Tuesday, July 22, 2008

தென்கிழக்காசிய வேங்கை - தென்கொரியா - 02

தென்கொரியா பெளத்தமதம் சார்ந்த நாடாக இருந்தபோதும் 46 வீதத்திற்கும் கூடுதலானவர்கள் எந்தமதத்தையும் சாராதவர்களாகவே இருக்கிறார்கள். விண்ணப்பப்படிவங்களில் கூட 'எந்த மதத்தையும் சாராதவர்..' என்ற தெரிவும் தரப்பட்டிருக்கும்.



30 வீதமானவர்கள் பெளத்தர்களாகவும் 15 வீதமானவர்கள் கிறிஸ்தவர்களாகவும் இருக்கிறார்கள். 50000 பேர்வரை முஸ்லிம்களாகவும் இருக்கிறார்கள்.
(படம் - கொரிய மயானம்)
மதநிகழ்வுகளில் மக்கள் பங்களிப்பு குறைவாக இருக்கும். வெசாக்குடன் வரும் ஊர்வலத்தில் இலங்கை பெரஹராவை ஒத்தஊர்வலங்கள் நடைபெறும்.

அரசியல் குறித்தும் பெரும்பாலானவர்கள் அலட்டிக்கொள்வதில்லை. அதற்கு அவர்களுக்கு நேரமும் இருப்பதில்லை. தற்போதய ஜனாதிபதி திரு.லீ மியுன் பக் அவர்கள் வேட்பாளராக இருந்தபோது கொரியாவின் ஹீண்டாய் நிறுவன ஊழல் வழக்கொன்றில் சம்பந்தப்பட்டிருந்தார். ஆனால் அதையும் மீறி மக்களால் அவர் தெரிவுசெய்யப்பட்டார். அதன்பின்னர் நீதிமன்றம் அந்த வழக்குகளில் இருந்து அவரை விடுவித்தது.



தேர்தல் பிரச்சாரங்கள் அமைதியாகவும் நாசூக்கான முறையிலும் செய்யப்படும்.
(படம்- வீதியோரத்தில் தேர்தல் பிரசாரம்)
பொதுவாக மேடையுடன் கூடிய வாகனம் ஒன்றில் வேட்பாளர் மக்கள்கூடும் சந்திகளில் உரையாற்றும்போது சீருடையணிந்த பெண்கள் அவருக்கு ஆதரவாக கோஷமிடுவார்கள். சுவரொட்டிகள் மற்றும் பதாதைகள் நகரசபையால் ஒதுக்கப்பட்ட இடங்களில் மட்டுமே காட்சிப்படுத்தப்படும்.



கொரியர்களின் பாரம்பரிய உடை யப்பானியர்களின் கிமோனோ உடையை சிறிதளவு ஒத்தது. ஆயினும் இவ்வாறு பாரம்பரிய உடைகளை அணிபவர்களின் எண்ணிக்கை மிகக்குறைவு என்று சொல்லலாம். இளைய தலைமுறையினர் பெரும்பாலும் அமெரிக்கபாணியிலான நாகரிகங்களிலேயே ஆர்வம் காட்டுகிறார்கள்.
(படம் - கொரிய பாரம்பரிய உடை)




கொரியாவில் சாதாரணமாக விருந்துகளும் கதிரையில் இருக்காமல் நிலத்தில் தலையணை போன்ற திண்டின்மீது உட்கார்ந்தே விருந்து உண்பார்கள். விருந்தில் மதுவும் மாமிசமும் பிரதானமானது.
(படம் - கொரிய விருந்து)




போர் ஒரு முடிவுக்கு வந்தாலும் எல்லையில்காணப்படும் பதற்றத்தை காரணம்காட்டி அமெரிக்கத்துருப்பினர் 24000 வரையானவர்கள் தற்போதும் கொரியாவில் தங்கியிருந்து கொரியஇராணுவத்துக்கு உதவிவருகின்றனர். இதனால் கொரியா பல சங்கடங்களுக்கும் நிபந்தனைக்கும் ஆளாகிவருகிறது.

அமெரிக்க இராணுவத்தினருக்கென நெற்காணிகள் சுவீகரிக்கப்பட்டன. உள்ளுர் சந்தைவிலைகளைவிடவும் குறைவான விலையில் மாட்டிறைச்சியும் அரிசியும் அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றது.



அரசின் இவ்வாறான நடவடிக்கைகளுக்கு எதிராக மக்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.
(படம் - 18ம் நூற்றாண்டு அரச அரண்மனை)
அண்மையில் அரசால் சுவீகரிக்கப்பட்ட தனது காணிக்கு நட்டஈடு கிடைக்காததால் வெகுண்ட வயோதிபர் ஒருவர் புராதன மேற்குவாயில் என்று அழைக்கப்டும் வரலாற்று மரக்கட்டடம் ஒன்றிற்கு தீவைத்து அக்கட்டடம் முழுமையாக எரிந்து நாசமானது.



கோடை, மழை, குளிர், வசந்தம் என்ற நான்கு காலநிலைகள் காணப்படுகின்றன. குளிர்காலமே இதில் அதிகம். கடும்குளிர் காரணமாக பொலிதீன் கூடாரங்களுக்குள்ளேயே பயிர்ச்செய்கை நடைபெறுகிறது. கோடைகாலத்தில் நெல்விதைப்பு இடம்பெறும். ஒப்பீட்டளவில் விவசாயிகள் வருமானம் குறைந்தவர்களாகவே இருக்கிறார்கள்.




தலைநகரம் சோலில் (Seoul) பார்க்கவேண்டிய இடங்களாக பல நிறுவப்பட்டுள்ளன. கடல் மட்டத்திலிருந்து 365மீற்றர் உயரமான சோல் ரவரிலிருந்து சோலை நாலாபக்கமும் தொலைநோக்கிமூலமும் கண்டுகளிக்கலாம். மலைஒன்றில் அமைக்கப்பட்டுள்ள இந்த கோபுரத்தின் அடிப்பகுதிக்கு கேபிள் கார் மூலம் செல்லலாம்.



இந்த கோபுரத்தின் அடிவாரத்தில் காதலர்களின் பெயர்கள் எழுதிய பூட்டுக்களை பூட்டி விட்டால் காதலர்கள் பிரியாமல் இணைந்திருப்பார்கள் என்று நம்புகிறார்கள்.

டிஸ்னிலாண்ட் ஐ ஒத்த Lotteworld. Seoul land, Dream land, Everland என்று பல கேளிக்கை பூங்காக்கள் உள்ளன.


Coex Aquarium மற்றும் 63city என்பவற்றில் கடல்வாழ் உயிரினங்களை நேரடியாக இராட்சதநீர்த்தொட்டி குகைகளில் காணமுடியும். தலைநநகரின் மத்தியில்ஓடும் ஆறான Han river என்பதில் 'ஜொய்னாறு' எனுமிடத்தில் கேளிக்கை படகுசவாரி செய்வதனூடாக இரவில் சோலின் அழகை இரசிக்க முடிவது இனிமையான அனுபவம்.



கோடைகாலத்தில் புகழ்பெற்ற கடற்கரையாக 'ஹியுந்தே' கடற்கரை விளங்குகிறது. இது பூசான் எனுமிடத்தில் தலைநகரிலிருந்து ஆறுமணிநேர பயணதொலைவில் உள்ளது. இவற்றை தவிர கொரிய கலைகலாசாரத்தை விளக்கும் நூதனசாலைகளும் தாவர மற்றும் மிருக காட்சிசாலைகளும் உல்லாசப்பயணிகளை கவருமிடங்களாக உள்ளன.

Yongsan, Technomart என்பவை பெரிய இலத்திரனியல் வர்த்தக நிலையங்களாகவும் Dongdamun, Namdamun என்பவை பிரத்தியேகமாக வெளிநாட்டினரை கவரும் பிரபல சந்தைகளாகவும் விளங்குகின்றன.


