதிரையில் இருக்காமல் நிலத்தில் தலையணை போன்ற திண்டின்மீது உட்கார்ந்தே விருந்து உண்பார்கள். விருந்தில் மதுவும் மாமிசமும் பிரதானமானது.
(படம் - கொரிய விருந்து)
போர் ஒரு முடிவுக்கு வந்தாலும் எல்லையில்காணப்படும் பதற்றத்தை காரணம்காட்டி அமெரிக்கத்துருப்பினர் 24000 வரையானவர்கள் தற்போதும் கொரியாவில் தங்கியிருந்து கொரியஇராணுவத்துக்கு உதவிவருகின்றனர். இதனால் கொரியா பல சங்கடங்களுக்கும் நிபந்தனைக்கும் ஆளாகிவருகிறது.
அமெரிக்க இராணுவத்தினருக்கென நெற்காணிகள் சுவீகரிக்கப்பட்டன. உள்ளுர் சந்தைவிலைகளைவிடவும் குறைவான விலையில் மாட்டிறைச்சியும் அரிசியும் அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றது.
அரசின் இவ்வாறான நடவடிக்கைகளுக்கு எதிராக மக்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.
(படம் - 18ம் நூற்றாண்டு அரச அரண்மனை)
அண்மையில் அரசால் சுவீகரிக்கப்பட்ட தனது காணிக்கு நட்டஈடு கிடைக்காததால் வெகுண்ட வயோதிபர் ஒருவர் புராதன மேற்குவாயில் என்று அழைக்கப்டும் வரலாற்று மரக்கட்டடம் ஒன்றிற்கு தீவைத்து அக்கட்டடம் முழுமையாக எரிந்து நாசமானது.
கோடை, மழை, குளிர், வசந்தம் என்ற நான்கு காலநிலைகள்
காணப்படுகின்றன. குளிர்காலமே இதில் அதிகம். கடும்குளிர் காரணமாக பொலிதீன் கூடாரங்களுக்குள்ளேயே பயிர்ச்செய்கை நடைபெறுகிறது. கோடைகாலத்தில் நெல்விதைப்பு இடம்பெறும். ஒப்பீட்டளவில் விவசாயிகள் வருமானம் குறைந்தவர்களாகவே இருக்கிறார்கள்.
தலைநகரம் சோலில் (Seoul) பார்க்கவேண
்டிய இடங்களாக பல நிறுவப்பட்
டுள்ளன. கடல் மட்டத்திலிருந்து 365மீற்றர் உயரமான சோல் ரவரிலிருந்து சோலை நாலாபக்கமும் தொலைநோக்கிமூலமும் கண்டுகளிக்கலாம். மலைஒன்றில் அமைக்கப்பட்டுள்ள இந்த கோபுரத்தின் அடிப்பகுதிக்கு கேபிள் கார் மூலம் செல்லலாம்.
இந்த கோபுரத்தின் அடிவாரத்தில் காதலர்களின் பெயர்கள் எழுதிய பூட்டுக்களை பூட்டி விட்டால் காதலர்கள் பிரியாமல் இணைந்திருப்பார்கள் என்று நம்புகிறார்கள்.
டிஸ்னிலாண்ட்
ஐ ஒத்த Lotteworld. Seoul land, Dream land, Everland என்று பல கேளிக்கை பூங்காக்கள் உள்ளன.
Coex Aquarium ம
ற்றும் 63city என்பவற்றில் கடல்வாழ் உயிரினங்களை நேரடியாக இராட்சதநீர்த்தொட்டி குகைகளில் காணமுடியும். தலைநநகரின் மத்தியில்ஓடும் ஆறான Han river என்பதில் 'ஜொய்னாறு' எனுமிடத்தில் கேளிக்கை படகுசவாரி செய்வதனூடாக இரவில் சோலின் அழகை இரசிக்க முடிவது இனிமையான அனுபவம்.
கோடைக
ாலத்தில் புகழ்பெற்ற கடற்கரையாக 'ஹியுந்தே' கடற்கரை விளங்குகிறது. இது பூசான் எனுமிடத்தில் தலைநகரிலிருந்து ஆறுமணிநேர பயணதொலைவில் உள்ளது. இவற்றை தவிர கொரிய கலைகலாசாரத்தை விளக்கும் நூதனசாலைகளும் தாவர மற்றும் மிருக காட்சிசாலைகளும் உல்லாசப்பயணிகளை கவருமிடங்களாக உள்ளன.
Yongsan, Technomart என்பவை பெரிய இலத்திரனியல் வர்த்தக நிலையங்களாகவும் Dongdamun, Namdamun என்பவை பிரத்தியேகமாக வெளிநாட்டினரை கவரும் பிரபல சந்தைகளாகவும் விளங்குகின்றன.