சோல் நகரசபையினர் பிரகடனப்படுத்திய 'Hi Seoul..! - Soul of Asia' என்ற மகுடவாக்கியம் இங்கு குறிப்பிடத்தக்கது.

Tuesday, July 8, 2008

தென்கிழக்காசிய வேங்கை - தென்கொரியா - 01

கொரியா வரும்போதே நான் பயந்துகொண்டே வந்தது கொரிய உணவுகளை எண்ணித்தான். நாய் இறைச்சியும் சாப்பிடுவார்கள் என்று இலங்கையில் பயமுறுத்தியிருந்தார்கள். இங்கு வந்ததும் அது உறுதியாகிவிட்டதுமல்லாமல் வந்த இரண்டு மாதத்திலேயே அதில் ஒரு துண்டும் தவறுதலாக வாய்க்குள் போய்விட்டது.

கொரியமொழியில் 'கோகி' (Kogi) என்பது இறைச்சியை குறிக்கும். தக்கோகி - கோழியிறைச்சி, தேஜிகோகி - பன்றி இறைச்சி, கேகோகி - நாய் இறைச்சி. இதில் நான் உண்பது தக்கோகி மட்டுமே. ஆரம்பத்தில் கொரியமொழியில் எதைச்சொன்னாலும் உச்சரிப்பை விளங்கிக்கொள்ளுவதில் சிக்கல் இருந்தது.

இலங்கையில் அலுவலக கோப்புகள் மற்றும் கடிதங்களில் என்னை சுருக்கமாக விளிப்பது Mr.K. என்று.. ஆனால் கொரிய மொழியில் 'கே' என்பது நாயைக்குறித்ததால் விதியின் கொடுமையையும் நொந்துகொள்ள வேண்டியிருந்தது.

எமது நாட்டில் கோழிகளை வீட்டில் வளர்ப்பது போல இவ்விடம் நாய்களை இறைச்சி மற்றும் வளர்ப்பு நோக்கங்களுடன் வளர்க்கிறார்கள். நாய்ப்பண்ணைகள் கூட இருக்கின்றன. வீதியோரங்களில் இருக்கும் நாய்ப்பண்ணைகளிலிருந்து இரவுநேரத்தில் நூற்றுக்கணக்கான நாய்கள் கோரசாக குரைப்பது திகிலாக இருக்கும்.


கொரிய உணவில் பிரதான இடம் வகிப்பது 'கிம்ஜி' என்ற உணவு. Secret of our energy என்று கொரியர்கள் சொல்லுமளவுக்கு எல்லோரும் எல்லா வேளைகளிலும் சாப்பிடும் ஒரு ஆகாரம் அது.

'பெச்சு' என்று சொல்லப்படும் முட்டைக்கோஸ் போன்ற அடுக்கான இலைகளுக்குள் உப்பு, சீனி, மிளகாய் தூள், மிளகுத்தூள், நசுக்கிய வெள்ளைப்பூண்டு மற்றும் பெயர்தெரியாத வஸ்துக்களெல்லாம் போட்டு மரப்பானைகளுக்குள் போட்டு வீட்டுக்கு வெளியில் வைப்பார்கள்.

பின்னர் சில மாதங்கள் கழித்து!! மரப்பானைக்குள் இருப்பதை துண்டுகளாக்கி சோறுடன் (பப்) உண்பார்கள். இப்போது கிம்ஜியின் நாற்றம் எப்பிடி இருக்கும் என்பதை நீங்களே கற்பனை செய்து கொள்ளலாம்.

ஆசிய நாடென்றபோதிலும் தெற்காசிய உணவுமுறைகளிலிருந்து கொரிய உணவுவகைகள் இவ்வளவு தூரம் வேறுபடுவது வேறு ஒரு கிரகத்துக்கு வந்த உணர்வையே தந்தது.


5000 ஆண்டு பழைமைவாய்ந்த கொரியா இரண்டாம் உலக யுத்தத்திற்கு முன்னர் யப்பானால் ஆக்கிரமிக்கப்ட்டு பலத்த அடக்கு முறைக்கு ஆளாகியது. ஒரு லட்சம் பேர் பலவந்தமாக யப்பானிய இராணுவத்துக்கு சேர்க்கப்பட்டார்கள்.

மேலும் கொரியர்களின் பெயர்கள் கூட யப்பானிய முறையிலேயே வைக்கவேண்டும் என்று கட்டளையிட்டதுடன் பெருமளவிலான பொருளாதார சுரண்டல்களும் (குறிப்பாக கடல்வளங்கள்) யப்பானால் மேற்கொள்ளப்பட்டது. அத்துடன் கொரியப்பெண்கள் மீதும் வன்முறைகள் மேற்கொள்ளப்பட்டன. இதனால் இன்றும்கூட கொரியர்கள் யப்பானை வெறுப்பவர்களாகவே காணப்படுவதுடன் யப்பானிய உற்பத்திப்பொருள்களையும் நிராகரிக்கின்றனர்.

இரண்டாம் உலகமகாயுத்த முடிவில் யப்பான் அமெரிக்காவிடம் சரணடைந்ததால் கொரியாவின் ஒரு பகுதியை அமெரிக்காவும் இன்னொரு பகுதியை ரஷ்யாவும் ஆதிக்கம் செலுத்தின. இதனால் ரஷ்ய கொம்யூனிசம் சார்ந்த பகுதி வடகொரியா என்றும் அமெரிக்க முதலாளித்துவ கொள்கை கொண்ட பகுதி தென்கொரியா என்றும் 1950 - 1953 வரை நடந்த போரின்பின் எல்லைகள் வகுத்து பிரிக்கப்பட்டது.

போரின்போது வடகொரியாவுக்கு சோவியத் ஒன்றியமும் சீனாவும் ஆதரவளிக்க தென்கொரியாவுக்கு அமெரிக்கா ஆதரவளித்தது. இலட்சக்கணக்கானவர்கள் போரின்போது மாண்டார்கள். கடல்தாவரங்களை காயவைத்து உண்ணும் அளவுக்கு வறுமைதாண்டவமாடியது.

போர்பற்றி ஒரு கொரிய வயோதிபர் சொல்லும்போது 'அமெரிக்க இயந்திர துப்பாக்கிகளுக்கு முன்னால் கொத்து கொத்தாக சீன இராணுவத்தினர் மடிந்தபோதும் அவர்கள் வெறும் கட்டுத்துப்பாக்கி (shot gun) ஐ வைத்துக்கொண்டு அலை அலையாக வந்தார்கள் என்று சீன இராணுவத்தின் ஆட்தொகையும் அர்ப்பணிப்பும் பற்றி குறிப்பிடுகின்றார்.

போரின்கொடுமையால் இரண்டு கொரியாவுமே வறுமையடைந்தன. 1953 தொடக்கம் 1958 காலப்பகுதிகளில் தென்கொரியா அமெரிக்காவிடமிருந்து வருடாந்தம் 27 கோடி டொலர் பெறுமதியான உதவிகளை பெற்றுவந்தது. இது அக்காலப்பகுதி மொத்ததேசிய உற்பத்தியின் 15 வீதமாகும்.

(தென்கொரிய பாராளுமன்றம்)

1960 ஆம் ஆண்டு தென்கொரியாவின் மொத்ததேசிய வருமானம் சூடான் நாட்டு வருமானத்துக்கு சமமானதாக இருந்தது. அதன் பின்னர் இராணுவ தலைவர்களே ஆட்சி செய்தாலும் உலகயுத்தத்தின் பின்னர் ஏற்பட்ட உலகமயமாக்கலுக்கு ஏற்றவகையில் பொருளாதார கொள்கைகளை வளர்த்துக்கொண்டதன் காரணமாகவும் புவியியல் அரசியல் காரணங்களாலும் தென்கொரியாவுக்கு அமெரிக்க பிரித்தானிய உதவிகள் தாராளமாகக்கிடைக்க மாறிவந்த உலக ஒழுங்கில் தன்னை இணைத்துக்கொண்டு கொரியா வேகமாக முன்னேறியது.

இன்று உலகின் முதல்பத்து ஏற்றுமதி நாடுகளுக்குள் கொரியாவும் அடங்குகிறது. கொரிய நாணயமான 'வொன்' (won) உலகின் பன்னிரண்டாவது இடத்தைப்பிடித்துள்ளது.. மோட்டார்வாகன ஏற்றுமதியில் உலகின் ஐந்தாவது இடத்தை ஹீண்டாய் (Hyundai) மற்றும் கியா (Kia) நிறுவனங்கள் தக்கவைத்துள்ளன.

இது தவிர இலத்திரனியல், பொறியியல், கட்டடவியல், வேதியியல், உயிர்நுட்பவியல் போன்றவற்றிலும் இன்று முன்னணி பெற்று விளங்குகிறது. இலத்திரனியலில் லிதியம் கிறிஸ்ரல் டிஸ்பிளே (LCD) மற்றும் செல்லிடப்பேசி கணனி தொழிநுட்பத்தில் உலகின் முன்னணி நிபுணத்துவ நாடாகவும் மிளிர்கிறது.

(கொரியதலைநகரம் சோலின் [Seoul] ஒரு பகுதி )

யப்பானுடன் தென்கொரியா, தைவான், சிங்கப்பூர், ஹொங்ஹொங் ஆகியவை தென்கிழக்காசியாவின் நான்கு வேங்கைகள் என்று அழைக்கப்படுகின்றன. இந்நாடுகளின் பொருளாதார வளர்ச்சியை ஒரு 'அற்புதம்' (miracle) என்று வர்ணிக்கிறார்கள்.

தென்கிழக்காசியாவில் பசுபிக் சமுத்திரத்தில் கொரியாவிற்கு இருந்த புவியியல் அரசியல் பொருளியல் சந்தர்ப்பங்கள் யாவும் தெற்காசியாவில் இந்து சமுத்திரத்தில் இலங்கைக்கு இருந்தும் தொடர்ந்து வரும் இனமோதல்களால் இலங்கை அச்சந்தர்ப்பங்களை தவறவிட்டு வறுமையில் உழன்று கொண்டிருப்பது துரதிர்ஷ்டவசமானது.

பதிவு நீண்டுவிட்டதால் கொரிய கலாசாரம் மற்றும் பல விடயங்களை அடுத்த பதிவில் தருகிறேன்.



Friday, June 20, 2008

மனதை தொட்ட 'ஓம்காரா' - ओमकारा

வில்லியம் ஷேக்ஸபியரின் 'ஒத்தெல்லோ' நாடகத்தை தழுவி உருவாக்கப்பட்டதே 'ஓம்காரா' என்ற ஹிந்தித்திரைப்படம்.

விஷால் பரத்வாஜ் இயக்கி அவரே இசையமைத்த படம் என்பதும் குறிப்பிடத்தக்கது. மிகக்கவனமாகக் கையாளப்பட்ட திரைக்கதையில் விஷால் பரத்வாஜிடன்
ராபின் பட், அபிஷேக் சௌபே ஆகியோரும் பங்களித்திருக்கிறார்கள்.


இயக்குநரே இசையமைப்பாளராகவும் இருப்பதால் பாடல்கள் துள்ளிசை மற்றும் மெல்லிசையாக படத்திற்கு ஏற்றவகையில் சிறப்பாக அமைந்துள்ளன.

Namaksho.rm -

தஸாதக் ஹீசேனின் ஒளிப்பதிவும் மிகச்சிறப்பாக உள்ளது. பாடலில் இடம்பெறும் ஓ.. சாத்திரே... என்ற மென்மையான பாடலுக்கு மிக அருமையாக ஸ்லோமோஷனில் கமரா விளையாடியுள்ளது.



Omkara - O Saathi Re -

ஓமியும் டோலியும் கீழ்மாடியிலிருந்து மேல்மாடிக்கு போய், பின் மற்றொரு வழியாக மேல்மாடியிலிருந்து கீழே வந்து வெளிவாசற்கதவால் வெளியேறிச்செல்வது வரை ஒரே காட்சியாக crane shot இல் படமாக்கியிருப்பது அற்புதம்.





ஓமி எனப்படும் ஓம்காரா பிரபல அரசியல் கட்சி ஒன்றின் தளபதி என்ற நிலையில் இருப்பவர். கட்சி சார்பான ரெளடீசங்களுக்கு இவரே பொறுப்பு என்பதால் கட்சியில் செல்வாக்கு மிக்கவராக விளங்குகிறார். இவருக்கு நம்பிக்கைக்குரிய நண்பர்களாக லங்க்டா மற்றும் கேசு என்பவர்கள் இருக்கிறார்கள்.


ஒரு பொது நிகழ்வொன்றில் தனக்கடுத்தபடியான தளபதியாக கேசுவை ஓமி அறிவிக்கின்றார். இதனால் பொறாமைப்படும் லங்க்டா ஓமி மணந்து கொள்ள இருப்பவரும் ஓமியின் காதலியுமான டோமிக்கும் கேசுவுக்கும் தவறான உறவு இருப்பதான ஒரு எண்ணத்தை ஓமியின் மனதில் மெது மெதுவாக ஆனால் உறுதியாக ஏற்படுத்துகிறார். இந்த சதிக்கு முக்கியமாக இருப்பது ஒரு ஒட்டியாணம்.


இறுதியில் முடிவு எப்படியாகிறது என்பதே கதை. ஒரு அனர்த்தத்தை நோக்கியதான திரைக்கதை நகர்வு மிகச்சிறப்பாக உள்ளது. அஜய் தேவ்கான் கரீனா கபூர், சைவ் அலிகான், விவேக் ஒபராய், பிபாசா பாசு உட்பட மற்றும் பலரை அருமையாக வேலை வாங்கியிருக்கிறார் இயக்குநர். குறிப்பாக சைவ் அலிகான் மிகச்சிறப்பாக தனது வில்லன் பாத்திரத்தை செய்துள்ளார்.


2006 இல் வெளியிட்டபோது இந்தியாவில் வசூலில் சாதனை படைக்காவிட்டாலும் வெளிநாடுகளில் பெரும் வரவேற்பை பெற்றது. லண்டனில் விரைவிலேயே முதல் பத்து படங்களுள் இடம்பிடித்தது. அமெரிக்கா ஒஸ்ரேலியா, தென்ஆபிரிக்க நாடுகளில் பெரும் வரவேற்பை பெற்றது.


2006 இல் கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டதுடன் படம் தொடர்பான விவரண புத்தகம் ஒன்றும் வெளியிடப்பட்டது. பிலிம்ஃபேர், பொலிவூட் மூவி விருதுகளை படத்தின் சகல துறைகளும் அள்ளிக்கொண்டதுடன் படம் வேறும் பல விருதுகளை பெற்றுக்கொண்டது.

விஷால் பரத்வாஜ் ஷேக்ஸ்பியரின் மெக்பத்தை அடிப்படையாகக்கொண்டு மெக்பல் எனும்படத்தை முன்னரே இயக்கியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

படத்தில் மிகச்சிறப்பாக நடித்திருக்கும் சைவ் அலிகான் பேசும் வசனத்தின் ஒரு மொழிபெயர்ப்பு...

'மடையனுக்கும் முட்டாளுக்கும் இருப்பது ஒரு சின்ன இடைவெளிதான். இந்த இடைவெளியை நீக்கிவிட்டால் இருவரையும் வேறுபிரிப்பது கஷ்டம்..'

Wednesday, June 4, 2008

முதலும் கடைசியுமான மரதன் ஓட்டம்..!