சோல் நகரசபையினர் பிரகடனப்படுத்திய 'Hi Seoul..! - Soul of Asia' என்ற மகுடவாக்கியம் இங்கு குறிப்பிடத்தக்கது.
Tuesday, July 8, 2008
தென்கிழக்காசிய வேங்கை - தென்கொரியா - 01
கொரியா வரும்போதே நான் பயந்துகொண்டே வந்தது கொரிய உணவுகளை எண்ணித்தான். நாய் இறைச்சியும் சாப்பிடுவார்கள் என்று இலங்கையில் பயமுறுத்தியிருந்தார்கள். இங்கு வந்ததும் அது உறுதியாகிவிட்டதுமல்லாமல் வந்த இரண்டு மாதத்திலேயே அதில் ஒரு துண்டும் தவறுதலாக வாய்க்குள் போய்விட்டது.
கொரியமொழியில் 'கோகி' (Kogi) என்பது இறைச்சியை குறிக்கும். தக்கோகி - கோழியிறைச்சி, தேஜிகோகி - பன்றி இறைச்சி, கேகோகி - நாய் இறைச்சி. இதில் நான் உண்பது தக்கோகி மட்டுமே. ஆரம்பத்தில் கொரியமொழியில் எதைச்சொன்னாலும் உச்சரிப்பை விளங்கிக்கொள்ளுவதில் சிக்கல் இருந்தது.
இலங்கையில் அலுவலக கோப்புகள் மற்றும் கடிதங்களில் என்னை சுருக்கமாக விளிப்பது Mr.K. என்று.. ஆனால் கொரிய மொழியில் 'கே' என்பது நாயைக்குறித்ததால் விதியின் கொடுமையையும் நொந்துகொள்ள வேண்டியிருந்தது.
எமது நாட்டில் கோழிகளை வீட்டில் வளர்ப்பது போல இவ்விடம் நாய்களை இறைச்சி மற்றும் வளர்ப்பு நோக்கங்களுடன் வளர்க்கிறார்கள். நாய்ப்பண்ணைகள் கூட இருக்கின்றன. வீதியோரங்களில் இருக்கும் நாய்ப்பண்ணைகளிலிருந்து இரவுநேரத்தில் நூற்றுக்கணக்கான நாய்கள் கோரசாக குரைப்பது திகிலாக இருக்கும்.
கொரிய உணவில் பிரதான இடம் வகிப்பது 'கிம்ஜி' என்ற உணவு. Secret of our energy என்று கொரியர்கள் சொல்லுமளவுக்கு எல்லோரும் எல்லா வேளைகளிலும் சாப்பிடும் ஒரு ஆகாரம் அது.
'பெச்சு' என்று சொல்லப்படும் முட்டைக்கோஸ் போன்ற அடுக்கான இலைகளுக்குள் உப்பு, சீனி, மிளகாய் தூள், மிளகுத்தூள், நசுக்கிய வெள்ளைப்பூண்டு மற்றும் பெயர்தெரியாத வஸ்துக்களெல்லாம் போட்டு மரப்பானைகளுக்குள் போட்டு வீட்டுக்கு வெளியில் வைப்பார்கள்.
பின்னர் சில மாதங்கள் கழித்து!! மரப்பானைக்குள் இருப்பதை துண்டுகளாக்கி சோறுடன் (பப்) உண்பார்கள். இப்போது கிம்ஜியின் நாற்றம் எப்பிடி இருக்கும் என்பதை நீங்களே கற்பனை செய்து கொள்ளலாம்.
ஆசிய நாடென்றபோதிலும் தெற்காசிய உணவுமுறைகளிலிருந்து கொரிய உணவுவகைகள் இவ்வளவு தூரம் வேறுபடுவது வேறு ஒரு கிரகத்துக்கு வந்த உணர்வையே தந்தது.
5000 ஆண்டு பழைமைவாய்ந்த கொரியா இரண்டாம் உலக யுத்தத்திற்கு முன்னர் யப்பானால் ஆக்கிரமிக்கப்ட்டு பலத்த அடக்கு முறைக்கு ஆளாகியது. ஒரு லட்சம் பேர் பலவந்தமாக யப்பானிய இராணுவத்துக்கு சேர்க்கப்பட்டார்கள்.