வீதியால் பயணிக்கும்வேளைகளில் பல மரதன் ஓட்டங்களை கடந்தகாலங்களில் பார்த்திருந்தாலும் அவ்வாறு ஒரு மரதனில் நானும் ஓடியது சுவாரசியமானது। அதை விட எனது நண்பர் பிரதீபனின் மரதன் ஓட்ட ஒத்திகை அதை விட சுவாரசியமானது। நாட்டின் யுத்தசூழ்நிலையால் எனது பாடசாலை வாழ்வில் இரண்டு மூன்று இல்ல விளையாட்டுப்போட்டிகளே நடைபெற்றிருந்தன। அவ்வருடம் இல்லவிளையாட்டப்போட்டியை முன்னிட்டு 05 கிலோமீற்றர் மரதன் ஓட்டம் இடம்பெறும் என்ற அறிவித்தலால் மரதன் ஓடும் வயதை எட்டியிருந்த பலரும் மகிழ்ச்சியும் திகிலும் அடைந்தனர்। பாடசாலைக்கு அண்மையிலிருந்தோர் போட்டிக்கு பலநாட்கள் முன்பே விடியற்காலையில் ஓடி பயிற்சி பெறத்தொடங்கியிருந்தனர். முதல் மூன்று இடங்களை பெறுபவர்களுக்கு பதக்கங்களும் 20 நிமிடங்களுக்குள் ஓடிமுடிப்பவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.


மாணவ தலைவர்களை தேர்ந்தெடுப்பதற்கான புள்ளியிடல் திட்டத்தில் விளையாட்டு தொடர்பான திறமைக்கும் புள்ளி இருந்ததால் நானும் நண்பர் பிரதீபனும் அதில் பங்குபற்றுவதாக தீர்மானித்திருந்தோம்। விடியற்காலையில் ஓடிப்பழகுபவர்களால் கவலையடைந்திருந்த பிரதீபன், போட்டியன்று மட்டும் ஓடினால் தசைபிடிப்பு ஏற்படும் எனவே ஊரிலாவது ஓடிப்பழகுவோம் என்று அபிப்பிராயப்பட்டார்.

பாடசாலையில் உடற்பயிற்சி பாடவேளைகளில் உதைபந்தாட்டம் என்ற பெயரில் பந்திற்குப்பின்னால் கண்டபடி ஓடுவதாலும் தினமும் சைக்கிளிலேயே பாடசாலை செல்வதாலும் ஓட்டப்பயிற்சியை நான் பெரிதுபடுத்தவில்லை. அதேவேளை அதிகாலையில் சந்தைக்கு பொருட்கள் கொண்டு போகும் சனங்கள் வாகனங்கள் மத்தியில் வேடிக்கை பொருளாக ஓடுவதும் எனக்கு கூச்சமான ஒன்றாயிருந்தது. என்றாலும் நண்பரின் வற்புறுத்தலுக்கிணங்க ஓடி ஒத்திகை பார்ப்பது என்று தீர்மானித்துக்கொண்டோம். 500 மீற்றர் தொலைவிலுள்ள தனது வீட்டிலிருந்து ஓடிவந்து பின்னர் என்னையும் கூட்டிக்கொண்டு பிரதான வீதியின் சந்திக்கு போவதாக ஏற்பாடு.


அடுத்தநாளும் வந்தது. அதிகாலை 05 மணிக்கு வருவதாக சொன்ன ஆள் 06 மணியாகியும் வரவில்லை. பிறகுதான் தெரிந்தது விஷயம். ஐந்து மணிக்கே எழும்பி ஓட வெளிக்கிட்ட நண்பரை சற்றும் வழமைக்கு ஒவ்வாத ஒரு நடவடிக்கையாக கருதிய அந்த தெருவிலுள்ள நாய்கள் அவரை கலைக்கத்தொடங்கியதில் மரதன் ஓட்டம் கண்மண் தெரியாத ஓட்டமாகிப்போய் முன்னால் சைக்கிளில் பால் கொண்டுவந்த பையனின்மேல் எக்கச்செக்கமாக மோதித்தான் நின்றது.

சைக்கிளுடன் பையனும் நண்பரும் விழுந்தவேகத்தில் பால் கொள்கலனின் மூடியும் வெடித்து திறந்ததால் அவ்வளவுபாலும் வீதியில்..!! பால்காரப்பையன் அழுதுகொண்டே நண்பரை பிலுபிலு வெனப்பிடித்துக்கொண்டானாம் - வீட்டில் கொன்றே போடுவார்கள் மரியாதையாகக் காசைத்தரச்சொல்லி. நண்பரும் மிகவும் உடல் + மனம் நொந்து போனார். விடியக்காலமை வேறு..!


வேறு வழியில்லாமல் பையனையும் கூட்டிக்கொண்டு வீட்டிற்குப்போன பிரதீபன் மொத்தப் பாலுக்கான காசையும் பையனின் மருந்துச்செலவுகளுக்குமான காசையும் சேர்த்துக்கொடுத்தனுப்பி வைத்தாராம். பின்னர் விடயத்தைக் கேட்டு நானும் நண்பரும் விழுந்து விழுந்து சிரித்தோம். ஆனாலும் நண்பருக்கும் சிராய்ப்பு காயங்கள் ஏற்பட்டதாலும் இதையொரு துர்ச்சகுனமாகக் கருதியதாலும் நண்பர் போட்டியில் கலந்து கொள்ளவில்லை. தான் மரதன் ஓட்ட நிகழ்வின்போது தனது செஞ்சிலுவை கழகத்தின் சார்பில் வீதியொழுங்கு கடமையில் ஈடுபடவிருப்பதாகவும் சொன்னார்.


எனவே நான் தனியாளாக போட்டியில் இறங்கவேண்டியிருந்தது. பதக்கங்கள் எல்லாம் எனக்கு அப்பாற்பட்டது என்று தெரிந்திருந்தாலும் 20 நிமிடத்திற்குள் ஓடி சான்றிதழாவது பெற்றுவிடவேண்டும் என்பதே எனது விருப்பமாக இருந்தது. குறித்த நாளும் வந்தது. சைக்கிளில் ஓடிப்போனால் களைத்து விடுவேன் என்று நண்பரே தனது சைக்கிளில் என்னையும் ஏற்றிக்கொண்டு பாடசாலை சென்றார். என்னை மைதானத்தில் விட்டுவிட்டு அவர் வீதி ஒழுங்கு கடமைக்கு சென்றுவிட்டார்.


மைதானம் போட்டியாளர்களால் ஜே ஜே என்றிருந்தது. பதினேழு மற்றும் பத்தொன்பது வயதுகளின் கீழான இரு போட்டிகளாக நடக்க இருந்தது. பெயர் பதிந்து இலக்கங்களை வாங்கி பனியனின் முன்னும் பின்னும் குற்றிக்கொண்டு தரப்பட்ட குளுக்கோஸை உண்டுவிட்டு திகிலோடு காத்திருந்தேன்.

சரியாக காலை ஆறுமணிக்கு போட்டி ஆரம்பமாகும் என்று அறிவித்தார்கள். 10 நிமிடமே இருந்தது. எல்லோரும் குளுமாடு மாதிரி துள்ளிக்கொண்டும் கைகால்களை உதறிக்கொண்டும் இருந்ததால் நானும் அவ்வாறே செய்தேன். சிலரிற்கு அப்படியெதுவும் செய்யாமலே கை கால்கள் தானாக உதறிக்கொண்டு இருந்தது.


எனது பிரிவில் ஓடுபவர்கள் நூறுபேராவது இருப்பார்கள் போலிருந்தது. மணி அடிக்கப்பட்டு எல்லைக்கோட்டில் நிற்கவைத்து (கொஞ்சம் கும்பலாகத்தான்) ஆயத்தமணி அடிக்கப்பட்டதும் கும்பலாக கிளம்பினோம். நெடிய ஓட்டம் என்பதால் யாரும் விர் என்று பாயவில்லை.