மேலும் கொரியர்களின் பெயர்கள் கூட யப்பானிய முறையிலேயே வைக்கவேண்டும் என்று கட்டளையிட்டதுடன் பெருமளவிலான பொருளாதார சுரண்டல்களும் (குறிப்பாக கடல்வளங்கள்) யப்பானால் மேற்கொள்ளப்பட்டது. அத்துடன் கொரியப்பெண்கள் மீதும் வன்முறைகள் மேற்கொள்ளப்பட்டன. இதனால் இன்றும்கூட கொரியர்கள் யப்பானை வெறுப்பவர்களாகவே காணப்படுவதுடன் யப்பானிய உற்பத்திப்பொருள்களையும் நிராகரிக்கின்றனர்.
இரண்டாம் உலகமகாயுத்த முடிவில் யப்பான் அமெரிக்காவிடம் சரணடைந்ததால் கொரியாவின் ஒரு பகுதியை அமெரிக்காவும் இன்னொரு பகுதியை ரஷ்யாவும் ஆதிக்கம் செலுத்தின. இதனால் ரஷ்ய கொம்யூனிசம் சார்ந்த பகுதி வடகொரியா என்றும் அமெரிக்க முதலாளித்துவ கொள்கை கொண்ட பகுதி தென்கொரியா என்றும் 1950 - 1953 வரை நடந்த போரின்பின் எல்லைகள் வகுத்து பிரிக்கப்பட்டது.
போரின்போது வடகொரியாவுக்கு சோவியத் ஒன்றியமும் சீனாவும் ஆதரவளிக்க தென்கொரியாவுக்கு அமெரிக்கா ஆதரவளித்தது. இலட்சக்கணக்கானவர்கள் போரின்போது மாண்டார்கள். கடல்தாவரங்களை காயவைத்து உண்ணும் அளவுக்கு வறுமைதாண்டவமாடியது.
போர்பற்றி ஒரு கொரிய வயோதிபர் சொல்லும்போது 'அமெரிக்க இயந்திர துப்பாக்கிகளுக்கு முன்னால் கொத்து கொத்தாக சீன இராணுவத்தினர் மடிந்தபோதும் அவர்கள் வெறும் கட்டுத்துப்பாக்கி (shot gun) ஐ வைத்துக்கொண்டு அலை அலையாக வந்தார்கள் என்று சீன இராணுவத்தின் ஆட்தொகையும் அர்ப்பணிப்பும் பற்றி குறிப்பிடுகின்றார்.
போரின்கொடுமை
யால் இரண்டு கொரியாவுமே வறுமையடைந்தன. 1953 தொடக்கம் 1958 காலப்பகுதிகளில் தென்கொரியா அமெரிக்காவிடமிருந்து வருடாந்தம் 27 கோடி டொலர் பெறுமதியான உதவிகளை பெற்றுவந்தது. இது அக்காலப்பகுதி மொத்ததேசிய உற்பத்தியின் 15 வீதமாகும்.
(தென்கொரிய பாராளுமன்றம்)
1960 ஆம் ஆண்டு தென்கொரியாவின் மொத்ததேசிய வருமானம் சூடான் நாட்டு வருமானத்துக்கு சமமானதாக இருந்தது. அதன் பின்னர் இராணுவ தலைவர்களே ஆட்சி செய்தாலும் உலகயுத்தத்தின் பின்னர் ஏற்பட்ட உலகமயமாக்கலுக்கு ஏற்றவகையில் பொருளாதார கொள்கைகளை வளர்த்துக்கொண்டதன் காரணமாகவும் புவியியல் அரசியல் காரணங்களாலும் தென்கொரியாவுக்கு அமெரிக்க பிரித்தானிய உதவிகள் தாராளமாகக்கிடைக்க மாறிவந்த உலக ஒழுங்கில் தன்னை இணைத்துக்கொண்டு கொரியா வேகமாக முன்னேறியது.
இன்று உலகின் முதல்பத்து ஏற்றுமதி நாடுகளுக்குள் கொரியாவும் அடங்குகிறது. கொரிய நாணயமான 'வொன்' (won) உலகின் பன்னிரண்டாவது இடத்தைப்பிடித்துள்ளது.. மோட்டார்வாகன ஏற்றுமதியில் உலகின் ஐந்தாவது இடத்தை ஹீண்டாய் (Hyundai) மற்றும் கியா (Kia) நிறுவனங்கள் தக்கவைத்துள்ளன.
இது தவிர இலத்திரனியல், பொறியியல், கட்டடவியல், வேதியியல், உயிர்நுட்பவியல் போன்றவற்றிலும் இன்று முன்னணி பெற்று விளங்குகிறது. இலத்திரனியலில் லிதியம் கிறிஸ்ரல் டிஸ்பிளே (LCD) மற்றும் செல்லிடப்பேசி கணனி தொழிநுட்பத்தில் உலகின் முன்னணி நிபுணத்துவ நாடாகவும் மிளிர்கிறது.