கொஞ்ச தூரம் ஓடியதுமே கும்பல் கலைந்து அவரவர் வேகத்திற்கு ஏற்றபடி குழுக்களாகவும் தனியன்களாகவும் ஓடிக்கொண்டிருந்தார்கள். ஆசிரியர்கள் ஏற்கனவே சொல்லியிருந்தார்கள். ஆட்களை முந்தவேண்டும் என்று வளைந்தும் நெளிந்தும் ஓடவேண்டாம். அப்படி ஓடினால் ஓட்டதூரம் கூடும் களைத்து போவீர்கள் இடைவெளி கிடைக்கும்வரை சீரான வேகத்தில் ஓடி பின்னர் முந்தவேண்டும் என்று நிரம்ப உபதேசங்கள் வழங்கியிருந்தார்கள்.


ஒலிபெருக்கியில் அறிவித்தபடி ஒரு வாகனம் முன்னால் போக வழிநெடுகிலும் மக்கள் நிறைந்து பார்த்துக்கொண்டிருந்தார்கள். சென்ஜோன்ஸ் அம்புலன்ஸ் மற்றும் செஞ்சிலுவை சங்க அங்கத்தவர்கள் பாதை ஒழுங்கில் ஈடுபட்டிருந்தார்கள். மோட்டார் சைக்கிள்களில் கண்காணிப்பாளர்கள் ஊர்ந்து கொண்டிருந்தார்கள். வழமையாக மிகவும் சனசந்தடி மிக்க வீதிகளால் பெனியனுடன் ஓடியது வித்தியாசமான அனுபவம்.


ஒரு ஐநூறு அறுநூறு மீற்றர் ஓடியதும்தான் தெரிந்தது இது எவ்வளவு பெரிய வில்லங்கமான ஓட்டம் என்று. இதயம் துடிக்கிற ஓசை எனக்கே கேட்டது. நாக்கு வறண்டது ஓடி முடிப்பது சிம்மசொப்பனமாகப்பட்டது. சுற்றிவர எழுமாற்றாக வெளிச்சப்பொட்டுக்கள் தோன்றுவது போலிருந்தது. ஆனாலும் வழியின் இருமருங்கும் மற்றும் மதிலுக்கு மேலாலும் தெரிந்த தலைகளில் இளம் பெண்களும் இருந்ததால் ஹைப்போதொலமஸ் மற்றும் இன்னபிற ஓமோன்களின் ஆதரவுடன் தொடர்ந்து ஓடினேன்.

வழியில் பார்வையாளர்கள் வாளிகளில் தண்ணீர் வைத்திருந்து தலையிலும் உடம்பிலும் ஊற்றியது மிகுந்த பெருமையாகவும் தெம்பாகவும் இருந்தது. களைப்பை போக்க கத்திக்கொண்டு வேறு ஓடினார்கள். ஆட்களை முந்தி செல்லும்போது 'வ்வோவ்...' என்று கூச்சலிட்டுக்கொண்டே சென்றார்கள். எதிராளியை நிலைகுலைய வைப்பதற்கு இதுவும் ஒரு உத்தி. மகாபாரதத்தில் அர்ச்சுனனின் கொடியில் இருந்து கொண்டு அனுமர் தனது சத்தத்தாலேயே கனபேரை போட்டுத்தள்ளினார் என்று படித்திருக்கிறேன். என்னைக்கடந்து கன 'வ்வோவ்...' கள் சென்றது வயிற்றைக்கலக்கியது.


ஓட்டம் பிறவுண்வீதியால் கலட்டி சந்தியை அடைந்தபோது ஓடினவர்களில் பலர் நடக்கத்தொடங்கியிருந்தார்கள். சிலர் காலை நொண்டிக்கொண்டும் முகத்தை வெட்கத்தால் மறைத்தவாறும் அவ்வப்போது தோன்றி மறைந்த அம்புலன்ஸ்களினுள் ஏறிப்படுத்துக்கொண்டார்கள். எப்பிடியிருந்த நான் இப்பிடியாகிட்டேனே என்ற நிலையில் ஓடிக்கொண்டிருந்த நானும் அம்புலன்ஸ் நப்பாசைகளால் ஈர்க்கப்பட்டாலும் பின்னர் வகுப்பில் நடக்கப்போகும் நக்கல் நளினங்களை நினைத்து கால்களில் இலக்ரிக் அமிலம் சுரந்து இறுகிவிடக்கூடாதே என்று கவலைப்பட்டு ஓடிக்கொண்டிருந்தேன்.

நடக்கத்தொடங்கியிருந்தவர்கள் வீதியில் நின்ற பார்வையாளர்களின் கிண்டலுக்கு ஆளானதால் நான் வேகத்தை அதிகரிக்க முயற்சித்தேன். நாக்கு வெளியில் வந்தது. வெளிச்சுவாசத்தின் போது சத்தமும் சேர்ந்தே வந்தது !. ஆனாலும் வீதிக்கடமையிலிருந்த பிரதீபனைக்காணும் வரையாவது ஓடுவோம் என்ற சங்கற்பத்துடன் ஓடிக்கொண்டிருந்தேன்.


இருபது நிமிட எல்லை இருந்ததால் கையிலிருந்த நிறுத்தற்கடிகாரத்தை பார்த்தபோது, ஆரம்ப அவசரத்தில் என்னத்தை அமத்தினனோ தெரியாது அதில் எல்லாம் எட்டு எட்டாகத்தெரிந்தது. வெறுத்துப்போய் வீதியில் கடமையிலிருந்த செஞ்சிலுவை சீருடைகளில் பிரதீபனை தேடினேன்.
கே.கே.எஸ் வீதியை ஊடறுத்து பழக்கமில்லாத வீதியொன்றிற்குள் இறங்கியபோது பிரதீபனை கண்டேன்.

கடமையில் இருந்ததால் முகத்தை 'உம்' மென்று வைத்திருந்தாலும் வியர்வையும் தண்ணீரும் தலையிலிருந்தும் முகத்திலிருந்தும் வழிய என்கோலத்தைக் கண்டு ஆளுக்கு சிரிப்பு வந்தது என்பது தெரிந்தது. பலர் முன்னுக்கு போய்விட்டார்கள் என்று சைகை காட்டினார். இது என்னை உசுப்பேத்திவிட.. நானும் 'வ்வோவ்..' என்ற சத்தத்துடன் ஆட்களை கடக்க ஆரம்பித்தேன். கால்கள் கெஞ்சின. சப்பாத்தின் டொக் டொக்குகளிற்குள் கால் அதிர்ந்தது.


மீண்டும் கே।கே।எஸ் வீதியிலேறி பாடசாலையின் மேற்குப்புற கட்டடங்களை தூரத்தில் கண்டதும் உற்சாகம் கரைபுரண்டது। அதே போல பின்னால் வந்தவர்களிற்கும் கரைபுரண்டிருக்கவேணும்॥ என்னைக்கடந்து ஓடினார்கள்। மைதானத்தை அடைந்து மைதானத்திற்குள் ஒரு சுற்றும் ஓடிய பின்பே முடியுமிடம் வரும்। கடைசிக்கட்டம் ஆனதால் நானும் தலைதெறிக்க ஓடினேன்। ஆனாலும் என்ன ஏமாற்றம்..! பாடசாலையின் பிரதான வாசலை அடைந்த நேரம் முடிவுமணி ஒலி நாராசமாய் காதில் விழுந்தது।


குறிக்கப்பட்ட நேரம் முடிந்துவிட்டதால் மைதானவாசலிலேயே தடுத்து நிறுத்தினார்கள்। நீண்ட ஓட்டம் முடிவுற்றபோது உடம்பு முழுவதும் வெம்மையாக உணர்ந்தேன். நாடித்துடிப்பு உடம்பின் சகல பாகங்களிலும் கேட்டது. உடனடியாகவே 19 வயதின் கீழான போட்டி மறுமுனையில் ஆரம்பிக்கப்பட்டது. எனக்கு பலர் உண்மையாகவோ அல்லது கிண்டலாகவோ கைகுலுக்கினார்கள். ஓடிய அனைவருக்கும் சுடச்சுட கோப்பி வழங்கப்பட்டது.