(கொரியதலைநகரம் சோலின் [Seoul] ஒரு பகுதி )
யப்பானுடன் தென்கொரியா, தைவான், சிங்கப்பூர், ஹொங்ஹொங் ஆகியவை தென்கிழக்காசியாவின் நான்கு வேங்கைகள் என்று அழைக்கப்படுகின்றன. இந்நாடுகளின் பொருளாதார வளர்ச்சியை ஒரு 'அற்புதம்' (miracle) என்று வர்ணிக்கிறார்கள்.
தென்கிழக்காசியாவில் பசுபிக் சமுத்திரத்தில் கொரியாவிற்கு இருந்த புவியியல் அரசியல் பொருளியல் சந்தர்ப்பங்கள் யாவும் தெற்காசியாவில் இந்து சமுத்திரத்தில் இலங்கைக்கு இருந்தும் தொடர்ந்து வரும் இனமோதல்களால் இலங்கை அச்சந்தர்ப்பங்களை தவறவிட்டு வறுமையில் உழன்று கொண்டிருப்பது துரதிர்ஷ்டவசமானது.
பதிவு நீண்டுவிட்டதால் கொரிய கலாசாரம் மற்றும் பல விடயங்களை அடுத்த பதிவில் தருகிறேன்.
Friday, June 20, 2008
மனதை தொட்ட 'ஓம்காரா' - ओमकारा
வில்லியம் ஷேக்ஸபியரின் 'ஒத்தெல்லோ' நாடகத்தை தழுவி உருவாக்கப்பட்டதே 'ஓம்காரா' என்ற ஹிந்தித்திரைப்படம்.
விஷால் பரத்
வாஜ் இயக்கி அவரே இசையமைத்த படம் என்பதும் குறிப்பிடத்தக்கது. மிகக்கவனமாகக் கையாளப்பட்ட திரைக்கதையில் விஷால் பரத்வாஜிடன்
ராபின் பட், அபிஷேக் சௌபே ஆகியோரும் பங்களித்திருக்கிறார்கள்.
இயக்குநரே இசையமைப்பாளராகவும் இருப்பதால் பாடல்கள் துள்ளிசை மற்றும் மெல்லிசையாக படத்திற்கு ஏற்றவகையில் சிறப்பாக அமைந்துள்ளன.
தஸாதக் ஹீசேனின் ஒளிப்பதிவும் மிகச்சிறப்பாக உள்ளது. பாடலில் இடம்பெறும் ஓ.. சாத்திரே... என்ற மென்மையான பாடலுக்கு மிக அருமையாக ஸ்லோமோஷனில் கமரா விளையாடியுள்ளது.
ஓமியும் டோலியும் கீழ்மாடியிலிருந்து மேல்மாடிக்கு போய், பின் மற்றொரு வழியாக மேல்மாடியிலிருந்து கீழே வந்து வெளிவாசற்கதவால் வெளியேறிச்செல்வது வரை ஒரே காட்சியாக crane shot இல் படமாக்கியிருப்பது அற்புதம்.
ஓமி எனப்படும் ஓம்காரா பிரபல அரசியல் கட்சி ஒன்றின் தளபதி என்ற நிலையில் இருப்பவர். கட்சி சார்பான ரெளடீசங்களுக்கு இவரே பொறுப்பு என்பதால் கட்சியில் செல்வாக்கு மிக்கவராக விளங்குகிறார். இவருக்கு நம்பிக்கைக்குரிய நண்பர்களாக லங்க்டா மற்றும் கேசு என்பவர்கள் இருக்கிறார்கள்.
ஒரு பொது நிகழ்வொன்றில் தனக்கடுத்தபடியான தளபதியாக கேசுவை ஓமி அறிவிக்கின்றார். இதனால் பொறாமைப்படும் லங்க்டா ஓமி மணந்து கொள்ள இருப்பவரும் ஓமியின் காதலியுமான டோமிக்கும் கேசுவுக்கும் தவறான உறவு இருப்பதான ஒரு எண்ணத்தை ஓமியின் மனதில் மெது மெதுவாக ஆனால் உறுதியாக ஏற்படுத்துகிறார். இந்த சதிக்கு முக்கியமாக இருப்பது ஒரு ஒட்டியாணம்.
இறுதியில் முடிவு எப்படியாகிறது என்பதே கதை. ஒரு அனர்த்தத்தை நோக்கியதான திரைக்கதை நகர்வு மிகச்சிறப்பாக உள்ளது. அஜய் தேவ்கான் கரீனா கபூர், சைவ் அலிகான், விவேக் ஒபராய், பிபாசா பாசு உட்பட மற்றும் பலரை அருமையாக வேலை வாங்கியிருக்கிறார் இயக்குநர். குறிப்பாக சைவ் அலிகான் மிகச்சிறப்பாக தனது வில்லன் பாத்திரத்தை செய்துள்ளார்.