குறித்த நேரத்திற்குள் நானூறு அல்லது ஐநூறு மீட்டர் தூரத்தினால் நான் அந்த மரதனை கோட்டைவிட்டேன். எனினும் இரண்டே மீற்றர் தூரத்தினால் கோட்டை விட்டவர்களை நினைத்து என்னை திருப்திப்படுத்திக்கொண்டேன். வாழ்வில் பல விடயங்களை எமக்கும் கீழே இருப்பவர்களை நினைத்துத்தானே திருப்திப்பட்டுக்கொள்ளவேண்டியிருக்கிறது...!!

Friday, May 30, 2008

உலகவலம் வரும் Charice Pempengco

Charice Pempengco - பிலிப்பீன்ஸ் நாட்டை சேர்ந்த இச்சிறுமி இன்றைய சர்வதேச இசை உலகில் கலக்கிக்கொண்டிருக்கிறார். பலரையும் வியப்பில் ஆழ்த்தியது இந்தச்சின்ன வயதில் இவரிடம் இருந்து வரும் மிக முதிர்ச்சியடைந்த குரல்(Matured voice) அத்துடன் மேடைகளில் உணர்ச்சிகரமாகப்பாடும் தன்மையும் (Passion) மேடைகளில் தோன்றும்போதுள்ள கம்பீரமும் ஸ்டைலும் இவருக்கு ரசிகர்கள் பலரை உருவாக்கித்தந்துள்ளது.


10.05.1993 இல் பிலிப்பீன்சில் பிறந்த இவரது தாயாரும் ஒரு பாடகியே. தாயாரிடம் இருந்தே இசை நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டதாகக் குறிப்பிடும் இவரது வெற்றி இலகுவாக வந்ததல்ல. சிறு வயது முதலே இசை நிகழ்ச்சிகளில் பங்குகொண்டபோதும் பின்னர் தொலைக்காட்சிகளால் நடாத்தப்படும் போட்டி நிகழ்ச்சிகளால் ஈர்க்கப்பட்டு பிலிப்பின்சின் பிரபல தொலைக்காட்சி ஒன்றின் Little Big Star Season 1 என்ற போட்டி நிகழ்ச்சியில் பங்குபற்றினார். அதில் இறுதிச்சுற்று வரை முன்னேறியிருந்தும் நடுவர்கள் இவருக்கே கூடிய புள்ளிகளை வழங்கியிருந்தபோதும் பார்வையாளர்களின் வாக்குகளை அதிகமாகப்பெறத் தவறியதால் தோல்வியடைந்தார்.


ஆனாலும் இந்த தொலைக்காட்சி இசைப்போட்டியில் இவர் பாடிய Whitney Houston என்பவரின் I Will Always Love You என்ற பாடல் YOU TUBE என்கின்ற இணைய வீடியோ சேவைமூலம் ரசிகர்களால் பார்க்கப்பட்டு மிகவும்பிரபலமானது. இதிலிருந்து அதிர்ஷ்டகாற்று இவர்பக்கம் வீச ஆரம்பித்தது. இதன் ஒரு கட்டமாக 2007 யூன் மாதம் இவர் சுவீடனுக்கு அழைக்கப்பட்டு இவரது ஏழு பாடல்கள் அடங்கிய குறுவட்டு சுவீடனில் வெளியிடப்பட்டது.


இது இவரை மேலும் பிரபலமாக்க 2007 ஒக்ரோபர் மாதம் கொரியாவில் மிகவும் பிரபல தொலைக்காட்சி வலைப்பின்னல் சேவை ஒன்று தங்களின் STAR KING போட்டி நிகழ்ச்சிக்காக இவரை அழைத்திருந்தது. இந்நிகழ்ச்சியில் இவரது பாடும் திறமை அனைவரையும் ஆச்சரியத்திலாழ்த்தி திக்குமுக்காடச் செய்ததுடன் பாராட்டு மழைகளும் வந்து குவியத்தொடங்கின. இந்தத் தொலைக்காட்சி சேவையின் குறித்த நிகழ்ச்சி அமெரிக்காவின் பிரபல தொலைக்காட்சிகளிலும் மறுஒளிபரப்பு செய்யப்பட்டு மிகுந்த பாராட்டைப்பெற்றது.



இதனால் மிகவும் புகழ்பெற்ற இவர் அமெரிக்காவின் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் ஒன்றான Ellen DeGeneres Show எனும் நிகழ்வுக்கு அழைக்கப்பட்டார். இதில் இவரது இசைத்திறமை பார்வையாளர்களை மெய்சலிர்க்க வைத்து பாராட்டு மழையில் நனையவைத்தது. இன்று Yahoo online தரப்படுத்தலில் மூன்றாவது நிலையில் இருக்கும் அளவிற்கு இவரை, இவரது விடாமுயற்சியும் உழைப்பும் தன்னம்பிக்கையும் திறமையும் ஈடுபாடும் கொண்டுவந்துள்ளது.

Saturday, May 17, 2008

தேவாரமும் நானும்

சிறுவயதில் தேவாரம் பாடமாக்குதல் என்பது மிகப்பெரிய சவால்। கோவில்களில் தேவாரம் பாடினால் தான் கடவுள் வரம் தருவார் என்றும் சொல்லப்பட்டது। 'சொற்றுணை வேதியன்॥' பாடும்போது கல்லைக்கட்டி கடலில் போட்டபோது அவர் பாடியதை சும்மா நின்று கும்பிட்டுக்கொண்டிருக்கும் நான் ஏன் பாடவேண்டும் என நினைத்த காலங்களும் உண்டு। (கல்லைக்கட்டி கடலில் போட்டாலும் எமக்கு இன்னும் அதையொத்த துன்பங்கள் இருக்கின்றன என்று வாதிடுவது வேறு)।

அந்தக்காலத்தில் யாழ்ப்பாணத்தில் கடுமையான பொருளாதாரத்தடை இருந்தது। மின்சாரம் இல்லை। உடுப்புத்தோய்ப்பது பனங்களியில்। மோட்டார் சைக்கிள்கள் பெற்றோல் சிறுதுளிவிட்டு ஊதி ஸ்ராட் ஆகி பின்னர் மண்ணெண்ணெயில் ஓடியது। இரவில் மண்ணைண்ணை லாம்புதான்। படிப்பதற்கு மேசை லாம்பு। சாதாரண தேவைகளுக்கு ஜாம்போத்தல் விளக்கு என்று ஒன்றிருந்தது। அது தமிழீழ பொருண்மிய மேம்பாட்டு நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட சிக்கன விளக்கு என நினைக்கிறேன்। ஜாம்போத்தல் ஒன்றிற்குள் சிறிதளவு பஞ்சையிட்டு அதனுள் ஊறக்கூடியதாக சிறிதளவு மண்ணைண்ணையும் விட்டு சைக்கிள் ரியூப்பிலுள்ள வால்வை கழற்றி அதில் பேப்பரில் உருட்டிய திரியை பஞ்சில் தொடுமாறு நிறுத்தி எரியச்செய்வது தான் ஜாம்போத்தல் விளக்கு। அந்தக்காலங்களில் மாலை ஆறுமணிக்கு முன் விளக்கு சிமினிகள் துடைப்பதும் வீட்டில் ஒரு வேலையாக இருந்தது।