2006 இல் வெளியிட்டபோது இந்தியாவில் வசூலில் சாதனை படைக்காவிட்டாலும் வெளிநாடுகளில் பெரும் வரவேற்பை பெற்றது. லண்டனில் விரைவிலேயே முதல் பத்து படங்களுள் இடம்பிடித்தது. அமெரிக்கா ஒஸ்ரேலியா, தென்ஆபிரிக்க நாடுகளில் பெரும் வரவேற்பை பெற்றது.
2006 இல் கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டதுடன் படம் தொடர்பான விவரண புத்தகம் ஒன்றும் வெளியிடப்பட்டது. பிலிம்ஃபேர், பொலிவூட் மூவி விருதுகளை படத்தின் சகல துறைகளும் அள்ளிக்கொண்டதுடன் படம் வேறும் பல விருதுகளை பெற்றுக்கொண்டது.
விஷால் பரத்வாஜ் ஷேக்ஸ்பியரின் மெக்பத்தை அடிப்படையாகக்கொண்டு மெக்பல் எனும்படத்தை முன்னரே இயக்கியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
படத்தில் மிகச்சிறப்பாக நடித்திருக்கும் சைவ் அலிகான் பேசும் வசனத்தின் ஒரு மொழிபெயர்ப்பு...
'மடையனுக்கும் முட்டாளுக்கும் இருப்பது ஒரு சின்ன இடைவெளிதான். இந்த இடைவெளியை நீக்கிவிட்டால் இருவரையும் வேறுபிரிப்பது கஷ்டம்..'
Wednesday, June 4, 2008
முதலும் கடைசியுமான மரதன் ஓட்டம்..!
வீதியால் பயணிக்கும்வேளைகளில் பல மரதன் ஓட்டங்களை கடந்தகாலங்களில் பார்த்திருந்தாலும் அவ்வாறு ஒரு மரதனில் நானும் ஓடியது சுவாரசியமானது। அதை விட எனது நண்பர் பிரதீபனின் மரதன் ஓட்ட ஒத்திகை அதை விட சுவாரசியமானது। நாட்டின் யுத்தசூழ்நிலையால் எனது பாடசாலை வாழ்வில் இரண்டு மூன்று இல்ல விளையாட்டுப்போட்டிகளே நடைபெற்றிருந்தன। அவ்வருடம் இல்லவிளையாட்டப்போட்டியை முன்னிட்டு 05 கிலோமீற்றர் மரதன் ஓட்டம் இடம்பெறும் என்ற அறிவித்தலால் மரதன் ஓடும் வயதை எட்டியிருந்த பலரும் மகிழ்ச்சியும் திகிலும் அடைந்தனர்। பாடசாலைக்கு அண்மையிலிருந்தோர் போட்டிக்கு பலநாட்கள் முன்பே விடியற்காலையில் ஓடி பயிற்சி பெறத்தொடங்கியிருந்தனர். முதல் மூன்று இடங்களை பெறுபவர்களுக்கு பதக்கங்களும் 20 நிமிடங்களுக்குள் ஓடிமுடிப்பவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
மாணவ தலைவர்களை தேர்ந்தெடுப்பதற்கான புள்ளியிடல் திட்டத்தில் விளையாட்டு தொடர்பான திறமைக்கும் புள்ளி இருந்ததால் நானும் நண்பர் பிரதீபனும் அதில் பங்குபற்றுவதாக தீர்மானித்திருந்தோம்। விடியற்காலையில் ஓடிப்பழகுபவர்களால் கவலையடைந்திருந்த பிரதீபன், போட்டியன்று மட்டும் ஓடினால் தசைபிடிப்பு ஏற்படும் எனவே ஊரிலாவது ஓடிப்பழகுவோம் என்று அபிப்பிராயப்பட்டார்.
பாடசாலையில் உடற்பயிற்சி பாடவேளைகளில் உதைபந்தாட்டம் என்ற பெயரில் பந்திற்குப்பின்னால் கண்டபடி ஓடுவதாலும் தினமும் சைக்கிளிலேயே பாடசாலை செல்வதாலும் ஓட்டப்பயிற்சியை நான் பெரிதுபடுத்தவில்லை. அதேவேளை அதிகாலையில் சந்தைக்கு பொருட்கள் கொண்டு போகும் சனங்கள் வாகனங்கள் மத்தியில் வேடிக்கை பொருளாக ஓடுவதும் எனக்கு கூச்சமான ஒன்றாயிருந்தது. என்றாலும் நண்பரின் வற்புறுத்தலுக்கிணங்க ஓடி ஒத்திகை பார்ப்பது என்று தீர்மானித்துக்கொண்டோம். 500 மீற்றர் தொலைவிலுள்ள தனது வீட்டிலிருந்து ஓடிவந்து பின்னர் என்னையும் கூட்டிக்கொண்டு பிரதான வீதியின் சந்திக்கு போவதாக ஏற்பாடு.
அடுத்தநாளும் வந்தது. அதிகாலை 05 மணிக்கு வருவதாக சொன்ன ஆள் 06 மணியாகியும் வரவில்லை. பிறகுதான் தெரிந்தது விஷயம். ஐந்து மணிக்கே எழும்பி ஓட வெளிக்கிட்ட நண்பரை சற்றும் வழமைக்கு ஒவ்வாத ஒரு நடவடிக்கையாக கருதிய அந்த தெருவிலுள்ள நாய்கள் அவரை கலைக்கத்தொடங்கியதில் மரதன் ஓட்டம் கண்மண் தெரியாத ஓட்டமாகிப்போய் முன்னால் சைக்கிளில் பால் கொண்டுவந்த பையனின்மேல் எக்கச்செக்கமாக மோதித்தான் நின்றது.
சைக்கிளுடன் பையனும் நண்பரும் விழுந்தவேகத்தில் பால் கொள்கலனின் மூடியும் வெடித்து திறந்ததால் அவ்வளவுபாலும் வீதியில்..!! பால்காரப்பையன் அழுதுகொண்டே நண்பரை பிலுபிலு வெனப்பிடித்துக்கொண்டானாம் - வீட்டில் கொன்றே போடுவார்கள் மரியாதையாகக் காசைத்தரச்சொல்லி. நண்பரும் மிகவும் உடல் + மனம் நொந்து போனார். விடியக்காலமை வேறு..!
வேறு வழியில்லாமல் பையனையும் கூட்டிக்கொண்டு வீட்டிற்குப்போன பிரதீபன் மொத்தப் பாலுக்கான காசையும் பையனின் மருந்துச்செலவுகளுக்குமான காசையும் சேர்த்துக்கொடுத்தனுப்பி வைத்தாராம். பின்னர் விடயத்தைக் கேட்டு நானும் நண்பரும் விழுந்து விழுந்து சிரித்தோம். ஆனாலும் நண்பருக்கும் சிராய்ப்பு காயங்கள் ஏற்பட்டதாலும் இதையொரு துர்ச்சகுனமாகக் கருதியதாலும் நண்பர் போட்டியில் கலந்து கொள்ளவில்லை. தான் மரதன் ஓட்ட நிகழ்வின்போது தனது செஞ்சிலுவை கழகத்தின் சார்பில் வீதியொழுங்கு கடமையில் ஈடுபடவிருப்பதாகவும் சொன்னார்.
எனவே நான் தனியாளாக போட்டியில் இறங்கவேண்டியிருந்தது. பதக்கங்கள் எல்லாம் எனக்கு அப்பாற்பட்டது என்று தெரிந்திருந்தாலும் 20 நிமிடத்திற்குள் ஓடி சான்றிதழாவது பெற்றுவிடவேண்டும் என்பதே எனது விருப்பமாக இருந்தது. குறித்த நாளும் வந்தது. சைக்கிளில் ஓடிப்போனால் களைத்து விடுவேன் என்று நண்பரே தனது சைக்கிளில் என்னையும் ஏற்றிக்கொண்டு பாடசாலை சென்றார். என்னை மைதானத்தில் விட்டுவிட்டு அவர் வீதி ஒழுங்கு கடமைக்கு சென்றுவிட்டார்.
மைதானம் போட்டியாளர்களால் ஜே ஜே என்றிருந்தது. பதினேழு மற்றும் பத்தொன்பது வயதுகளின் கீழான இரு போட்டிகளாக நடக்க இருந்தது. பெயர் பதிந்து இலக்கங்களை வாங்கி பனியனின் முன்னும் பின்னும் குற்றிக்கொண்டு தரப்பட்ட குளுக்கோஸை உண்டுவிட்டு திகிலோடு காத்திருந்தேன்.
சரியாக காலை ஆறுமணிக்கு போட்டி ஆரம்பமாகும் என்று அறிவித்தார்கள். 10 நிமிடமே இருந்தது. எல்லோரும் குளுமாடு மாதிரி துள்ளிக்கொண்டும் கைகால்களை உதறிக்கொண்டும் இருந்ததால் நானும் அவ்வாறே செய்தேன். சிலரிற்கு அப்படியெதுவும் செய்யாமலே கை கால்கள் தானாக உதறிக்கொண்டு இருந்தது.