நான்கு வரிகள் தேவாரம் பாடமாக்கி விட்டு பின்னர் லாம்புச்சிமினியில் பேனை மூடியை உருக்கிக்கொண்டிருந்து வீட்டில் ஏச்சு வாங்குவதும் சாதாரணம்। 'தேவாரம் கத்திப்பாடமாக்குறான் எனக்கு பிறிம்பா ஒரு விளக்கு வேணும்' என்றமாதிரியான முறைப்பாடுகளும் வேறு। ஆனாலும் தேவாரம் பாடமாக்கிறது ஒரு த்ரில்தான்। பல முயற்சிகளின் பின்னர் தடங்கலில்லாமல் முழுத்தேவாரம் ஒன்றை சொல்லுவது மிகவும் உற்சாகமான விடயம்।

தேவாரம் பாடமாக்குவதில் செல்வாக்கு செலுத்திய இன்னுமொரு விடயமும் இருந்தது। இந்தக்காலகட்டத்தில் யாழ்ப்பாணத்தில் பல ஆலயங்களும் சமயஅறிவுப்போட்டிகள் நடத்தி பெறுமதியான பரிசில்கள் வழங்கினார்கள்। தங்கப்பதக்கங்களும் அடக்கம்। எனது பாடசாலையில்வேறு, கோவில்களில் அளிக்கப்படும் பதக்கங்களை பாடசாலையிலும் மீண்டும் சூட்டிக்கெளரவித்தார்கள்। இதையெல்லாம்விட இவ்வாறு போட்டிகளில் வெற்றிபெறுவோர் பெண்பிள்ளைகள் மத்தியிலும் கவனிப்பைப்பெற்றதால் தேவாரம் பாடமாக்க வேண்டிய நிர்ப்பந்தம் எனக்கு। அந்த வயதில் குரலும் கொஞ்சம் மாறத்தொடங்கியதால் ஒரு விதமான டபிள் குரலில் தேவாரம் பாடமாக்கி வீட்டாரை மட்டுமல்லாது பக்கத்து வீட்டினரையும் இம்சைப்படுத்தினேன்.

இதைத்தவிரவும் யாழ்ப்பாணம் சைவபரிபாலன சபையினரும் ஆண்டுதோறும் சைவசமய அறிவுப்பரீட்சை வைத்து சான்றிதழ்கள்வழங்கினார்கள்। அதிவிசேடம், விசேடம், திறமை, சாதாரணம் போன்ற தரங்கள் சான்றிதழ்களில் குறிக்கப்படும்। இப்பரீட்சையில் திறமைச்சித்தி எடுத்தாலே பாடசாலையில் ஏதோ பிராணியைப்பார்த்ததுமாதிரி பார்ப்பார்கள் இதனால் அதிவிசேடம் நோக்கியதாகவே தேவாரப்பாடமாக்கல்கள் இருந்தன।

கோவில்களில் பெரும்பாலும் வயதுபோனவர்கள் தான் தேவாரம் பாடுவார்கள். ஏதாவது உற்சவ காலங்களில் தான் இளையவர்கள் குறிப்பாக பெண்பிள்ளைகள் அழகாக இராகத்துடன் பாடுவார்கள். வயதானவர்கள் பாடும் தேவாரங்கள் அநேகமாக ஒரேதேவாரமாகவும் ஒரே இராகத்திலும் அமைந்திருக்கும். இங்கு நான் இராகமெனச்சொல்வது பாடுபவர்களின் தனிப்பட்ட இராகங்கள். அதற்கும் சங்கீதத்திற்கும் ஒருவேளை சம்பந்தமேயில்லாதிருக்கும். அவர்கள் பாடும் இராகத்தில் பெரும்பாலும் அவர்களின் தனிப்பட்ட இன்ப துன்பங்களும் கலந்திருக்கலாம். தேவாரம் பாடுவதற்கு சண்டை பிடிக்கும் கோவில்களும் உண்டு.

எனக்குத்தெரிந்து ஒரு சண்டை பிள்ளையார் கதை படிக்கும்போது இடம்பெற்றது। பிள்ளையார்கதை படிப்பதில் பெரும்போட்டி। காரணம் அது மைக்கில் (MIC) படிப்பதால் என நினைக்கிறேன். பிள்ளையார்கதை தொடங்கும்போது சின்ன சிட்டி ஒன்றில் கற்பூரம் கொளுத்துவார்கள். கதை படித்து முடியும் வரை தொடர்ச்சியாக கற்பூரம் எரிந்து கொண்டிருக்கும் வகையில் கற்பூரம் போட்டுக்கொண்டே இருக்கவேண்டும். இதில் சவாலான விடயம் என்ன என்றால் பொருளாதாரத்தடையில் தடைவிதிக்கப்பட்ட பொருட்களில் பிரதானமானது கற்பூரம். எனவே வெகு சிக்கனமாகப்பாவிக்கவேண்டும். ஒரு கட்டி கற்பூரம் எரிந்து முடிந்து அடியில் அந்த வெள்ளை நிறம் மறைந்து போவதற்கு இடையில் அடுத்த கட்டியைப்போடவேண்டும். இந்தப்பெரும்பணி எனக்குத்தரப்பட்டிருந்தது. எனவே பிள்ளையார் கதையின்போது 'இலக்கண சுந்தரி....' ஆட்களைவிட எனது கவனம் எல்லாம் கற்பூர ஜோதியிலேயே இருக்கும்.

அன்று அவ்வாறே படித்துக்கொண்டிருந்தபோது இரண்டு வயதானவர்களிற்கிடையில் சண்டை. முன்பே பொருந்திக்கொண்டதற்கு மாறாக சிலவரிகள் கூடப்படித்துவிட்டுத்தான் அடுத்த சந்தர்ப்பம் அளித்தாராம் என்று தொடங்கி காணிப்பிரச்சனை எல்லைப்பிரச்சனை எல்லாம் வந்து கடைசியில் ஐயர் நூல் சுற்றி வைத்திருந்த செம்புகளால் கைகலக்கும் நிலைமைக்குப்போனபோதும் பிள்ளையார் அமைதியாக இருந்தார்। ஆனால் நான் கொஞ்சம் ரென்சனாக இருந்தேன்। எனெனில் சண்டையால் ஒதுக்கபட்ட நேரத்தை விட நேரம் நீடிப்பதால் கற்பூர கையிருப்பு வெகுவாகக் குறைந்து வந்தது। திருவெம்பாவை நேரங்களிலும் இவ்வாறான சண்டைகள் வருவதுண்டு.

அநேகமாக தமிழ்மொழிக்குத்தான் இந்தநிலை என்று நினைக்கிறேன்। அதாவது தமிழுக்கே ஒரு உரைபெயர்ப்பு வேண்டிய நிலை। திருக்குறளில் இருந்து தேவாரங்கள் சங்ககாலப்பாடல்கள் ஈறாக படித்தவுடனேயே விளங்கிக்கொள்பவர்கள் அல்லது விளக்கம்சொல்லக்கூடியவர்கள் மிகச்சிலரே। மொழியின் தொன்மையால் ஏற்பட்ட இடைவெளியால் இது ஏற்பட்டது। எனவே தேவாரங்கள் பாடமாக்கியது போக அதற்கு பொருள்சொல்வது அதனைவிட சவாலானது।

ஒரு இராணுவம் போரிட்டபடியே பின்வாங்குவதைப்போல நாமும் பண்பாடு கலாசாரம் என்று சொல்லிச் சொல்லியே அதிலிருந்து விலகிக்கொண்டு வருகிறோம்। அல்லது வரவைக்கப்படுகிறோம்। தற்போது நான் வேட்டி கட்டியே பலவருடங்கள் ஆகிவிட்டன। பழைய பாடமாக்கிய தேவாரங்கள் சிலதை ஞாபகப்படுத்திப்பார்க்கிறேன்। ஒன்றிரண்டு வரிகளின் பின்னர் தடுமாறுகிறது। குனித்த புருவமும்.... ஆலந்தானுகந்தமுது செய்தானை..., நிலைபெறுமாறெண்ணுதியே... என்று சில ஞாபகம் இருந்தாலும் முழுமையாக நினைவில் இல்லை। என்னபுண்ணியம் செய்தனை நெஞ்சமே.... எனும் தேவாரத்தை தர்ஷன் அண்ணா பாடசாலையில் அருமையாகப்பாடுவார்।