எனது பிரிவில் ஓடுபவர்கள் நூறுபேராவது இருப்பார்கள் போலிருந்தது. மணி அடிக்கப்பட்டு எல்லைக்கோட்டில் நிற்கவைத்து (கொஞ்சம் கும்பலாகத்தான்) ஆயத்தமணி அடிக்கப்பட்டதும் கும்பலாக கிளம்பினோம். நெடிய ஓட்டம் என்பதால் யாரும் விர் என்று பாயவில்லை.
கொஞ்ச தூரம் ஓடியதுமே கும்பல் கலைந்து அவரவர் வேகத்திற்கு ஏற்றபடி குழுக்களாகவும் தனியன்களாகவும் ஓடிக்கொண்டிருந்தார்கள். ஆசிரியர்கள் ஏற்கனவே சொல்லியிருந்தார்கள். ஆட்களை முந்தவேண்டும் என்று வளைந்தும் நெளிந்தும் ஓடவேண்டாம். அப்படி ஓடினால் ஓட்டதூரம் கூடும் களைத்து போவீர்கள் இடைவெளி கிடைக்கும்வரை சீரான வேகத்தில் ஓடி பின்னர் முந்தவேண்டும் என்று நிரம்ப உபதேசங்கள் வழங்கியிருந்தார்கள்.
ஒலிபெருக்கியில் அறிவித்தபடி ஒரு வாகனம் முன்னால் போக வழிநெடுகிலும் மக்கள் நிறைந்து பார்த்துக்கொண்டிருந்தார்கள். சென்ஜோன்ஸ் அம்புலன்ஸ் மற்றும் செஞ்சிலுவை சங்க அங்கத்தவர்கள் பாதை ஒழுங்கில் ஈடுபட்டிருந்தார்கள். மோட்டார் சைக்கிள்களில் கண்காணிப்பாளர்கள் ஊர்ந்து கொண்டிருந்தார்கள். வழமையாக மிகவும் சனசந்தடி மிக்க வீதிகளால் பெனியனுடன் ஓடியது வித்தியாசமான அனுபவம்.
ஒரு ஐநூறு அறுநூறு மீற்றர் ஓடியதும்தான் தெரிந்தது இது எவ்வளவு பெரிய வில்லங்கமான ஓட்டம் என்று. இதயம் துடிக்கிற ஓசை எனக்கே கேட்டது. நாக்கு வறண்டது ஓடி முடிப்பது சிம்மசொப்பனமாகப்பட்டது. சுற்றிவர எழுமாற்றாக வெளிச்சப்பொட்டுக்கள் தோன்றுவது போலிருந்தது. ஆனாலும் வழியின் இருமருங்கும் மற்றும் மதிலுக்கு மேலாலும் தெரிந்த தலைகளில் இளம் பெண்களும் இருந்ததால் ஹைப்போதொலமஸ் மற்றும் இன்னபிற ஓமோன்களின் ஆதரவுடன் தொடர்ந்து ஓடினேன்.
வழியில் பார்வையாளர்கள் வாளிகளில் தண்ணீர் வைத்திருந்து தலையிலும் உடம்பிலும் ஊற்றியது மிகுந்த பெருமையாகவும் தெம்பாகவும் இருந்தது. களைப்பை போக்க கத்திக்கொண்டு வேறு ஓடினார்கள். ஆட்களை முந்தி செல்லும்போது 'வ்வோவ்...' என்று கூச்சலிட்டுக்கொண்டே சென்றார்கள். எதிராளியை நிலைகுலைய வைப்பதற்கு இதுவும் ஒரு உத்தி. மகாபாரதத்தில் அர்ச்சுனனின் கொடியில் இருந்து கொண்டு அனுமர் தனது சத்தத்தாலேயே கனபேரை போட்டுத்தள்ளினார் என்று படித்திருக்கிறேன். என்னைக்கடந்து கன 'வ்வோவ்...' கள் சென்றது வயிற்றைக்கலக்கியது.
ஓட்டம் பிறவுண்வீதியால் கலட்டி சந்தியை அடைந்தபோது ஓடினவர்களில் பலர் நடக்கத்தொடங்கியிருந்தார்கள். சிலர் காலை நொண்டிக்கொண்டும் முகத்தை வெட்கத்தால் மறைத்தவாறும் அவ்வப்போது தோன்றி மறைந்த அம்புலன்ஸ்களினுள் ஏறிப்படுத்துக்கொண்டார்கள். எப்பிடியிருந்த நான் இப்பிடியாகிட்டேனே என்ற நிலையில் ஓடிக்கொண்டிருந்த நானும் அம்புலன்ஸ் நப்பாசைகளால் ஈர்க்கப்பட்டாலும் பின்னர் வகுப்பில் நடக்கப்போகும் நக்கல் நளினங்களை நினைத்து கால்களில் இலக்ரிக் அமிலம் சுரந்து இறுகிவிடக்கூடாதே என்று கவலைப்பட்டு ஓடிக்கொண்டிருந்தேன்.
நடக்கத்தொடங்கியிருந்தவர்கள் வீதியில் நின்ற பார்வையாளர்களின் கிண்டலுக்கு ஆளானதால் நான் வேகத்தை அதிகரிக்க முயற்சித்தேன். நாக்கு வெளியில் வந்தது. வெளிச்சுவாசத்தின் போது சத்தமும் சேர்ந்தே வந்தது !. ஆனாலும் வீதிக்கடமையிலிருந்த பிரதீபனைக்காணும் வரையாவது ஓடுவோம் என்ற சங்கற்பத்துடன் ஓடிக்கொண்டிருந்தேன்.
இருபது நிமிட எல்லை இருந்ததால் கையிலிருந்த நிறுத்தற்கடிகாரத்தை பார்த்தபோது, ஆரம்ப அவசரத்தில் என்னத்தை அமத்தினனோ தெரியாது அதில் எல்லாம் எட்டு எட்டாகத்தெரிந்தது. வெறுத்துப்போய் வீதியில் கடமையிலிருந்த செஞ்சிலுவை சீருடைகளில் பிரதீபனை தேடினேன்.
கே.கே.எஸ் வீதியை ஊடறுத்து பழக்கமில்லாத வீதியொன்றிற்குள் இறங்கியபோது பிரதீபனை கண்டேன்.
கடமையில் இருந்ததால் முகத்தை 'உம்' மென்று வைத்திருந்தாலும் வியர்வையும் தண்ணீரும் தலையிலிருந்தும் முகத்திலிருந்தும் வழிய என்கோலத்தைக் கண்டு ஆளுக்கு சிரிப்பு வந்தது என்பது தெரிந்தது. பலர் முன்னுக்கு போய்விட்டார்கள் என்று சைகை காட்டினார். இது என்னை உசுப்பேத்திவிட.. நானும் 'வ்வோவ்..' என்ற சத்தத்துடன் ஆட்களை கடக்க ஆரம்பித்தேன். கால்கள் கெஞ்சின. சப்பாத்தின் டொக் டொக்குகளிற்குள் கால் அதிர்ந்தது.
மீண்டும் கே।கே।எஸ் வீதியிலேறி பாடசாலையின் மேற்குப்புற கட்டடங்களை தூரத்தில் கண்டதும் உற்சாகம் கரைபுரண்டது। அதே போல பின்னால் வந்தவர்களிற்கும் கரைபுரண்டிருக்கவேணும்॥ என்னைக்கடந்து ஓடினார்கள்। மைதானத்தை அடைந்து மைதானத்திற்குள் ஒரு சுற்றும் ஓடிய பின்பே முடியுமிடம் வரும்। கடைசிக்கட்டம் ஆனதால் நானும் தலைதெறிக்க ஓடினேன்। ஆனாலும் என்ன ஏமாற்றம்..! பாடசாலையின் பிரதான வாசலை அடைந்த நேரம் முடிவுமணி ஒலி நாராசமாய் காதில் விழுந்தது।
குறிக்கப்பட்ட நேரம் முடிந்துவிட்டதால் மைதானவாசலிலேயே தடுத்து நிறுத்தினார்கள்। நீண்ட ஓட்டம் முடிவுற்றபோது உடம்பு முழுவதும் வெம்மையாக உணர்ந்தேன். நாடித்துடிப்பு உடம்பின் சகல பாகங்களிலும் கேட்டது. உடனடியாகவே 19 வயதின் கீழான போட்டி மறுமுனையில் ஆரம்பிக்கப்பட்டது. எனக்கு பலர் உண்மையாகவோ அல்லது கிண்டலாகவோ கைகுலுக்கினார்கள். ஓடிய அனைவருக்கும் சுடச்சுட கோப்பி வழங்கப்பட்டது.
குறித்த நேரத்திற்குள் நானூறு அல்லது ஐநூறு மீட்டர் தூரத்தினால் நான் அந்த மரதனை கோட்டைவிட்டேன். எனினும் இரண்டே மீற்றர் தூரத்தினால் கோட்டை விட்டவர்களை நினைத்து என்னை திருப்திப்படுத்திக்கொண்டேன். வாழ்வில் பல விடயங்களை எமக்கும் கீழே இருப்பவர்களை நினைத்துத்தானே திருப்திப்பட்டுக்கொள்ளவேண்டியிருக்கிறது...!!