பதிவில் ஒரு தேவாரத்தையாவது முழுமையாகக் கொடுக்கவேண்டும் என்று முயற்சி செய்ததில் இத்தேவாரம் முழுமையாக வந்தது। அதிலும் 'மழபாடி' என்பதில் 'வனபாடி.... வானம்பாடி...' என்ற குழப்பங்கள் வந்ததில் வீட்டில் தொலைபேசி உறுதிப்படுத்திக்கொண்டேன்।

திருச்சிற்றம்பலம்
பொன்னார் மேனியனே புலித்தோலை அரைக்கசைத்து
மின்னார் செஞ்சடைமேல் மிளிர்கொன்றை யணிந்தவனே
மன்னே மாமணியே மழபாடியுள் மாணிக்கமே
அன்னே உன்னை யல்லால் இனியாரை நினைக்கேனே.
திருச்சிற்றம்பலம்

Saturday, May 10, 2008

சுவர்ண சுந்தரி

1958 இல் வெளிவந்த தெலுங்குத் திரைப்படம் சுவர்ணசுந்தரி. இத்திரைப்படத்தில் இடம்பெற்ற 'குஹீ குஹீ போலே கொயலியா..' எனத்தொடங்கும் பாடல் அனைத்து இசைப்பிரியர்களையும் கொள்ளை கொண்டது மட்டுமல்லாமல் இன்றைய தலைமுறையினரிடம் கூட பிரபல்யம் பெற்று விளங்குகிறது. இப்பாடலை பெரும்பாலான திரைஇசைப்போட்டிகளில் போட்டியாளர்கள் சவாலாக ஏற்று நம்பிக்கையுடன் பாடுவதை அவதானிக்க முடிகிறது. இப்பாடல் தொடர்பாக எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள் சொல்லும்போது இப்பாடல்களைப் பாடாத போட்டிகளும் குறைவு, இதைப்பாடியும் வெற்றிபெறாதவர்களும் குறைவு எனக்குறிப்பிடுகின்றார். இந்தளவிற்கு இப்பாடலின் இசை கவர்ச்சியாகவும் நுணுக்கம் மிகுந்ததாகவும் காணப்படுகிறது. மேடை நிகழ்வு ஒன்றில் லதாமங்கேஷ்கார் அவர்கள் பாடிய இந்தப் பாடலை இங்கே கேட்கலாம்

kuhu kuhu bole koyaliya - Latha Mankeshkar

ஆதிநாராயணராவ் என்ற இசையமைப்பாளரால் இசையமைக்கப்பட்ட இப்பாடல் ஹம்சானந்தி இராகத்துடன் தொடங்கி இராகமாலிகையின்பின்னர் கல்யாணி இராகத்துடன் முடிகிறது. இடையிடையில் வரும் சவாலான அசைவுகள் சிலாகிப்பானவை. இறுக்கமான லய அமைப்பும் கூட. 1958 இல் லதாமங்கேஷ்கார் மற்றும் எம்.லத்திஃப் இருவராலும் பாடப்பெற்றது.

Kuhu Kuhu Bole Koheliya - Latha Mankeshkar , M.Latif

பின்னர் இது தமிழில் 'மணாளனே மங்கையின் பாக்கியம்' என்றபெயரில் எடுக்கப்பட்டபோது இதே பாடல் 'தேசுலாவுதே தேன்மலராலே..' என்று தொடங்கும் பாடலாக மொழிமாற்றம் செய்யப்பட்டு பி.சுசீலா மற்றும் கண்டசாலா ஆகியோரால் பாடப்பட்டது. தென்னிந்திய தனியார் தொலைக்காட்சி ஒன்றின் போட்டி நிகழ்ச்சியொன்றில் ராகினிசிறீ தமிழ்வடிவத்தை சிறப்பாகப்பாடுகிறார்.




தற்போது பிரபலமான பாடகியாக விளங்கும் ஷ்ரேயா கோஷலும் சிறுவயதில் இப்பாடலை ஒரு Children's Mega Final போட்டி நிகழ்ச்சியொன்றில் கிளிப்பிள்ளை போல் ஒப்பிக்காமல் தனது கற்பனையையும் சேர்த்து பிரமாதமாகப்பாடுகிறார்.

shreya-kuhukuhu.mp3 - Shreya Goshal

மலையாள தொலைக்காட்சி நிகழ்வொன்றின் போட்டியின்போது போட்டியாளர் ரூபா கடும் பயிற்சியுடன் சிறப்பாகப்பாடி நடுவர்களையே அசத்துகிறார்.



இவ்வாறு எக்காலத்திலும் சிலாகிக்கும் ஒரு பாடலைத்தந்து காலத்தால் அழியாதவராக இசையமைப்பாளர் ஆதிநாராயண ராவ் நிலைத்து நிற்கிறார்.

றேடியோஸ்பதியில் பின்னூட்டம் ஒன்றின் மூலம் இப்பாடலின் தமிழ் வடிவம் தொடர்பாக தகவல் தெரிவித்த திருமதி.துளசிகோபால் அவர்களுக்கு நன்றி.

இதோ அந்த பாடல் வரிகள்..

ஆ....ஆ...ஆ...ஆ...ஆ
?தேசுலாவுதே தேன் மலராலே
தேசுலாவுதே தேன் மலராலே
தென்றலே காதல் கவி பாடவா...
விளையாட வா...
தேசுலாவுதே தேன் மலராலே

மாசிலா இதயமேவிட வாராஇ.. ஆ..ஆ..ஆ..
மாசிலா இதயமேவிட வாராஇ.. ஆ..ஆ..ஆ..
மாசிலா இதயமேவிட வாராஇ
மது நிலை தவழ்ந்திடும் புது நிலை பாராய்.
மது நிலை தவழ்ந்திடும் புது நிலையால்
மன ஊஞ்சல் ஆடுவோம் உல்லாசமாய் சல்லாபமாய் ஆ..ஆ..ஆ..
தேசுலாவுதே தேன் மலராலே

பாராய்....
பாராய் மறைந்து வரும் மின்னலயே
பாராய் மறைந்து வரும் மின்னலயே..
மின்னுவதேனோ..
மேக ராஜான் சுகமேவிட தானோ'
உண்மை இதானோ
உயிர்கள் வாழ மழை பெய்திட தானோ
உரிமையோடு மன வானில் நாமே
உரிமையோடு மன வானில் நாமே
ஊஞ்சல் ஆடுவோம் உல்லாசமாய் சல்லாபமாய் ஆ..ஆ..ஆ..ஆ
தேசுலாவுதே தேன் மலராலே

ஓ..ஓ...ஓ......
ஓடி வா வெண்ணிலாவே
இங்கு ஓடி வா வெண்ணிலாவே
வருவாய் நிலாவே
வாழ்வினிலே ஒரு நாள் இதுவே நிலவே
ஓடி வா வெண்ணிலாவே
கண்ணால் பேசும் காவியமே
கண்ணால் பேசும் காவியமே
காவியமே புகழ் காதல் இன்பமே
காவியமே புகழ் காதல் இன்பமன
ஊஞ்சல் ஆடுவோம் உல்லாசமாய் சல்லாபமாய் .. ஆ. ஆ ..ஆ ..ஆ
தேசுலாவுதே தேன் மலராலே...

ஆ...ஆ..ஆ..ஆ..
மனதை போல் மலருமே குமுதமே
மதுவினில் சுகம் தருமே..ஏ..ஏ...
மனதை போல் மலருமே குமுதமே
மதுவினில் சுகம் தருமே..ஏ..ஏ...
மனதை போல் மலருமே
இதயமே உன்னிடமே
இதயமே உன்னிடமே
இன்பம் பாயும் உன்னாலே என் வாழ்விலே
பாயும் உன்னாலே என் வாழ்விலே